Published : 25 Feb 2022 11:30 AM
Last Updated : 25 Feb 2022 11:30 AM

புத்தகத் திருவிழா 2022 | ஓ.டி.டி.காரர்கள் எழுத்தாளர்களை அணுகும் காலம்! - தமிழ்ப்பிரபா நேர்காணல்

நாவல் இலக்கியத்தின் வெளியைப் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் விரிவடையச் செய்திருக்கிறார்கள். அந்த வரிசையில், 2018-ல் வெளியாகிக் கவனம் பெற்றது தமிழ்ப்பிரபா எழுதிய ‘பேட்டை’ (காலச்சுவடு பதிப்பகம்) நாவல். காலனிய ஆட்சியில் உருவாக்கப்பட்ட சிந்தாதிரிப்பேட்டையைக் களமாகக் கொண்டு, மத்திய சென்னையின் விளிம்புநிலை மக்களின் வாழ்வில் புரையோடிய சாதி, மத, உலகமய அரசியலை வரலாற்றின் வெளிச்சத்துடன் சித்தரித்தது ‘பேட்டை’.

பெரும் கவனமும் பாராட்டுகளையும் பெற்ற ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் எழுத்தாளராகவும் திரைப்பிரவேசம் செய்திருக்கும் தமிழ்ப்பிரபாவிடம் உரையாடியதிலிருந்து…

உங்களைப் போன்ற இளம் எழுத்தாளருக்குத் தேவைப்படும் வாசிப்பும் படைப்பரசியலும் வரலாற்றுத் தேடலும் எத்தகையதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

நவீன இலக்கியத்தின் வாசலில் நுழையும் ஒருவரிடம் ‘இந்த கிளாஸிக்கை வாசித்தாயா? இன்னும் இல்லையா! அப்போ இது?’ என்கிற கேள்விகள் ஆரம்பத்தில் ஒரு பாம்பைப் போல கழுத்தைச் சுற்ற ஆரம்பிக்கும். அந்த கிளாஸிக்குகளை வாசித்து முடிப்பதற்குள், சமகாலத்தில் எழுதப்பட்டவை கிளாஸிக்குகளாக மாற்றப்பட்டிருக்கும். இந்த கிளாஸிக் மயக்கங்களிருந்து தெளிய, அவற்றை வாசிப்பதற்கு இணையாக அல்லது அதற்கும் மேலாக நாம் வாழும் காலத்தில் எழுதப்படும் புனைவுகளையும், குறிப்பாக அபுனைவுகளையும் வாசிக்க வேண்டும். இந்த வாசிப்பு முறையே தெளிவான படைப்பரசியலையும், வரலாற்றுத் தேடலையும் நோக்கி ஒரு வாசகரை இட்டுச்செல்லும் என்று நம்புகிறேன். அப்படி நம்பித்தான் நானும் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

‘பேட்டை’ நாவலைத் திரைப்படமாக்கும் பட்சத்தில் ‘சினிமேட்டிக் லிபர்ட்டி’ என்கிற அடிப்படையில், அதிலிருந்து எந்தெந்தப் பகுதிகளை, கதாபாத்திரங்களை நீக்குவீர்கள்?

அந்நாவலைத் திரைக்கதையாக எழுதும்போதுதான் எந்தக் கதாபாத்திரத்தை இன்னும் விரித்தெழுதுவது, சுருக்குவது என்பதைக் கண்டுபிடிக்க இயலும். வாசகர் சிலர், இந்நாவலே திரைக்கதை மாதிரிதான் இருக்கிறது என்று ‘ஸ்கிரிப்ட் டாக்டரிங்’ செய்தார்கள். சார்பட்டாவைப் பாராட்டிய சிலர், இதைத் திரைக்கதை எனச் சொல்வதைவிட, நாவல் மாதிரி இருந்தது என்றார்கள். ஆகவே, இனிமையான குழப்பத்தில் உழலும் என்னை விடுத்து, ஒருவேளை ‘பேட்டை’ நாவல் படமாக உருவாக்கப்பட்ட பிறகு, படத்தின் எடிட்டரைக் கேட்டால், உங்கள் கேள்விக்கு இன்னும் நெருக்கமான பதிலை அவரால் அளிக்க முடியும் என்று நம்புகிறேன்.

