

நீட் தேர்வால் சமூகநீதி பாதிக்கப்படுகிறது, கிராமப்புற மாணவர்களின் மருத்துவப் படிப்புக்கான அனுமதி மறுக்கப்படுகிறது, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தகுதி பெற முடிவதில்லை. ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள், பயிற்சி வகுப்புகள் அதிகக் கட்டணம் வசூலிக்கின்றன என்பது போன்ற பல்வேறு விமர்சனங்களின் அடிப்படையாக நீட் தேவையில்லை என்று தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் வாதங்களை முன்வைக்கின்றன.
இந்த வாதங்களெல்லாம் பல முறை, பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டும், அவற்றை ஏற்க மறுத்து ‘நீட் கட்டாயம் தேவை' என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 2010-ல் மருத்துவப் படிப்புக்குப் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து, பொதுவான நுழைவுத்தேர்வின் அவசியத்தை வலியுறுத்தினார் அன்றைய காங்கிரஸ் தலைமையிலான அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல். அதன் பின் பல்வேறு ஆய்வுகள், ஆலோசனைகளுக்குப் பின்னர் நாடு முழுவதும் ஒரே பொதுத் தேர்வு என்ற உத்தரவைப் பிறப்பித்தது காங்கிரஸ் அரசு. இந்த உத்தரவை எதிர்த்துப் பல தனியார் கல்லூரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அவ்வழக்கு அவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பான நிலையில், சீராய்வு மனுசெய்ததில் அந்தத் தீர்ப்பை நிறுத்தி வைத்து நீட் தேர்வை உறுதிசெய்தது உச்ச நீதிமன்றம். சில மாநிலங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பாஜக அரசு ஒரு வருடம் அவற்றுக்கு விலக்கு அளித்து அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. ஆனால், அதன் பின்னர் விலக்கு கேட்டபோது உச்ச நீதிமன்றம் அனுமதிக்க மறுத்துவிட்டது.
நீட் தேர்வுக்கு எதிரான அனைத்து விமர்சனங்களுக்கும் உரிய விளக்கங்களை அளித்தும், தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவருவது வியப்பளிக்கவில்லை. கடந்த 40 ஆண்டுகளில், அரசுகளால், அரசியலர்களால் தமிழகத்தில் கல்வித் துறை தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டு, ஆங்கிலவழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி தனியாருக்கு வழங்கப்பட்டு கல்வி வியாபாரம் களைகட்டத் தொடங்கியது. வருமானத்தை அள்ளிக் குவித்த தனியார் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு எமனாக அமைந்தது.
நீட் தேர்வுக்கு முன்னர் மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்பில் அனுமதிக்கப்படுவதற்காகவே, லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்பட்டுவந்த, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கோழிப்பண்ணைப் பள்ளிகள் என்றழைக்கப்படும் 'உறைவிட' மனப்பாடப் பள்ளிகளின் மாணவ, மாணவிகள், அதிக அளவில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்தப் பள்ளிகள் அனைத்தையுமே கிராமப்புறப் பள்ளிகளாக தமிழக அரசு கருதியது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016-ம் ஆண்டு (நீட்டுக்கு முன்), அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2,500 ஆக இருந்தபோதே, இந்தப் பள்ளிகளில் பயின்ற 1,750 மாணவ, மாணவிகள் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற்றனர். ஆனால், 2017-ம் ஆண்டு (நீட் தொடங்கிய வருடம்) இந்தக் கல்லூரிகளிலிருந்து வெறும் 373 மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளுக்குத் தேர்வாகினர் என்பதிலிருந்தே நீட் தேர்வை இந்தப் பள்ளிகள் ஏன் எதிர்க்கின்றன என்பதை அறிந்துகொள்ள முடியும்.
