Published : 02 Mar 2022 07:48 AM
Last Updated : 02 Mar 2022 07:48 AM

உணவு விநியோகம்: உழைப்புச் சுரண்டலின் நவீன முகம்

அ.இருதயராஜ்

நகரங்களில் உள்ள பெரிய உணவு விடுதிகளுக்கு முன்பாகப் பல இளைஞர்கள் முதுகில் ஒரு பையோடு பைக்கில் காத்திருப்பதை நாம் பார்த்திருப்போம். உணவுப் பொட்டலத்தை வாங்கி வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலுக்கே கொண்டுசேர்க்கும் சேவகர்கள். இவர்களில் யாருடைய முகத்திலும் மகிழ்ச்சியைப் பார்க்க முடியாது. யார் இந்த இளைஞர்கள்? ஏன் இப்படிப்பட்ட நிச்சயமற்ற, பாதுகாப்பில்லாத, பணி நிரந்தரமில்லாத, ஒரு வேலையைச் செய்ய முன்வந்தார்கள்? இதில் எந்த அளவுக்கு அவர்கள் பொருளாதார நிலை முன்னேற முடியும்? ஓய்வில்லாமல் ஓடி ஓடி இந்தப் பணியைச் செய்வதில் உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் ஏற்படும் ஈடுகட்ட முடியாத பாதிப்புகள் என்னென்ன?

இணையதள உலகில் உட்கார்ந்த இடத்திலேயே அனைத்தையும் பெறுகின்ற சாத்தியம் உருவாகிவிட்டது. செல்பேசியைக் கையில் எடுத்துத் தனக்கு வேண்டிய ருசியான உணவை ஆர்டர் செய்தால், அடுத்த அரை மணி நேரத்தில் நம் வீட்டுக்கு வந்துவிடும். இதற்காக, இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய பத்து செயலிகள் செயல்படுகின்றன. வேலையில்லாத் திண்டாட்டத்தைச் சந்தித்துவரும் இளைஞர்கள், உணவு விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்கள் எல்லோரும் குறைந்தபட்சம் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு படித்தவர்களாக இருக்கிறார்கள் என்பது வேதனை.

எப்போதும் ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கின்ற இந்தப் பணியில் ஈடுபடும் இளைஞர்களுக்குத் தங்களின் எதிர்காலத்தைப் பற்றி பெரிய கனவுகளைக் காணவும் அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவும் வாய்ப்பில்லை. ஏனென்றால், இந்தப் பணியே அதிகமான நேரத்தையும் உடல் உழைப்பையும் உறிஞ்சிக் குடித்துவிடுகிறது. ஒரு ஆர்டரை எடுத்துக்கொண்டு ஐந்து கி.மீ. சென்றால், 20 ரூபாய் எடுத்து வீசப்படுகிறது. அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு கி.மீ.க்கும் 10 ரூபாய் செயலியில் ஏறுகிறது. எனவே, ஒரு நாளைக்கு 20, அல்லது 25 ஆர்டர் எடுத்தால்தான் ஒருவரால் ஆயிரம் ரூபாயாவது சம்பாதிக்க முடியும். இந்த ஆயிரம் ரூபாயில், இருசக்கர வாகனத்துக்கு வேண்டிய பெட்ரோல் செலவு குறைந்தபட்சம் ரூ.300, தேநீர் மற்றும் உணவுக்கான செலவுகள் குறைந்தபட்சம் ரூ.100 எனக் கொண்டால், மீதம் ரூ.600-தான் அவர் கையில் எஞ்சும்.

உணவு விநியோகிக்கும் வேலையைச் செய்யும் இளைஞர்களிடம் பேசியபோது பலரும் பகிர்ந்துகொண்ட அனுபவம் “குறைவான சம்பளம் என்பதால், எதிர்காலத்துக்காக எதையும் சேமித்து வைக்க முடியவில்லை. திருமணம், நோய், விபத்து, குழந்தைகளின் கல்விக் கட்டணம் என்று எதற்குமே பணம் செலவழிக்க முடியாமல் தவிக்கிறோம். வாய்க்கும் கைக்குமான வாழ்க்கைதான் நீடிக்கிறது” என்பதாகத்தான் இருக்கிறது.

