

தமிழ்த் தேசியம் தொடர்பான நூல்களை வெளியிட்டுவரும் பன்மைவெளி பதிப்பகம், புலவர் செ.இராசு எழுதிய ‘பாரதப் பெருமகன் டாக்டர் ப.சுப்பராயன்’ என்ற நூலை ‘மறைக்கப்பட்ட பெருந்தமிழர்’ என்ற தலைப்பில் மறுபதிப்பு செய்துள்ளது.
1922-ல் சென்னை மாகாணத்தில் சட்டமன்ற அமைப்பு தொடங்கப்பட்டபோதே அதன் உறுப்பினராகி, பின்பு முதல்வராகவும் பொறுப்பு வகித்த ப.சுப்பராயனைக் குறித்த வரலாற்று நூல்கள் கிடைக்காத நிலையில், இந்நூலின் வரவு கவனிக்கப்பட வேண்டியதாகிறது. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அளிக்கும் அரசாணை பி.சுப்பராயனின் ஆட்சிக் காலத்தில் அமைச்சர் முத்தையாவின் முன்முயற்சியால் நடைமுறைக்கு வந்தது.
பி.சுப்பராயனுக்கு முன்னும் பின்னும் சென்னை மாகாண முதல்வர்களாகப் பொறுப்பு வகித்தவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகள் கிடைக்கின்றனவா என்று தேடிப் பார்த்தால், விரல் விட்டு எண்ணும் நிலைதான் இருக்கிறது. கி.வீரமணி எழுதிய ‘சமூகநீதிக் களத்தின் சரித்திர நாயகர்கள்’ என்ற நூல் வரிசையில், பனகல் அரசரைப் பற்றிய குறுநூல் ஒன்று வெளியாகியுள்ளது. சென்னை மாகாணத்தின் முதலாவது முதல்வராக ஆறு மாதங்கள் பதவி வகித்த சுப்பராயலுவைப் பற்றியோ, அவருக்குப் பிறகு முதல்வர் பதவி வகித்த பி.டி.ராஜனைப் பற்றியோ விரிவான வரலாற்று நூல்கள் தற்போது கிடைக்கவில்லை.
பி.டி.ராஜன் உள்ளிட்ட சில நீதிக் கட்சித் தலைவர்கள், திராவிடர் கழகப் பெயர் மாற்றத்துக்குப் பிறகும் விடாப்பிடியாக அதே பெயரில் இயங்கியதும்கூடக் காரணமாக இருக்கலாம். பெயரளவிலேயே இன்று அவர்கள் நினைவுகூரப்படுகிறார்களேயன்றி, அரசியலில் அவர்கள் ஆற்றிய பணிகளைப் பற்றிய தகவல்கள் பொது வாசகர்களுக்குப் பெரும்பாலும் கிடைப்பதில்லை. வரலாற்று நூலாசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டிய துறைகளில் இதுவும் ஒன்று.
சுதந்திரத்தின்போது சென்னை மாகாண முதல்வராகப் பொறுப்பு வகித்த ஓமந்தூர் ராமசாமியைப் பற்றி ‘ஓமந்தூரார்: முதல்வர்களின் முதல்வர்’ என்ற புத்தகத்தை எஸ்.ராஜகுமாரன் எழுதியுள்ளார் (விகடன் பிரசுரம்). சமீபத்தில், அதன் விரிவுபடுத்தப்பட்ட பதிப்பு வெளியாகியுள்ளது. கவிஞர் யுகபாரதி ‘முன்னுதாரண முதல்வர்’ என்ற தலைப்பில் ஓமந்தூராரைப் பற்றி ஒரு மின்னூலை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் ராஜாஜி, காமராஜர் குறித்த வரலாறுகள் விரிவாகவே வெளியாகியுள்ளன. ராஜாஜி குறித்து அவரது பெயரர் ராஜ்மோகன் காந்தி ஆங்கிலத்தில் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூலை ‘கல்கி’ ராஜேந்திரன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் (வானதி பதிப்பகம்). காமராஜரைப் பற்றிய ஆ.கோபண்ணாவின் புத்தகம் குறிப்பிடத்தக்க ஒன்று (நாம் இந்தியா பதிப்பகம்). ராஜாஜியும் காமராஜரும் தேசிய அரசியலில் பங்கெடுத்துக்கொண்டதால் அவர்களின் வாழ்க்கை வரலாறுகள் முழு வடிவம் கண்டனவோ என்னவோ? பக்தவத்சலம், பி.எஸ்.குமாரசாமி ராஜா குறித்தெல்லாம் இப்போது புத்தகங்கள் எதுவும் கிடைப்பதில்லை. இத்தனைக்கும் பக்தவத்சலம், ‘குடியரசும் மக்களும்’, ‘சமுதாய வளர்ச்சி’, ‘வளரும் தமிழகம்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர். அறுபதுகளின் தொடக்கத்தில் வள்ளுவர் பண்ணை வெளியீடுகளாக வெளிவந்த அந்தப் புத்தகங்கள் இன்றும் மறுபதிப்புகளுக்கான தேவையுள்ளவை.
அண்ணாவுக்குப் பிறகு, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘நான் ஏன் பிறந்தேன்?’, ‘உங்களில் ஒருவன்’ என்று முதல்வர் பொறுப்புக்கு வந்த தலைவர்கள் சுயசரிதை எழுதும் வழக்கம் ஒன்றும் உருவாகிவிட்டது. வாழ்க்கை வரலாறுகள் வெளிவந்தாலும் தங்கள் தரப்பு நியாயங்களைச் சொல்லும் ஆவணங்களாக அவை இருக்கின்றன. ஆனால், ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திலும் மாநிலத்திலும் முதல்வர்களாக இருந்த நீதிக் கட்சி, காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் வரலாறு என்பது உருவாகிவந்த புதிய அரசமைப்பின் வளர்ச்சிநிலைகளையும் அன்றைய காலகட்டத்தின் அரசியல் போக்குகளையும் எடுத்துக்காட்டுபவை.
முதல்வர்களின் வரலாறே இப்படி முறையாகப் பதிவுசெய்யப்படாமலும் பொதுவாசிப்புக்கான வாய்ப்பில்லாமலும் இருக்கும்போது, தேசிய அரசியலில் தமிழ்நாட்டின் தரப்பில் அழுத்தமான முத்திரைகளைப் பதித்த க.சந்தானம், சி.சுப்ரமணியன், ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட பல தலைவர்களின் வரலாறும் எழுத்துகளும் மறுபதிப்பு காண வேண்டும் என்பது பேராசையாகக்கூட இருக்கலாம். ஆனால், திராவிட இயக்கம், காங்கிரஸ் இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம் உட்பட அரசியலில் பங்கெடுத்துக்கொண்ட அனைவரின் பங்களிப்புகளையும் உள்ளடக்கியதுதான் தமிழ்நாட்டின் 20-ம் நூற்றாண்டு வரலாறு.