Published : 08 Feb 2022 07:00 AM
Last Updated : 08 Feb 2022 07:00 AM

தேர்தல் ஆணையம் சிறு வியாபாரிகளை ஏன் வாட்டிவதைக்கிறது?

தேர்தலை நேர்மையாக நடத்துவதற்காக, மாநிலத் தேர்தல் ஆணையம் அதிரடியாகப் பல நடவடிக்கைகளை எடுக்கிறது. வாக்காளர்களுக்குப் பணம், பரிசு கொடுத்தல், அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி தேர்தல் செலவு செய்தல் போன்றவற்றுக்காகப் பெரும் அளவிலான தொகை ரகசியமாகக் கொண்டுசெல்லப்படுவதைத் தடுக்க நடவடிக்கைகள் அவசியம்தான். இதனால் அப்பாவிப் பொதுமக்களும் சிறு, நடுத்தர வியாபாரிகளும்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

என்ன காரணத்துக்காகப் பணத்தையோ பொருளையோ எடுத்துச்சென்றாலும், அது தேர்தலுக்காக மக்களுக்குக் கொடுக்கப்படும் அன்பளிப்பாகவே தேர்தல் ஆணையம் கருதுகிறது. இதற்காகவே காவல் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்த பறக்கும் படை உருவாக்கப்பட்டு, அது தேர்தல் நடக்கும் இடங்களில் ரோந்து வந்துகொண்டிருக்கிறது. இந்தப் பறக்கும் படையிடம் அதிகம் சிக்கிக்கொண்டு அவதியுறுவது வியாபாரிகள்தான். வியாபாரிகளிடமிருந்து பணத்தை மட்டுமல்லாமல் வியாபாரத்துக்கு எடுத்துச்செல்லப்படும் பொருட்களையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்கின்றனர். அந்தப் பொருட்களை இன்ன நிறுவனத்திடமிருந்துதான் வாங்கிச்செல்கிறேன் என்பதற்கான ரசீதைக் காட்ட வேண்டும் என்கின்றனர். அதாவது, ஜி.எஸ்.டி. செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள்.

இங்கேதான் முரண்பாடு தொடங்குகிறது. ‘ஆண்டுக்கு ரூ. 40 லட்சம் வரை வியாபாரம் செய்யும் தொழில் நிறுவனங்கள் அரசுக்கு
ஜி.எஸ்.டி. வரி செலுத்தத் தேவையில்லை; அதாவது, - சிறிய அளவில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், ஜி.எஸ்.டி. என்னும் ஒருமுக வரியை அரசுக்குச் செலுத்த வேண்டியதில்லை’ என்பதுதான் ஜி.எஸ்.டி. விஷயத்தில் மத்திய அரசின் அறிவிப்பு. ஆனால், தேர்தல் நேரத்தில் என்ன செய்கிறார்கள்? ‘ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களைத் தேர்தல் நேரத்தில் வெளியே எடுத்துச்சென்றாலும், அதற்கு உரிய ஜி.எஸ்.டி. வரி செலுத்தப்பட்ட ரசீதைக் காட்ட வேண்டும்’ என்கின்றனர். ஆக, அரசு உத்தரவு என்னவாக இருந்தாலும், அதைப் பற்றி தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமலேயே அது வேறு விதிமுறைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. இதுதான் தேர்தல் நேரத்தில் சிறு வியாபாரிகளைத் தொழில் செய்ய முடியாத அளவுக்கு நசுக்குகிறது.

தேர்தல் நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டால், வியாபாரிகளின் நிலை அதோ கதிதான். கேட்பதையெல்லாம் கொடுத்தாலும் பறக்கும் படையினரிடம் சிக்கிவிட்டால் அவர்களிடமிருந்து மீண்டுவருவது சுலபம் அல்ல என்பதால், தேர்தல் வந்துவிட்டாலே வம்பே வேண்டாம் என்று சிறு வியாபாரிகளில் பலரும் தங்கள் வியாபாரத்தைத் தேர்தல் முடியும் வரை நிறுத்திவிடுகின்றனர். இதனால், தொழில் பாதிப்பு ஏற்பட்டு, பலரது வாழ்வாதாரமும் முடங்கிச் சிரமப்படும் நிலை ஏற்பட்டுவிடுகிறது.

ரசீது இல்லாமல் பிடிபட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யுடன் கூடிய ரசீதை உருவாக்கப் பறக்கும் படை அதிகாரிகளே வழி சொல்லிக்கொடுக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. அதிகாரிகள் கைகாட்டும் வழக்கறிஞர்கள், பட்டயக் கணக்காளர்களிடம் சிறு வியாபாரிகள் சென்றால், அவர்கள் ‘சர்வீஸ் சார்ஜ்’ வாங்கிக்கொண்டு ரசீதுகளைத் தயார்செய்து கொடுத்துவிடுகிறார்கள் என்றும், அந்த ரசீதைப் பறக்கும் படையினரிடம் ‘அன்பளிப்போடு’ சேர்த்துக் கொடுத்தால் பிடிபட்ட அத்தனை பொருட்களும் சேதாரம் இன்றித் திரும்பக் கிடைத்துவிடும் என்றும் சிறு வியாபாரிகள் சிலர் கூறுகின்றனர். இந்தியப் பொருளாதாரம் விவசாயம், கால்நடை வளர்ப்பு, காய்கறி உற்பத்தி, விற்பனை போன்ற முறைசாரா பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. ஓரிடத்தில் விளையும் பொருளை வாங்கி, இன்னொரு இடத்துக்குக் கொண்டுசென்று கொடுத்து, அதில் கமிஷனாக-லாபமாக சொற்ப வருமானத்தை ஈட்டுவோர் ஏராளம். இப்படிப்பட்டவர்கள்தான், தேர்தல் நேரத்தில் தொழில் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

