Last Updated : 16 Feb, 2022 06:27 AM

 

Published : 16 Feb 2022 06:27 AM
Last Updated : 16 Feb 2022 06:27 AM

இரண்டு ஒலிம்பிக்ஸ், இரண்டு சீனா

பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் நடக்கிறது. பிப்ரவரி 4-ம் தேதி தொடங்கியது. 91 நாடுகளிலிருந்து பெய்ஜிங் வந்திருக்கும் 3,000 வீரர்கள் 109 தங்கப் பதக்கங்களுக்காகப் போட்டியிடுகிறார்கள். இது சீனாவில் நடக்கும் இரண்டாவது ஒலிம்பிக். எல்லா நாடுகளும் முழுமூச்சோடு பங்கேற்கும் கோடை ஒலிம்பிக், இதே பெய்ஜிங்கில் 2008-ல் நடந்தது. இந்தப் போட்டிகள் முடியும் பிப்ரவரி 20 அன்று, கோடை-குளிர் ஆகிய இரண்டு ஒலிம்பிக்கையும் நடத்திய ஒரே நாடு என்கிற பெயர் சீனாவுக்குக் கிடைக்கும்.

2022 ஒலிம்பிக், 2008 ஒலிம்பிக்கைவிடப் பல விதங்களிலும் வேறுபட்டது. இந்த முறை கரோனாவின் பொருட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. போட்டியாளர்களும் பயிற்சியாளரும் ‘பாதுகாப்புச் சிமி’ழுக்குள் பேணப்படுகிறார்கள். போட்டி முடிந்ததும் சிமிழுக்குள் போய்விட வேண்டும். முதல் முறை யாக, முற்றிலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட பனியின் மீது போட்டிகள் நடக்கின்றன. வேறுபாடுகள் இந்த இடத்தில் முடிவதில்லை.

அது காத்திருப்பின் காலம்

உலகின் தொழிற்சாலையாக உருவாகிக் கொண்டிருந்த சீனாவை, யாருடைய கண்ணும் படாமல் வளர்க்க வேண்டுமென்று விரும்பினார் அப்போதைய தலைவர் டெங்-சியோ-பிங். சீனத் தலைவர்களுக்கு அவர் வழங்கிய அறிவுரை இது: ‘அமைதியாக அவதானி. உன் இடத்தை உறுதி செய்துகொள். உன் சக்தியை வெளிக்காட்டாதே. அடக்கி வாசி.’ சீனா அவ்வண்ணமே செய்தது. அது பல காலம் தன் சக்தியை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. 2008 போட்டியின் முன் நிகழ்ந்த ஒலிம்பிக் பந்தத்தின் பவனியில் சீனாவின் அடக்கி வாசிக்கும் திறனைக் காண முடிந்தது.

ஒலிம்பிக் மைதானத்தின் நடுவில் எரியும் ஜோதி, உலகின் பல நகரங்கள் வழியாகத் தொடர் ஓட்டம் மூலமாகக் கொண்டு வரப்படும். 2008-ல் இந்தத் தொடர் ஓட்டத்தின்போது பல நாடுகளில், மனித உரிமை ஆர்வலர்கள் சீனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். லண்டனில் ஓட்டத்தைத் தொடங்கிவைத்தவர் துடுப்புப் படகில் ஐந்து முறை தங்கம் வென்ற ஸ்டீவ் ரெட்க்ரேவ். அவரது கைகளிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பந்தத்தைப் பறித்தார்கள். பல நகரங்களில் தொடர் ஓட்டம் இடை நிறுத்தப்பட்டது.

சீனர்கள் அப்போது ஒலிம்பிக் குறித்துப் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். தங்கள் பெருமிதத்தை அந்நியர்கள் பங்கப்படுத்துவதாகக் கருதினர். ஆகவே, சீனாவில் உள்ள அமெரிக்க, ஆங்கிலேய, பிரெஞ்சு நிறுவனங்களின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தனர். சீனத் தலைவர்கள் அவர்களை மட்டுப்படுத்தினர். ஏனெனில், அது சீனா அடக்கி வாசித்த காலம். சீனத் தலைவர்களுக்குத் தெரிந்திருந்தது. பந்தத்தின் பவனி என்பது ஒரு சடங்கு. விளையாட்டுதான் முக்கியம். அவர்களின் பொறுமைக்குப் பலனிருந்தது.

2008-க்கு முன்பும் அதற்குப் பின்பும் அப்படி ஒரு விமரிசையான ஒலிம்பிக் கொண்டாட்டத்தை வேறு எந்த நாட்டாலும் காட்சிப்படுத்த முடியவில்லை. அந்த ஒலிம்பிக்கில் சீனா 100 பதக்கங்களை அள்ளியது. அதில் சரி பாதி தங்கம். அந்த விளையாட்டின் முடிவில் உலக நாடுகளிடையே சீனாவின் மதிப்பு உயர்ந்தது. அந்த மதிப்பைத் தக்கவைத்துக்கொள்ள சீனா தனது நாட்டில் மனித உரிமைகளை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது அப்படி நடக்கவில்லை.

இது மோதலின் காலம்

இப்போது 2022 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்கும் பல ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்க, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் தொடக்க விழாக் கொண்டாட்டங்களைப் புறக்கணித்துவிட்டன. லடாக்கை ஒட்டியிருக்கும் சின் ஜியாங் மாநிலத்தில் வசிக்கும் உய்குர் முஸ்லிம்கள் இனத்தால், மொழியால், மதத்தால் பெரும்பான்மை சீனர்களிடமிருந்து வேறுபட்டவர்கள். அங்கு மறுகல்வி முகாம்கள் அமைக்கப்பட்டு, உய்குர்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு நெடுநாளாக இருந்துவருகிறது.

இதுதான் மேலை நாடுகளின் புறக்கணிப்புக்குக் காரணம். முதலில் இந்தப் புறக்கணிப்பிலிருந்து இந்தியா தள்ளி நின்றது. ரஷ்யா கேட்டுக்கொண்டதும் ஒரு காரணம். ஆனால், போட்டி தொடங்குவதற்கு முன்னர் ஒலிம்பிக் பந்தத்தை ஏந்தப் போகிறவர்களில் ஒருவர், 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட கால்வன் போரில் (2020) பங்கேற்ற சீன அதிகாரி என்பது தெரிந்ததும் இந்தியாவும் புறக்கணிப்பில் சேர்ந்துகொண்டது.

இப்போது சீனாவின் முகம் மாறிவிட்டது. அதன் வளம் பன்மடங்கு பெருகிவிட்டது. 2008-ல் 5 டிரில்லியன் டாலராக (ரூ. 377 லட்சம் கோடி) இருந்த ஜிடிபி, இப்போது 16 டிரில்லியன் ஆகிவிட்டது (இந்தியாவின் தற்போதைய ஜிடிபி-2.6 டிரில்லியன்).

அதிகாரக் குவியல்

மா-சே-துங்கின் மறைவுக்குப் பிறகு சீன கம்யூனிஸ்ட் கட்சி சுயபரிசீலனை செய்துகொண்டது. ஒரே தலைவரிடம் அதிகாரம் குவிந்திருந்ததே முந்தைய வீழ்ச்சிகளுக்குக் காரணம் என்று கருதியது. அதனால், அதிகாரத்தைப் பரவலாக்கியது. மேலும், ஓர் அதிபரின் பதவிக் காலம் 10 ஆண்டுகளுக்கு அதிகமாகக் கூடாது என்றும் நிர்ணயித்தது. இப்போதைய அதிபர் ஷி ஜிங்பிங் இந்த விதிகளை மாற்றி எழுதிவிட்டார். 2012-ல் பதவிக்கு வந்த ஷி, 2022-க்குப் பிறகு, மேலும் ஒரு தசாப்தமேனும் அதிகாரத்தில் நீடிப்பார். கட்சி, ஆட்சி, ராணுவம், வெளியுறவு என அனைத்து அலகுகளிலும் அவரது ஆதிக்கம் நீடிக்கும். இப்போது ஷியின் சீனா அடக்கி வாசிப்பதில்லை. அது வெளிப்படையாக மோதுகிறது. அமெரிக்காவுடனான வணிக யுத்தத்திலும், தென்சீனக் கடல் ஆக்கிரமிப்பிலும், இந்திய எல்லையைத் தாண்டுவதிலும் அது வெளிப்படுகிறது.

இந்தியாவின் நிலை

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பிணக்குகள் வளர்ந்தபடி இருக்கின்றன. ஆனால், 2021-ல் சீனாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்த பொருட்களின் மதிப்பு முதல் முறையாக 100 பில்லியன் டாலரை (ரூ.7.5 லட்சம் கோடி) தொட்டுவிட்டது. இது முந்தைய ஆண்டைவிட 46% அதிகம். செல்பேசிகள், மருந்துப் பொருட்கள், ஆட்டோமொபைல் தொடங்கி எண்ணற்ற பொருட்கள் இறக்குமதியாகின்றன.

இந்நிலை மாற வேண்டும். உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க வேண்டும். இந்தியாவில் மனித வளம் கொட்டிக்கிடக்கிறது. அது இளமையானதும்கூட. இந்திய மக்களின் சராசரி வயது 28. உழைக்கும் வயதில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலையும் தொழிலும் வழங்க வேண்டும். அப்போது இந்த அபரிமிதமான இறக்குமதி குறையும்; உள்நாட்டில் வருவாயும் பெருகும். மத வெறுப்பிலும் சாதிச் சண்டையிலும் சக்தியை வீணடிக்காமல் நமது மனித வளத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த வேண்டும்.

'விளையாட்டுப் போட்டி வெறும் விளையாட்டல்ல. அது பகையும் பொறாமையும் அகங்காரமும் நிறைந்த போர்' என்றார் ஜார்ஜ் ஆர்வெல். மைதானத்துக்கு வெளியேயும் போட்டிகள் நடக்கின்றன. 2008-ல் சீனாவின் கை மைதானத்துக்குள் ஓங்கியிருந்தது. 2022-ல் மைதானத்துக்கு வெளியேயும் ஓங்கியிருக்கிறது. இந்தச் சூழலுக்கு இந்தியா தன்னைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும்; அதுதான் இந்த குளிர்கால ஒலிம்பிக் நமக்கு வழங்கும் செய்தி.

- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x