Last Updated : 06 Feb, 2022 05:22 AM

 

Published : 06 Feb 2022 05:22 AM
Last Updated : 06 Feb 2022 05:22 AM

புத்தகத் துறையை விழுங்கும் பூதங்கள்!

அறுபதாண்டு காலப் பதிப்புலக வணிக அடையாளம் கொண்ட ‘வெஸ்ட்லேண்ட்’ பதிப்பகம், தன் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டதுதான் பதிப்புத் துறையில் இந்த ஆண்டில் அதிர்ச்சியை அளிக்கும் செய்தி. 1962-ல் ‘ஈஸ்ட் வெஸ்ட் புக்ஸ்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், 2008-ல் டாடா நிறுவனத்தால் கைக்கொள்ளப்பட்டது. பின்னர், இந்நிறுவனத்தை 2016-ல் அமேசான் வாங்கியது. இத்தனைக்கும் சேத்தன் பகத், அமிஷ் திரிபாதி உள்ளிட்ட ‘பெஸ்ட் செல்லர்’களை வைத்துக்கொண்டு, ஒரு வணிக நிறுவனம் கையகப்படுத்தப்பட்ட ஐந்தாண்டுகளுக்குள் தன் சேவையை நிறுத்திக்கொள்ள என்ன காரணம்? லாபமின்மையா?

மின்னூல்களின் வரவுக்குப் பின்னர் பதிப்புலகம் நிறைய மாற்றங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் மின்னூல்களால் வாசிப்புப் பழக்கம் அதிகமானது. திருட்டுப் புத்தகச் சந்தையும் தன் எல்லையை விரிவுபடுத்திக்கொண்டது. ‘வெஸ்ட்லேண்ட்’ போன்ற இந்திய அளவில் மிகப் பெரிய வணிக பிராண்டுகளுள் ஒன்றை அமேசான் கையகப்படுத்திய காலத்தில், புத்தகச் சந்தை பெருமளவு இணைய வர்த்தகத்துக்கு மாறியிருந்தது, கணிசமான அளவுக்கு ‘செல்ஃப் பப்ளிஷிங் போர்ட்டல்’கள் (எழுத்தாளர்களிடம் கட்டணம் வசூலித்துப் புத்தகம் வெளியிடும் முறை) உருவாகியிருந்தன. ஒலிப்புத்தகங்கள் வர ஆரம்பித்தன. கரோனா ஊரடங்கு காலம் இணைய வாசிப்புக்கும் ஒலிப்புத்தகச் சந்தைக்கும் உள்ள வாய்ப்பை விரிவுபடுத்தியது. புத்தகக் கடைகள் தவிர்த்து, நேரடியாக வாசகர்களைச் சந்தித்து விற்பனை செய்வதற்கு இருக்கும் வாய்ப்பு புத்தகக் கண்காட்சி. கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக்காட்சி நடைபெற்றுவந்ததும் அதன் விற்பனை ஒவ்வொரு ஆண்டும் பெருகிவந்ததும் நாம் அறிந்ததுதான். இந்நிலையில், கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகான சூழலில் இணைய வழியில் விற்பனை என்பது மற்ற துறைகளைப் போல பிரதானச் சந்தையாக மாறிவிட்டிருக்கிறது. இணைய வழி வர்த்தகத்தின் அதிகபட்ச பங்கு அமேசானுக்கும் ஃப்ளிப்கார்ட்டுக்கும் தான். அதிலும் மின்னூல்களில் 90%-க்கும் அதிகமான பங்கு கிண்டிலைச் சேர்ந்ததுதான். ஒவ்வொரு நிறுவனமும் தன் சொந்த இணையதளத்துடன் அமேசான், ஃப்ளிப்கார்ட் இணையதளங்களின் இணைப்பையும் கொடுக்க ஆரம்பித்துவிட்டன.

அண்மையில் சில முன்னணிப் பதிப்பகங்களின் நூல்கள், புத்தகக் கடைக்குப் பதிப்பகங்கள் கொடுக்கும் தள்ளுபடி விலையைவிட மிக அதிகமான தள்ளுபடியில் ஃப்ளிப்கார்ட் (அல்லது இணைய சேவை) வாயிலாக ஒரு புகழ்பெற்ற அச்சகமே நூல் விற்பனையை அறிவித்திருந்தது. இதன் பெயர் ‘ஒன் புக் மாடல்’. இதன்படி வாசகர் ஒருவர் கோரும் ஒரேயொரு நூலை மட்டும் அச்சகம் அச்சிட்டு அவருக்கு அனுப்பி வைக்கும். அதற்கு மேற்பட்ட ஒரு பிரதியைக்கூட இருப்பில் வைக்க வேண்டிய அவசியமில்லை. இதற்காக அந்த அச்சகமே பதிப்பகங்களோடு ஒரு ஒப்பந்தத்தைப் போடுகிறது. தாங்கள் பதிப்பிக்கும் ஒவ்வொரு நூலின் மின்கோப்பையும் இந்த அச்சகம் வாங்கிக்கொண்டு அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்றவற்றின் வாயிலாக நூல் விற்பனை செய்து அதற்கான கமிஷனைப் பதிப்பகத்துக்கு அளிக்கிறது. பதிப்பகங்களுக்கு இத்திட்டம் லாபகரமானதாக இல்லை என்றாலும், ஒரு பதிப்பகத்தின் 20% புத்தகங்களைக் கொண்டுதான் அதன் 80% வருமானம் இருக்கிறது. எனவே, மீதமிருக்கும் 80% நூல்களை இதைப் போன்ற ‘ஒன் புக் மாடல்’ எனும், புத்தக இருப்பு வைக்கத் தேவையற்ற வணிகமாக மாற்ற இது உதவுகிறது. அதே வேளையில், புத்தகக் கடைக்கே கிடைக்காத விலையில் வாசகர்களுக்குப் புத்தகத்தைக் கொண்டுசேர்க்க முடிகிறது.

ஒரு நூலின் விலையில் பதிப்பாளருக்கு 25-40%, எழுத்தாளருக்கு 10-15%, விநியோகம் செய்பவருக்கு 10%, விற்பனையாளருக்கு 30-40% என்றெல்லாம் பங்கு இருக்கிறது. ஒரு பதிப்பாளரின் பங்கிலிருந்து அச்சகம், வடிவமைப்பு, எழுத்தாளர், சந்தைப்படுத்தல் என்கிற செலவுகள் இருக்கின்றன. இதில் நேரடியாக அச்சகமே புத்தக அச்சிலிருந்து சந்தைப்படுத்தல், விற்பனை என எல்லாச் செலவுகளையும் கைக்கொள்ளும்போது, இடைநிலையில் அங்கம் வகிப்போரின் நிலை கேள்விக்குறியாகிறது.

ஒரு புத்தகக் கடையோ அல்லது விற்பனையாளரோ இந்தத் தொழிலை வெறும் லாபத்துக்காக மட்டுமே செய்வதில்லை. வேறு எந்தத் துறையைக் காட்டிலும் புத்தகம் என்கிற மதிப்பீடு காரணமாக, பெரிய லாப நோக்கை மையமாகக் கொள்ளாமலே பல ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுவரும் ஆயிரக்கணக்கான தனிநபர் புத்தக விற்பனையாளர்கள், நூற்றுக்கணக்கான புத்தகக் கடைகள், விநியோகஸ்தர்கள் என எல்லோருக்கும் இந்தப் புதிய முறையானது பெரிய இக்கட்டைத் தர இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நூலக ஆணையே இல்லை என்றபோதும் எந்த நம்பிக்கையுடன் இத்தொழிலை நடத்திவருகிறோம்? புத்தகத் துறையை லாபத்தையும் தாண்டி ஓட வைக்கும் விசை ஒன்று இருக்கிறது. ஒரு அறிவியக்கமாக, நாகரிகமடைந்த சமூகத்தின் முகமாக, அரசியல் எழுச்சியில் அங்கம் வகிக்கும் ஒரு துறை என்ற மதிப்பீடுதான் அந்த விசை. ஆனால், பெரும் நிறுவனங்களைப் பொறுத்தவரை இப்படிப்பட்ட மதிப்பீடுகளை எதிர்பார்க்க முடியாது.

டெல்லியின் கான் மார்க்கெட் என்பது புத்தகக் கடைகளால் நிரம்பிய பகுதி, கடந்த பத்தாண்டுகளில் மிக முக்கியமான கடைகள் மூடப்பட்டுவிட்டன. மும்பையில், சென்னையில் புகழ்பெற்ற கடைகள் வணிக மால்களிலிருந்து காலிசெய்யப்பட்டுவிட்டன. நிறைய தனிநபர் விற்பனையாளர்கள் வேறு தொழிலுக்குச் சென்றுவிட்டார்கள். பாரம்பரியமாக இருந்துவந்த அண்ணாச்சிக் கடைகளை ஒழித்துக்கட்டிய இலக்கு இப்போது பதிப்பாளர்கள் பக்கம் திரும்பியிருக்கிறது.

- ஜீவ கரிகாலன், எழுத்தாளர், பதிப்பாளர்.

தொடர்புக்கு: kaalidossan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x