Published : 18 Feb 2022 06:42 AM
Last Updated : 18 Feb 2022 06:42 AM

உள்ளாட்சித் தேர்தல்: பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுப்போம்!

ஜெயபால் இரத்தினம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் திருவிழா அதன் உச்சம் நோக்கி நகரத் தொடங்கிவிட்டது. ஆம், நாளை வாக்குப்பதிவு! தேர்தல் குறித்த செய்திகள் ஓரிரு மாதங்களுக்கு முன்பிருந்தே உலா வந்திருந்தாலும், கடந்த 15 நாட்களாக, குறிப்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்பது குறித்த தெளிவு பிறந்த நொடியிலிருந்து பரபரப்பு தொற்றிக்கொண்டுவிட்டது. தேர்தல் நடக்கும் நகர்ப்புறங்கள் மட்டுமல்லாது, மற்ற பகுதிகளின் பேசுபொருளும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்தான்.

காலை ஆறு மணியிலிருந்து இரவு பத்து மணி வரையிலும் நீடித்த பிரச்சாரம் அல்லது வாக்கு கோருதல் தணிந்துவிட்டது. சுமார் ஒரு கோடியே இருபது லட்சம் மக்கள்தொகையுடன் நானூறு சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்து பரந்து நிற்கும் சென்னை மாநகராட்சியும், பத்தாயிரத்துக்கும் குறைவான மக்கள்தொகையும் ஓரிரு கி.மீ. பரப்பளவும் கொண்ட இரண்டாம்நிலைப் பேரூராட்சிகளும் நகர்ப்புற உள்ளாட்சி என்ற ஒரே நேர்க்கோட்டில் சமமாக நின்று தேர்தலை எதிர்கொள்கின்றன.

மக்கள்தொகையிலும் பரப்பளவிலும் நிர்வாக, அடிப்படை வசதிகளுக்கான கட்டமைப்பு ஆகியவற்றிலும் இந்த இரண்டுக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடுகள் இருப்பினும், நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படைக் கடமைப் பொறுப்புகள் இரண்டுக்கும் ஒன்றுதான். அரசமைப்புச் சட்டத்தின் 12-வது அட்டவணையில் நிர்ணயிக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதையே நோக்கமாகக் கொண்டு, இவ்விரு அமைப்புகளும் தங்கள் தளங்களில் செயல்பட்டுவருகின்றன.

சரி! தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் கடமைப் பொறுப்புகள் எவை? நாம் ஏன் உறுப்பினர் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை, இந்த நிறுவனத்தின் அமைப்பு குறித்த புரிதலோடு அணுகுவோம். உள்ளாட்சி என்பது ஒன்றிய, மாநில அரசுகளைப் போலவே கட்டமைக்கப்பட்ட ஒரு தன்னாட்சி அரசாங்கம். சட்டப்படி உருவாக்கம் பெற்ற மன்றம், அதன் தலைவர், நிர்வாகம் ஆகிய மூன்று தனிப் பொறுப்புக்களின் ஒருங்கிணைவாக அமைந்த சட்டபூர்வமான நிறுவனமே உள்ளாட்சி என்பதாகும்.

உள்ளூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் ஒன்றிணைவே மன்றம். உறுப்பினர்கள் தங்களுக்கான தலைவரைத் தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்கின்றனர். மன்றக் கூட்டத்தைக் கூட்டவும் அவையை நடத்தவும் தலைவர் பொறுப்புள்ளவர். மன்ற உறுப்பினர்களுக்கென தனிப்பட்ட பொறுப்பு எதுவும் வரையறுக்கப்படவில்லை. மாறாக, அவர்கள் கூட்டுப் பொறுப்பில் இயங்குகின்றனர். மன்றமே அனைத்துக் கொள்கை முடிவுகளையும் எடுக்கும் உரிமை பெற்றது. நிர்வாகம் என்பது, மன்ற முடிவுகளைச் செயல்படுத்தும் ஓர் நிலையான அமைப்பு ஆகும்.

ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடு முதல் அன்றாடச் செலவினங்கள் வரை அங்கீகரிக்கும் நிதி அதிகாரம், உள்ளாட்சிப் பகுதிகளில் செய்யப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்புத் திட்டப் பணிகள் எதிர்கால முன்னேற்றத்துக்காகத் தொலைநோக்குத் திட்டங்கள் தயாரித்தல் உள்ளிட்ட அனைத்துச் செயல்பாடுகளையும் வரையறை செய்யும் கொள்கை முடிவுகள் எடுக்கும் கடமைப் பொறுப்பு மன்றத்துக்கே உண்டு, சுருக்கமாக உள்ளாட்சி நிர்வாகத்தின் அச்சாணியாக விளங்குவது மன்றமே.