குத்துச் சண்டையைத் தாண்டி, திரையிலும் நவீன எழுத்திலும் சொல்லப்படாத வடசென்னையின் வாழ்வு என எதையெல்லாம் முதன்மைப்படுத்துவீர்கள்?

சென்னையிலிருந்து கட்டாய இடம்பெயர்ப்பு செய்யப்பட்ட மக்களின் சமகால வாழ்வியலைத்தான் அதன் எதார்த்தத்தோடும், அரசியல் புரிதலோடும் சினிமாவாக எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் கருதுகிறேன். இது சொல்லப்படாதது அல்ல. ஆனால், சரியாக சொல்லத் தவறியது. இது தவிர, வடசென்னை மக்களின் வாழ்வு என்பது பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது, சொல்லப்படாதது என்பதாலேயே சொல்லி ஆகவேண்டுமெனக் கபடி வீரர் கைமண்ணை உதறுவதுபோலத் தயாராகாமல், இங்குள்ளவர்களின் வாழ்வின் எந்த அம்சத்தையும் அதன் இயல்போடும், அந்த இயல்பை மீறிப் படைப்பாளியின் செயல்பாடு என்ன என்கிற பிரக்ஞையோடும் எழுதி (இயக்கி)னால் போதும்.

சாதியின் பெயரால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின் வாழ்வைப் பேசியதில், உங்களைப் பாதித்த எழுத்தாளர்கள் என்று யாரையெல்லாம் பட்டியலிடுவீர்கள்?

கே.டானியல், ராஜ் கௌதமன், சரண்குமார் லிம்பாலே, பாமா ஆகியோரை முக்கியமாகச் சொல்லலாம்.

திரைப்படத்துக்கு எழுதத் தொடங்கிய பிறகு, ஒரு எழுத்தாளருக்குக் கிடைக்கும் ஒளிவட்டம் எந்த வகையில் உதவுகிறது?

ஓர் எழுத்தாளர் பணியாற்றிய திரைப்படம் பெரும்வெற்றி பெற்ற பிறகு, சினிமாவுக்குத் திரைக்கதை ஆசிரியராக, வசன கர்த்தாவாக அவர்களின் முக்கியத்துவம் பரவலாக உணரப்படுவதுடன், அவை வேகமாகச் செயல்வடிவம் பெற்றுக்கொண்டிருக்கின்றன. உணவு, உடை, இருப்பிடத்துக்கு அடுத்தபடியாக ஓ.டி.டி.காரர்கள் எழுத்தாளர்களை அணுகும் காலம் கனிந்திருக்கிறது. இலக்கியத்தையும் சினிமாவையும் இணைக்கும் சாத்தியங்கள் குறித்தான உரையாடல்கள் அதிகமாகியிருக்கின்றன.

இவை தவிர, எழுத்தையே வாழ்வாக்கிக்கொண்ட என்னைப் போன்றோருக்கு நாவல், சிறுகதை போன்றவற்றிலிருந்து கிடைக்கும் மதிப்பூதியத்தை வைத்துக்கொண்டு வாழ்வை நகர்த்தும் நெருக்கடியிலிருந்து, ஒரு பொருளாதார விடுதலையைத் திரைத்துறை அளிக்கிறது. ஆனால், இந்த விடுதலையே ஒரு சிறையாகிவிடாமல் அவ்வப்போது இதிலிருந்து மீண்டு நம்முடைய இலக்கியப் பங்களிப்பையும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதுதான் முன் நிற்கும் ஆகச் சிறந்த சவால். இந்தச் சவால் நேரம் ஒதுக்குவது தொடர்பானது மட்டுமல்ல. மொழி, சிந்தனை, வடிவம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

- ஆர்.சி.ஜெயந்தன், தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x