Published : 30 Jan 2022 06:36 AM
Last Updated : 30 Jan 2022 06:36 AM
அண்மையில் காலமான தொல்லியல் அறிஞர் டாக்டர் இரா.நாகசாமியைப் பற்றி, மூத்த கல்வெட்டு அறிஞரும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் பணியாற்றியவருமான சு.ராசகோபால் பகிர்ந்துகொண்ட நினைவுகள்...
கோடைக்காலக் கல்வெட்டுப் பயிற்சியை ‘கல்வெட்டுப் பாசறை’ என்று நடத்தினார் இரா.நாகசாமி. மாணவர்களுக்கு வகுப்புப் பயிற்சி தவிர, பேருந்து ஏற்பாடு செய்து பல ஊர்கள், கோயில்களுக்கு அழைத்துச் சென்று, நேர்முகமாக ஒரு வார காலம் விளக்கம் சொல்வார். அதன் தொடர்ச்சியாகக் கல்வெட்டுப் பயிற்சி நிறுவனம் ஒன்றை 1974-ல் தொடங்கி, தானே வகுப்பெடுத்தார். முதல் ஆண்டு மாணவர்கள் நாங்கள்தான். தினமும் எழுத்துருக்கள், தமிழ் - பிராமி, வட்டெழுத்து, கிரந்தம், நாகரி எழுத்துருக்கள் பழக்கமாகும் வரை 40 பக்கங்களாவது எழுதச் சொல்வார். நன்கு பழக்கமாகிவிடும். சோழர் மெய்கீர்த்திகள், கலிங்கத்துப் பரணி, மூவருலா, சோழர் வரலாறு சொல்லும் கண்ணிகள், வேள்விக்குடி செப்பேடுகள், தமிழ் வருடங்கள் எனப் பலவற்றையும் மனப்பாடம் செய்யச் சொல்வார் நாகசாமி.
கோயில்களின் கல்வெட்டுகளில் குறிப்பிட்ட பகுதியைப் படிக்கச் சொல்லி எங்கள் மனப்பாடப் பகுதியில் தொடர்புபடுத்தி இராஜேந்திரன், இராஜராஜன், குலோத்துங்கன் என்று நாங்கள் சொல்வதைக் கேட்டு ஆனந்தக் கூத்தாடுவார். சோழர் வம்சாவளி, பாண்டியர் வம்சாவளியையெல்லாம் ஒப்பிப்போம். சில சமயங்களில் மெய்கீர்த்திப் பகுதிகளை நடுவிலிருந்து கேட்பார். பயிற்சி முடிக்கும் முன்பே எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் மகன்கள் மூலம் பதிவு அலுவலர் பணிகளை ஏற்படுத்தி, கல்வெட்டாய்வாளர் என்று அந்தப் பணியை உயர்த்தி, எங்களுக்குக் கல்வெட்டாய்வாளர் வேலை பெற்றுத்தந்தார்.
நடுகற்களைப் படியெடுக்க எல்லோரையும் ஊக்குவித்துக் கருத்தரங்கு நடத்தினார். முதலமைச்சர், அமைச்சர்கள் அன்புக்குப் பாத்திரமாகி நிதி ஒதுக்கீடுகளை நாகசாமி பெற்றுத்தருவார். மாணவர்களான எங்களுக்குக் கரூர் அகழாய்வில் வாய்ப்பளித்தார். கூடவே, அருகில் உள்ள புகளூர், கொடுமுடி, திருச்சி, நாமக்கல் பகுதிகளுக்கு எங்களை அழைத்துச்சென்று விளக்குவார். எளிமையாக எங்களுடன் பயணிப்பதும் உணவருந்துவதும் அவர் பண்பு.
ஒரு மாணவர் (அறிவுமதி) குற்றாலத்தில் திரிகூடராசப்பக் கவிராயர் குடும்பச் சுவடிகளைப் பெற்று வந்ததை முன்னிட்டு, சுவடிகள் படிக்க, சேகரிக்கத் தொல்லியல் அலுவலர் பதவியை ஏற்படுத்தினார். கீழ்த்திசைச் சுவடி நூலகமும் தொல்லியல் துறையில் இணைந்தது. ஒரு மாணவர் செத்தவரை கிராமத்தில் பாறை ஓவியம் பார்த்த பிறகு, பாறை ஓவியங்கள் ஆய்வுகளை நாகசாமி முடுக்கிவிட்டார். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை ஆய்வதற்குத் தொல்லியல் அலுவலர் பதவியை உண்டாக்கினார். பொங்கல் சமயத்தில் நிகழும் சுற்றுலாக் கண்காட்சியில் அரங்கு அமைத்து ராஜராஜன் வரலாறு, குடவோலை முறை இன்னும் பல கல்வெட்டுகளைக் காட்சிப்படுத்தி பொதுமக்களிடம் தொல்லியலை எடுத்துச்சென்றவர் நாகசாமி. மாணவர்கள் படி எடுத்த காஞ்சி அம்மன் கோயில் பாடலை மீண்டும் மீண்டும் படித்து, மு.அருணாசலத்துடன் விவாதித்து, அது காளமேகப் புலவரின் பாடல் என வெளிப்படுத்தினார்.
