Published : 11 Feb 2022 05:51 AM
Last Updated : 11 Feb 2022 05:51 AM

உள்ளாட்சித் திருவிழா: சுதந்திரத்துக்குப் பிந்தைய தமிழக உள்ளாட்சி

ஜெயபால் இரத்தினம்

ஆங்கிலேயர் காலத்தில், உள்ளூர் மக்களைக் கொண்ட உள்ளூராட்சி என்ற பொதுக் கருத்தியல் தளத்தில், தனித்துச் செயல்படுதல், ஒருங்கிணைந்து செயல்படுதல் ஆகிய இருவேறு கோட்பாடுகளுடன் உருவாக்கப்பட்ட இரண்டு உள்ளாட்சி நிறுவன அமைப்புகள் வலுவாக நிலைபெற்றிருந்தன. அவர்களின் ஆட்சி முடிவடைந்தபோது, அந்தந்த நகர நிர்வாகத்துக்கு மட்டுமே பொறுப்பான நகர்ப்புற உள்ளாட்சிகள், கிராம அளவில் தனியாகவும் மாவட்ட அளவில் ஒருங்கிணைந்தும் செயல்படும் ஊரக உள்ளாட்சிகள் ஆகியவை செயல்பட்டுக்கொண்டிருந்தன.

1950-ல் மெட்ராஸ் கிராமப் பஞ்சாயத்துகள் சட்டம் அறிக்கையிடப்பட்டது. அதன்படி, கிராம மற்றும் மாவட்ட உள்ளாட்சி மன்றங்கள் தொடர்ந்தன. அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை கிடைத்தது. 500-க்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட அனைத்துக் கிராமங்களிலும் ஊராட்சி மன்றம் அமைந்தது. 1920-ம் ஆண்டின் நகர்ப்புறச் சட்டம் ஒருசில திருத்தங்களுடன் தொடர்ந்தது.

1952-ல் நாடு முழுவதும், சமுதாய வளர்ச்சி வட்டங்கள் உருவாக்கப்பட்டு, தேசிய நீட்டிப்புத் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டன. இத்திட்டத்தில் உள்ளாட்சிகளுக்கு எவ்விதப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. இது, இந்திய அளவில் விவாதப் பொருளானது. இது குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட பல்வந்த்ராய் மேத்தா குழு, வளர்ச்சிப் பணிகளை உள்ளாட்சி மன்றங்கள் மூலமாகவே மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்காக ஒருங்கிணைந்து செயல்படத்தக்க வகையில் கிராம, வட்டார மற்றும் மாவட்ட அளவில் ஊரக உள்ளாட்சி மன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைத்தது.

கிராமப்புற உள்ளாட்சிகளுக்கான சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசின் வரம்புக்கு உட்பட்டது என்பதால், உரியவாறு சட்டங்கள் இயற்றும்படி, மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டன. தமிழ்நாடு அரசு, அப்பரிந்துரைகளைக் கொள்கை அடிப்படையில் ஏற்று, ஆனால் அமைப்புரீதியான சில மாற்றங்களுடன் 1958-ன் மெட்ராஸ் பஞ்சாயத்துகள் சட்டத்தை அறிக்கையிட்டது.

இச்சட்டத்தில், கிராம ஊராட்சி, மற்றும் வட்டார அளவில், ஊராட்சிகளின் ஒருங்கிணைவாக அமைந்த, ‘ஊராட்சி ஒன்றியம்’ என்ற பெயரிலான ஒரு புதிய உள்ளாட்சி அமைப்பு ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கிய இரண்டடுக்கு முறை கட்டமைக்கப்பட்டிருந்தது. இதன்படி, பல ஆண்டுகளாகச் செயல்பாட்டில் இருந்துவந்த மாவட்ட உள்ளாட்சி மன்றம் செயலிழந்துபோனது. தவிர, இச்சட்டத்தில் கிராமம், நகரம் என இருநிலைகளில் ஊராட்சிகள் வகைப்படுத்தப்பட்டிருந்தன. அதன்படி ‘பேரூராட்சி’ உதயமானது.

மறுகட்டமைப்பு செய்யப்பட்டதற்கு ஏற்றாற்போல அதிகாரப் பரவலும் மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டன. அதுவரை மாவட்ட உள்ளாட்சி மன்றத்தின் கடமையாக இருந்துவந்த இணைப்புச் சாலைகள், உயர்நிலைக் கல்வி, பொது மருத்துவம் ஆகியவை முறையே நெடுஞ்சாலை, கல்வி, பொதுநலம் ஆகிய அரசுத் துறைகளுக்கு மாற்றப்பட்டன. மேலும், அதுவரை மாவட்ட மன்றத்தின் கடமைப் பொறுப்பாக இருந்துவந்த ஆரம்பக் கல்வி புதிதாக உருவாக்கம் பெற்ற ஊராட்சி ஒன்றியத்துக்கு மாற்றப்பட்டது. 1962-ல் ஊராட்சி ஒன்றியங்கள் செயல்படத் தொடங்கின. அவை சமுதாய வளர்ச்சி வட்டங்களாகவும் அங்கீகரிக்கப்பட்டன. விவசாயம், கால்நடை, பொதுநலம், மகப்பேறு, கூட்டுறவு உள்ளிட்ட அனைத்துத் துறை சார்ந்த வசதிகளும் ஆலோசனைகளும் ஊராட்சி ஒன்றியம் என்ற ஒரே குடையின்கீழ் பொதுமக்களுக்குக் கிடைத்தன.

