

கரோனா வைரஸ் பெருந்தொற்றின் மூன்றாவது அலை 2021 டிசம்பரில் தொடங்கிப் பரவிவருகிறது. அதேநேரம், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால், மக்கள் மனத்தில் சந்தேகம் அகலவில்லை. கரோனா முதல் அலை தொடங்கி, தரவுகளை முறைப்படி சேகரித்து, உரிய வகையில் பகிர்ந்திருந்தால், வெளிப்படைத்தன்மையுடன் இருந்திருந்தால் இந்தச் சந்தேகம் எழுந்திருக்காது. தவறான தரவுகளைக் கொண்டு எவ்வளவு ஆபத்தான வகையில் சுகாதாரத் திட்டமிடல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை கரோனா பெருந்தொற்று வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது.
கரோனா தொற்றுப்பரவல் 2 ஆண்டுகளைக் கடந்தும்கூட இந்தியாவின் சுகாதாரக் கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார் நாட்டின் முன்னணித் தரவு இதழாளர் ருக்மினி. ‘Whole Numbers and Half Truths: What Data Can and Cannot Tell Us About Modern India’ (Context வெளியீடு) என்கிற அவருடைய சமீபத்திய நூல், தரவுகள் அடிப்படையில் இந்தியாவின் உண்மை முகம் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது. குறிப்பாக, கரோனா பெருந்தொற்று, நோயாளிகளைக் குறைத்துக் கணக்கிடுவது, மருத்துவ வசதிகள், இறப்புகளைக் கணக்கெடுப்பதில் உள்ள கோளாறுகள் என பொதுச் சமூகத்தின் கண்களிலிருந்து வசதியாக மறைக்கப்பட்டுள்ள பிரச்சினைகளை ஆதாரத்துடன் முன்வைக்கிறது.
சுகாதாரத் தரவுகளைத் தவறாகப் புரிந்துகொள்ளும்போது, அது மனிதர்களின் உயிரைப் பறிப்பதில் முடியும் என்று ருக்மினி கோடிட்டுக்காட்டுகிறார். கரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கிய காலத்தில், தவறான தரவுகள் அல்லது தரவு குறித்த தவறான புரிதலுடனே அரசு அணுகியது. யார் நோயுறுகிறார்கள், நோய்க்கு சிகிச்சை பெற யார் மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்பது குறித்த தரவுகள் குழப்பமாகவும் தெளிவற்றும் இருந்துவருகின்றன. மருத்துவத் தரவுக் கட்டமைப்பு இல்லாமலேதான் இந்தியா இந்த நோயை எதிர்கொண்டது என்கிறார் ருக்மினி.
விடுபட்டுப் போனவர்கள்
மருத்துவம், மருத்துவ வசதிகள் கிடைக்கும் தன்மை போன்றவை குறித்த புரிதல்கள் சிறப்பாக இருந்திருந்தால், இன்னும் அதிகமான உயிர்களை கரோனாவுக்குப் பலி கொடுக்காமல் இருந்திருக்கலாம். உலக அளவில் பெண்களைவிட ஆண்களே கரோனாவால் அதிகம் பாதிக்கப் பட்டார்கள், அதிகம் இறந்தும் போனார்கள். ஆனால், கரோனா பெருந்தொற்றுக் கண்காணிப்பில் பெருமளவு பெண்கள் விடுபட்டுப் போயிருக்கிறார்கள்.
டெல்லி, மதுரை, மும்பை, அகமதாபாதில் ஆண்களைவிடக் கூடுதல் எண்ணிக்கையில் பெண்கள் கரோனா வைரஸால் தாக்கப்பட்டிருந்தது செரோ சர்வேக்களில் தெரியவந்தது. ஆனால், கரோனா வைரஸால் தாக்கப்பட்டோரில் பெண்கள் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டது, அவர்களுடைய நீண்ட கால ஆரோக்கியத்தில் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. பெண்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கம் என்பது குழந்தைகள், குடும்பத்திலும் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதேபோல் ஏழைகளே கரோனா தொற்றுக்கு உள்ளாவதற்கான கூடுதல் சாத்தியங்களையும், சிகிச்சை பெறுவதற்கான குறைந்தபட்ச வாய்ப்பையும் பெற்றிருக்கிறார்கள். மும்பை, புனேவின் குடிசைப் பகுதிகளில் 2020 மத்தியில் நடத்தப்பட்ட செரோ சர்வேக்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகி மீண்டிருந்தது தெரியவந்தது. ஆனால், கரோனாவுக்கான பரிசோதனைகளோ வசதியுள்ள மக்களிடமே 4-6 மடங்கு அதிகமாகச் செய்யப்பட்டன. இப்படி, தரவுகளில் காணாமல் போன ஏழைகளும் பெண்களுமே கரோனா தாக்கத்தால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டார்கள். இதைப் புரிந்துகொள்ள முறையான தரவுகள் அவசியம்.
சேகரிக்கப்படாத தரவுகள்
கரோனா நோயாளர்கள் குறித்த விரிவான தரவை வெளியிடாத ஒரே பெரிய நாடு இந்தியா. லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒவ்வொரு நகரிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து வரலாற்றுத் தரவுகள் உண்டு. ஆனால், இந்தியாவில் மாநில அளவிலான எண்ணிக்கை மட்டுமே வெளியிடப்படுகிறது. அதிலும் ஒட்டுமொத்த எண்ணிக்கை, மாவட்டம் எண்ணிக்கை, இடங்கள், பரிசோதனை எண்ணிக்கை குறித்த விவரங்கள் உள்ளிட்டவை இல்லை. தனியார் இணையதளங்கள் தொகுத்த தரவுகளையே ஊடகங்களும் ஆராய்ச்சியாளர்களும் பயன்படுத்திவருகிறார்கள்.
2020 செப்டம்பரில் இந்தியாவில் கரோனா பாதிப்பு ஏன் குறைந்தது, பிறகு 2021-ல் ஏன் மீண்டும் வேகமாக அதிகரித்தது? இதை விளக்கும் தரவுகள் இந்திய அரசிடம் இல்லை. மத்திய அரசு மட்டுமில்லை, மாநில அரசுகளும்கூட கரோனாவால் பாதிக்கப்பட்டோர், இறந்தோர் விவரங்களை முழுமையாக வெளியிடத் தயாராக இல்லை. அப்படி வெளியிட்டால் ஊடகங்கள், அரசியல் கட்சிகளின் எதிர்வினையை எதிர்கொள்ள நேரிடும் என்பதே காரணம்.
இந்தியாவில் கரோனா பெருந்தொற்றின் தீராத புதிர்களில் ஒன்று ஏழை மாநிலங்களில் மட்டும் கரோனா தொற்றுகளும் கரோனா மரணங்களும் எப்படிக் குறைவான எண்ணிக்கையில் இருக்கின்றன என்கிற கேள்வி. அடிப்படையற்ற முன்தீர்மானங்களும் தவறான தரவுகளுமே கரோனா குறித்த தவறான இந்த சித்திரத்துக்குக் காரணம். ஏழை மாநிலங்களைச் சேர்ந்த ஏழை மக்களுக்குக் கூடுதல் நோய் எதிர்ப்பாற்றல் இருந்தது என்கிற எந்த ஆதாரமும் அற்ற கருத்தும் தீவிரமாக முன்வைக்கப்பட்டது. ஆனால், இது முற்றிலும் பொய்.
இறப்பு விகித மர்மம்
கரோனா பரவல் தொடங்கிய காலத்திலிருந்தே பெருந்தொற்றை இந்தியா சிறப்பாகக் கையாண்டு வருவதாக மத்திய அரசு கூறிவருகிறது. அதற்கு ஆதாரமாக கரோனா மரண விகிதம் முன்வைக்கப்படுகிறது. உலகப் பொருளாதார மன்றத்தில் 2021 ஜனவரியில் பேசியபோது, பெருமளவு குடிமக்களின் உயிரைக் காப்பாற்றிய நாடு இந்தியா என்று மோடி பெருமிதமாகக் குறிப்பிட்டிருந்தார். இரண்டாவது அலை உச்சத்தைத் தொடுவதற்குச் சில நாட்களுக்கு முன்னால், உலகிலேயே மிகக் குறைவான மரண விகிதம் கொண்டது இந்தியா என அன்றைய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்திருந்தார்.
