Published : 15 Feb 2022 06:22 AM
Last Updated : 15 Feb 2022 06:22 AM
செயற்கைத் துறைமுகமே ஆனாலும், இந்தியாவின் மற்றெந்தத் துறைமுகங் களைக் காட்டிலும் தொடர் வளர்ச்சியைச் சாத்தியமாக்கிக்கொண்டிருப்பது தென்தமிழகத்தின் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம். கரோனா உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும், சராசரியாக 10% வருடாந்திர வளர்ச்சி என்பது, இத்துறைமுகத்தின் நிரூபிக்கப்பட்ட சாதனையின் நேர்மறைக் குறியீடு. ஏற்றுமதி, இறக்குமதிக்கான பிழையற்ற, வேகமான ஆவண நிர்வாகத்திலும் 99.9% வெற்றிபெற்றிருக்கிறது தூத்துக்குடியின் சுங்க, துறைமுகக் கூட்டு நிர்வாகம். கோடெக்ஸ் [CODEX] போன்ற இணையவழி ஆவணப் பரிமாற்றத்திலும் நாட்டிலேயே முன்னணித் துறைமுகமாகத் திகழ்கிறது தூத்துக்குடி.
15 கண்டெய்னர் ஃபிரைட் ஸ்டேசன்கள், ஒரு உள்நாட்டு சரக்குப் பெட்டக முனையம், நாங்குனேரி, கங்கைகொண்டான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலை வசதி, ரயில், விமான சேவைகளோடு, தென்தமிழகத்துச் சரக்கு உருவாக்குதளத்தின் பிரதான வாயிலாகச் செயல்படுகிறது தூத்துக்குடி. இருந்தும் துறைமுகத்தின் கனவுத் திட்டமான, பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்று முனையம், இன்னும் கனவாகவே நீடிப்பது பிராந்தியத் தொழில்முனைவோரைத் தளர்ச்சியடையச் செய்திருக்கிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, நாடாளுமன்ற ஒப்புதலும் பெற்றிருக்கும் வெளிப்புறத் துறைமுகத் திட்டம் விரைவில் அமைந்தாலன்றி, பன்னாட்டுச் சரக்குப் பெட்டக மாற்று முனையம் தூத்துக்குடியில் அமைவது சாத்தியமில்லை.
25.02.2021 அன்று கோவையில் நடந்த விழாவில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், பன்னாட்டுச் சரக்குப் பெட்டக மாற்றுமுனையமாக உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையிலும், வெளிப்புறத் துறைமுகத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு இன்னும் நடந்தபாடில்லை. சமீபத்திய நிதிநிலை அறிக்கை யிலும், தூத்துக்குடி வெளிப்புறத் துறைமுகத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடோ அறிவிப்போ இல்லை என்பது பெரிதும் கவலையளிக்கிறது.
தமிழகத்தின் வடக்கு எல்லையான காட்டுப்பள்ளியிலும் எண்ணூரிலும், தென்மேற்கில் கேரளத்தின் கடைக்கோடியில் இருக்கும் விழிஞத்திலும் அதானி தனியார் குழுமம் சரக்குப் பெட்டகத் துறைமுக அமைவு சார்ந்து பெரும் முன்னெடுப்புகளைச் செய்துவரும் சூழலில், தேவைக்கேற்ப சரக்கு உருவாக்குதளம், நெடுஞ்சாலை, ரயில், விமான வழித்தட வசதிகளோடு இருக்கும் பொதுத் துறைமுகமான தூத்துக்குடியானது ஏற்றுமதி, இறக்குமதி சரக்குப் போக்குவரத்தின் தவிர்க்க முடியாத தேவை என்பதைப் புரிந்துகொண்டு, அந்த நகரை முன்னிலைப்படுத்துவது தென்னிந்தியத் தொழில் வளர்ச்சிக்கான உடனடித் தேவை.
தென்தமிழக தொழில் வளர்ச்சிக்கான சாவி, தூத்துக்குடி வெளிப்புறத் துறைமுக அமைவிலேயே இருக்கிறது என்பதில் இந்திய அரசு, தமிழக அரசு ஆகியவற்றின் இன்றைய ஆட்சியாளர்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது. மாநில அரசு தொழில் வளர்ச்சி சார்ந்து எத்தகைய திட்டங்களைக் கையிலெடுத்தாலும், பொருளாதார வளர்ச்சி என்பது சர்வதேசத் தரத்திலான துறைமுக அமைவு சார்ந்தே அமையும்.
இலங்கையின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமே, சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் போய்க்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், பிராந்தியப் பாதுகாப்பும், ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த இந்தியப் பொருளாதார மேம்பாடும் பெரும் அச்சுறுத்தலில் இருப்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். நாட்டின் 60% சரக்குப் பெட்டகங்கள், பன்னாட்டுப் பயணத்துக்காக இலங்கையின் கொழும்புத் துறைமுகத்துக்கே அனுப்பப்படுகின்றன. அதனால் ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத்தில் தவிர்க்க முடியாத தாமதங்கள் ஏற்பட்டுச் செலவும் கூடுகிறது. இந்த நிலை மாற வேண்டுமானால், தன்னிறைவு பெற்ற தூத்துக்குடித் துறைமுகம், கொழும்புத் துறைமுகத்துக்கு மாற்றாக, இந்திய அரசால் முன்னிறுத்தப்பட வேண்டும். அதற்கான அத்தியாவசியத் தேவை, தூத்துக்குடியின் வெளிப்புறத் துறைமுக அமைவு.
தமிழக பாஜக தலைவர்களும், தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி வெளிப்புற துறைமுகத் திட்டம் செயலாக்கம் பெற முனைப்போடு செயலாற்ற வேண்டும். பிரதமரையும் நிதியமைச்சரையும் சந்தித்து, திட்டத்தின் உடனடித் தேவையை வலியுறுத்தித் திட்டம் விரைவில் அமைய ஏற்பாடு செய்ய வேண்டும்.
- ஆர்.என். ஜோ டி குருஸ், ‘கொற்கை’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: rnjoedcruz@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT