Published : 30 Jan 2022 06:39 AM
Last Updated : 30 Jan 2022 06:39 AM

இரா.நாகசாமி: வியத்தகு பன்முக ஆளுமை

டி.எஸ்.சுப்ரமணியன்

தை மாதம் 10-ம் நாள் (ஜனவரி 23-ம் தேதி, 2022) அன்று காலமானார் இரா.நாகசாமி (91). அவர் ஒரு மகத்தான மனிதர். தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் கரைகடந்த புலமை பெற்றவர். கல்வெட்டியல், தொல்லியல், அகழாய்வு, தமிழ் பிராமி, வட்டெழுத்து, நாகரி, கிரந்தம் போன்ற எழுத்துருக்கள், பல்லவர் மற்றும் சோழர் காலத்துச் செப்புத் திருமேனிகள், செப்பேடுகள், நாணயவியல், நடுகற்கள், ஓலைச்சுவடிகள், சிற்பங்கள், ஓவியங்கள் போன்ற பல்வேறு துறைகளில் ஆழ்ந்த புலமை கொண்டு, 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனித்துவத்துடன் செயல்பட்டவர்.

1966 முதல் 1988 வரை 22 ஆண்டுகள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் இயக்குநராக இருந்தவர் நாகசாமி. ஆகம விதிகளை நன்கு அறிந்தவர். கோயில் கட்டிடக் கலையில் புலமை பெற்றவர் நாகசாமி. தமிழுக்கு அவர் ஆற்றிய மிகப் பெரிய தொண்டு எதுவெனில், தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுகள், அவற்றில் உள்ள அரிய செய்திகளைப் பற்றி தமிழ்நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதுதான். அந்தப் பணியை அவர் செய்ய பல உத்திகளைக் கையாண்டார்.

நாகசாமி குறித்து தமிழ்நாடு தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குநர் பூங்குன்றன் இப்படிக் கூறுகிறார்: “ ‘இன்ஸ்டிட்யூட் ஆஃப் எபிகிராஃபி’ என்ற நிறுவனத்தை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலமாக நாகசாமி ஏற்படுத்தினார். அதில் சரித்திரம், தமிழ் இலக்கியம், தொல்லியல் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களைச் சேர்த்தார். அவர்களுக்கு ஒரு வருட காலம் கல்வெட்டியலில் மிக விரிவாகப் பயிற்சி கொடுத்து, முதுகலைப் பட்டம் வழங்கினார். பட்டம் பெற்றவர்களை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் முழு நேர ஊழியர்களாகப் பணியமர்த்தினார். இந்த ஒரு வருட காலம் படிப்பு வெறும் வகுப்பறையில் நடக்கவில்லை. மாணவர்களை கோயில்கள், மலைகள், மாதா கோயிலில் உள்ள மணிகளில் உள்ள கல்வெட்டுகள் என எங்கெல்லாம் பழங்கால எழுத்துகள் பொறிக்கப்பட்டு இருந்தனவோ, அங்கெல்லாம் கூட்டிச்சென்று, அவற்றைப் படிக்கக் கற்றுக்கொடுத்துக் களப் பயிற்சி கொடுப்பார்.”

பல்லவர், சோழர் காலத்து செப்புத் திருமேனிகளின் வடிவமைப்பு, அவற்றின் நகை அலங்காரங்கள், உடைகள், சிகை அலங்காரங்கள், முத்திரைகள் போன்றவற்றைப் பற்றி மிக நுணுக்கமாக அறிந்தவர் நாகசாமி. அர்த்தநாரீஸ்வரர் (மாதொரு பாகன்) செப்புத் திருமேனியை அவர் விவரிக்கும்போது, கேட்க மிகவும் ஆனந்தமாக இருக்கும். அர்த்தநாரீஸ்வரர் செப்புத் திருமேனிகளில், ஆணின் தோள் திண்மையாகவும், பெண்ணின் தோள் நளினமாகவும், ஆணின் கால் வலுவானதாகவும், பெண்ணின் கால் மென்மையாகவும் இருப்பதையும், திருமேனிகளில் உள்ள உடைகள், அலங்காரம், சிகை அமைப்பு எல்லாவற்றையும் எவ்வாறு வேறுபடுத்தித் தமிழகச் சிற்பிகள் காண்பித்தனர் என்பதையெல்லாம் சுவைபட விவரிப்பார்.

தமிழ் இலக்கியத்தில் மிக்க புலமை படைத்தவர் நாகசாமி. ஆதலால், செப்புத் திருமேனிகளைப் பற்றி அவர் விவரிக்கும்போது, அவற்றைப் பற்றி தமிழ் இலக்கியங்களிலிருந்து மேற்கோள்காட்டிப் பேசுவார். சம்ஸ்கிருதத்திலும் மிக்க புலமை பெற்றவர். அந்தப் பின்புலத்தால் அவரால் சோபிக்க முடிந்தது.

போளுவம்பட்டி அகழாய்வின்போது கிடைத்த, செம்பினால் செய்யப்பட்ட ஒரு எருதினைப் பற்றி, ‘கவின்மிகு சோழர் கலைகள்’ அல்லது ‘Masterpieces of Chola Art’ என்று, தான் எழுதிய நூலில் நாகசாமி கூறும்போது, ‘‘கோவைக்கு அருகில் போளுவம்பட்டி என்ற இடத்தில் நடந்த அகழாய்வில், உள்ளங்கைக்குள் அடக்கக் கூடிய ஒரு சிறிய எருதின் உருவம் கிடைத்தது. அவ்வூர் மக்கள், இவ்வகழாய்வு செய்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர், இதேபோன்று மற்றுமொரு எருது கிடைத்தது என்றும், குழந்தைகள் விளையாடியபோது அது தொலைந்துவிட்டது என்றும் குறிப்பிட்டனர். இவ்விரண்டு எருதுகளின் உருவங்களும் ஒரு மரபை நமக்கு உணர்த்துகின்றன. முற்காலத்தில் ஊர்ப்புறங்களில் ஆண்டுதோறும் உழுதொழிலைத் தொடங்கும்போது, ஊர் மக்கள் அனைவரும் கூடி, ஒரு வயலில் முதன்முதலில் உழுவார்கள். இதை விழாவாக எடுப்பார்கள். இதை ‘பொன் ஏர் பூட்டுதல்’ என்று சொல்வார்கள். உலோகத்தால் சிறு வடிவில் ஓர் ஏர் செய்து, அதை இரு எருதுகள் இழுப்பதுபோல் செய்து, அவ்வயலில் ஒரு குழியில் புதைத்து, பின்னர் உழுதொழிலைத் தொடங்குவார்கள். இதற்காகச் செய்யப்பட்ட எருதுகள்தான் போளுவம்பட்டியில் கிடைத்தவை. ஆதலால், உலோகத்தால் இதுபோன்ற உருவங்களும் செய்துள்ளனர்” என்றார்.

கல்வெட்டியலை ஒரு மக்கள் இயக்கமாகவே மாற்றியவர் நாகசாமி என்பதற்கு அவரது செயல்பாடுகளே சான்று. தொல்லியல் துறையில் நாகசாமியின் சாதனைகள் குறித்து, பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர், கா.இராஜன் இப்படிக் கூறுகிறார்: “அவர் ஒரு தனி மனித சேனை. அவர் அறைக்குள் கிடந்த ஆசிரியர் அல்லர். தமிழ்நாடு முழுவதும் அலைந்து திரிந்து கல்வெட்டுகள், சிற்பங்கள், செப்புத் திருமேனிகள், செப்பேடுகள். நடுகற்கள், ஓலைச்சுவடிகள், நாணயங்கள் போன்றவற்றை ஆராய்ந்தார். நடுகற்களைப் பற்றிய அவரின் ஆராய்ச்சி பல்லவர்களின் சரித்திரத்தை மேலும் ஆராயத் துண்டியது. அதுவரை, பல்லவர்களின் வரலாறு, அரச மரபினரைப் பற்றிய செப்பேடுகள், கல்வெட்டுகள் மூலம் எழுதப்பட்டுவந்தது. ஆனால், நாகசாமியின் அயராத முயற்சிகளால், செங்கம் பகுதியில் உள்ள சாதாரண மக்களால் எழுப்பப்பட்ட நடுகற்கள் மூலம், பல்லவர் வரலாறு, சமூகக் கண்களோடு கூடிய வரலாறாக மீளாய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டது. இது நாகசாமியின் பெரிய சாதனையாகும்.”

