Last Updated : 09 Feb, 2022 05:58 AM

 

Published : 09 Feb 2022 05:58 AM
Last Updated : 09 Feb 2022 05:58 AM

சாதிக்கும் சாதிக் கூட்டணி: தமிழ்நாட்டுக்குப் பெருமையா?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது பாஜக. ‘கோட்டையில் காவிக் கொடி பறப்பதற்கான முதல் படி இது’ என்று கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் பாஜகவினர். ‘கமுதி 14-வது வார்டில் பாஜகவை எதிர்த்துத் தோற்றிருந்தால்கூடப் பரவாயில்லை. வேட்பாளரை நிறுத்தகூட திமுகவிலோ, அதன் கூட்டணியிலோ ஒரு தொண்டனும் இல்லையா? இதுதான் இந்துத்துவப் படையெடுப்பைத் திமுக முறியடிக்கிற லட்சணமா?’ என்று இன்னொரு தரப்பினர் திட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பிரச்சினையில் இன்னொரு பார்வை பேசப்படாமலேயே போய்விடுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றியவன் என்கிற முறையில் அதை விவாதத்துக்குக் கொண்டுவர நினைக்கிறேன்.

கமுதி பேரூராட்சியைக் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து ஆட்சிசெய்துகொண்டிருப்பது சாதிக் கூட்டணி. ‘கட்சியும் வேண்டாம் ஒரு கொடியும் வேண்டாம்’ என்பது இவர்களின் கொள்கை முடிவு. தேர்தல் ஆணையம் தேர்வுசெய்யும் நபரல்ல, இந்தக் கூட்டணி தேர்வுசெய்பவரே பேரூராட்சித் தலைவராகவும், துணைத் தலைவராகவும் வர முடியும். இந்த உள்ளூர் மரபில் தலையிட்டுத் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக, திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதானக் கட்சிகள் வேட்பாளரையே அறிவிப்பதில்லை.

கமுதி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள். இதில் நாடார், இஸ்லாமியர், கிறிஸ்தவ மீனவர், செட்டியார் ஆகியோர் தங்களுக்குள் பேசி, போட்டியின்றி கவுன்சிலர்களைத் தேர்வு செய்துகொள்வார்கள். இப்படியே பெரும்பான்மைக்குத் தேவையான கவுன்சிலர்களைத் தேர்வுசெய்துவிடுவதால், அதே பாணியிலேயே பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவியையும் இவர்களுக்குள்ளாகவே பகிர்ந்துகொள்கிறார்கள். இதன்படி, கடந்த 30 ஆண்டுகளாகப் பெரும்பான்மை சமூகமான நாடாரும், இஸ்லாமியருமே மாறி மாறிப் பேரூராட்சித் தலைவராகிறார்கள். துணைத் தலைவர் பதவி கிறிஸ்தவ மீனவர் உள்ளிட்ட பிற சமூகங்களுக்குச் சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. இதே பாணியைத்தான் மறவர், தேவேந்திர குல வேளாளர் போன்றோர் தங்கள் வார்டுகளில் கடைப்பிடிக்கிறார்கள்.

இந்த முறை தலைவர் பதவி இஸ்லாமியருக்கும், துணைத் தலைவர் பதவி மீனவருக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கவுன்சிலர் விஷயத்தில் ஊர்க்காரர்களின் திட்டம் கொஞ்சம் சறுக்கிவிட்டது என்றாலும், 3 முஸ்லிம், 2 நாடார், ஒரு மீனவர், ஒரு செட்டியார், ஒரு மறவர், 2 அருந்ததியர் (ஒருவர் மறவர் ஆதரவு, இன்னொருவர் நாடார், இஸ்லாமியர் ஆதரவு) என 11 கவுன்சிலர்கள் போட்டியின்றி சுயேச்சையாகத் தேர்வாகியிருக்கிறார்கள். தேவேந்திர குல வேளாளர் பெரும்பான்மையாக வாழும் 14-வது வார்டிலும் அப்படிப் போட்டியில்லாமல் (அன்னப்போஸ்டு) தேர்வுசெய்யப்பட்டவரைத்தான், பாஜக தனது வெற்றியாகக் கொண்டாடிவருகிறது.

வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர் சத்யாவைத் தொடர்புகொண்டபோது, அவரது கணவர் ஜோதிராஜா பேசினார். ‘கமுதி வெள்ளையபுரம் தனி வார்டு. இங்கே தேவேந்திரகுல வேளாளர்தான் பெரும்பான்மை. 107 ஓட்டு மட்டும் அருந்ததியர். கிராமம் (கமுதி - வெள்ளையபுரம்) சார்பில் யார் வேட்பாளர் என்று முடிவுசெய்கிறார்களோ, அவர்களை யாரும் எதிர்த்துப் போட்டியிடக் கூடாது என்பது மரபு. கடந்த முறை என் உறவுக்காரப் பெண்ணுக்கு வாய்ப்புக் கொடுத்தார்கள். திமுககாரர் என்றாலும் சுயேச்சையாகவே தேர்வானார். இந்த முறை என் மனைவிக்கு வாய்ப்புக் கேட்டேன். தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றத்துக்கு உதவிய கட்சி பாஜக என்பதால், மனைவியை பாஜக சார்பிலேயே நிறுத்தினேன். பதவி உனக்குன்னு ஒதுக்கியாச்சு. உன் இஷ்டம் என்று பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதன்படி என் மனைவி பாஜக கவுன்சிலரானார். தகவல் அறிந்ததும் மாநிலத் தலைவர் அண்ணாமலை எங்களைத் தொடர்புகொண்டு பாராட்டினார். இதேபோல வேறு வார்டுகளிலும் வெல்லும் வாய்ப்பிருந்தால் முயற்சி செய்யுங்கள் என்றும் ஊக்கப்படுத்தினார்’ என்றார்.