நீட் தேர்வுக்கு முன்னர், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட மாணவர்கள் ஒற்றைப்படை எண்ணிக்கையிலேயே மருத்துவக் கல்லூரிகளில் அனுமதி பெற்ற நிலையில், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இரட்டைப்படை எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகளுக்குத் தேர்வுபெற்றுவருவது மறுக்க முடியாத உண்மை. ஆகவே, கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு நீட் எதிராக இருக்கிறது என்ற வாதம் பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள மருத்துவ இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15% இடங்கள் தவிர்த்து, மீதமுள்ள 85% இடங்களும் தமிழகத்தைச் சார்ந்தவர்களுக்கே என்பது விதி. இதில் தனியார் மற்றும் அரசுக் கல்லூரிகள் உட்பட அரசுக்கான இடங்கள் அனைத்துமே 69% இடஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே கலந்தாய்வு முறையில் ஒதுக்கப்படுகின்றன. நீட் தேர்வுக்கு முன்னர் இருந்ததைவிட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அதிக எண்ணிக்கையில் தற்போது தேர்வுபெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு, தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். அனுமதியில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில், எஸ்.டி. வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 29(1%) கிடைத்த இடங்கள் 29(1%), எஸ்.சி. அருந்ததியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 84(3%), கிடைத்த இடங்கள் 85(3%), எஸ்.சி. வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 421(15%), கிடைத்த இடங்கள் 431(15.4%), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 560(20%), கிடைத்த இடங்கள் 694(24.8%), பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 84(3%), கிடைத்த இடங்கள் 119(4.2%), பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 757 (27%), கிடைத்த இடங்கள் 1,340 (47.8%), இதர வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 869 (31%) கிடைத்த இடங்கள் 107 (3.8%).
ஆகவே, சமூகநீதிக்கு, இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீட் தேர்வு உள்ளது என்ற வாதமும் தகர்க்கப்பட்டுள்ளது.
2006-2016 காலகட்டத்தில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் 340 பேர் மட்டுமே மருத்துவக் கல்விக்குத் தேர்வுபெற்றிருந்த நிலையில், இன்றைய பாஜக தலைவரும், அன்றைய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டாவின் ஆலோசனைப்படி, கடந்த அதிமுக அரசு செயல்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின்படி கடந்த 2 ஆண்டுகளில் 900-க்கும் அதிகமான மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்பது, நீட் தேர்வானது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்பதை உணர்த்துகிறது.
திமுக அரசால் நியமிக்கப்பட்ட ஏ.கே.ராஜன் குழு அறிக்கையானது நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்குத் தமிழக மாணவர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டியுள்ளது என்றும், பயிற்சி நிறுவனங்கள் ஆண்டுதோறும் ரூ.5,750 கோடி வருமானம் ஈட்டுகின்றன என்றும் குறிப்பிட்டது. ஆனால், 2021-ல் தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணவர்கள் 25,593 பேரில், 10,511(40%) பேர் மட்டுமே பயிற்சி எடுத்ததாகக் குறிப்பிட்டவர்கள், 15,082 மாணவர்கள் பயிற்சி எடுத்ததாகக் குறிப்பிடவில்லை. ஆனால், இது குறித்து ஏ.கே.ராஜன் குழுவிடம் கேட்டபோது, அரசு அளித்த புள்ளிவிவரங்களையே தான் தெரிவித்ததாகக் கூறியது, திமுக அரசின் உள்நோக்கத்தைக் குறிக்கிறது.
ஆக, நீட் தேர்வால் ஆதிக்க சக்திகளின் ஊழல், லஞ்சம், முறைகேடுகள் ஒழிக்கப்படுவதோடு, சமூகநீதி நிலைநாட்டப்பட்டு, ஏழை கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் மருத்துவப் படிப்பில் இணைந்து, தரம் வாய்ந்த மருத்துவர்களை நம் நாடு பெறுவதற்கு நீட் தேர்வு வழிவகுக்கிறது. இதை உணர்ந்து, மக்கள் நலன் கருதி நீட் தேர்வுக்கான எதிர்ப்பைத் தமிழக அரசியல் கட்சிகள் கைவிட வேண்டும்.
- நாராயணன் திருப்பதி, பாஜக செய்தித் தொடர்பாளர்.