நாகசாமியின் அகழாய்வு சாதனைகளைப் பற்றி தொல்லியல் ஆய்வாளர் சுப்பராயலு நம்மிடம் பேசினார். “செங்கம் பகுதியில் உள்ள நடுகற்களையெல்லாம் ஒன்றுதிரட்டி, அவை தந்த செய்திகளை அச்சில் ஏற்றியதும், பூலாங்குறிச்சியில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகளும், விழுப்புரம் அருகில் ஜம்பையில் கண்டுபிடிக்கப்பட்ட அதியமான் நெடுமான் அஞ்சி பற்றிய தமிழ்–பிராமி கல்வெட்டுச் சொற்கள், கங்கைகொண்ட சோழபுரம், கோவலன்பொட்டல் போன்ற இடங்களில் நாகசாமி செய்த அகழாய்வுகள் என்று அவரது சாதனைகள் பெரும் பட்டியலாக நீளும். பற்பல தமிழ்–பிராமி, வட்டெழுத்துகள் பொறித்த கல்வெட்டுகளைப் படித்து அவற்றில் உள்ள செய்திகளையெல்லாம் வெளி உலகுக்கு எடுத்துக்கூறியவர் நாகசாமி” என்றார்.

பல பெரிய, சிறிய நூல்களையும், நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருப்பவர் நாகசாமி. அவர் எழுதிய ‘மாமல்லை’, ‘ஓவியப்பாவை’, ‘உத்தரமேரூர்’, ‘கலவை’, ‘கவின்மிகு சோழர் கலைகள்’, ஆங்கிலத்தில் எழுதிய ‘Masterpieces of Early South Indian Bronzes’, ‘Tamil Nadu’, ‘The Land of Vedas’, ‘Tarangampadi’, ‘Gangaikonda chozhapuram’, ‘Kailasanatha Temple’ (காஞ்சிபுரம்), ‘Mirror of Tamil and Sanskrit’ உள்ளிட்ட ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் அவரது வியக்கத்தகு பன்முகப் புலமையை என்றும் பறைசாற்றும். நாகசாமி, புகைப்பட நிபுணரும்கூட. தான் எழுதும் நூல்களுக்குத் தானே புகைப்படம் எடுப்பார். ஆவணப்பட ஒளிப்பதிவுக் கலைஞரும்கூட. இந்திய விமானப் படையில் பணியாற்றியவர். விமானத்தில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகளை அதிலும் ‘டைகர் மாத்’ விமானத்தில்கூட சரிசெய்வார். கடினமான யோகாசனங்களையும் அநாயாசமாகச் செய்வார். பல நாட்டிய நாடகங்களை நடத்தியவர். ஆர்மோனியம் வாசிப்பார். வரைபடம் வரைவதிலும் வல்லவர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் நாகசாமிக்கும் இடையிலான நட்பு குறித்து இந்தியத் தொல்லியல் துறையில் பணியாற்றிய தியாக.சத்தியமூர்த்தி கூறும்போது, “சங்க காலத்தைச் சேர்ந்த இடங்களைத் தெரிவுசெய்து, நாகசாமி அகழாய்வு நடத்தினார். குறிப்பாக, கரூர், கொற்கை, அழகன்குளம் அகழாய்வுகளைக் குறிப்பிடலாம். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நாகசாமியின் அருமை நன்கு தெரிந்திருந்தது. தொல்லியல் விஷயங்களைப் பற்றி நாகசாமியிடம் அவர் அடிக்கடி ஆலோசனை கேட்பார்” என்றார். இதேபோல், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் கூறும்போது, ‘‘கருணாநிதியும் நாகசாமியும் நல்ல நண்பர்கள். இருவரும் மகிழ்ச்சியுடன் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார்கள். இருவரிடத்திலும் நல்ல புரிதல் இருந்தது” என்றனர்.

- டி.எஸ்.சுப்ரமணியன், ஃப்ரண்ட்லைன் இதழின் முன்னாள் உதவி ஆசிரியர். தொடர்புக்கு: cholamurals@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x