தண்ணீர்.. தண்ணீர்.. தாகம் தீர்க்க தவிக்கும் தமிழகம்: தடுமாறும் அதிகாரிகள்

தண்ணீர்.. தண்ணீர்.. தாகம் தீர்க்க தவிக்கும் தமிழகம்: தடுமாறும் அதிகாரிகள்
Updated on
4 min read

அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைக்கிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் கொளுத்துகிறது. கடும் வெயில் வந்துவிட்டாலே அடுத்ததாக தலைதூக்குவது குடிநீர் பிரச்னை.

இன்னும் 45 நாட்களில் தென் மேற்கு பருவமழை தொடங் கிவிடும். இதன்மூலம் தமிழகத் துக்கு பெருமளவில் பலன் இல்லா விட்டாலும், அண்டை மாநிலங் களில் மழை பெய்தால், தமிழகத் துக்கு தண்ணீர் கிடைக்கும். கடந்த 2 ஆண்டுகளில் பருவமழை சராசரி அளவைவிட குறைவாக கிடைத் துள்ளது. 2014-ல் 88 சதவீதம், 2015-ல் 86 சதவீதம் கிடைத்துள்ள நிலையில், இந்த ஆண்டு சராசரி அளவைவிட கூடுதல் மழை கிடைக் கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள குடிநீர் பிரசிச்னை நிலவரத்தைப் பார்ப்போம்.

சென்னை

சென்னையில் பல்வேறு இடங்களில் குழாய்களில் போதிய அழுத்தத்துடன் குடிநீர் வரவில்லை. பொதுமக்கள் வெளியில் பணம் கொடுத்து குடிநீரை வாங்குகின்றனர். மாநகரப் பகுதியில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்படாத குடிசை கள் நிறைந்த சைதாப்பேட்டை, வியாசர் பாடி போன்ற பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘சென்னையில் அன்றாட குடிநீர் தேவை 85 கோடி லிட்டர். முழு தேவையையும் தினமும் நிவர்த்தி செய்து வருகிறோம். சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம், சோழவரம் ஆகிய ஏரிகளில் தற்போது மொத்தம் 6 ஆயிரத்து 400 மில்லியன் கன அடி நீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 2 ஆயிரத்து 245 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருந்தது.

தற்போது உள்ள நீர் இருப்பைக்கொண்டு, வரும் அக்டோபர் மாதத்துக்கு மேல் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். அதற்குள் கோடை மழை, தென்மேற்கு பருவமழை வந்துவிடும். இந்த ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை’’ என்றார்.

கோவை

கோவை சிங்காநல்லூர், எஸ்ஐஎச்எஸ் காலனியை ஒட்டியுள்ள மாநகராட்சியின் 59-வது வார்டுக்கு உட்பட்ட சூர்யா நகர், காமாட்சி நகர், கண்ணன் நகர் விரிவு, செந்தில் நகர், சிவலிங்கபுரம், சீனிவாச புரம் உள்ளிட்ட பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுவதாக இங்குள்ள மக்கள் குற்றம் சாட்டு கின்றனர். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த வலியுறுத்தி கடந்த 11-ம் தேதி தங்கள் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட் டனர். ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததால் தற்காலி கமாக போராட்டம் நிறுத்தப்பட்டது.

கோவை மாநகரம், மாநக ராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் படிப்படியாக குறைந்து வருகிறது. பில்லூர் 2-வது குடிநீர் திட்டத்தில் மின்சாரக் கோளாறு காரணமாக குடிநீர் கொண்டு வருவதில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சிக்கல் நீடிக்கிறது. இதனால் இத்திட்டத்தில் பயனடையும் மாநகரப் பகுதி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

கோவை மாநகராட்சியின் மற்றொரு குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையில் வெயிலின் காரணமாக நீர் குறைந்து வருகிறது. வழக்கமாக நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கக்கூடிய சிறுவாணி குடிநீர் திட்டத்திலிருந்து தற்போது, 40 முதல் 50 மில்லியன் லிட்டர் வரை மட்டுமே தண்ணீர் பெறப்படுவதாக கோவை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கவுண்டம்பாளையம், துடிய லூர், வடவள்ளி, வீரகேரளம், இடையர்பாளையம், காளப்பட்டி என மாநகராட்சியில் புதிதாக இணைந்த பகுதிகள் அனைத்துமே குடிநீர் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளன.