இந்தியாவில் கரோனா மரண விகிதம் தொடக்கத்தில் குறைவாக இருந்தது என்னவோ உண்மை. ஆனால், அதுவே முழு உண்மை இல்லை. கரோனா மரணங்களை இந்தியா குறைத்துக் கணக்கிடுவதே இதற்குக் காரணம். இதற்கு என்ன ஆதாரம் என்கிற கேள்வி வரலாம். எல்லா மரண விகிதங்களையுமே இந்தியா குறைத்துக் கணக்கிடும்போது, கரோனா மரண விகிதத்தை மட்டும் எப்படிச் சரியாகக் கணக்கிட முடியும்? முதலாவதாக, இந்தியாவில் எல்லா மரணங்களும் பதியப்படுவதில்லை. கரோனாவுக்கு முந்தைய இயல்பான காலமான 2019-ல் பிஹாரில் நிகழ்ந்த மொத்த மரணங்களில் பாதி மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளன.
பொதுவாகவே தொற்றுநோய், நாட்பட்ட நோய்களால் வீட்டிலேயே இறப்பவர்களின் எண்ணிக்கை பெரும்பாலும் பதிவாவதில்லை. குறைந்தபட்சம் மூன்றிலிருந்து ஐந்து மடங்கு கரோனா இறப்புகள் குறைத்துக்காட்டப்பட்டுள்ளன.
தினசரி இறப்பு விகிதம் குறித்த தரவுகளுக்காகச் சில குடிமைப் பதிவு அமைப்புகளின் இணையதளங்களை 2021 மே மாதம் ருக்மினி பரிசோதித்தபோது, மத்திய பிரதேசத்தில் 2021-ன் முதல் ஐந்து மாதங்களில் மரண விகிதம் 42 மடங்கு அதிகமாகவும், ஆந்திரப் பிரதேசத்தில் 38 மடங்கு அதிகமாகவும் பதிவாகியிருந்தது. அப்படியானால், இறப்பு விகிதத்தைக் குறைவாகக் காட்டிய மாநிலங்கள் கரோனா பெருந்தொற்றைச் சிறப்பாகக் கையாண்டன என்று கூறுவதில் அடிப்படை ஏதும் உள்ளதா?
அதே போல், கரோனா முதல் அலையில் பலியானோரின் எண்ணிக்கையில் 60 சதவீதத்தினரை மற்ற காரணங்களால் இறந்ததாக அசாம் தெரிவித்திருக்கிறது. இந்தப் பின்னணியில், இந்தியாவிலேயே குறைவான கரோனா மரண விகிதத்தைக் கொண்ட மாநிலம் என அசாமை அழைப்பது எப்படிச் சரியாகும்? எனவே, அரசு வெளியிடும் தரவுகளை மட்டும் வைத்துக்கொண்டு, ஒரு மாநிலம், தேசம் நோயைச் சிறப்பாகக் கையாண்டது, மற்றொன்று கையாளவில்லை என்று கூறுவது தவறான புரிதல்.
சமூகம், சுகாதாரம் சார்ந்த எந்த ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளவும் முடிவெடுக்கவும் சரியான தரவுகள் தேவை; பிறகு, ஏற்கெனவே உள்ள தரவுகளைப் பயன்படுத்தத்தக்க வகையில் தொகுக்கவும் வெளியிடவும் வேண்டும்; எந்தத் தரவையும் மறைக்கவோ-முடக்கவோ கூடாது; தரவு சொல்வதைத் தாண்டிய கருத்துகளை முன்வைக்கக் கூடாது; அரைகுறைத் தரவுகளை வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வரக் கூடாது போன்றவற்றைக் கவனத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் ருக்மினி. ஆனால், மத்திய அரசின் பெரும்பாலான புள்ளிவிவரங்கள், மோசமான தரவுக் கட்டமைப்புடன் மேற்கண்ட அம்சங்களுக்கு எதிராக உள்ளன. தரவு சார்ந்த நேர்மை இல்லையென்றால் நாட்டுமக்கள், இளைய தலைமுறையின் எதிர்காலம் இன்னும் மோசமாக இருக்கும் என்று அவர் எச்சரிக்கிறார்.
- ஆதி வள்ளியப்பன்,
தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in