Published : 03 Feb 2022 06:42 AM
Last Updated : 03 Feb 2022 06:42 AM
நமது இந்தியா உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடு. அதன் மிகப் பெரும் ஜனநாயக நடைமுறையான தேர்தலில் பணியாற்றும் பெருமையைக் கொண்டவர்கள் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும். எனினும், தேர்தல் நடைமுறையில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பல பிரச்சினைகளைச் சந்தித்துவருகின்றனர். கடந்த 10ஆண்டுகளாக இந்தப் பிரச்சினைகள் குறித்துப் பல பத்திரிகைகளில் எழுதப்பட்டாலும், எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் ஆணையம் அவர்களின் பிரச்சினைகளை மனிதாபிமானமற்ற முறையில்தான் அணுகியுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் ஆணையத்தின் நேரடிக் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடுவார்கள். அப்போதிலிருந்து தேர்தல் ஆணையம் கூறும் எந்தப் பணியையும் உடல்நிலை உட்பட எந்தக் காரணம் கொண்டும் மறுக்க முடியாது. கையில் ஆணையைக் கொடுத்த பிறகு, பல பெண்கள் கைக்குழந்தையுடன் தேர்தல் அதிகாரிகளிடம் கெஞ்சிக்கொண்டிருப்பதைத் தேர்தல் வகுப்பு நடக்கும் இடத்தில் பார்க்க முடியும். கட்டுப்பாட்டை மீற முயன்றால் ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்’ பாயும். அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் எந்த வகையிலும் தேர்தல் பணியை மறுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களல்ல. மாறாக, அவர்கள் மீது காட்டப்படும் மனிதாபிமானமற்ற அணுகுமுறைதான் அவர்களை அவ்வாறு எண்ண வைக்கிறது.
வீடுவீடாக வாக்குச்சாவடி சீட்டுகள் (பூத் ஸ்லிப்) விநியோகித்தல், தேர்தல் பயிற்சி வகுப்புகள், அதைத் தொடர்ந்து தேர்தலுக்கு முந்தைய நாளே சென்று, தேர்தல் முடிந்து அனைத்தையும் ஒப்படைக்கும் வரை அங்கேயே இருத்தல் என்று தொடர்ந்து எந்தப் பணியிலும் எந்த அடிப்படை வசதிக்கும் தேர்தல் ஆணையம் பொறுப்பேற்காது. தற்போதைய கரோனா பெருந்தொற்றுக் காலத்தில்கூடப் பயிற்சி வகுப்புகளும் தேர்தலும் நடந்த இடங்களில் கழிப்பறைகள்கூடச் சுத்தம் செய்யப்படாமல் இருந்தது, தேர்தல் ஆணையத்தின் அலட்சியப் போக்கை வெளிப்படுத்தியது.
பட்டதாரி ஆசிரியர்களை வாக்குச் சாவடி அலுவலர் பணியில் தொடர்ந்து பயன்படுத்துவதால் கற்பித்தல் பணி மிகவும் பாதிக்கப்படுகிறது. பொதுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்செய்வது உள்ளிட்ட பல கற்பித்தல் பணிகள் ஒரு புறம். மறுபுறம் தேர்தலுக்கான பூர்வாங்கப் பணிகள். சனி, ஞாயிறு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர் அட்டை முகாம் நடைபெறும். ஏற்கெனவே, வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளி. மாதக் கணக்கில் ஒரு பெண் ஆசிரியர் இப்படிப் பணியாற்ற முடியுமா? பள்ளித் தலைமை ஆசிரியர்களோ கல்வி அதிகாரிகளோ இதில் தலையிட அஞ்சுகின்றனர். காரணம், தேர்தல் பணிக்கு ஆட்சியர் உத்தரவு என்று வாய் மூடி அமைதி காக்கின்றனர். உடல் நலமும் உளநலமும் பாதிக்கப்படும் பெண் ஆசிரியர்களுக்கு யார் உதவுவார்களோ தெரியாது. இவற்றை எல்லாம் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேர்தலுக்கு முந்தைய நாள் காலையிலேயே தேர்தல் பணியில் அமர்த்தப்பட்ட அரசு ஊழியர்கள் வந்துவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் எங்கு பணிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆணை வழங்கப்படும். அங்கிருந்து நேரடியாக வாக்குச்சாவடிக்குச் சென்றுவிட வேண்டும். அந்த இடத்தில்தான் தேர்தல் நடத்துவதற்கான சாதனங்களும், பிற ஆவணங்களும் வழங்கப்படும். எனவே, பெரும்பாலான ஊழியர்களும் அங்குதான் இரவு தங்க வேண்டும்.
மேலே கூறியபடி ஊழியர்கள் தேர்தலுக்கு முந்தைய நாளே பணிக்கு வந்துவிடுவதால், அவர்களால் தேர்தல் அன்று எந்த உணவும் கொண்டுவர முடியாது. தேர்தல் ஆணையமும் அதற்குப் பொறுப்பேற்காது. காலை 5.30 மணிக்குத் தொடங்கும் பணி மாலை இயந்திரங்களை ஒப்படைக்கும் வரை முடியாது. அதிகாலையில் வாக்கு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றைச் சரியான இடத்தில் பொருத்தி, கட்சி முகவர்களுக்குத் தேர்தல் தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக இயக்கிக் காட்ட வேண்டும். அவர்கள் ஒப்புதல் தந்த பிறகுதான் தேர்தல் தொடங்க முடியும்.
