Last Updated : 20 Feb, 2022 10:08 AM

Published : 20 Feb 2022 10:08 AM
Last Updated : 20 Feb 2022 10:08 AM

வெளிச்சம் பெறும் தமிழ்நாடு வரலாறு

கடந்த சில ஆண்டுகளில் தமிழில் அதிகம் உச்சரிக்கப்பட்ட ஊர்ப் பெயர் ‘கீழடி’யாகத்தான் இருக்கும். வைகைவெளியில் கிடைத்த தொல்லியல் சான்றுகள் வரலாற்று ஆர்வலர்களிடம் ஒரு புதிய உற்சாகத்தைத் தோற்றுவித்திருக்கின்றன. கீழடி அகழ்வாய்வுகள் தொடர்பில் சில புத்தகங்கள் வெளிவந்திருந்தாலும், வைகை ஆற்றுச் சமூகம் பழைய கற்காலம் முதல் சங்க காலம் வரை எப்படியெல்லாம் மாற்றமடைந்துவந்துள்ளது என்பதை வரிசைப்படுத்தி ‘வைகைவெளி தொல்லியல்’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார் பாவெல்பாரதி. வைகை தொல்லியல் பண்பாட்டுக் கழகம் என்ற அமைப்பை நிறுவி நடத்திவரும் பாவெல்பாரதி, இந்நூலில் தொல்லியலுடன் மானிடவியல், நாட்டாரியல் ஆய்வுகளையும் இணைத்திருப்பது சிறப்பு. கருத்துப்பட்டறை வெளியிட்டுள்ள இந்நூலுக்கு முதுபெரும் தொல்லியல் அறிஞர் ர.பூங்குன்றன் அணிந்துரை எழுதியுள்ளார்.

தொல்லியல் அகழாய்வுகளால் தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துவரும் வரலாற்று ஆர்வம், இந்த ஆண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பைப் பற்றிப் பேசுவதாகவும் மாறியிருக்கிறது. அந்த வகையில், வேலூர்ப் புரட்சியைக் குறித்த விரிவான சான்றாதாரங்களோடு வெளிவந்திருக்கும் வரலாற்றுப் பேராசிரியர் கா.அ.மணிக்குமாரின் ‘வேலூர்ப் புரட்சி 1806’ முக்கியத்துவம் பெறுகிறது. 1806 ஜூலை 10 அன்று, அந்த ஒரு நாளில் வேலூர்க் கோட்டையில் நடந்தது என்ன, அதற்கான காரணங்கள், விளைவுகளைப் பற்றி லண்டன் பிரிட்டிஷ் நூலகம், ஸ்காட்லாந்தின் எடின்பரோ ஆவணக்காப்பகம் உட்பட பல்வேறு இடங்களிலிருந்து திரட்டப்பட்ட ஆவணங்களிலிருந்து இந்நூலை மணிக்குமார் எழுதியிருக்கிறார். விஐடி கல்வி நிறுவனமும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து இந்நூலைப் பதிப்பித்துள்ளன.

பண்பாட்டு மானிடவியல், இனவரைவியல் தொடர்பாக ஞான.வள்ளுவன் எழுதியிருக்கும் ‘இசைவேளாளர்’ என்ற புத்தகம், இன்றைய சூழலில் மிகவும் அவசியமான ஒன்று. இசைத் தமிழையும் நடனத்தையும் நாடகத்தையும் குலத்தொழிலாகக் கொண்டிருக்கும் இச்சமூகத்தை அரசியல் நோக்கோடு வடுகத் தெலுங்கர்கள் என்று அடையாளப்படுத்துவதை மறுக்கிறது. முத்தமிழையும் வளர்த்த இந்த இசைக் கலைஞர்கள் தமிழ்க்குடிகளே என்று நிறுவுகிறது. வைத்தீஸ்வரன்கோவிலைச் சேர்ந்த இனியன் பதிப்பகம் இந்நூலைப் பதிப்பித்துள்ளது. ‘திராவிட இயக்கமும் எங்கள் ஊரும் (வைத்தீஸ்வரன்கோவில்)’ என்றொரு உள்ளூர் வரலாற்று நூலையும் ஞான.வள்ளுவன் எழுதியுள்ளார்.

