Published : 05 Apr 2016 08:55 AM
Last Updated : 05 Apr 2016 08:55 AM

நீருக்கான போரைத் தவிர்ப்போம்!

தண்ணீர்ப் பஞ்சத்தால் விவசாயிகளும் ஏழைகளும்தான் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்



முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தண்ணீர்ப் பிரச்சினை தற்போது பூதாகரமாக உருவெடுத்திருக்கிறது. அடுத்து உலகப் போர் என்று ஒன்று நடந்தால், அது நீருக்காகவே இருக்கும் என்று அறிவியல் உலகமே எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது.

தண்ணீர் தொடர்பான பிரச்சினைகள் தொன்று தொட்டே உள்ளதுதான் என்றாலும், அதனுடைய முகம் யாருமே யூகிக்க முடியாத அளவுக்கு மாறிக்கொண்டே வருகிறது. ஐ.நா. சபையின் நீர் ஆதார வளர்ச்சி அறிக்கை, இன்னும் 15 ஆண்டுகளுக்குள்ளாக உலக அளவில் உபயோகப்படுத்தக்கூடிய நல்ல நீரின் அளவு ஏறக்குறைய 40% குறைந்துவிடும் என்ற அதிர்ச்சி விவரத்தை வெளியிட்டுள்ளது. ‘நன்னீர் தொடர்ந்து குறைந்துவருவதால் உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் மிகவும் கடுமையான நீர்ப்பிரச்சினையை வரும் 2025-ம் ஆண்டுக்குள் சந்திக்க வேண்டியிருக்கும்’ என்று உலக உணவு மற்றும் விவசாய அமைப்பும் எச்சரித்துள்ளது.

நீர் ஆதாரங்களை அதிகமாகக் கொண்டுள்ள நாடாக இந்தியா உள்ள போதிலும், அதிகரித்துவரும் மக்கள்தொகை வளர்ச்சியாலும், பொருளாதார வளர்ச்சியாலும் நீர்த் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மத்திய நீர்வள அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரப்படி, 2001-ம் ஆண்டு தனிநபர் ஒருவருக்கு சராசரியாகக் கிடைத்த நீரின் அளவு 1,816 கியூபிக் மீட்டர். அதாவது 18,16,000 லிட்டர். இது தற்போது 1,544 கியூபிக் மீட்டராகக் குறைந்துவிட்டது. இது சர்வதேச அளவில் தீர்மானிக்கப்பட்ட அளவான 1,700 கியூபிக் மீட்டரைவிட மிகக் குறைவு.

யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலும் இந்தியாவில் தண்ணீர்ப் பிரச்சினை கொடுமையாக இருக்கும் என்று அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

எதிர்காலச் சவால்

நீர்ப் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான மாற்றமே தற்போதுள்ள பிரச்சினைக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. நம் நாட்டில் விவசாயத் துறையில் 85 முதல் 90% வரை நீரும், தொழில், மின்சாரம் மற்றும் வீட்டு உபயோகத்துக்கு 10 முதல் 15% வரை நீரும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. ஆனால், வருகிற 2050-ல் தொழில்துறைக்கான தண்ணீர் பயன்பாடு தற்போது உள்ளதைப் போல 30 மடங்கும், மின்உற்பத்திக்கான பயன்பாடு 65 மடங்கும், வீட்டு உபயோகத்துக்கான அளவு இரண்டரை மடங்கும் அதிகரிக்கும் என்று நீர்வள அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.

பயன்படுத்தக்கூடிய நீரின் அளவைத் தேவைக்கேற்ப நம்மால் உற்பத்தி செய்துகொள்ள முடியும் என்றால், நாம் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. தற்போதைய நிலவரப்படி, ஓராண்டில் பயன்படுத்தத் தகுதியான நீரின் கையிருப்பு அளவு 1,121 மில்லியன் கியூபிக் மீட்டர். 2025-ம் ஆண்டில் இதனை முற்றிலுமாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக நீர்வள அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. ஆக, 2025-க்குப் பிறகு நீர்த் தேவை அதிகரித்தால், எப்படிச் சமாளிப்பது என்பதே பெரும் சவால். இதற்கிடையே, தண்ணீர் வணிகத்தில் ஈடுபட்டுள்ள பெரிய நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்து, நீர்த் தேவையில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று யுனிசெப் அறிக்கை சொல்கிறது.

யாரைப் பாதிக்கும்?

தண்ணீர்ப் பஞ்சம் அனைவரையும் பாதிக்கும் என்றாலும், விவசாயிகளும் ஏழைகளும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். மகாராஷ்டிர மாநிலத்தில் மரத்வாடா பகுதியில் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் விளை நிலங்களை விற்றுவிட்டு, நகரங்களுக்குக் குடிபெயர்வதாக அதிர்ச்சித் தகவல் வருகிறது. இதுபோன்ற மாற்றங்களால் விவசாய உற்பத்தியே கேள்விக்குள்ளாகும்.