பூலாங்குறிச்சி கல்வெட்டைக் கண்டபோதும் கெம்பை கல்வெட்டைக் கண்டபோதும் வேலஞ்சேரி செப்பேட்டைப் படித்தபோதும் அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நேரில் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். சிவராமமூர்த்தி, கார்ல் கந்தராஜா, நொபுரு கராசிமா, எஸ்.ஆர்.ராவ் எனப் பலரும் சென்னைக்கு வரும்போதெல்லாம் அவர்களைத் துறைக்கு அழைத்துவந்து சொற்பொழிவுகள் நிகழ்த்தச் செய்வார். திங்கள்தோறும் ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும் அலுவலர்களாகிய எங்களைக் கருத்தரங்கக் கட்டுரைகள் படிக்கச் செய்வார். அவரும் ஒரு கட்டுரை படிப்பார். கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வை மேற்கொண்டபோது இராசேந்திர சோழன் விழா நிகழ்த்தி, பத்மா சுப்பிரமணியத்தின் நாட்டிய விழாவை நாகசாமி நடத்தினார். சிதம்பரத்தில் திங்கள் கருத்தரங்கு நடத்தியபோது ‘நாட்டியாஞ்சலி’ விழா உருவாகிச் சிறப்புப் பெற்றதை நாங்கள் நேரில் அறிவோம்.
எல்லோரையும் நூல்கள் எழுதச் செய்து துறை அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடுவார் நாகசாமி. மாணவர்களிடையே கோயில் ஆய்வு உருவாக வித்திட்டவர் அவர். இராமநாதபுரம் அரண்மனை ஓவியம், செங்கம், அழகர் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், தஞ்சை அரண்மனை என்று பல இடங்களிலும் ஓவியங்களின் சிறப்பை வெளிப்படுத்திய பெருமை உடையவர். ராமாயண ஓவியங்களுக்காக ஒரு கருத்தரங்கையும் நடத்தினார். காசுகள் பற்றி அறிந்ததை உடனுக்குடன் பகிர்ந்துகொள்வார். காசுகள் பற்றிய நூல்களும் வெளியிட்டார்.
சிறிய 16 எம்எம் கேமராவில் மாமல்லபுரம் பற்றிய ஆவணப் படத்தை நாகசாமி எடுத்தார். தஞ்சை, கும்பகோணம், தாராசுரம் ஆகியவையும் ஆவணப் படங்களாயின. நடுகற்களையும் ஆவணப் படம் எடுத்தார். தான் எடுத்த படங்களைப் பெரிய அளவில் அச்சிட்டுக் கண்காட்சிகள், உலகத் தமிழர் மாநாடுகள், பொங்கல் சுற்றுலாக் கண்காட்சிகள் போன்றவற்றிலும் வைத்தார். குடந்தை ராமசாமி கோயில் ரகுநாத நாயக்கர் சிற்பத்தைப் பெரிய அளவில் பிரிண்ட் செய்து டென்மார்க் கொண்டுசென்றார். தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, ராமநாதபுரம் அரண்மனை, திருமலைநாயக்கர் அரண்மனை, தஞ்சை அரண்மனை என அவரது முயற்சியால் பல்வேறு சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக மாறின. கோயில், கல்வெட்டுள்ள பாறைக் குகைகள் என்றெல்லாம் பாதுகாக்கப்பட்ட சின்னங்களின் பட்டியல் பெருகியது.
நாகசாமியின் முன்முயற்சியினால் பழம் பொருள்களைப் பாதுகாக்க ரசாயனக் கூடமும் உருவாக்கப்பட்டது. கிராம/ ஊர்வாரியாகக் கல்வெட்டுகளை ஆய்வுசெய்து, படியெடுத்து அச்சிடும் பணியும் நடந்தன. மாவட்டம்தோறும் தொகுதிகள் வெளியிடப்பட்டன. நாகசாமி முன்னெடுக்கும் எல்லாத் திட்டங்களும் அலுவலர்களுக்குத் தெரிந்து, அவர்களை ஈடுபடுத்தியே மேற்கொள்ளப்பட்டன. குறைந்த அரசு நிதி ஒதுக்கீடு, குறைந்த அளவிலான ஊடகங்கள் என்ற கடினமான பின்புலத்தைக் கொண்டே தொல்லியலை, அறிஞர்களிடமிருந்து மக்களுக்குக் கொண்டுசென்றவர் என்ற பெருமைக்குரியவர் இரா.நாகசாமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT