

உலகத் தரம் வாய்ந்த சிறுகதைகள் புதுமைப்பித்தனில் ஆரம்பித்த பின், தேக்கநிலை ஏற்படாது இவ்வளவு காலமும் தமிழ்ச் சிறுகதை உலகில் யாரேனும் வந்துகொண்டே இருக்கிறார்கள். பேரிடர்க் காலம் வேறெப்போதையும்விட அதிகமான சிறுகதைகளைத் தமிழுக்குத் தந்துள்ளது. சமீப காலத்தில் சிறுகதைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்திருக்கும் இளம் எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகள் இவை.
பா.திருச்செந்தாழை: ஆ.மாதவனின் சாலைத்தெருக் கதைகள் போன்றவை திருச்செந்தாழையின் மண்டிக் கதைகள். மண்டி வாழ்க்கை மட்டுமன்றி, உறவுச் சிக்கல்களை வெகுநுட்பமாக வடிக்கும் இவரது புதிய சிறுகதைத் தொகுப்பு ‘விலாஸம்’ (எதிர் வெளியீடு).
கார்த்திக் பாலசுப்ரமணியன்: மிகை உணர்ச்சிகள் இல்லாமல், வார்த்தைச் சிக்கனத்துடன், நுணுக்கமான கதைசொல்லல் இவரது பாணி. ‘ஒளிரும் பச்சைக் கண்கள்’ (காலச்சுவடு பதிப்பகம்) என்ற புதிய தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
முத்துராசா குமார்: மதுரை மண்ணின் வட்டார வழக்கோடு, மறந்துபோன நாட்டாரியல் வழக்கங்களை நவீனத்தில் இணைக்கும் புள்ளி இவரது கதைகள். ‘ஈத்து’ (சால்ட் & தன்னறம் வெளியீடு) இவரது சமீபத்திய தொகுப்பு.
சுஷில் குமார்: நாஞ்சில் வட்டார வழக்கில் வெகுநுட்பமான கதைகளை வடிப்பவர். அசப்பில் ஜெயமோகன் சாயல் தெரிந்தாலும் கதைக் களங்களில் தனி பாணியைக் கொண்டிருப்பவர். ‘சப்தாவர்ணம்’ (யாவரும் பப்ளிஷர்ஸ்) இவரது புதிய தொகுப்பு.
தெய்வீகன்: பேரழிவுக்குப் பின் இலங்கையில் வேர்களை விட்டுவந்து, ஆஸ்திரேலியாவில் தழைக்க நினைப்பவர்களின் கதைகள் தெய்வீகனுடையவை. கலப்புக் கலாச்சாரத்தின் அசௌகரியங்கள் இவர் கதைகளில் வெளிப்படும். ‘உன் கடவுளிடம் போ’ (தமிழினி வெளியீடு) இவரது சமீபத்திய தொகுப்பு.
பிரமீளா பிரதீபன்: ஆணெழுத்து, பெண்ணெழுத்து என்ற கட்டங்களில் எழுதாத வெகு சில பெண் எழுத்தாளர்களில் ஒருவர். மிகுந்த திறமை வாய்ந்த இவர் எழுதுவது மிகக் குறைவு. ‘விரும்பித் தொலையுமொரு காடு’ (யாவரும் பப்ளிஷர்ஸ்) என்பது இவருடைய புதிய தொகுப்பு.
ஐ.கிருத்திகா: இருபது வருடங்களாக எழுதியபோதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் ‘கற்றாழை’, ‘கூடடைந்து’ போன்ற நல்ல சிறுகதைகளை எழுதிவரும் இவரது புதிய தொகுப்பு ‘திமிரி’ (எழுத்துப் பிரசுரம்).
மயிலன் ஜி.சின்னப்பன்: அசோகமித்திரனும் ஆதவனும் தன்னைப் பெரிதும் பாதித்த எழுத்தாளர்கள் என்று சொல்லும் மயிலனின் கதாபாத்திரங்கள், மேற்கண்ட இருவரின் கதாபாத்திரங்கள் போன்றே நுட்பமான உரையாடல்களை நிகழ்த்துபவை. ‘நூறு ரூபிள்கள்’ (உயிர்மைப் பதிப்பகம்) இவரது சமீபத்திய தொகுப்பு.
சுனில் கிருஷ்ணன்: ‘அம்புப் படுக்கை’, ‘நீலகண்டம்’ போன்ற நூல்கள் மூலம் வாசக எதிர்பார்ப்பை அதிகரித்த சுனில் வலிகளை, அகச் சிக்கல்களை அதிகம் எழுதியுள்ளார். ‘விஷக் கிணறு’ (யாவரும் பப்ளிஷர்ஸ்) இவருடைய புதிய தொகுப்பு.
தூயன்: பரீட்சார்த்தப் படைப்புகளைத் தொடர்ந்து தரும் தூயன், ‘இருமுனை’ என்ற தொகுப்பின் மூலம் கவனம் பெற்றவர். ‘டார்வினின் வால்’ (எதிர் வெளியீடு) இவருடைய புதிய தொகுப்பு.
அனோஜன் பாலகிருஷ்ணன்: கலவைக் கலாச்சார விளைவுகளைப் பற்றிய கதைகளை எழுதும் அனோஜனின் புதிய தொகுப்பு ‘பேரீச்சை’ (காலச்சுவடு பதிப்பகம்).
பாவெல் சக்தி: வழக்கறிஞராகப் பணியாற்றும் இவர் நீதிமன்றம், காவல் துறை தொடர்பான, அதிர்ச்சி அளிக்கும் மனிதர்கள் குறித்த கதைகளை எழுதியுள்ளார். இரண்டு தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இவரது சமீபத்திய தொகுப்பு ‘தொல்பசிக் காலத்துக் குற்ற விசாரணை அறைக்குள் மூடி முத்திரையிடப்பட்ட 8 தடயக் குறிப்புகள்’ (எதிர் வெளியீடு).
இவர்கள் மட்டுமின்றி, இதுவரை தொகுப்பு வெளியிடாமல் ‘இளவெய்யில்’ போன்ற சிறந்த கதைகளை எழுதியுள்ள லதா போன்றோர் பற்றி தனியாகத்தான் கட்டுரை எழுத வேண்டும். தமிழ்ச் சிறுகதை உலகம் சங்கப் பலகைபோல, புதிதாக யார் வந்து அமர்ந்தாலும் விரிந்துகொடுக்கும்.
- சரவணன் மாணிக்கவாசகம், இலக்கிய விமர்சகர். தொடர்புக்கு: sarakavivar@gmail.com