விவசாயக் கூலிகள் வேலை இழப்பார்கள். பொதுவிநியோக முறையில் தண்ணீர் கிடைக்காத நிலையில், ஏழைகள் தனியாரிடமிருந்து அதிக விலைக்குத் தண்ணீர் வாங்க வேண்டிய நிலை வரும். இது கிராமப்புற வறுமையை மேலும் அதிகரித்துவிடும்.

சரியான முடிவெடுத்தல்

நீரின்றி ஓர் அணுவும் அசையாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தண்ணீருக்கு மாற்றாக ஒருபொருள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. எதிர்காலத்திலும் அப்படியொன்றைக் கண்டுபிடிப் பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.

தற்போதைய சூழலில் தண்ணீர் தேவை அதிகமுள்ள விவசாயத் துறையில், சாகுபடி முறையை மாற்றியமைக்கலாம். மிக அதிகமான தண்ணீர் தேவைப்படும் பயிர்களான நெல், கரும்பு, வாழை மற்றும் பருத்தி போன்றவற்றைக் குறைத்துக்கொண்டு பருப்பு, எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றைப் பயிரிடலாம். வாய்க்கால் வெட்டி தண்ணீர்ப் பாய்ச்சும் பழங்காலப் பாசன முறையால் சுமார் 60% நீர் விரயமாகிறது. சொட்டுநீர், தெளிப்பு நீர்ப்பாசன முறையைப் பயன்படுத்தி 0 % கூட விரயம் இல்லாமல் தண்ணீரைப் பயன்படுத்தலாம்.

உணவு முறையில் மாற்றம் கொண்டுவருவதன் மூலமாகவும் தண்ணீர் பயன்பாட்டைக் குறைக்க முடியும். புலால் உணவுகளைத் தவிர்த்து, மரக்கறி (சைவ) உணவுகளை உண்பதும் தண்ணீர் சிக்கனமே. உலக நீர் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுப்படி, 100 கிராம் மாட்டுக்கறி உற்பத்திக்கு ஏறக்குறைய 7,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இவ்வளவு தண்ணீர் வேறெந்தப் பயிர் சாகுபடிக்கும் தேவைப்படாது.

இதுமட்டும் போதுமா?

நீரின் தேவையைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகள் மட்டும் பலன்தராது. இருக்கின்ற நீர்நிலைகளை செம்மைப்படுத்தி அவற்றின் இருப்புகளை உயர்த்த நடவடிக்கை தேவை. ஏறக்குறைய 21 மில்லியன் பம்பு செட்டுகள் இந்தியாவின் நிலத்தடி நீரைக் கட்டுக்கடங்காமல் உறிஞ்சிக்கொண்டிருக்கின்றன. இந்தியாவில் மொத்தமுள்ள 5,842 வட்டங்களில், சுமார் 1494-ல் நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்ட அதிர்ச்சித் தகவலை நிலத்தடி நீர் வாரியம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்ந்தால், பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஏறக்குறைய 40,000 குளங்களைத் தன்வசம் கொண்டுள்ள தமிழகத்தில், 1950-களில் 10 லட்சம் ஹெக்டேர்களாக இருந்த பாசனப் பரப்பு, தற்போது வெறும் 5 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது. பல இடங்களில் குளங்களே மாயமாகிவிட்டன. இது தொடர்ந்தால், எதிர்காலத்தில் குளங்களைப் படங்களில் மட்டுமே பார்க்க முடியும்.

தெருக் குழாயில் ஆரம்பித்த தண்ணீர்ச் சண்டை ஊர்களுக்கு இடையேயான சண்டையாக மாறி, மாவட்டங்கள் வழியாக தற்போது மாநிலங்களுக்கு இடையே நின்றுகொண்டிருக்கிறது. தண்ணீரை விலை கொடுத்து வாங்கிக் குடிப்போம் என்று 50 ஆண்டுகளுக்கு முன்பு யாராவது நினைத்திருப்பார்களா? இப்போது அந்த நிலை பரவலாகிவிட்டது. வருங்காலத்தில் இந்நிலைமை இன்னும் மோசமாகக்கூடும். நாளை வரை தள்ளிப்போடக்கூடிய விஷயமல்ல இது. இப்போதே, அரசும், தனி மனிதர்களும் செயலாற்ற வேண்டிய காலகட்டம் இது. முடிந்த வரையில் தண்ணீரைத் திறம்படச் சேமித்து, அடுத்து வரும் சந்ததியினருக்கும் இங்கே தண்ணீர் உள்ளது என்ற நிலையை உறுதி செய்ய வேண்டியது, இயற்கைக்கும், எதிர்காலத்துக்கும் நாம் செய்ய வேண்டிய முக்கியக் கடமை.

- அ.நாராயணமூர்த்தி, துறைத் தலைவர், பொருளியல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, அழகப்பா பல்கலைக்கழகம்.

தொடர்புக்கு: narayana64@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x