Last Updated : 16 Feb, 2022 06:22 AM

 

Published : 16 Feb 2022 06:22 AM
Last Updated : 16 Feb 2022 06:22 AM

புத்தகத் திருவிழா: இன்று தொடங்குகிறது தமிழ்நாட்டின் மிகப் பெரிய அறிவுக் கொண்டாட்டம்! - 800 அரங்குகள் | 16,00,000 தலைப்புகள் | 30,00,000 பார்வையாளர்கள் | 20,00,000 வாசகர்கள்

தமிழ்நாட்டின் மிகப் பெரிய புத்தகத் திருவிழாவான சென்னை புத்தகக்காட்சி கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கரோனா பெருந்தொற்றுக்கிடையே நடத்தப்படுகிறது. ஜனவரி 6 முதல் ஜனவரி 23 வரை புத்தகக்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா மூன்றாம் அலை வேகமெடுத்ததன் காரணமாக டிசம்பர் 31 அன்று புதிய ஊரடங்குக் கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்தது.

இதனால் புத்தகக்காட்சியை நடத்த முடியவில்லை. புத்தகக்காட்சிக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த, அதற்காக உழைப்பையும் பணத்தையும் செலவிட்டிருந்த பதிப்பாளர்கள் பலர் அதிர்ச்சிக்குள்ளாகினர். இணையவழியில் புத்தகக்காட்சி நடத்துவது, புத்தகக்காட்சியை ஒட்டி வெளியிடப்பட்ட புதிய நூல்களைக் கூடுதல் சலுகை விலையில் இணையவழியில் விற்பது என இந்த எதிர்பாராத தடங்கலின் அழுத்தத்திலிருந்து பதிப்பாளர்கள் விடுபட முயன்றனர். தமிழ்நாட்டின் ஒமைக்ரான் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்திக்கொள்ளப்பட்டன. இதையடுத்து, சென்னை புத்தகக்காட்சியை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகிப் பதிப்பாளர்களை நிம்மதியடைய வைத்தது.

எங்கு நடக்கிறது?

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் 45-வது ஆண்டாக நடத்தப்படும் இந்தப் புத்தகக்காட்சி, இம்முறையும் நந்தனத்தி லுள்ள ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் மைதானத்தில் நடத்தப்படுகிறது. 800 அரங்குகள், கோடிக்கணக்கான புத்தகங்கள், லட்சக்கணக்கான வாசகர்களின் பங்கேற்பு எனப் பிரம்மாண்டமான புத்தகத் திருவிழா வாசகர்களை வரவேற்கத் தயாராகியிருக்கிறது.

எதுவரை நடக்கிறது?

பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை என இந்த ஆண்டு 19 நாட்கள் புத்தகக்காட்சி நடைபெறுகிறது. விடுமுறை தினங்கள் மட்டுமல்லாமல், இம்முறை எல்லா நாட்களிலுமே காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். அனைத்துப் புத்தகங்களையும் 10% கழிவு விலையில் வாங்கிக்கொள்ளலாம்.

நிகழ்ச்சிகள்

இன்று மாலை 5.30 மணி அளவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகக்காட்சியைத் தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரை ஆற்றுகிறார்.

விருதுகள்

முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது-2022 விருதுக்கு எழுத்தாளர்கள் அ.வெண்ணிலா, பால் சக்கரியா, மீனா கந்தசாமி, நாடகவியலர் ப்ரஸன்னா ராமஸ்வாமி உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, பபாசி வழங்கும் சிறந்த பதிப்பாளருக்கான விருதுக்காக மணிமேகலைப் பிரசுரம் ரவி தமிழ்வாணன், சிறந்த பதிப்பாளருக்கான பதிப்புச் செம்மல் க.கணபதி விருதுக்காக மணிவாசகர் பதிப்பகம், ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்பகச் செம்மல் ச.மெய்யப்பன் விருதுக்காக நாதம் கீதம் புக் செல்லர்ஸ் பொன்னழகு முருகன், சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருதுக்காக முனைவர் தேவிரா, சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா விருதுக்காக திருவை பாபு, சிறந்த பெண் எழுத்தாளருக்கான அம்சவேணி பெரியண்ணன் விருதுக்காக பாரதி பாஸ்கர், சிறந்த அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருதுக்காக கு.வை.பாலசுப்ரமணியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்க இருக்கிறார்.

சான்றோரின் சிலைகள்

புத்தகக்காட்சியின் இரண்டாம் நாளான பிப்ரவரி 17 அன்று வி.ஜி.பி.சந்தோசம் தலைமையில் காந்தி, பாரதியார், வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் சிலைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைக்கிறார்.

‘இந்து தமிழ் திசை’ அரங்குகள்: 125-126, M 11

போட்டித் தேர்வு மாணவர்களுக்காக இந்து குழுமத்திலிருந்து வெளியாகியிருக்கும் ‘இந்து இயர்புக் - 2022’. அறிஞர் அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ (7-ம் பதிப்பு), திராவிட இயக்க வரலாற்றையும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் வரலாற்றையும் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ (11-ம் பதிப்பு) போன்ற நூல்களுடன் தஞ்சாவூர்க் கவிராயரின் ‘அகத்தைத் தேடி’ ஆன்மிக நூல், நடிகர்-ஓவியர் சிவகுமார் எழுதிய ‘சித்திரச்சோலை’, ஜி.எஸ்.எஸ். எழுதிய ‘சைகோமெட்ரிக் தேர்வுகள்’ எனப் பத்துக்கும் மேற்பட்ட புதிய வெளியீடுகளுடன் ‘இந்து தமிழ் திசை’ அரங்கு (எண்கள்: 125-126,M11) வாசகர்களைப் பெருமகிழ்வுடன் வரவேற்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x