அதேபோல, தேர்தல் நேரத்தில் திருமணச் செலவுக்காகப் பழைய 15 கிராம் நகையை விற்பனைக்காக ஒருவர் எடுத்துச் செல்கிறார் என வைத்துக்கொள்வோம். பழைய நகை என்பதையெல்லாம் பறக்கும் படையினர் ஏற்பதில்லை. நகை என்றால், அதற்கு ரசீது இருக்க வேண்டும். இல்லையென்றால், பறிமுதல்தான். பறக்கும் படையிடம் சிக்காமல், நகையை எடுத்துச் சென்று, ஐம்பதாயிரம் ரூபாய்க்கு அதை விற்று, பணத்தை எடுத்துக்கொண்டு வீடு திரும்பும்போது, பறக்கும் படையினரிடம் சிக்கிவிட்டாலும் சிக்கல்தான்.

பழைய தங்க நகையை விற்றுப் பணமாக்கியதற்கு ரசீது காண்பிக்க வேண்டும் எனச் சொல்லி வற்புறுத்துகின்றனர். பழைய நகையை விற்று வரும் பணத்துக்கு, எந்த ரசீதை யாரால் காட்ட முடியும்? இப்படிப்பட்ட சிக்கல்களால் எத்தனையோ திருமணங்கள் தேர்தல் நேரத்தில் நின்றுபோயிருக்கின்றன. முறுக்கு சுட்டு விற்கும் பெண்மணி, கடலை மிட்டாய் வியாபாரி போன்றவர்களிடம்கூட, ரசீது கேட்டுத் தொந்தரவு செய்த நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இதே போலத்தான், ஆடு, மாடு வியாபாரமும்.

அவசரத் தேவைக்காக, ஆடு, மாடுகளை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்று, அந்தப் பணத்தை எடுத்துச்சென்ற பலரையும், பணத்துக்கான ரசீது கேட்டுப் பறக்கும் படையினர் பிடித்துள்ளனர். ஆடு, மாடு வியாபாரத்துக்கெல்லாம் எங்கேயிருந்து யார் ரசீது கொடுப்பது? கடந்த 2021-ல் நடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் பறக்கும் படையினரிடம் பிடிபட்ட பணம் மட்டும் ரூ.450 கோடி. இப்படிப் பிடிபட்டவற்றில் 98% அளவுக்கு, உரிய ஆவணம் காட்டி, பொதுமக்கள்-வியாபாரிகள் பொருட்களைத் திரும்பப் பெற்றுச் சென்றுவிட்டனர் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. பிடிபடும்போது இல்லாத ஆவணம், பிடிபட்ட பின் சில நாட்கள் கழித்து எங்கிருந்து வருகிறது? பெரும்பாலான ஆவணங்கள் போலியாக உருவாக்கப்பட்டவைதான் என்று கூறுகிறார்கள். தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் பலரும் லஞ்சத்தில் திளைப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள். இப்படிப்பட்டவர்களை வைத்து ஒரு நாளும் தேர்தலை நியாயமாக நடத்த முடியாது என்று பலரும் புலம்புகிறார்கள்.

ஆனால், தேர்தல் நேரத்தில் போடப்படும் எந்த வழக்கிலும் அரசியலர்கள் தண்டிக்கப்பட்டதே இல்லை. தேர்தல் நேரத்தில்தான், கன்டெய்னர்களில் கொண்டுசெல்லப்பட்ட பல நூறு கோடி ரூபாய் பிடிபட்டது. அதன்மீது எந்த வழக்கும் இல்லை; யாருக்கும் தண்டனையும் இல்லை. தற்போது கரோனா கட்டுப்பாடுகளும் சேர்ந்துகொண்டுவிட்டன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக, விருப்ப மனு பெறுவதில் தொடங்கி, பிரச்சாரத்துக்குச் செல்வது வரை, எல்லாமே கூட்டம் சேர்த்துதான் நடக்கிறது.

ஆனால், அதைச் சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, காவல் துறை என எந்தத் துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டு தவிப்பது சிறு வியாபாரிகள்தான். காவல் துறை, தேர்தல் ஆணையம் போன்றவை எளியோரிடம் கடுமையாகவும் செல்வாக்குள்ளோரிடம் குழைவாகவும் நடந்துகொள்கிறது என்று பலரும் குற்றம்சாட்டுகிறார்கள். சிறு வியாபாரிகள், பொது மக்கள் நிலையைக் கருத்தில்கொண்டு அரசும் தேர்தல் ஆணையமும் தமது விதிமுறைகளில் உரிய மாற்றங்கள் செய்தால்தான் இந்த அவப்பெயர் தேர்தல் ஆணையத்தை விட்டு நீங்கும்.

- புதுமடம் ஜாபர்அலி,

தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x