திருப்பூர்

திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் நடை பெறுகிறது. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட நல்லூர், வேலம் பாளையம் உள்ளிட்ட 8 ஊராட்சி களில் சுமார் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 8 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டில் தவிக்கும் பொதுமக்கள் அடிக்கடி சாலை மறியலில் ஈடுபடும் நிகழ்வுகளும், சமீபகாலமாக திருப்பூர் மாநகரில் அதிகரித்துள்ளன.

சேலம்

சேலம் மாவட்ட தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் மேட்டூர் அணை குட்டையாக தேங்கி நிற்கிறது. 55 அடி அளவுக்கே நீர்மட்டம் உள்ளது. மழை, வெள்ள காலத்தில் பொங்கி ஓடும் காவிரி ஆற்றில் ஆண்டுக்கு 10 டிஎம்சி தண்ணீர் வீணாகி கடலில் கலக்கிறது. மேட்டூரில் குறைந்த அளவு நீரைக் கொண்டு மாநகரம், மாவட்ட பகுதிக்கு தண்ணீர் விநியோகம் முறையாக செய்ய முடியாத நிலையில், காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து காவிரி உபரி நீர் நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் ரா.தம்பையா கூறும்போது, ‘‘காவிரி - சரபங்கா நதி நீர் இணைப்புக்கு வெறும் ரூ.200 கோடி இருந்தால் போதும் என பொறியாளர்கள் திட்ட வரைவு அளித்துள்ளனர். தானாதியூர் மூலக்காடு நீரேற்று திட்டம், ஆனைப்பள்ளம், ஆடையூர் வழியாக காவிரி - சரபங்கா நதி இணைப்பு, நீரேற்று திட்டம் மூலம் மேச்சேரி ஏரி, குளம் உபரி நீர் கொண்டு நிரப்புதல் ஆகிய 3 திட்டங்கள் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இடைப்பாடி, தாரமங்கலம், மேச்சேரி, ஓமலூர், நங்கவல்லி ஆகிய 5 ஒன்றியங்களில் வசிக்கும் 5 லட்சம் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகும்” என்றார்.

மதுரை

மதுரை நகரின் பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 600 அடிக்கும் கீழிறங்கிவிட்டது. வைகை குடிநீர் போதுமானதாக இல்லை. விரிவாக்கப் பகுதியில் தண்ணீர் விநியோகிக்க முடியவில்லை. இதனை தீர்க்க வைகை 3-ம் குடிநீர் திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். வைகையிலிருந்து தினசரி 60 கன அடிக்குப் பதில் கூடுதல் நீரை பெற வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, முதுகுளத்தூர், கடலாடி உட்பட பெரும்பாலான பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. காவிரி குடிநீர் திட்டத்தில் இன்னும் பல பகுதிகளுக்கு குழாய்களே பதிக்கப்படாமல் உள்ளதால் குடிநீரே செல்லவில்லை. காவிரி குடிநீர் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுதல், தொண்டியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் பிரச்சினைகளை தீர்க்கலாம்.

தேனி மாவட்டத்தில் தற்போதுவரை பிரச்சினை இல்லை. கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளை தூர்வாரி நீர்பிடிப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும். திண்டுக்கல்லில் வாரம் ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இது 10 நாட்களுக்கு ஒருமுறையாக மாறும் வாய்ப்பு உள்ளது. மக்கள்தொகைக்கு ஏற்ப திட்டமிடாததால் பல ஆண்டுகளாக குடிநீர் தீராத பிரச்சினையாக தொடர்கிறது. முடங்கிப்போன பேரணை திட்டத்தை மீண்டும் செயல்படுத்தினால் ஓரளவு பிரச்சினையை சமாளிக்கலாம்.