இது சரியான நடைமுறையா?

உள்ளாட்சிகளில் கட்சி எதற்கு? சண்டைச் சச்சரவு இல்லாமல் மக்கள் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது நல்லதுதானே என்று தோன்றலாம். ஆனால், இந்த சாதி ஒப்பந்தம் காரணமாக கமுதியில் சிறுபான்மையினராக இருக்கும் அகமுடையார், கோனார், ஆசாரி, கல் ஒட்டர், மருத்துவர் உள்ளிட்ட பிற சமூகத்தினருக்குப் பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை. சமூக அக்கறையும், பொதுப்பணியில் ஈடுபடும் ஆர்வமும் இருந்தாலும்கூட அவர்களால் வெற்றிபெற அல்ல, வேட்புமனுத் தாக்கல் செய்யக்கூட முடியாது என்பது ஏற்கத்தக்கதல்ல. புரியும்படி சொல்வதென்றால், முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்த ஊரில் பிறந்திருந்தாலும், அவர்களால் கவுன்சிலர் தேர்தலில்கூட நிற்க முடியாது. அவர்கள் சார்ந்த கட்சியும் அவர்களை வேட்பாளர்களாக முன்னிறுத்த அஞ்சும் என்பது எவ்வளவு பெரிய கொடுமை?

ராமநாதபுரம் மாவட்டத்திலோ கமுதியைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறார்கள். ‘பாருங்க. கமுதி மக்கள் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள். அதைப் போல் நாமும் செய்ய வேண்டாமா?’ என்று சாயல்குடி பேரூராட்சியில் இஸ்லாமியர், கோனார் உள்ளிட்டோர் கூட்டணியாகக் களமிறங்கியிருக்கின்றனர். ‘உள்ளூர் மரபில் தலையிடுவதில்லை’ என்ற கட்டுப்பாடு காரணமாக, அந்தப் பேரூராட்சியிலும் திமுகவும் அதிமுகவும் ஒரு வேட்பாளரைக்கூட அறிவிக்கவில்லை. அருகிலுள்ள அபிராமம் பேரூராட்சியிலும் இந்த நடைமுறையைக் கையாண்டு பார்க்கும் முயற்சிகள் தொடங்கியிருக்கின்றன.

அரசியலில் சாதி ஆதிக்கம் செலுத்துகிற வடக்கு, கோவை, தென் மண்டலங்களில் இதுபோன்ற போட்டியில்லாத தேர்வுகள் நடந்திருக்கின்றன என்றாலும், அவை பெரும்பாலும் இரண்டு, மூன்று வார்டுகளுக்கு மேல் இல்லை. எதிர்காலத்தில் அங்கேயும் ‘கமுதி ஃபார்முலா’ நடைமுறைக்கு வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் ஊராட்சித் தலைவர் பதவி பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்டபோது, அவ்வூர் பிறமலைக் கள்ளர் சமூகத்தினர் நடந்துகொண்ட விதம் அரசமைப்புக்கே சவால்விடும் அளவுக்கு இருந்தது. எத்தனை முறை தேர்தல் அறிவித்தாலும், தேர்வான பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தார்கள். மாவட்ட நிர்வாகம் தனது முழுமையான கவனத்தைச் செலுத்தத் தொடங்கிய பிறகுதான் அதைச் சரிசெய்ய முடிந்தது. கமுதி விவகாரம் அவ்வளவு மோசமில்லை என்றாலும்கூட, வளர்ந்துவரும் தமிழ்நாட்டுக்கு, சமூகநீதியில் நாட்டுக்கே வழிகாட்டுகிற தமிழ்நாட்டுக்கு இது பெருமைக்குரிய விஷயமல்ல.

எங்கெல்லாம் சாதி ஆதிக்கம் அதிகம் இருக்கிறதோ, அங்கெல்லாம் சாதியின் வாலைப் பிடித்துக்கொண்டு மதவாதமும் நுழையும். மதவாத அரசியலை எதிர்ப்போர், இதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். இப்பிரச்சினைக்கு எளிய தீர்வொன்றும் இருக்கிறது. மிகப் பெரிய பேரூராட்சியான கமுதியுடன் அருகில் உள்ள சில ஊர்களை இணைத்து, கமுதியை நகராட்சியாக அறிவித்துவிட்டால் இந்தச் சாதியக் கணக்குகள் தகர்ந்துபோகும் என்கிறார்கள், புறக்கணிக்கப்பட்ட மக்கள்.

- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x