Published : 06 Feb 2022 05:25 AM
Last Updated : 06 Feb 2022 05:25 AM

பாரதியின் ‘அந்தப் பேதை’

தி.அ.ஸ்ரீனிவாஸன்

மூத்த நாட்டாரியல் ஆய்வாளரும், எனது தமிழ்ப் பேராசிரியருமான அ.கா.பெருமாள், ‘இந்து தமிழ் திசை’யில் ‘மெல்லத் தமிழ் இனி சாகாது’ (17.01.2022) என்ற கட்டுரை எழுதியிருந்தார். அதில் பாரதியாரின் ‘தமிழ்த்தாய்’ பாடலில் “மெல்லத் தமிழினிச் சாகும்…/அந்தப் பேதை உரைத்தான்’’ எனும் வரிகள் வரும் பகுதியை மேற்கோள் காட்டி, பாரதி இந்த வரிகளை எழுதத் தூண்டிய நிகழ்ச்சியாகக் கட்டுரையின் ஆரம்பத்தில் “தென்மாவட்ட வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர் அவரது இளம் வயதில் மேம்போக்காக ‘மெல்லத் தமிழ் இனி அழியலாம்’ என்று சொன்னதன் மீதான கோபத்தை பாரதியார் தன் கவிதையில் வெளிப்படுத்தினார்” என்று குறிப்பிடுகிறார், கட்டுரையின் இறுதியில் மீண்டும், “‘மெல்லத் தமிழினி சாகும்’ என்ற வரி இடம்பெற்ற பாடலை பாரதியார் பாடியதற்கு, 20-ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் கல்கத்தாவிலிருந்து வந்த ‘மாடர்ன் ரிவ்யூ’ என்னும் இதழுக்கு கே.ஏ.நீலகண்டன் எழுதிய எதிர்வினைதான் காரணம் என்றும் குறிப்பிடுகிறார்.

இவ்விரு பகுதிகளையும் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது, கட்டுரையின் முதல் பகுதியில் ‘தென்மாவட்ட வரலாற்றுப் பேராசிரியர்’ என்று குறிக்கப்படுவர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி என்று பரவலாக அறியப்படும் கே.ஏ.நீலகண்டன் என்பது தெரிகிறது.

கட்டுரையின் இந்தப் பகுதிகள் இரண்டு செய்திகளைத் தருகின்றன. (1). வரலாற்றாசிரியர் கே.ஏ.நீலகண்டன் “மெல்லத் தமிழ் இனி அழியலாம்” என்று சொன்னார்; (2). பாரதியின் ‘தமிழ்த்தாய்’ பாடல் இதனால் தூண்டப்பட்டுப் பிறந்தது.

இந்த இரண்டு செய்திகளும் சரியா?

முதலில் அ.கா.பெருமாள் குறிப்பிடும் நிகழ்ச்சியின் பின்னணியைப் பார்ப்போம்: ‘த மாடர்ன் ரிவ்யூ’ 1915 டிசம்பர் இதழில் வரலாற்றுப் பேராசிரியர் ஜதுநாத் சர்க்கார் (யதீந்திர சர்க்கார் அல்ல) ‘கன்ஃபெஷன்ஸ் ஆஃப் எ ஹிஸ்டிரி டீச்சர்’ எனும் ஏறத்தாழ ஆறு பக்கக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில், ஒரு வரலாற்று ஆசிரியராக வரலாற்றை மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதில் தான் எதிர்கொள்ளும் சவால்களுள் ஒன்றாக வரலாற்றை ஆங்கிலத்தில் கற்பிப்பதைக் குறிப்பிடுகிறார். தனது பெரும்பான்மை மாணவர்கள் ஆங்கிலத்தில் போதிய திறனும் பயிற்சியும் அற்றவர்களாக இருப்பதால், பாடங்களைப் புரிந்துகொள்வதிலும் கற்றவற்றைத் தொகுத்து எழுதுவதிலும் அவர்களுக்குள்ள இடர்பாட்டை அவர் விரிவாகவே குறிப்பிட்டு, வரலாற்றை உள்ளூர் மொழியில் கற்பிப்பதன் தேவையையும் இதில் தனது சோதனை முயற்சிகள் தந்துள்ள வெற்றியையும் பேசுகிறார்.

இந்தக் கட்டுரைக்கு எதிர்வினையாக ‘த மாடர்ன் ரிவ்யூ’ 1916 ஜனவரி இதழில் திருநெல்வேலி, இந்துக் கல்லூரி முகவரியிலிருந்து கே.ஏ.நீலகண்டன் எழுதிய கடிதத்தில் பயிற்றுமொழி தொடர்பான பகுதியின் மொழிபெயர்ப்பு:

“மொழிப் பிரச்சினை ஓர் உண்மையான பிரச்சினையே. ஆனால் எனது மாவட்டம், எனது கல்லூரி இவற்றைப் பொறுத்தவரையில் உள்ளூர் மொழியில் கற்றுக்கொடுப்பது அதிகம் பயன்தரும் என்று என்னால் உறுதிபடுத்த முடியாது.. எனது மாணவர்களில் பெரும்பாலோர் - ஆங்கிலத்தில் நிறைய இலக்கண, வழக்குப் பிழைகள் செய்கிறார்கள் என்றாலும் - தமிழைக் காட்டிலும் ஆங்கிலத்தில் நன்றாகப் பேசவும் எழுதவும் செய்கிறார்கள் என்பதையும் வரலாற்றுப் பாடங்களைப் பயிற்றுவிப்பதற்கு எனக்கு தமிழைக் காட்டிலும் ஆங்கிலம்தான் சிறந்த மொழியாகப் பயனாற்றுகிறது என்பதையும் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டின் இப்பகுதியில் உள்ளூர் மொழியானது எந்த அளவுக்கு வளம்மிக்கதாக இருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு இல்லை போலிருக்கிறது.’’

சென்ற நூற்றாண்டின் முதல் இரு பத்தாண்டுகளில் மகத்தான ஆய்வறிஞர்களைத் தந்த திருநெல்வேலியிலிருந்து அவர் இதை எழுதியிருப்பது கொல்லர் உலைக்களத்தில் இரும்புக்குப் பஞ்சம் என்று சொன்னதுபோல் இருக்கிறது. இவ்வரிகள் மிகைக்கூற்று மட்டுமல்ல, விஷமத்தனமானவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பேரா.அ.கா.பெருமாள் குறிப்பிடும் ‘மெல்லத் தமிழ் இனி அழியலாம்’ என்ற வரியோ அல்லது அப்படிப் பொருள்படும்படியான வரிகளோ இந்தக் கடிதத்தில் இடம்பெறவில்லை.

இந்தக் கடிதம் வெளியான இதழைப் படிக்க நேர்ந்த பாரதி 1916 ஏப்ரலிலேயே ‘தமிழ்’ என்ற கட்டுரையை இதற்காகவே எழுதியிருக்கிறான்: ‘‘இங்ஙனம் எழுதும் ஸ்ரீநீலகண்டையரின் நிலையை நினைத்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். சொந்த பாஷையை நேரே பேசத் தெரியாதவர்கள் சாஸ்திர பாடத்தை நடத்தும் விநோதத்தை இந்த தேசத்திலேதான் பார்த்தோம். புதுமை! புதுமை!! புதுமை!!! தமிழ் வகுப்பு மற்ற ஹிந்துஸ்தான் வகுப்புகளைக் காட்டிலும் குறைவுபட்டதென்று நம்மில் சிலர் முரசடிக்கத் தொடங்குவது எனக்கு நகைப்பை உண்டாக்குகிறது.”

கே.ஏ.என்னின் கடிதம் வெளியானது 1916 ஆண்டு ஜனவரியில். பாரதியின் ‘தமிழ்த்தாய்’ வெளியானது ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகள் கழித்து 1919 ஜூன் -ஜூலையில். எனவே, முன்னதோடு பின்னதை முடிச்சிடுவது பொருந்துமா? ‘த மாடர்ன் ரிவ்யூ’வில் கே.ஏ.என்னின் கடிதத்தைப் படித்த உடனே, அது வெளிவந்த மூன்று மாதங்களுக்குள், சூடாகத் தன் பாணியில் பொருத்தமான எதிர்வினையாற்றிய பாரதி அதில் இல்லாத ஒன்றைச் சொல்லி மூன்றரை ஆண்டுகள் கழித்து ஒரு கவிதையைப் படைத்திருப்பானா?

இந்தப் பாடல் தொடர்பாக தினமணியில் ‘அந்தப் பேதை யார்?’ என்ற தலைப்பில் சீனி.விசுவநாதன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். பாரதியின் ‘பருந்துப் பார்வை’ (1918) கட்டுரையைக் குறிப்பிட்டு, அதில் வரும் “தக்ஷிணத்துப் பாஷைகளிலே, அதாவது தமிழிலும், தெலுங்கிலும், கன்னடத்திலும், மலையாளத்திலும் சாஸ்திர (சயின்ஸ்) பாடம் கற்றுக்கொடுப்பதற்கு மேற்படி பாஷைகள் தகுதியில்லையென்று பச்சையப்பன் காலேஜ் தலைமை வாத்தியார் மிஸ்டர் ரோலா என்பவர் சொல்லுகிறார். அவருக்கு இவ்விடத்துப் பாஷைகள் தெரியாது. ஸங்கதி தெரியாமல் விவரிக்கிறார்” என்ற பகுதியை மேற்கோள் காட்டி, பாரதியின் கவிதையில் சொல்லப்படும் பேதை யாராக இருக்கலாம் என்பதை அறிவதற்கான அரிய குறிப்பைத் தான் இதில் கண்டதாக எழுதுகிறார்.

வேறு சான்றுகளால் நிறுவப்படும் வரையிலும் இதுவும் ஓர் ஊகமே. உறுதியான சான்றுகள் கிடைக்கும் வரையிலும் ‘தமிழ்த்தாய்’ பாடலில் குறிப்பிடப்படும் ‘பேதை’ இவர்களில் ஒருவர் என்று அமைதிகொள்வோமாக!

- தி.அ.ஸ்ரீனிவாஸன், ‘நிச்சலனம்’ உள்ளிட்ட நூல்களின் மொழிபெயர்ப்பாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x