Published : 26 Jan 2022 06:52 AM
Last Updated : 26 Jan 2022 06:52 AM

பொதுமக்களையும் படிக்க வைப்பதுதான் சட்டத் தமிழுக்கு வெற்றி: ஆ.சந்திரசேகரன் நேர்காணல்

பேராசிரியர் ஆ.சந்திரசேகரன், தமிழ்நாட்டு வழக்கறிஞர்களுக்கு மட்டுமின்றி சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள், போட்டித் தேர்வு மாணவர்கள் ஆகியோருக்கும் நெருக்கமான பெயர். தமிழ்நாடு அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவரது பணிக் காலத்தில், தனி அலுவலராகப் பொறுப்பேற்று திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியை நிர்மாணித்தவர். கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் சட்ட நூல்களை எழுதிவருகிறார். இந்தியா முழுவதும் பயணித்து, கோயில் கட்டிடக் கலையின் நுட்பங்களைப் புகைப்படங்களாக்கிவரும் கலைஞரும்கூட. பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் என அவர் எடுத்த பல இயற்கை சார்ந்த புகைப்படங்கள் பரிசுகளை வென்றுள்ளன. சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடியதிலிருந்து…

சட்டம் தொடர்பாக நீங்கள் தமிழில் எழுதிய முதல் நூல் எது? எப்போது?

சொத்துரிமைச் சட்டத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றுப் பேராசிரியராகப் பணியாற்றினேன். அத்துறையில் முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சி செய்ய விரும்பி, அது தொடர்பான நூல்களைப் படித்து குறிப்புகளைத் திரட்டிக்கொண்டே இருந்தேன். ஆனால், தமிழ்நாடு சட்டக் கல்வித் துறையின் இயக்குநர்களாக இருந்தவர்கள், பேராசிரியர்கள் ஆராய்ச்சி செய்து பட்டம் பெறுவதை அனுமதிக்காத நிலைதான் 2000 வரையிலும்கூட நீடித்தது. எனவே, அந்த விருப்பம் நிறைவேறவில்லை. 1999-ல் ஓய்வுபெற்ற பிறகு என்னிடம் இருந்த குறிப்புகளைக் கொண்டு தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் ‘தமிழக நிலச் சட்டங்கள்’ என்ற புத்தகத்தை எழுதி 2000-ல் வெளியிட்டேன். அதுதான் தமிழில் வெளிவந்த எனது முதல் நூல். தொடர்ந்து, ‘ஓர் இந்துப் பெண்ணின் சட்ட உரிமைகள்’ என்ற நூலை எழுதினேன்.

ஆங்கிலத்திலிருந்து முக்கியமான சட்ட நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளீர்கள். நீங்களே எழுதுவதற்கும் மொழிபெயர்ப்புக்கும் இடையிலான வேறுபாடுகளை எப்படி உணர்கிறீர்கள்?

குற்றவியல், சாட்சியச் சட்டங்களில் ‘கிளாசிக்’ என்று போற்றப்படும் ரத்தன் லால், தீரஜ் லால் இணைந்தெழுதிய புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று வாத்வா நிறுவனம் விரும்பி என்னை அணுகியது. நான் நேரடியாகத் தமிழில் எழுதுவதைவிட, மொழிபெயர்ப்புக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ரத்தன்லால் எழுதிய ‘சாட்சியச் சட்டம்’ நூலை மொழிபெயர்க்க எனக்கு முழுதாக ஓர் ஆண்டு தேவைப்பட்டது.

