Published : 24 Feb 2022 06:37 AM
Last Updated : 24 Feb 2022 06:37 AM

நூல் விலையைக் குறைப்பது, பருத்தி விவசாயிகளைப் பாதிக்காதா?

சமீபகாலமாகத் தொடர்ந்து உயர்ந்துவரும் பருத்தி நுாலின் விலை ஜவுளி உற்பத்தியாளர்களைப் பெரிதும் பாதிப்பதால், பஞ்சு ஏற்றுமதிக்கு அதிக வரி விதித்து ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதோடு, ஊக வணிகத்திலிருந்து பஞ்சை நீக்கி, அதன் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜவுளித் துறையில் ஈடுபட்டுள்ளோர், உரத்த குரலில் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். நுால் விலையைக் குறைத்தால், பல காலமாகப் பல்வேறு இன்னல்களுடன் ஏறக்குறைய 134 லட்சம் ஹெக்டேரில் பருத்திச் சாகுபடி செய்துவரும் 58 லட்சம் விவசாயிகளைப் பாதிக்காதா? பருத்திச் சாகுபடியில் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறதா என்ன?

பருத்திச் சாகுபடி

இந்தியாவில் பருத்தி ஒரு முக்கிய வணிகப் பயிராகப் பல நுாற்றாண்டுகளாகச் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. 1960-61-ல் 76 லட்சம் ஹெக்டேர்களாக இருந்த பருத்திச் சாகுபடியின் பரப்பளவு, 2019-20-ல் 134 லட்சம் ஹெக்டேர்களாக அதிகரித்துள்ளது. 2019-20 ஆண்டு புள்ளிவிவரப்படி, மஹாராஷ்டிரம், குஜராத், தெலங்கானா ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டும், மொத்த பருத்திச் சாகுபடிப் பரப்பில் 70%-த்தைப் பெற்றுள்ளன. தமிழகத்தில் இதே காலகட்டத்தில் 3.96 லட்சம் ஹெக்டேரிலிருந்து 1.69 லட்சம் ஹெக்டேர்களாகக் குறைந்துள்ளது.

பரப்பளவில் இந்தியா பருத்திச் சாகுபடியில் உலக அளவில் முதலிடத்தில் இருந்தாலும் மகசூலில் மிகவும் பின்தங்கியுள்ளது. 1980-81-ல் 152 கிலோவாக இருந்த ஒரு ஹெக்டேர் மகசூல், 2000-01-ல் 190 கிலோவாக உயர்ந்துள்ளது. இதனால், உலக உற்பத்தியில் இந்தியாவின் பங்கு குறைவாக இருந்தது. ஆனால், பிடி பருத்தியை 2002-ல் அறிமுகப்படுத்திய பிறகு, அதன் சாகுபடியில் மாற்றங்கள் ஏற்பட்டன. பருத்திச் சாகுபடிப் பரப்பளவானது 77 லட்சம் ஹெக்டேரிலிருந்து (2002-03), ஏறக்குறைய 134 லட்சம் ஹெக்டேர்களாக 2019-20-ல் உயர்ந்துள்ளது. மறுபுறம், பருத்தி உற்பத்தியானது 86 லட்சம் பேல்களிலிருந்து (ஒரு பேல் என்பது 170 கிலோ), 352 லட்சம் பேல்களாக உயர்ந்துள்ளது.

பருத்திப் பொருளாதாரம்

மற்ற பயிர்களைப் போல் அல்லாமல், பருத்தி விவசாயிகள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துவருகிறார்கள். பருத்திப் பயிரானது ஏறக்குறைய 70%-ம் மானாவாரி நிலத்தில் பயிரிடப்படுவதால், பெரும்பாலான காலங்களில் மகசூலுக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. பருத்தியில் காய்ப்புழுவின் (bollworm) தாக்கம் அதிகம் இருப்பதால், அதனைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகளுக்கான செலவு மிகவும் அதிகம். பருத்தி அறுவடை செய்வதற்கான கூலிச் செலவு மற்ற பயிர்களைவிட மிகவும் அதிகம். இதன் காரணமாக, பருத்திக்கான சாகுபடிச் செலவு படுவேகமாக உயர்ந்துவருகிறது.

இந்திய அரசின் விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் மொத்த பருத்திச் சாகுபடிப் பரப்பில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ள மஹாராஷ்ரத்தில், 2000-01-ல் பருத்திக்கான ஒரு ஹெக்டேர் மொத்த (C2 செலவு) சாகுபடிச் செலவு ரூ.14,234-லிருந்து, 2018-19ல் ரூ.84,743ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தில் இச்செலவானது ரூ.10,691–லிருந்து ரூ.75,186 ஆகவும், தமிழகத்தில் ரூ.28,149-லிருந்து ரூ.1,13,334ஆகவும் உயர்ந்துவிட்டது. கடந்த 19 ஆண்டுகளில் (2000-01 முதல் 2018-19 வரை), இந்த மூன்று மாநிலங்களில் சாகுபடிச் செலவு 4 முதல் 7 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

பருத்தியில் கிடைக்கும் மொத்த உற்பத்தி மதிப்பும் இக்காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிரத்தில், ரூ.12,148-லிருந்து ரூ.85,937 ஆகவும், குஜராத்தில் ரூ.8,696-லிருந்து ரூ.83,209 ஆகவும், தமிழகத்தில் ரூ.20,992-லிருந்து ரூ.98,966 ஆகவும் உற்பத்தி மதிப்பு மேற்கூறிய காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. ஆனால், பருத்திச் சாகுபடியில் கிடைக்கும் மொத்த உற்பத்தி மதிப்புச் செலவைவிட வேகமாக உயராத காரணத்தால், விவசாயிகள் பல காலங்களில் நஷ்டம் அடைந்துள்ளனர்.

2000-01 முதல் 2018-19 வரையிலான, 19 ஆண்டுகளில், மஹாராஷ்டிரத்தில் 11 ஆண்டுகளும், தமிழகத்தில் 12 ஆண்டுகளும் பருத்திச் சாகுபடியில் நஷ்டத்தை அடைந்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால், மஹாராஷ்டிரத்தில் தற்கொலை செய்துகொண்ட பெரும்பாலானோர் காலங்காலமாகப் பருத்திச் சாகுபடி செய்து நஷ்டம் அடைந்த விவசாயிகள். லாபம் ஈட்டிக்கொண்டிருந்த ஒரு ஜவுளி ஆலைகூட பருத்தி விவசாயிகளைக் காப்பாற்ற அப்போது முன்வரவில்லை!

பருத்திக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால், பெரும்பாலான காலங்களில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. பருத்திக்கான எம்.எஸ்.பி. விலையானது தொடர்ந்து உயர்த்தி அறிவிக்கப்பட்டுவந்தபோதிலும், அரசால் கொள்முதல் செய்யப்படும் பஞ்சு மிகவும் குறைவு. இதனால், விவசாயிகள் பருத்தியைச் சந்தையில் வணிகர்களிடம் விற்க நேரிடுவதால், அவர்களால் எம்.எஸ்.பி. விலையைப் பெறமுடியவில்லை. சராசரிப் பருத்திச் சந்தை விலைப் புள்ளிவிவரங்களின்படி, சந்தை விலையானது ஜனவரி 2019–லிருந்து எம்.எஸ்.பி. விலைக்கும் கீழே நிலவியுள்ளது.

கோரிக்கைகள் நியாயமானவையா?

நீண்ட காலத்துக்குப் பிறகு, தற்போதுதான் பருத்தி விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் பஞ்சுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியான 11%-த்தை நீக்க வேண்டும் என்பதும், பஞ்சு ஏற்றுமதிக்கு உயர் வரி விதித்து ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதும் எப்படி நியாயமாகும்? இந்தியாவில் 1998-ம் ஆண்டு முதல் ஊக வணிகத்தில் பருத்தி விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இதைப் பற்றிப் பேசாத ஜவுளி உற்பத்தியாளா்கள், திடீரென ஊக வணிகத்திலிருந்து பருத்தியைத் தடை செய்ய வேண்டும் என்பதும் நியாயமில்லை!

கரோனாவால் முடங்கிக் கிடந்த ஜவுளி உற்பத்தி உலகமெங்கும் மீண்டும் வேகத்துடன் தொடங்கியதாலும், நூலுக்கான தேவை அதிகரித்ததாலும், பருத்தியின் விலை சற்று உயர்ந்துவருகிறது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை; இதுதான் சந்தைப் பொருளாதாரத்தின் உண்மை நிலை. இன்று பருத்தியின் விலையைக் குறைக்கக் கோரும், லாபம் ஈட்டும் பெரும் ஜவுளி உற்பத்தியாளா்கள், பருத்தி விலை குறைவாக இருந்த காலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏன் உதவி செய்ய முன்வரவில்லை?

வேளாண் பொருட்களுக்கான விலை சற்று உயரும்போதெல்லாம், அதைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், பெரும் இன்னல்களுடன் வாழும் இந்திய விவசாயிகளின் பொருளாதார நிலை படுபாதாளத்துக்குச் சென்றுவிடாதா?

- அ.நாராயணமூா்த்தி, இந்திய விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையத்தின் முன்னாள் முழு நேர உறுப்பினா். தொடர்புக்கு: narayana64@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x