Published : 14 Feb 2022 07:08 AM
Last Updated : 14 Feb 2022 07:08 AM

மதுப்பிரியர்களைத் தெருவுக்குத் துரத்தினால் அப்பாவிகள் உயிருக்கு யார் பொறுப்பு?

பி.ஜி.கதிரவன்

மதுரை புறவழிச் சாலையில், நேரு நகரில் நான் 2010-ல் வீடு கட்டிக் குடிபோனேன். என் வீட்டருகே ஒரு வயற்காடு உள்ளது. வயலுக்கு மேலே அதிக மின்னழுத்தம் கொண்ட மின்கம்பிகள் செல்வதால், வீடு கட்ட இயலாமலும், விவசாயம் செய்யாமலும் அப்படியே போட்டு வைத்துள்ளனர். இந்த இடத்தில் மாலை நேரங்களில் மதுப்பிரியர்கள் கொண்டாட்ட மனநிலையோடு கூடிவிடுவார்கள். அவர்களோடு நான் பத்தாண்டுகளுக்கும் மேலாக சாம, பேத, தான, தண்ட முறைகளைப் பயன்படுத்திப் போராடிவருகிறேன். எந்த சாமி புண்ணியமோ, இன்னும் கத்திக் குத்து வாங்கவில்லை. இதை இங்கு சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.

டாஸ்மாக்கில் மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்படலாம். ஆனால், அங்கேயே அமர்ந்து குடிக்க அனுமதிக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது குடிக்கலாம், ஆனால் குடிகூடங்களில் அமர்ந்து குடிக்கக் கூடாது எனக் கூறியுள்ளது நீதிமன்றம். அப்படியென்றால், பாட்டில்களை வாங்கிக்கொண்டு போகிறவர்கள் எங்கு அமர்ந்து குடிப்பார்கள்? வேறு எங்கே? வளரிளம் பிள்ளைகள் வாழ்ந்து வரக்கூடிய வீட்டிலேயே அமர்ந்து குடிக்கலாம், பெற்றோர் அசந்த நேரம் எஞ்சிய பானத் துளிகளைப் பிள்ளைகளும் ருசி பார்க்கலாம்.

சாமி சாட்சியாகக் கோயிலில் அமர்ந்து குடிக்கலாம், பெண் பிள்ளைகள் நடமாடும் சாலையோரங்களில் தகாத வார்த்தைகள் பேசியபடி தாக சாந்தி செய்யலாம், குழந்தைகள் விளையாடும் குடியிருப்புப் பகுதிகளில் குடித்துவிட்டு, பாட்டில்களைப் பந்துபோல் எறிந்து உடைத்து விளையாடலாம், அவை பாதசாரிகளின் பாதங்களைப் பதம் பார்க்கலாம். ரயிலில், பேருந்தில், டீக்கடையில் எனக் கிடைக்கிற இடங்களை எல்லாம் குடிகூடங்களாக்கிக் கொண்டாடலாம். தட்டிக்கேட்பவர்களை வெட்டியோ குத்தியோ போடலாம்.

இந்தப் புத்தாண்டு தினத்தில், கோவை துடியலூர் நல்லாம்பாளையம், ரங்கா நகரில் தனது வீட்டருகில் அமர்ந்து மது அருந்தியவர்களைத் தட்டிக்கேட்ட கல்லூரி மாணவர் கத்தியால் குத்தப்பட்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், சிவகங்கை அருகே, தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான வயலில் மது அருந்தியதோடு, போதையில் அங்கிருந்த ஓட்டு வீட்டையும் அடித்து உடைத்தவர்களைத் தட்டிக்கேட்ட மருத்துவ மாணவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது தந்தை, சகோதரர் படுகாயம் அடைந்தனர். மரணமடைந்த மாணவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவப் படிப்பு படித்துவந்தவர்; கரோனா பரவல் காரணமாக சொந்த ஊருக்கு வந்து இணையவழியில் படித்துவந்தவர்.

