Last Updated : 01 Feb, 2022 07:13 AM

 

Published : 01 Feb 2022 07:13 AM
Last Updated : 01 Feb 2022 07:13 AM

நியோகோவ் வைரஸ் அடுத்த அச்சுறுத்தலா?

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களில், கரோனா மூன்றாம் அலையின் வீரியம் குறைந்துவருவதால், வார இறுதிப் பொதுமுடக்கம் உள்ளிட்ட பலதரப்பட்ட கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்பிவரும் நிலையில், புதிய கரோனா வைரஸ் ‘நியோகோவ்’ மனிதர்களுக்குப் பரவ வாய்ப்புள்ளது என்று சீன அறிவியலர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை இணையவழியில் பரவி, அனைவரையும் அச்சமூட்டுகிறது.

கடந்த 2019-ன் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸின் முதல் அலை பரவுவது கண்டறியப்பட்டது. அங்கிருந்து அது உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் கரோனா வைரஸில் ஏற்பட்ட மரபணுப் பிறழ்வுகள் காரணமாக, டெல்டா, டெல்டா பிளஸ் எனப் புதிய வேற்றுருவங்கள் உருவாகி, இரண்டாம் அலையைத் தோற்றுவித்தன. இவற்றின் தாக்குதல் வேகம் அதிகமாக இருந்ததால் உயிர்ச் சேதமும் பல மடங்கு அதிகரித்தது. கடந்த சில மாதங்களாக இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் ஒமைக்ரான் எனும் புதிய கரோனா வேற்றுருவம் அதிவேகமாகப் பரவியது. இந்த மூன்றாம் அலை விரைவிலேயே உச்சம் தொட்டு, இப்போது தணிந்துவருகிறது.

இதில் உயிர்ப் பலிகள் அவ்வளவாக இல்லை என்பது ஆறுதல். இந்தச் சூழலில் சீனாவின் நச்சுயிரி ஆய்வகமும் சீன அறிவியல் அகாடமி ஆய்வாளர்களும் கரோனா குடும்பத்தைச் சேர்ந்த ‘நியோகோவ்’ எனும் வைரஸ் குறித்து ஆய்வுசெய்து, விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், “ ‘வெஸ்பர்’ எனும் ஒரு வகைத் தென்னாப்பிரிக்க வௌவால்களிடம் (Vesper bats) ‘நியோகோவ்’ வைரஸ் காணப்படுகிறது. அந்த வைரஸில் ஒரு மரபணு மாற்றம் ஏற்பட்டால்கூட மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்றிக்கொள்ளும் ஆபத்து உள்ளது. இது அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் வைரஸாகும். அதாவது, இவ்வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 3 பேரில் ஒருவர் உயிரிழக்க நேரிடும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதான் இப்போது உலகளாவிய அச்சத்துக்குக் காரணமாகிறது. அந்த அறிக்கையை முழுவதுமாகப் படித்தால், இந்த அச்சம் தேவையில்லை என்பது புரியும் என்பதே அநேக வைரஸ் வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது. எப்படி?

‘நியோகோவ்’ என்பது என்ன?

‘நியோகோவ்’ என்பது புதிய கரோனா வைரஸ் (New coronavirus) எனும் பொருளில் பெயர் சூட்டப்பட்ட வைரஸ். முதலில், இந்தப் பெயரே பொருத்தமில்லை என்கின்றனர் வல்லுநர்கள். காரணம், ‘நியோகோவ்’ புதிய வைரஸ் அல்ல. இது ஏற்கெனவே 2012-ல் மத்தியக் கிழக்கு நாடுகளைக் குறிவைத்துத் தாக்கிய ‘மெர்ஸ்’ வைரஸோடு நெருங்கிய தொடர்புடைய வைரஸ். இந்த வைரஸால் அப்போது 27 நாடுகளில் ‘மெர்ஸ்’ (Middle East Respiratory Syndrome) நோய் பரவியது. ஆனால், அது உலகளாவிய பெருந்தொற்றாகப் பரவவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

அடுத்து, ‘நியோகோவ்’ வைரஸ் வௌவால்களிடம் பரவுவதற்கு வௌவால்கள் உடலில் உள்ள ‘ஏசிஈ2’ (ACE2 receptors) எனும் ஏற்பிட செல் வாசல்களைப் பயன்படுத்துகின்றன. இதே வகை ‘ஏசிஈ2’ ஏற்பிட செல் வாசல்கள், மனிதர்களுக்கும் இருக்கின்றன என்பதால், மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்றிக்கொள்ளும் ஆபத்து உள்ளது என்கின்றனர். ஆனால், இதுவரை இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

ஆகவேதான், உலக சுகாதார நிறுவனம் உட்பட பல ஆய்வாளர்களும் ‘நியோகோவ்’ குறித்த சீனாவின் ஆய்வறிக்கை அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது. அது இன்னமும் சக ஆய்வாளர்களால் மறுமதிப்பீடு (Peer-review) செய்யப்படவில்லை. பொதுவாக, மறுமதிப்பீடு செய்யப்படாத ஆய்வறிக்கைகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவதும், அவற்றின் முடிவுகளை வைத்து பொதுச் சமூகத்தை அச்சப்படுத்துவதும், வழிகாட்டுவதும் மருத்துவ நெறிமுறைகளை மீறுவது. இந்தப் புதிய வைரஸ் மனிதர்களுக்கு அச்சுறுத்தல் தருமா என்பது குறித்துப் பேச இன்னும் விரிவான ஆராய்ச்சிகள் தேவை’ என்று தெரிவித்துள்ளனர்.

மரபணு மாற்றம் ஏற்படுவது எப்படி?

‘நியோகோவ்’ வைரஸ் குறித்த சீனாவின் ஆய்வறிக்கையில், இப்போதைக்கு மனித செல்களுக்குள் தொற்ற இந்த வைரஸுக்கு ஆற்றல் இல்லை என்பதையும், அந்த வைரஸில் மரபணு மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே, மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்றிக்கொள்ளும் ஆபத்து உள்ளது என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர் (https://www.biorxiv.org/content/10.1101/2022.01.24.477490v1.full).

இந்த இடத்தில், வௌவால்களிடம் வைரஸ் குறித்து ஆராய்ந்துவரும் கனடாவின் மேக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளரான அரிஞ்ஜெய் பானர்ஜி கூறியுள்ளதைக் கவனிக்க வேண்டும். ‘நிலையான இயற்கைச் சூழல் உள்ள இடங்களில், இயல்பாக வாழ்ந்துகொண்டிருக்கும் வௌவால்களிடம் காலங்காலமாக வைரஸ் வகைகள் பல்லாயிரக்கணக்கில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த வைரஸ் வகைகளால் நமக்கு எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை... அவற்றையோ, அவற்றின் வாழிடத்தையோ நாம் தொந்தரவு செய்யாதவரை. காடழிப்பு மற்றும் காட்டுயிர் விற்பனை மூலம் அவற்றை நாம் நெருங்கும்போது மட்டுமே அவை நம்மைத் தொற்றுகின்றன. காடழிப்பு காரணமாக வௌவால்கள் பறக்கும் வழித்தடம் மாறும்போது, அந்தந்தப் பகுதிகளில் புதிதாக உருவாக்கப்பட்ட வயல்களுக்கும் நகர்ப் பகுதிகளுக்கும் அவை வருகின்றன.

அப்படி வரும்போது, அவற்றின் எச்சம், எச்சில் போன்றவற்றுடன் நாம் தொடர்புகொள்வது மட்டுமில்லாமல், நம்மைச் சார்ந்த வளர்ப்பு உயிரினங்களும் தொடர்புகொள்கின்றன. வழி மாறிய வௌவால்களுக்கு ஏற்படும் சூழல் அழுத்தம் காரணமாக, தம்மிடமுள்ள வைரஸ்களை அளவுக்கு அதிகமாக வெளிவிடுகின்றன. அந்த வைரஸ்கள் புதிய சூழலுக்கு ஏற்பத் தம்மைத் தகவமைத்துக்கொள்ளும்போது, வேறொரு உயிரினத்துக்குத் தாவுகின்றன. அப்போது, அந்த உயிரினத்துக்கோ, அந்த உயிரினம் வழியாக நமக்கோ அவை தொற்றுகின்றன; நோய்களையும் ஏற்படுத்துகின்றன. அப்படிப் பரவிய வைரஸ்களின் மரபணுக்கள் திடீர் பிறழ்வுக்கும் (Mutation) உட்படுகின்றன’ என்கிறார் அவர்.