இந்த மன்றம் எடுக்கும் கொள்கைசார் முடிவுகளே உள்ளூர் மக்களின் அன்றாட மற்றும் எதிர்கால நன்மை, தீமை அல்லது பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகின்றன. இவ்வளவு உயரிய, சிறப்பான கடமைப் பொறுப்புகளைக் கொண்டிருப்பதாலேயே மன்ற உறுப்பினர் பொறுப்புக்குத் தேர்வாகிறவர் நேர்மையாளராக, பொதுநன்மையைப் பேணுபவராக ஆற்றல்மிக்கவராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இது நியாயமானதே. இவ்வாறான ஆற்றலாளர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலே தற்போது நடைபெறுகிறது.

வாக்களிக்கும்போது சாதி, மதம், இனம் ஆகியவற்றைச் சற்று ஒதுக்கிவைத்துவிட்டு நடுநிலை, செயல்திறன், அர்ப்பணிப்பு, தொலைநோக்குச் சிந்தனைகள் ஆகிய தகுதிகளுக்கு முன்னுரிமை அளிப்பது சிறப்பானது. எவருமே சரியில்லை என்ற நொண்டிச்சாக்கும், நான் ஒரு ஆள் வாக்களித்து ஆவப்போவது என்ன என்ற மனப்பான்மையும் தேவையற்றது. ஒரே ஒரு ஓட்டுகூட வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி கொண்டது என்பதை ஒவ்வொரு உள்ளாட்சித் தேர்தலும் மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.

இந்தியத் தேர்தல் ஆணையம்போல அல்லாமல் மாநிலத் தேர்தல் ஆணையம் வேட்பாளர்கள் மீது மிகவும் கருணையோடு, பெயரளவுக்கான கட்டுப்பாடுகளை மட்டுமே விதித்திருக்கிறது. அதனால், வேட்பாளர்கள் சுதந்திரமாகச் செயல்பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வார்டு பிரிவினை தொடங்கி, வாக்காளர் பட்டியல்வரை பல குளறுபடிகள். வேட்புமனுப் பதிவு அவற்றின் மீதான ஆய்வு ஆகியவற்றிலும் பல புகார்கள். ஆனால், குறைபாடுகள் எந்த விதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆங்காங்கே சிறுசிறு முணுமுணுப்புகளோடு அடங்கிவிட்டன.

பொதுவாகக் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள், தாங்கள் பொறுப்புக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்பது குறித்து துண்டுப் பிரசுரங்கள் மூலம் விளம்பரப்படுத்துவதும், வாக்காளர்களைச் சந்திக்கும்போது நேரில் எடுத்துரைப்பதும் வழக்கம். கடந்த தேர்தல்கள் வரை இதுதான் நடைமுறையாக இருந்துவந்தது. ஆனால், இம்முறை அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் கட்சிசார்ந்த சாதனைகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி வாக்குக் கேட்பதையும், உள்ளாட்சிப் பொறுப்புக்கு வந்தால் என்ன செய்யப்போகிறோம் என்பதைச் சொல்லாமல் தவிர்ப்பதையும், சுயேச்சை வேட்பாளர்கள்கூட சாலை, குடிநீர், கழிவுநீர் வசதியை மேம்படுத்துவோம் என்ற பொதுவான வாக்குறுதிகளை மட்டுமே அளிப்பதையும் காண முடிந்தது.

தொழில்மயமும் வணிக நோக்கத்துடனான நுகர்வுக் கலச்சாரமும் வாழ்விடத் தேவைகளில் பெரும் மாற்றங்களை உருவாக்கிவருகின்றன. அவை, உள்ளூர் நிர்வாகத்துக்குப் பெரும் சவால்களாக அமைந்துள்ளன. மற்றொரு மாற்றமாக மனிதவளக் காரணிகள் அளவீடு செய்யப்பட்டு, மற்றவர்களோடு ஒப்புநோக்கப்படுகின்றன. குறைந்தபட்ச அளவுகோல்களும் நிர்ணயிக்கப்படுகின்றன. எனவே, இன்றைய சூழலில் நகர நிர்வாகமும் நகரத் திட்டமிடலும் மிகவும் சிக்கலானவையாக மாறிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், போதிய நிபுணத்துவமும் தொலைநோக்குச் சிந்தனைகளோடு கூடிய தெளிவான கொள்கை முடிவுகளும் தேவை. நிபுணத்துவம் நிர்வாக அமைப்புகளின் வழி கிடைத்துவிடும். தெளிவான கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு ஆற்றல்மிக்க மக்கள் பிரதிநிதிகள் தேர்தல்கள் வழியாக மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆகவேதான் இத்தேர்தல் முக்கியமானது.

நாம் தேர்ந்தெடுப்பவர்கள் எதிர்பார்க்கப்படும் அல்லது தேவைப்படும் அளவுக்குத் திறமையானவர்களாக இருப்பது அவசியம். பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுப்போம்.

- ஜெயபால் இரத்தினம், உள்ளாட்சித் துறை அலுவலர் (ஓய்வு), ‘தமிழக வரலாற்றில் பெரம்பலூர்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: jayabalrathinam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x