சட்ட அறிஞர்களின் சொல்லாட்சியை அதன் சாரமும் அழகும் கெடாமல் தமிழுக்குக் கொண்டுவருவது கடுமையான உழைப்பைக் கோரியது. கீழமை நீதிமன்றங்களில் அந்தப் புத்தகங்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன என்பதில் எனக்கு மனநிறைவு உண்டு. வாத்வா நிறுவனத்தின் பதிப்புரிமைகளை ‘லெக்ஸிஸ் நெக்ஸிஸ்’ பதிப்பகம் வாங்கிவிட்டது. எனவே, அந்தப் புத்தகங்களின் மறு அச்சு தற்போது வெளிவரவில்லை. சட்டத் தமிழில் அக்கறை உள்ளவர்கள் முயற்சியெடுத்தால் தொடர்ந்து அந்தப் புத்தகங்கள் தமிழிலும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

சுற்றுச்சூழல், அறிவுசார் சொத்துரிமை சார்ந்து நீங்கள் எழுதிய புத்தகங்கள்தான் தமிழில் முன்னோடி ஆக்கங்கள். கலைச் சொல்லாக்கத்தில் நீங்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன?

எந்தெந்தச் சட்டங்களைக் குறித்து நான் புத்தகம் எழுதத் தொடங்கினாலும் அது தொடர்பான முக்கிய நூல்கள் அனைத்தையும் வாங்கி ஒன்றுக்கு இரண்டு தடவை வாசித்துவிடுவேன். சட்டங்களில் பயன்படுத்தப்படும் அனைத்துச் சொற்களும் அவற்றின் பொருளும் எனக்குத் தெளிவான பிறகே எழுத ஆரம்பிக்கிறேன். அதனால், எனது கையெழுத்துப் பிரதியில் அடித்தல் திருத்தல்கள் இருக்காது. நான் எழுதிய வேகத்தில் அதை எந்தப் பிழையும் இல்லாமல் கணினியில் தட்டச்சு செய்துவருபவர் ராமசுப்பிரமணியன். அவர் இல்லாவிட்டால், எனது எழுத்துப் பணியின் வேகம் தடைபட்டுப் போயிருக்கும்.

சுற்றுச்சூழல், அறிவுசார் சொத்துரிமை சார்ந்த சட்டச் சொற்களில் பெரும்பாலானவை சமீப காலத்தில் பயன்பாட்டுக்கு வந்தவை. எனவே, புதிய சொற்களையும் சொற்சேர்க்கைகளையும் உருவாக்க வேண்டியிருந்தது. சொல்லாக்கங்களின்போது வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பதைத் தவிர்த்து, அந்தச் சொல்லுக்கான சட்டரீதியான வரையறைக்கே நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தில், ‘ஜியாக்ரபிக்கல் இன்டிகேஷன்’ என்பதற்குப் ‘புவிசார் குறியீடு’ என்ற சொற்சேர்க்கையைப் பயன்படுத்தினேன். அது போன்ற பல சொற்கள் இப்போது பொதுப் பயன்பாட்டுக்கும் வந்துவிட்டதில் மகிழ்ச்சி.

சட்ட நூல்களைத் தமிழில் எழுதுவதற்குச் சட்ட அறிவு மட்டுமின்றித் தமிழ்ப் புலமையும் தேவையல்லவா?

பன்னிரு திருமுறைகளைத் தொடர்ந்து வாசிப்பதிலும் அவற்றை ஓதுவார்களின் குரலில் கேட்பதிலும் மனதைச் செலுத்திவருபவன் நான். திருமறையின் சொல்வளம் சட்ட நூல்களை எழுதுவதற்கும் உதவுகிறது. எழுதும் நூல்களில் சந்திப் பிழைகள் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காகக் கடைசியாக ஒரு தமிழ்ப் பேராசிரியரிடம் படிக்கக் கொடுத்து திருத்தங்களை மேற்கொண்ட பிறகே வெளியீட்டுக்கு அனுப்பிவைக்கிறேன்.

