

நினைவை, வாழ்க்கையை இழப்பதை எந்த வார்த்தைகளாலும் விளக்க முடியாது
எனக்கு நினைவு இழப்பு ஏற்பட்டபோது, என் வயது 25. 2012-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி நடந்தது அது. அன்று கண்விழித்தபோது, நான் எங்கிருந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் படுக்கையில் படுத்திருந்தேன் என்பது நிச்சயம். ஆனால், யாருடைய படுக்கையில்? அந்த அறையில் வேறு யாருமே இல்லை. எந்தச் சத்தமும் இல்லை. என் உடலுடன் அங்கே நான் தனியாக இருந்தேன்.
நான் என்பது என் பெயர்தானா?
எனது உடலுடனான எனது தொடர்பு முன்பைவிட முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. எனது உடல்பாகங்கள் வேறு யாருடையவையோ, சொல்லப்போனால் வேறு எதனுடையவையோ போல இருந்தன. என்னைப் பற்றி எனக்கிருந்த மங்கலான ஞாபகம் என்னுடைய பெயர் மட்டும்தான். உங்கள் நினைவை, வாழ்க்கையை இழப்பதை எந்த வார்த்தைகளாலும் துல்லியமாக விளக்க முடியாது.
அடிப்படையில், உண்மைகளை இழப்பது என்பது ஒரு ஆழமான பிரச்சினை. தர்க்கம் மற்றும் காரண காரியங்களுக்கு இடையேயான தொடர்பின் இழப்பு அது. சூழல், கடந்தகாலம், நிகழ்காலம் ஆகியவற்றுக்கு இடையிலான அடிப்படைத் தொடர்பை உணர முடிந்தால்தான் ஒரு நபரால் இயங்கவோ அல்லது கேள்வி எழுப்பவோ முடியும்.
நினைவு வழங்கும் காரண காரியங்கள்பற்றிய உணர்வு இல்லாததால், ஒரு பெருங்குழப்பம். நான் கண்விழித்தபோது, என்னைப் பற்றிய தர்க்கம் உட்பட தர்க்கம்பற்றிய பிடிப்பே என்னிடம் இல்லை. அது ஒரு ஆழமான அறிதலின்மை; அது எனக்கு அச்சமூட்டுவதாக இருந்தது. எனக்கு மூச்சுத் திணறத்தொடங்கியது.
நினைவிழப்புக் குறைபாடு
எனக்கு ஏற்பட்ட பாதிப்பின் பெயர், தற்காலிக நினைவிழப்பு (டி.ஜி.ஏ.). இது நரம்புகள் தொடர்பான ஒரு குறைபாடு. இதைப் பற்றி சுவாரஸ்யமாகச் சொல்வதென்றால், காரணம் என்ன என்று தெரியாது; அறிகுறிகள் மட்டும்தான் தெரியும். அறியப்பட்ட இதன் அறிகுறி என்பது குறுகிய கால நினைவு என்ற இடையூறுதான்.
பல சமயங்களில், நீண்டகால நினைவின் தற்காலிக இழப்பாகவும் உள்ளது. என்றாலும், இதில் ஒரு நல்ல விஷயமும் இருக்கிறது. டி.ஜி.ஏ. இரண்டு முதல் 20 மணி நேரம் மட்டும் நீடிக்கக் கூடியது. அதாவது, ஒருநாள்தான். இருப்பினும், அந்த நேரத்தில் எனக்கு அது தெரியாது.
என் மனதில் இரண்டு பெயர்கள் பளிச்சிட்டன: டேனியல் மற்றும் சோஃபி. அந்தப் பெயர்கள் எங்கிருந்து வந்தன என்றோ அவர்கள் யாரென்றோ எனக்குத் தெரியாது. நான் தட்டுத்தடுமாறி எழுந்து சென்று அறைக் கதவைத் திறந்தேன். அந்த அடுக்குமாடி வீட்டில் நான் மட்டும் தனியாக இருப்பதை உணர்ந்தேன். (உண்மையில் அது என் வீடுதான்.) மாயாஜாலம்போல, அங்கு ஒரு ஐ-போன் கிடைத்தது. எனக்கு அதைப் பயன்படுத்தத் தெரியும் என்று உணர்ந்தேன். இதில் பிரமாதம் ஒன்றுமில்லை. டி.ஜி.ஏ-வால் பாதிக்கப்பட்டவர்களால், நன்கு பழக்கப்பட்ட விஷயங்களைச் செய்ய முடியும். கார் ஓட்டுவது போன்ற கடினமான வேலைகளையும்கூட. (ஆனால், அதை நான் பரிந்துரைக்க மாட்டேன்.)
அரிதாகத்தான் டி.ஜி.ஏ. பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு லட்சம் பேரில் 10 பேருக்குத்தான் இது ஏற்படும். 40 முதல் 80 வயதுக்கு இடையில் உள்ளவர்களுக்கு ஏற்படக் கூடியது இது. இந்த பாதிப்புக்கான சராசரி வயது 62. ஆனால், நான் எப்போதுமே கொஞ்சம் வேகம்தான்.
சரி, கைபேசி கிடைத்தாயிற்று. அதை நோண்டியதில் எப்படியோ பதிவுசெய்யப்பட்ட எண்களைத் திறந்துவிட்டேன். அதிலும் ஒரு சோதனை. மொத்தம் ஐந்து சோஃபிக்கள், ஒரு டேனியல்கள் அதில் இருந்தனர். டேனியலுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினேன். என் வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்பட்டால், எனக்கு உதவக்கூடிய ஆள்தானா நீங்கள் என்ற தொனியில் அவரைக் கேட்டிருந்தேன்.