1958-ல் இயற்றப்பட்ட மற்றொரு சட்டத்தின்படி, ஆலோசனைகள் மட்டுமே வழங்க அதிகாரம் பெற்றிருந்த வளர்ச்சி மாவட்ட மன்றங்கள் உருப்பெற்றன. ஒன்றிய/ மாநில அரசுகள், அவ்வப்போது ஏற்படும் சூழல்களுக்கேற்ப உள்ளாட்சிகளின் செயல்பாடுகள் தொடர்பாகப் பல்வேறு காலகட்டங்களில் குழுக்களை அமைத்துப் பரிந்துரைகளைப் பெற்று, தேவையான நடவடிக்கைகளை எடுத்துவந்தன.

அந்த வகையில், ஒன்றிய அரசு அமைத்த சந்தானம் குழு (1963), அசோக் மேத்தா குழு (1977), சர்க்காரியா குழு (1985), துங்கன் குழு (1986), ஜி.கே.ராவ் குழு (1986), எல்.எம்.சிங்வி குழு(1986) ஆகியவை முக்கியமானவை. தமிழ்நாடு அரசு, வாசுதேவன் குழு (1976), தாமோதரன் குழு (1990), வெங்கடராமன் குழு (1972), சட்டநாதன் குழு (1978), சண்முகநாதன் குழு, ஆகிய குழுக்களை அமைத்துத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தது. 1992-ல்,கூறு எண் 243 மற்றும் அட்டவணை எண் 11 மற்றும் 12 ஆகியவற்றை இந்திய அரசமைப்பில் உள்ளீடுசெய்து, வரலாற்றுச் சிறப்புமிக்க 73 மற்றும் 74-வது திருத்தங்கள் அறிக்கையிடப்பட்டன.

ஒன்றிய/ மாநில அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வருவாயின் ஒரு பகுதியை உள்ளாட்சிகளுக்குப் பங்கீடு செய்யும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாநில நிதிக் குழு அமைக்கப்பட்டு, உள்ளாட்சி நிதிச் செயல்பாடுகளை ஆய்வுசெய்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். உரிய காலத்திலும் முறையாகவும் தேர்தல்கள் நடத்தப்பட வசதியாகத் தன்னாட்சி உரிமையுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் அமைக்கப்படும். பட்டியலினத்தவருக்கும் பழங்குடியினருக்கும் அவரவர் மக்கள்தொகை விகிதத்துக்கேற்பவும், மகளிருக்கு, மொத்தத்தில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவிலும் உள்ளாட்சி மன்றப் பொறுப்புகளில் இடஒதுக்கீடு செய்யப்படும். கிராமங்களில் ‘கிராம சபை’ அமைக்கப்படும் என்பதெல்லாம் அரசமைப்பின்படி உறுதிசெய்யப்பட்டன.

மேலும், கிராமம், இடைப்பட்ட நிலை, மாவட்டம் ஆகிய மூன்று நிலைகளில் ஊரக உள்ளாட்சிகளும், நகர்ப் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி ஆகிய மூன்று வகைப்பாடுகளுடன் நகர்ப்புற உள்ளாட்சிகள் அமைக்கப்படவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது.

அரசமைப்பின் உட்கூறுகளுக்கேற்ப தமிழ்நாட்டில் 1994-ல் புதிய ஊரக மற்றும் நகர்ப்புறச் சட்டங்கள் அறிக்கையிடப்பட்டன. ஊரகச் சட்டத்தில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகியவை உருப்பெற்றன. மேலும், அதுவரை ஊரக உள்ளாட்சியாகச் செயல்பட்டுவந்த பேரூராட்சிகள், நகர்ப்புற உள்ளாட்சியாக வகைமாற்றம் செய்யப்பட்டு, நகராட்சிகள் சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டன.

2004-ல் ‘பேரூராட்சிகள்’, ‘சிறப்புச் சிற்றூராட்சிகள்’ என்று வகைமாற்றம் செய்யப்பட்டு, ஊராட்சிச் சட்டத்தின்கீழ் வைக்கப்பட்டன. ஆனால், 2006-ல் அவை மீண்டும் பேரூராட்சியாக வகைமாற்றம் செய்யப்பட்டு, மீண்டும் நகராட்சிச் சட்டத்தின்கீழ் வைக்கப்பட்டன. 2016-ல், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்கள் அனைத்திலும், மகளிர்க்கான இடஒதுக்கீட்டின் அளவை, மூன்றில் ஒரு பங்கு என்ற நிலையிலிருந்து 50% ஆக உயர்த்தி, சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டன. இது வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய மாற்றம் ஆகும்.

உள்ளூர் மக்களால் உருப்பெற்று அவர்களுக்காகவே செயல்பட்டுவருவதால், மக்களுக்கும் உள்ளாட்சிகளுக்குமான பிணைப்பு என்பது உணர்வுபூர்வமானது. அரசிடம் நிதிவசதி இல்லாமலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலும் சிரமப்பட்ட ஆரம்ப நாட்களில், உள்ளாட்சி மன்றங்கள் அளித்த கல்வி, மருத்துவம், இணைப்புச்சாலை ஆகிய சேவைகளும் அவை உருவாக்கிய கட்டுமானங்களுமே இன்று அத்துறைகள் அடைந்துள்ள அசுர வளர்ச்சிக்கான அடித்தளம் என்பதும், ஒட்டுமொத்த மனிதவளக் குறியீட்டு அளவில் தமிழ்நாடு உயர்ந்து நிற்பதற்கான அடிப்படைக் காரணிகளில் உள்ளாட்சி மன்றங்களின் பங்களிப்பு கணிசமானது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

- ஜெயபால் இரத்தினம், உள்ளாட்சித் துறை அலுவலர் (ஓய்வு), ‘தமிழக வரலாற்றில் பெரம்பலூர்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: jayabalrathinam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x