சிவகங்கை, காளையார் கோவில், திருப்புவனம், மானா மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் பிரச்சினை உள்ளது. காவிரி குடிநீர் திட்டத்தை நீட்டிப்பது, வைகை ஆற்றில் கிணறு அமைத்து குடிநீரை பெற்று விநியோகிப்பதன் மூலம் பிரச்சினை யை தீர்க்கலாம். விருதுநகர் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கூடுதல் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நீர் உறிஞ்சுவதோடு, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். தற்போது உள்ள குடிநீர் ஆதாரங்களை செம்மைப்படுத்தி பராமரித்து பாதுகாக்க வேண்டும்.

ஈரோடு

ஈரோடு மாநகராட்சி மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு, காவிரியாற்றில், 7 குடிநீரேற்று நிலையங்கள் இயங்குகின்றன. இவை மூலம், நாள்தோறும், 40 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

பவானிசாகர் அணையில், 105 அடி வரை 32.8 டிஎம்சி நீரை தேக்கி வைக்க முடியும். தற்போது அணையின் நீர்மட்டம் 40.2 அடியாக குறைந்துள்ளது. பவானிசாகர் அணை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கூறும்போது, ‘‘பாசனத்துக்காக பவானி ஆற்றில் 30-ம் தேதி வரை நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும், நீர் பற்றாக்குறை காரணமாக 28-ம் தேதியுடன் நீர் திறப்பு நிறுத்தப்படும். அதன் பின் குடிநீர் தேவைக்கு மட்டும் நீர் திறக்கப்படும்’’ என்றார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் கூறும்போது, ‘‘மாவட்டத் தின் குடிநீர் தேவைக்காக பவானி சாகர் அணையில் இருந்து 500 கன அடியும், மேட்டூர் அணையில் இருந்து 1,000 கன அடியும் நீர் திறக்கப்படுகிறது. முழுமையான அளவு நீரை தேக்கி வைக்கும் வகையில் 6 தடுப்பணைகளும் பராமரிக்கப்பட்டுள்ளன. நம்பியூர், பவானிசாகர் பகுதியில் வெப்பம் அதிகமாக உள்ளதால், குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. அங்குள்ள நீரேற்று நிலையங்கள் 22 மணி நேரமும் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஆழ்துளைக் கிணறு மூலமாக நீர் எடுக்கப்பட்டு விநியோகம் நடந்து வருகிறது’’ என்றார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகர பகுதியில் பெரிய அளவுக்கு குடிநீர் பிரச்சினை இதுவரையில் தலைதூக்கவில்லை. ஆங்காங்கே ஒருசில இடங்களில் குடிநீர் விநியோகம் சரியாக இல்லாத இடங்களில் மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மாநகரில் பெரும்பாலும் 2 நாட்களுக்கு ஒரு முறையாவது குடிநீர் விநியோகம் இருக்கிறது. விரிவாக்கப் பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மே மாதம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை பெரிய அளவுக்கு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 3 ஆண்டு களாகவே கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 3 நாளுக்கு ஒரு முறை என்று இருந்த குடிநீர் விநியோகம் தற்போது 11 நாட்களுக்கு ஒருமுறை என்றாகிவிட்டது. மக்கள் தண்ணீருக்காக தவிக்கிறார்கள். மாநகரில் உள்ள 8 குடிநீர் தொட்டி களிலும் மக்கள் காத்திருக்கின்றனர். மாநகரப் பகுதியில் உள்ள 8 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி களிலும் பொதுமக்களின் பயன்பாட் டுக்காக தலா ஒரு பொது குழாய் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் தண்ணீருக்காக காலிக் குடங்களுடன் ஆண்கள் பல மணி நேரம் நள்ளிரவு வரை கூட நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்திருக்கிறது. மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சு கிணறுகளிலும் தண்ணீர் குறைந்து, பம்பிங் செய்யப்படும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. எனவே, நீர் உறிஞ்சு கிணறுகள் அமைந்துள்ள பகுதிகளில் அதிக தண்ணீரை தேங்கும் வகையில், ஆற்றில் உள்ள மணல் மேடுகளை வெட்டி சரி செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in