உள்ளூர் வரலாறு குறித்த சமீபத்திய வரவுகளில் ‘தமிழ்த் தாத்தா உ.வே.சா.வும் பெரம்பலூரும்’ என்ற தலைப்பிலானது. ‘தமிழக வரலாற்றில் பெரம்பலூர்’ என்ற தலைப்பில் பெரும்புலியூரின் நீண்ட நெடிய வரலாற்றை எழுதிய ஜெயபால் இத்தினத்தின் அடுத்த நூல் இது. உ.வே.சா. என்றதுமே மாயவரம் நாட்கள்தான் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வரும். மீனாட்சிசுந்தரனாரிடம் குருகுலவாசம் செல்வதற்கு முன்பான, உ.வே.சா.வின் இளமைக்காலம் பெரம்பலூருடன் தொடர்புடையது என்பதை அவரது சுயசரிதத்திலிருந்தும் பிற குறிப்புகளிலிருந்தும் தொகுத்து வழங்கியிருக்கிறார் ஜெயபால் இரத்தினம். 150 ஆண்டுகளுக்கு முந்தைய பெரம்பலூரின் சமூகப் பொருளாதார நிலையைப் படம்பிடித்துக் காட்டுவதாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது. நூலாசிரியரே தனது விச்சி பதிப்பகத்தின் வழியாக இந்நூலை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டிலிருந்து ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் வரலாறு தொடர்பான புத்தகங்களில் ஓலைச் சுவடிகள் பராமரிப்பு தொடர்பான ப.பெருமாளின் ‘மெனுஸ்க்ரிப்ட் கன்சர்வேஷன்: பாஸ்ட் அண்ட் ப்ரெஸென்ட்’ என்ற புத்தகம் குறிப்பிடத்தக்கது. தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் வேதிமுறைப் பாதுகாவலராகப் பணியாற்றிய ப.பெருமாள் ஓலைச் சுவடிகள், அரிய கையெழுத்துச் சுவடிகள் பராமரிப்பில் நிபுணத்துவம் கொண்ட அரிதான ஓர் ஆளுமை. முயன்று தான் பெற்ற கல்வியறிவையும் அனுபவ அறிவையும் அடுத்த தலைமுறைக்கு அவர் இந்நூலின் வழியே கற்றுக்கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

தமிழில், வரலாற்றுக்கான ஆய்விதழ்கள் மிகவும் குறைவே. ‘கல்வெட்டு’, ‘ஆவணம்’, ‘வரலாறு’ ஆகியவை தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் ‘புது எழுத்து’ மனோன்மணி ஆசிரியராகப் பொறுப்பேற்று வெளியிட்டுவரும் ‘சாசனம்’ இருமொழி அரையாண்டிதழும் இணைந்திருக்கிறது. அண்மையில் வெளிவந்திருக்கும் நான்காவது இதழ், பிராமி கல்வெட்டுகளுக்கான சிறப்பிதழாகவே வெளிவந்துள்ளது. கா.ராஜன், எ.சுப்பராயலு ஆகியோரின் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. இலங்கை பிராமி கல்வெட்டுகள் குறித்த மூன்று ஆய்வுக் கட்டுரைகளும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத் தொல்லியல் ஆய்வு மையத்தின் சார்பில் ‘சாசனம்’ ஆய்விதழ் வெளியிடப்பட்டுவருகிறது.

மதுரையிலிருந்து வெளிவரும் சமூக, அரசியல், பண்பாட்டுக் காலாண்டிதழான ‘மானுடம்’, கீழடி அகழ்வாய்வுகள் குறித்த குறிப்பிடத்தக்க கட்டுரையுடன் வெளிவந்துள்ளது. இரா.மோகன்ராஜன் இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார். இளைஞரான தங்க.செங்கதிர் நடத்தும் இவ்விதழில் தமிழின் மூத்த அறிவாளுமைகளான ஆ.சிவசுப்பிரமணியன் போன்றோரும் பங்கெடுத்துக் கொள்வது தமிழில் இன்னும் சிற்றிதழ் இயக்கம் தீவிரமாக இயங்கிக்கொண்டிருப்பதற்கான சான்று.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x