எனது புத்தகங்கள் வெளியிடப்பட்ட மேடைகளில் தமிழறிஞர்களும் தவறாது இருப்பார்கள். அவர்களுடைய யோசனைகளையும் செயலாக்கியிருக்கிறேன். நான் தொகுத்த சட்டச் சொற்களஞ்சியம், சட்டம் தொடர்பாக ஆங்கிலச் சொற்கள், முதுமொழிகள், கோட்பாடுகள், கருத்துருக்கள், மேற்கோள்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. ‘இது வழக்கறிஞர்களுக்குப் பயன்படும்; ஆனால், தமிழ் மட்டுமே அறிந்தவர்களுக்கு தமிழிலிருந்து ஆங்கிலச் சொற்களை அறிந்துகொள்வதற்கான தேவையும் உள்ளது’ என்று நன்னன் சுட்டிக்காட்டினார். அதன் பிறகுதான் ‘சட்டத் தமிழ் அகராதி (தமிழ் - ஆங்கிலம்)’யைத் தொகுத்தேன்.

உங்களது சட்டத் தமிழ்ப் பணிகளுக்கு மாநில அரசிடமிருந்தும் நீதித் துறையிடமிருந்தும் வரவேற்பு எப்படி இருக்கிறது?

எனது இரண்டு புத்தகங்களுக்கு தமிழ்நாடு அரசின் பரிசு கிடைத்துள்ளது. தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சொற்களஞ்சியத்திலும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாழ்வியல் கலைக்களஞ்சியத்திலும் சட்டவியல் தொடர்பான சொற்களைத் தொகுத்துள்ளேன். எனது ‘சுற்றுச்சூழல் சட்டம்’ புத்தகத்தை மாசுக் கட்டுப்பாடு வாரியமே வாங்கி விநியோகித்தது. நான் எழுதிய ‘இந்திய அரசமைப்பு’ புத்தகத்தைத்தான் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாங்கிக்கொடுக்கிறார்கள்.

சமீபத்தில் தமிழில் போட்டித் தேர்வு எழுதி வெற்றிபெற்ற அதிகாரிகள் பலரும் அந்தப் புத்தகத்தைப் படித்தவர்கள்தான். எனது ஒவ்வொரு புத்தகத்துக்கும் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் அணிந்துரை வழங்கிப் பாராட்டியிருக்கிறார்கள். குறிப்பாக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.நடராஜன் என்னை இந்தப் பணியில் உற்சாகப்படுத்தியவர். உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ்.ஜெகதீசன் எனது புத்தக வெளியீட்டு விழா ஒவ்வொன்றுக்கும் காரணமாக இருப்பவர். சட்டத் தமிழில் அக்கறை கொண்ட நீதிபதிகள் அளிக்கும் உற்சாகம்தான் என்னை இந்தப் பணியில் மேலும் ஆர்வத்துடன் இயங்கவைக்கிறது.

மொழிக் கலப்பின்றி சட்டத் தமிழால் தனித்தியங்க முடியுமா?

சாட்சியச் சட்டத்தில் ‘ஆஜர்படுத்துவது’ என்ற சொல் நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இருக்கிறது. அதற்கு மாற்றாக, ‘முன்னிலைப்படுத்துவது’ என்ற சொல்லைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்திருக்கிறோம். ‘ஜுடீஷியல் ஆக்டிவிஸம்’ என்பதை ‘நீதிமுறை செயல்முனைப்பு’ என்று தமிழிலும் சொல்ல முடிகிறது. ‘அரசமைப்புச் சட்டம்’ என்று கூறுவது சரியல்ல, ‘அரசமைப்பு’ என்பதே சரியானது என்பதை வழக்கத்துக்குக் கொண்டுவந்துவிட்டோம்.

ஏற்கெனவே, பயன்பாட்டில் உள்ள நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவது, தவிர்க்க முடியாத இடங்களில் மட்டுமே வடமொழிச் சொற்களைப் பயன்படுத்துவது, புதிய சொற்களைப் பொதுமக்களுக்கும் புரியும்வகையில் உருவாக்குவது என்ற அணுகுமுறை வெற்றியைத் தந்துள்ளது. வழக்கறிஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றிப் பொதுமக்களையும் படிக்க வைப்பதுதான் சட்டத் தமிழ் நூல்களின் வெற்றி.

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarsan.s@hindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x