அவரது பதில்: “?”
என்னைப் பற்றிச் சொல்லுங்கள்…
நான் திரும்ப டைப் செய்தேன்: “எனக்கு எதுவுமே தெரியவில்லை.”
டேனியல் உடனடியாக என்னை அழைத்தார். எனது உற்ற நண்பர் என்று சொன்னார். அவரது குரல் எனக்குப் பரிச்சயமானதாகத்தான் இருந்தது. எனக்கு உதவ, என் வீட்டுக்கு வருவதாக அவர் கூறினார். மறுக்கும் நிலையில் நான் இல்லை. கதவைத் திறந்ததுமே அவரை அடையாளம் தெரிந்துகொண்டேன். உண்மையில் டேனியல் என் நெடுநாள் நண்பர். நான் என் வாழ்க்கையைக் குறித்துத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். நான் ஒரு எழுத்தாளர் என்றும், ராண்டி நியூமேனின் எழுத்துகள் எனக்குப் பிடிக்கும் என்றும், நான் மனிதர்களை வெறுப்பவன் என்றும் டேனியல் சொன்னார். நான் அமைதியடையத் தொடங்கினேன். நான் நினைவை இழந்துவிட்டது உறுதி என்றும் புரிந்துகொண்டேன். அதற்கு முன்னர், நினைவு என்ற ஒரு விஷயம் இருக்கிறது என்பதையும் அது என்னைப் போன்ற ஒரு மனிதனிடம் இருக்கும் என்பதையும் அறியாதவனாக இருந்தேன்.
நண்பகல் நேரத்துக்குள், நண்பர்கள், உறவினர்கள், முன்னாள் காதலிகள் என்னைப் பார்க்க வரத் தொடங்கினர். என் வாழ்க்கையின் முக்கிய விஷயங்களை அவர்கள் எனக்கு நினைவூட்டினர். நினைவுகள் ஒவ்வொன்றாகத் திரும்பத் தொடங்கின. அவர்கள் சொல்வதைத் தலையாட்டியபடியே கேட்டுக்கொண்டிருந்தாலும் உடனடியாக எனக்கு அவை மறந்துபோனது.
கொஞ்ச நேரம், அவ்வளவுதான்… சீக்கிரமே மருத்துவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுவிட்டேன். வாழ்க்கைகுறித்த எனது அச்சம் தீர்க்கப்பட்டுவிட்டது. புதிய தகவல்களை நினைவில் கொள்வதில் எனக்குச் சிரமம் இருந்தது.
நான் சகஜ நிலைக்குத் திரும்பியதும் என் எல்லா நினைவுகளும் திரும்பவந்தன. (அதுசரி, அதை எப்படி உறுதியாக நம்ப முடியும்?) எனக்கு நடந்தது நிரந்தர பாதிப்பல்ல என்பதை அறிந்தேன். நான் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். நான் சொன்னேன்: “கவலை வேண்டாம். எனக்கு 25 வயதுதான். கொஞ்ச நேரம் நினைவிழந்தேன். அவ்வளவுதான்.”
நினைவின் இடைவெளி
என்னிடம் பலர் கேட்கும் கேள்வி: “மீண்டும் இதுபோல நடக்குமே என்று நீங்கள் பயப்படவில்லையா?” இதுபோல் மீண்டும் நடப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. எனக்கு முதல்முறை நடந்தது என்பதற்காக அதற்கான வாய்ப்புகள் அதிகரித்துவிடவில்லை. உண்மையில், பிரக்ஞையின் இந்தப் புதிய வடிவத்தில் சில தருணங்கள் இருந்தன. அன்றாட வாழ்க்கையின் மனஅழுத்தங்கள், பயம் போன்றவற்றுக்கான காரணங்கள் அப்போது இல்லை; ஆனந்தமயமான தருணங்கள் சிலவும் இருந்தன. இந்த பாதிப்புக்குள்ளான பலர், மிக லேசாகவும் சுதந்திரமாகவும் உணர்ந்ததாக அடிக்கடி குறிப்பிடுகின்றனர்.
‘தி வேர்ல்டு அக்கார்டிங் டு கார்ப்’ என்ற நாவலின் திரைவடிவத்தில் ஒரு காட்சி. ஒரு வீட்டின்மீது விமானம் விழுந்து விபத்துக்குள்ளாவதை கார்ப்பும் அவனது மனைவியும் பார்க்கின்றனர். அந்த வீட்டைத்தான் வாங்க வேண்டும் என்று கார்ப் உடனடியாக முடிவெடுக்கிறான். அந்த வீட்டின்மீது இன்னொரு முறை விமானம் விழுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் அதுதான் அவனுக்குப் பாதுகாப்பான இடம் என்றும் வாதிடுகிறான்.
ஒருவித பயம் அல்லது நமக்கு ஒன்றும் ஆகாது எனும் பிரமை, இவைதான் நமது தெரிவுகள். இந்த இரண்டில் வாழ்க்கைக்கு முக்கியமானது எது என்று நான் சொல்ல வேண்டியதில்லை.
அன்று இரவு, தூங்கச் செல்லவே பயந்தேன். எனவே, அளவுக்கு அதிகமாகக் குடித்தேன். அடுத்த நாள் காலை கண்விழித்தபோது வழக்கமான நினைவுகள் திரும்பியிருந்தன, கூடவே தலைவலியும்.
- நியூயார்க் டைம்ஸ், தமிழில்: வெ. சந்திரமோகன்