Last Updated : 17 Feb, 2022 07:34 AM

Published : 17 Feb 2022 07:34 AM
Last Updated : 17 Feb 2022 07:34 AM

பஞ்சாப் நிலவரம்: காங்கிரஸுடன் மல்லுக்கட்டும் ஆம் ஆத்மி

பஞ்சாப் விவசாயிகளின் ஒருங்கிணைந்த போராட்டத்தால், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டத் திருத்தங்களும் திரும்பப் பெறப்பட்ட பின்பும்கூட அவர்களின் கோபம் குறையவில்லை. அப்போராட்டத்தில் சுமார் 700 விவசாயிகள் பலியானதும், அவர்களுக்கு நிவாரண உதவி கிடைக்காததும்தான் காரணம். இதனால், பஞ்சாபின் 117 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 20-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் நாடு முழுவதிலும் கூர்ந்து நோக்கப்படுகிறது.

கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் 77 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. டெல்லியில் ஆளும் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 20 தொகுதிகளில் வென்று முதன்முறை எதிர்க்கட்சியானது. இதற்கு முன்பு வரை காங்கிரஸின் எதிர்க்கட்சியாக இருந்த சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) 15 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சியான பாஜக 3 தொகுதிகளிலும் வென்றன. ஒவ்வொரு தேர்தலிலும் ஓரிரு தொகுதிகளுடன் சில பஞ்சாபி கட்சிகளும் பகுஜன் சமாஜ் கட்சியும் (பிஎஸ்பி) தம் அரசியலைத் தொடர்கின்றன.

இந்த முறை, காங்கிரஸ் எம்எல்ஏவான முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவால் பஞ்சாப் அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தனது நான்கரை ஆண்டு பதவிக் காலத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த கேப்டன் அம்ரீந்தர் சிங், பொதுமக்களை நேரடியாகச் சந்திக்கவில்லை. தன் உறவுகள், நட்புகளின் ஊழல் செல்வங்களைக் காக்க அவருக்கு மத்தியில் ஆட்சிசெய்யும் பாஜகவுடன் ரகசிய உறவு வைத்திருந்ததாகப் புகார் இருந்தது. இதுபோன்ற முதல்வரின் குறைகளை முதன்முதலாகச் சுட்டிக்காட்டி, பொதுமக்கள் முன் கேள்வி எழுப்பினார் சித்து. இதேபோன்ற புகார்களை காங்கிரஸுக்கு முன்பாக 10 வருடங்கள் ஆட்சிசெய்த எஸ்ஏடி தலைவர்கள் மீதும் சித்து முன்வைத்தார். அப்போது அவர் பாஜகவில் இருந்தார். இது போன்ற பேச்சுகளால்தான் அவர் ஜனவரி 2017-ல் பாஜகவிலிருந்து வெளியேறி காங்கிரஸில் இணைய வேண்டியதாயிற்று.

சித்துவின் புகாரில் உண்மை உள்ளது என்று நினைக்கும்வகையில், காங்கிரஸிலிருந்து வெளியேறிய கேப்டன் அம்ரீந்தர், பஞ்சாப் லோக் காங்கிரஸ் (பிஎல்சி) என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். சித்துவின் புகார் கூறும் வழக்கத்திற்கு மற்ற காங்கிரஸாரிடம் கிளம்பிய எதிர்ப்பால் அவர் இடைக்கால முதல்வராக முடியவில்லை. ஆட்சிக்கு எதிரான போக்கையும் சேர்த்துச் சமாளிக்க அப்பதவிக்கு தலித் முதல்வராக சரண்ஜித் சன்னி அமர்த்தப்பட்டார்.

தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்தே போட்டியிடுகிறது. மற்ற கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்கத் தீவிரம் காட்டுகின்றன. முக்கிய எதிர்க்கட்சியான ஆஆக தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் தன் கூட்டணியில் சம்யுக்த் சமாஜ் மோர்ச்சாவை (எஸ்எஸ்எம்) சேர்த்துள்ளார். இது, பஞ்சாப் விவசாயிகளால் டெல்லி போராட்டத்திற்குப் பின் தொடங்கப்பட்ட புதிய கட்சி. இப்போராட்டத்துக்கு ஆதரவு தந்து, சுமார் 24 வருடங்களாக பாஜக கூட்டணியிலிருந்த சிரோமணி அகாலி தளம் பிரிந்தது. இந்த முறை அகாலி தளம் தன் கூட்டணியில் முதல் முறையாக பிஎஸ்பியைச் சேர்த்துள்ளது. அகாலியுடன் இணைந்திருந்த பாஜக முதன்முறையாகத் தன் தலைமையில் கேப்டன் அம்ரீந்தர்சிங்கின் பிஎல்சி, எஸ்ஏடியின் சம்யுக்த் பிரிவு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. இவற்றில், பாஜக கூட்டணி தவிர, மற்ற அனைத்துமே தம் முதல்வர் வேட்பாளர்களை முன்னிறுத்தியுள்ளன.

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பஞ்சாபிகள். வருடந்தோறும் சராசரியாக ரூ.28,500 கோடி வருமானத்தைக் கல்வி உள்ளிட்ட காரணங் களுக்காக வெளிநாடுகள் செல்ல பஞ்சாபிகள் செலவிடுவதாக மக்களவையின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. வருடத்துக்குச் சராசரியாக ஒன்றரை லட்சம் இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல அவர்கள் குடும்பத்தில் நிலங்கள்கூட விற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், பஞ்சாபின் கல்வி நிலையங்களில் பொறியியலுடன் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களும் முழுமையாக நிரம்புவதில்லை. எனவே, பஞ்சாபிகளின் வெளிநாட்டு மோகத்துடன் போதைத் தடுப்பு, விவசாயிகள் பிரச்சினை ஆகியவையும் இத்தேர்தலில் ஓங்கி நிற்கின்றன.

முக்கிய எதிர்க்கட்சியான ஆஆகவின் தேர்தல் அறிக்கையில் 300 யூனிட் மின்சாரம், அனைத்து குடும்பப் பெண்களுக்கும் மாதம் ரூ.2000 என இலவசங்கள் அடுக்கப்பட்டுள்ளன. இது மற்ற கட்சிகளின் வெற்றிக்குச் சவாலாகிவிட்டது. டெல்லியைப் போல் பஞ்சாபையும் மாற்ற ஒருமுறை வாய்ப்பளிக்கும்படி பிரச்சாரம் செய்கிறார் அர்விந்த் கேஜ்ரிவால். மக்களவையின் இரண்டாவது முறை எம்.பி.யான பக்வந்த் சிங் மானை ஆஆக முதல்வராகவும் முன்னிறுத்தி யுள்ளது. ஆஆகவைச் சமாளிக்கும் ஆயுதமாக காங்கிரஸிடம் இருப்பது அதன் முதல்வர் வேட்பாளரான சரண்ஜித் சன்னி மட்டுமே. இவர், பஞ்சாபிலேயே முதன்முறையாக காங்கிரஸால் முதல்வராக முன்னிறுத்தப்படும் முதல் தலித்.

இதன் காரணமாக, ஆஆகவுடன் காங்கிரஸுக்கும் இடையே சரிநிகர் போட்டி நிலவுகிறது. இவர்களுக்கான வாக்குகளையும், எஸ்ஏடி அல்லது பாஜக தலைமையிலான கூட்டணிகளில் யார் வேண்டுமானாலும் பிரிக்கும் சூழல் உள்ளது. ஏனெனில், இங்கு சுமார் 23% உள்ள சீக்கியர்களைத் தவிர, வேறு எவரையும் பஞ்சாபிகள் தங்களது முதல்வராக ஏற்றதில்லை. தலித் சமூகத்தினர் அதிகமாக 32% இருந்தும் பஞ்சாப் அரசியலில் இதுவரை ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. மீதமுள்ள இந்துக்கள், அனைத்துக் கட்சிகளுடன் பிரிந்து நிற்கின்றனர்.

கடந்த 50 வருடங்களில் பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தல்களில் அடுத்தடுத்து வென்று ஒரே கட்சியே தொடர்ந்து ஆட்சி புரிந்ததில்லை. ஒரே ஒருமுறை 2012-ல் மட்டும் சிரோமணி அகாலி தளக் கூட்டணி இரண்டாவது முறையாகத் தன் ஆட்சியைத் தொடர்ந்திருந்தது. ஆளும் கட்சிகள் மீதான எதிர்ப்பைக் காட்டுவதில் பஞ்சாபியர்கள் எப்போதுமே தயங்குவதில்லை. சித்துவைப் போலவே, வாக்காளர்களும்கூட பிரச்சாரம் செய்ய வரும் வேட்பாளர்களிடம் கேள்விகளை எழுப்புகின்றனர். பஞ்சாபில் ஒரு அரசியல் மாற்றம் நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

- ஆர்.ஷபிமுன்னா, தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x