உணவு விநியோகத்தைச் செயலிகளின் வழியாக நிர்வகிக்கும் பெரும்பாலான நிறுவனங்கள், உணவகங்களிடமிருந்தும் உணவைப் பெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்களிடமிருந்தும் தங்களுக்கான ‘கமிஷ’னைப் பெற்றுக்கொள்கின்றன. பரபரப்பு நிறைந்த சாலைகளின் வழியே உணவைக் கொண்டுசென்று கொடுக்கும் இளைஞர்களுக்குக் கிடைக்கும் ஊதியமோ குறைவாக இருக்கிறது. மனித உழைப்பைத் துச்சமென நினைக்கும் முதலாளித்துவச் சிந்தனையின் கோர முகம் இது.

பணிப் பாதுகாப்பு இல்லை, குறைவான சம்பளம் இதெல்லாம் தெரிந்தும் ஏன் இந்தப் பணியைச் செய்கிறீர்கள் என்று இளைஞர்களிடம் கேட்டபோது, முதுகலைப் பட்டம் படித்த ஒருவர் சொன்னார், “என்ன செய்வது? குடும்பத்தை நடத்த வேண்டும், குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இந்த வேலையில் சேர்ந்தேன். எங்கு சென்றாலும் வேலை இல்லை என்ற பதில்தான் கிடைக்கிறது. இந்த ஒரு வேலைதான் எளிதில் கிடைக்கக்கூடியதாக இருந்தது. எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக இதில் சேர்ந்தேன். இதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறேன்.”

தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் பயணிப்பதால் உடல்ரீதியான பிரச்சினைகளையும் இவர்கள் சந்திக்கிறார்கள். அடுத்தடுத்து ஆர்டர் வருவதால், சரியான நேரத்துக்குச் சாப்பிட முடிவதில்லை. போதுமான அளவில் ஓய்வெடுத்துக்கொள்ள முடிவதில்லை. பெரும்பாலானவர்கள் முதுகுவலி, மூட்டுவலி, தூக்கமின்மை பிரச்சினைகளை அனுபவிக் கிறார்கள். கரோனா காலத்தில் நோய்த்தொற்றுக்கு எளிதில் ஆளாகி, எந்த வேலைக்கும் போக முடியாத அளவுக்கு உடல் பலவீனமானவர்களும் உண்டு.

அடுக்கு மாடிகளில் ஏறி இறங்கி உணவு விநியோகிக்கையில் பெற்றுக்கொள்பவர்களின் முகத்தில் புன்னகையைப் பார்க்க முடிவதில்லை, ‘நன்றி’ சொல்லாத மனிதர்களையும் பார்க்க முடிகிறது. மீண்டும் படியிறங்கி வந்து, அடுத்த ஆர்டருக்கு விரைந்து செல்ல வேண்டும். “சாப்பாடு வாங்கிக் கொடுக்கிற வேலையா?” என்று உறவினர்கள், நண்பர்களின் கேலிக்கும் சில சமயங்களில் ஆளாக வேண்டியிருக்கிறது. ஒருசில நேரம் மது அருந்திவிட்டு, உணவு ஆர்டர் செய்யும் நபர்கள் மரியாதையில்லாமல் நடந்துகொள்வதும் நடக்கிறது. அது மாதிரி நேரத்தில், கோபப்பட்டால் இந்த வேலையும் போய்விடும் என்ற அச்சமே ஏற்படுகிறது. கௌரவம் பார்க்க முடியாத வேலையாகத்தான் இருக்கிறது.

இந்த உழைப்புச் சுரண்டலைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. படித்து, வேலையில்லாமல் உள்ள இளைஞர்களைக் கணக்கெடுக்க வேண்டும். அவர்களின் கல்வித் தகுதிக்கும் தொழில் திறனுக்கும் ஏற்ற வேலையைப் பணிப் பாதுகாப்புடன் உருவாக்க வேண்டும். ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் போதிய அக்கறை செலுத்தவில்லை என்பதால்தான், இளைஞர்களின் உழைப்பும் காலமும் வீணாகிறது. வீட்டில் அமர்ந்தவாறே உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் கொண்ட ஒவ்வொருவரும், அந்த சேவைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களைக் கண்ணியத்தோடு நடத்த வேண்டியதும் முக்கியமானது.

- அ.இருதயராஜ், காட்சித் தகவலியல் துறைப் பேராசிரியர், தொடர்புக்கு: iruraj2020@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x