சீனாவின் வூஹானில் காட்டுயிர் அங்காடிகளில் விற்கப்பட்ட வௌவால்களிடம் இருந்து சார்ஸ் கரோனா வைரஸ்-2 மனிதர்களுக்குத் தொற்றியதாக சீன அரசு அளித்த விளக்கம் பானர்ஜியின் கருத்துக்கு வலுசேர்ப்பதை நாம் உணரலாம். இன்னொரு எடுத்துக்காட்டு, நிபா வைரஸ் தொற்று. இது 1998-ல் மலேசியாவின் அழிக்கப்பட்ட ஒரு காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்ட தானியக் களஞ்சியம் ஒன்றில், ‘கலோங் வௌவால்கள்’ ஓய்வெடுக்கத் தொடங்கின. அவற்றின் எச்சம் வழியாகப் பன்றிகளுக்கு நோய் தொற்றியது. தொடர்ச்சியாக அந்தப் பன்றிகளைப் பராமரித்த உழவரும் பாதிக்கப்பட்டார். ஆகவே, ஒரு புதிய வைரஸ் நம்மைத் தொற்றுவதும் தொற்றாததும் நாம் நடந்துகொள்ளும் முறையில்தான் உள்ளது.

மேலும், இந்தியாவில் தேசிய நோய்ப் பரவல் மற்றும் தடுப்பியல் துறை ஏற்படுத்தியுள்ள அறிவியல் ஆலோசகர் குழுவின் தலைவர் டாக்டர் ஜெயப்பிரகாஷ் முளியில் சொல்வதும் நம் கவனத்தைப் பெறுகிறது. ‘வௌவால்களிடம் வாழும் எல்லா வைரஸ்களும் மனிதர்களுக்குத் தொற்றிவிடும் என்று சொல்வதற்கு இல்லை. ‘நியோகோவ்’ வைரஸ் மனிதர்களுக்குப் பரவும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. நம்மைச் சுற்றி இருக்கும் மாசடைந்த சூழலில் ஏற்கெனவே லட்சக்கணக்கான வைரஸ்கள் உள்ளன. அவற்றுடன் வாழ நாம் பழகியிருக்கிறோம்.

‘நியோகோவ்’ வைரஸ் கரோனா குடும்பத்தில் ‘மெர்பிகோ வைரஸ்’ (Merbecovirus) எனும் துணை இனத்தைச் சார்ந்தது. அந்தக் குடும்பத்தில் இதே இனத்தைச் சேர்ந்த ‘ஹெச்கேயு1’ (HKU1) மற்றும் ‘ஓசி43’ (OC43) வைரஸ் வகைகள் நம்மை அவ்வளவாகத் தொந்தரவு செய்யாதவை. அதிகபட்சம் ஜலதோஷத்தை மட்டுமே உண்டாக்கக்கூடியவை. இதுவரை மரபணு மாற்றத்துக்கு உள்ளாகாதவை. அந்த வகையைப் போலத்தான் ‘நியோகோவ்’ வைரஸும். இந்த வைரஸ் குறித்து பீதியும் பதற்றமும் தேவையில்லை’ என்கிறார் முளியில்.

எனவே, உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தாத மருத்துவச் செய்திகளைக் கொண்டும், ஆதாரமில்லாத அல்லது தீர்மானமான முடிவுக்கு வராத ஆய்வு முடிவுகளைக் கொண்டும் சமூக ஊடகங்கள் பொதுச் சமூகத்தை அச்சப்பட வைப்பதை இனிமேலாவது நிறுத்த வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பு.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர். தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x