சென்ற ஆண்டு இதே பிப்ரவரி மாதம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஸ்ரீநகரில், பிரபல இணையவழி விற்பனை நிறுவனத்தின் விற்பனைப் பொருட்களை டெலிவரி செய்யும் நிறுவன வாசலில் அமர்ந்து, மது அருந்தியவர்களைத் தட்டிக்கேட்ட நிறுவன ஊழியர் தாக்கப்பட்டதோடு, நிறுவனமும் சூறையாடப்பட்டது. சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம், சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் வள்ளுவர் நகரில் உள்ள டீக்கடைக்குச் சென்ற மூன்று நபர்கள் பழச்சாறு வாங்கி, கடையினுள் அமர்ந்து பழச்சாறுடன் சேர்த்து மது கலந்து அருந்தினார்கள். அதைத் தட்டிக்கேட்ட கடை ஊழியர்களைத் தாக்கிவிட்டு, மூவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

சென்ற ஆண்டு ஜூலை மாதம், சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தனது நண்பருடன் சேர்ந்து, சாலையோரம் ஆட்டோவை நிறுத்தி மது அருந்தியுள்ளார். மது அருந்திக்கொண்டிருந்த இருவரையும் அவ்வழியே வந்த தலைமைக் காவலர் விசாரித்துக் கண்டித்ததுடன், அவர்களின் கைபேசியையும் பறித்துள்ளார். இதனால் அந்த ஆட்டோ ஓட்டுநர் மது பாட்டிலை உடைத்துக் கழுத்தறுத்துத் தற்கொலைசெய்துகொண்டிருக்கிறார். சேலம் ஆத்தூரை அடுத்த, தும்பல் ஊராட்சி அண்ணா நகரில் விநாயகர் கோயிலில் அமர்ந்து, மது அருந்தியவர்களைத் தட்டிக்கேட்ட தச்சுத் தொழிலாளிகள் இருவரை, குடிமகன்கள் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.

இப்படிக் கோயிலில், குடியிருப்புப் பகுதிகளில், வாகனங்களில், வயலில், மரத்தடியில், பள்ளியில் கும்பலாக அமர்ந்து குடித்தவர்களைத் தட்டிக்கேட்ட எத்தனையோ பேர் தாக்கப்பட்டு, காயம் அடைந்து, உயிரிழந்து, வாழ்விழந்து உள்ளனர். இவையெல்லாம் நடந்தது மதுபானக் கடைகளோடு குடிகூடங்களும் இணைந்திருந்தபோது. இப்போது நீதிமன்றம் குடிகூடங்கள் கூடாது, மது பாட்டில்கள் மட்டும் விற்பனை செய்யலாம் என உத்தரவிட்டுள்ளது. இனி என்னவெல்லாம் நிகழும் என்பதை நிகழ்தகவுக் கோட்பாட்டைப் பயன்படுத்திக்கூட நிச்சயமாகச் சொல்ல முடியாது.

அது மட்டுமல்ல, ஏற்கெனவே குடியானது கணக்கற்ற குடும்பங்களைச் சிதைத்துச் சீரழித்துப் படுகுழியில் தள்ளிவரும் சூழ்நிலையில்,குடும்பம் நடத்தும் இடங்களே குடிகூடங்களாகவும் ஆகிவிட்டால், பிறகு குடும்ப வன்முறைகள் குழந்தைகளையும் விட்டுவைக்காது எனும் நிச்சயமான ஆபத்தையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒன்று, முன்னரே அறிவிப்பு செய்து, மூன்று மாதங்களோ ஆறு மாதங்களோ அவகாசம் தந்துவிட்டு, டாஸ்மாக் கடைகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். அல்லது தீவிர கண்காணிப்புடன் குடிகூடங்களும் இருந்துவிட்டுப்போகட்டும் எனப் ‘பெருந்தன்மையோடு’ அனுமதிக்க வேண்டும். ‘இங்கு வாங்கி எங்கு வேண்டுமானாலும் குடியுங்கள்’ என்று புரிந்துகொள்ளப்படும் அபாயம் இந்த நீதிமன்றத் தீர்ப்பில் இருப்பதாகப் பலரும் அஞ்சுகின்றனர். நீதிமன்றமும் அரசும் அப்பாவிப் பொதுமக்களை இனி எப்படிப் பாதுகாக்கப்போகிறது என்பதுதான் கேள்வி!

- பி.ஜி.கதிரவன், உதவிப் பேராசிரியர்,
மதுரை தியாகராசர் கல்லூரி.
தொடர்புக்கு: professorpgk@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x