இடையில், உணவு இடைவேளை கிடையாது என்று பயிற்சிப் புத்தகத்தில் தேர்தல் ஆணையம் அச்சடித்துக் கொடுத்துள்ளது. தேர்தல் தொடங்குவதற்கு முன் இரண்டு மணி நேரம் தயாரிப்பு, தேர்தல் 12 மணி நேரம், பிறகு வாக்கு இயந்திரங்களை ஒப்படைக்கக் குறைந்தது இரண்டு மணி நேரம் என்று உணவு இடைவேளை இன்றிப் பணிபுரியச் சொல்வது நம் நாட்டின் அடிப்படைச் சட்டங்களுக்கே எதிரானது. ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதற்கு மேலாகத் தேர்தல் ஒழுங்காக நடைபெற வேண்டும் என்ற மன அழுத்தம் எனப் பல்வேறு அழுத்தங்களுக்கு இடையில், பட்டினியுடன் அவர்கள் போராட வேண்டிய நிலை தொடர்கிறது.
மாலையில் தேர்தல் முடிந்த பிறகு பெட்டிகளை சீல் வைத்து, ஆவணங்களைத் தயார்செய்ய வேண்டும். நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால், பெட்டியை எடுத்துச்செல்லும் அதிகாரி முன்னதாக வந்துவிடலாம். சில சமயம் நள்ளிரவையும் தாண்டித்தான் பெட்டியை எடுப்பார்கள். எடுத்த பிறகு, தேர்தல் ஊழியர்களை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள். அவர்களின் பாதுகாப்புக்கு இருந்த போலீஸோ, துணை ராணுவமோ அப்படியே கிளம்பிவிடுவார்கள். ஊழியர்கள் நிர்க்கதியாக நிற்க வேண்டியதுதான். அவர்கள் பத்திரமாக வீடு திரும்பினார்களா என்பதெல்லாம் தேர்தல் ஆணையத்தின் பொறுப்பல்ல. சில தேர்தல் ஊழியர்கள் நள்ளிரவுக்கு மேல் கிளம்பி, வீட்டுக்குச் செல்ல முயலும்போது விபத்தில் சிக்கி மரணமடைந்ததெல்லாம் உண்டு.
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த நிலை தொடர்வது மிகவும் துயரகரமானது. எனவே, உடனடியாகக் கீழ்க்கண்ட மாற்றங்களைக் கொண்டுவர உரிய நடவடிக்கைகளை நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மேற்கொண்டு அரசுகள் உதவ வேண்டும்.
1. நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிகள், இரண்டு வயது வரை குழந்தை வைத்திருக்கும் பெண்கள் ஆகியோரைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. 50 வயதுக்கு மேல் விருப்பத்தின் பேரில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும்.
2. இவர்களுக்குப் பதிலாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமது பெயரைப் பதிவுசெய்து காத்திருக்கும் இளைஞர்களை, உரிய ஊதியம் வழங்கி ஈடுபடுத்திக்கொள்ளலாம்.
3. பெண்களை அவர்களது வீட்டிலிருந்து சென்று வரும் தூரத்தில்தான் பணியமர்த்த வேண்டும். தேர்தலில் பயிற்சிக்கே 80 கி.மீ. சென்றுவரும் நிலை பலமுறை ஏற்படுகிறது.
4. பயிற்சிக்குச் செல்லவும், திரும்பவும் உரிய பயண ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பயிற்சி நடக்கும் இடத்திலும் தேர்தலுக்கு முந்தைய நாளும் தேர்தல் நாளிலும் உணவு வசதி செய்யப்பட வேண்டும்.
5. தேர்தலுக்கு முந்தைய நாள் பணி ஆணை வழங்குவதோடு அவர்களை அந்தந்த பூத் இருக்கும் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விட வேண்டும்.
6. தேர்தல் நடக்கும் இடத்தில் கழிப்பிட வசதிகள் சீர்செய்யப்பட வேண்டும்.
7. இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டுக் காலை பத்து நிமிடமும், மதியம் பத்து நிமிடமும் உணவு இடைவேளை கொடுக்கப்பட வேண்டும்.
8. பணி முடிந்ததும் ஊழியர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டு அவரவர் இடத்துக்குச் செல்ல உரிய வசதிகள் அளிக்க வேண்டும்.
9. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஒவ்வொரு ஊழியருக்கும் தேர்தல் ஆணையம் ரூ.10 லட்சம் காப்பீடு செய்ய வேண்டும்.
இந்த வசதிகள் செய்யப்படுமானால், அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தேர்தல் பணியை முழு மனதுடன் செய்வார்கள். அரசு இதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் பணிவான கோரிக்கை.
- உமாமகேஸ்வரி, மாநில ஒருங்கிணைப்பாளர், அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இயக்கம்.
தொடர்புக்கு: umascert@gmail.com
கி.ரமேஷ், செயலாளர், அகில இந்தியக் கணக்குத் தணிக்கை ஊழியர் சங்கம். தொடர்புக்கு: venramster@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT