Published : 20 Jan 2022 06:24 AM
Last Updated : 20 Jan 2022 06:24 AM

இயற்கை வேளாண்மை - ரசாயன வேளாண்மை: தேவை ஒரு சமரசம்!

செ.சரத்

அண்மையில் குஜராத்தில் நடைபெற்ற இயற்கை விவசாயம் தொடர்பான மாநாட்டில் பேசிய பிரதமர், விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாற வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன் ரசாயன ஆய்வகங்களிலிருந்து விவசாயத்தை இயற்கை ஆய்வகத்துக்கு அறிவியல் சார்ந்து கொண்டுசெல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், ரசாயன உரங்கள் பசுமைப் புரட்சியின் வாயிலாக உணவு தானிய உற்பத்தியில் முக்கியப் பங்காற்றியதை நினைவுகூர்ந்த பிரதமர், தற்போது அத்தகைய ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தவிர்த்து, அதற்கு மாற்றாக இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும் என்றார். இயற்கை விவசாயத்தில் மாடுகளின் சாணம், கோமியம் போன்றவற்றை உரமாகவும் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்த முடியும் என்று நிபுணர்கள் கூறியதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளுக்கு ஆதரவாளரான வேளாண் விஞ்ஞானி நார்மன் போர்லாக் எழுதிய கடிதத்துக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி எழுதிய பதில் கடிதத்தை இங்கே நினைவுகூரலாம். “பசுமைப் புரட்சி மூலம் அதிக அளவிலான உரம், போதிய அளவிலான பயிர்ப் பாதுகாப்பு மேற்கொண்ட காரணத்தால் உற்பத்தி பெருகியுள்ளது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

எனினும் ரசாயனப் பொருட்களைக் கண்மூடித்தனமாகப் பயன்படுத்தும்போது, சில பக்கவிளைவுகளும் துன்பங்களும் ஏற்படுகின்றன. அதற்கான சான்றுகளும் அண்மையில் வெளியாகியுள்ளன. மேலும், டீ.டீ.டி. போன்ற பூச்சிக்கொல்லிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது பற்றி போதிய அளவிலான விவாதம் நடைபெற வேண்டும். அதுமட்டுமின்றி பொருளாதாரத் தேவைகள், லாபம் போன்றவற்றுடன் சமூகத்தில் ஏற்படும் தீய விளைவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

“இயற்கை வளங்களை அழித்து, அதன் பகுதிகளைச் சுயநலத்துக்காக ஆக்கிரமித்துவருவது உலகெங்கிலும் வேகமாக நடைபெற்றுவருகிறது. இது பெரும் கவலையை உண்டாக்குகிறது. பொருளாதாரம் துரிதமாக வளர வேண்டும் என்பதற்காகச் சூழலியல் முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது. ரசாயனப் பொருட்களைப் பரிந்துரை செய்த அளவில் பயன்படுத்தி, விளைச்சலைப் பெருக்க வேண்டும். தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை இயற்கைச் சூழல் பாதிப்படையாத வகையில் கட்டுப்படுத்த வேண்டும்” என்று இந்திரா காந்தி முடிக்கிறார். சுற்றுச்சூழல், இயற்கை தொடர்பான இந்திரா காந்தியின் புரிதல் என்பது விசாலமானது. அது ஏதேனும் ஒரு வகையில் பிரதமர் மோடியின் தற்போதைய கூற்றுடன் ஒத்துப்போகிறது.

உண்மையாகவே இயற்கை வேளாண்மை என்று வரும்போது இடுபொருள் செலவு என்பது குறைவாகவே இருக்கும். மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுபாஷ் பாலேக்கர் 1990-ம் ஆண்டு முதல் ‘ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை’ பற்றி விவசாயிகளிடையே கலந்துரையாடல் மேற்கொண்டுவருகிறார். ஒரே ஒரு நாட்டுமாட்டை வைத்து 30ஏக்கர் அளவில் இயற்கை விவசாயம் செய்யலாம் என்றும் ஜீவாமிர்தம், பஞ்சகவ்யம், பீஜாமிர்தம் போன்றவற்றைத் தயாரித்து, இடுபொருள்களாகப் பயன்படுத்தலாம் என்றும், இதன்மூலம் விவசாயிகளின் பெரும் இடுபொருள் செலவு குறையும் என்றும் கூறிவருகிறார். பொருளாதார ஆய்வறிக்கை ஒன்று 1.6 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இயற்கை வேளாண்மையை மேற்கொண்டுவருவதாகவும் குறிப்பாக கர்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்கள் இதில் முனைப்புக் காட்டிவருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஆயினும் ரசாயன வேளாண்மையைக் காட்டிலும் இயற்கை வேளாண்மை மூலம் அனைத்து வகையான பயிர்களையும் சாகுபடி செய்து, அளப்பரிய மகசூல் பெற்றுவிட முடியுமா என்பது கேள்விக்குறிதான். இதற்கிடையில் 17-வது மக்களவையில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது, நிதி அமைச்சர் ‘ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை’யை வளர்த்தெடுக்கும் வகையில் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தேசிய வேளாண் அறிவியல் கழகம், ‘போதிய அளவிலான ஆராய்ச்சியும் தரவுகளும் இன்றி இத்தகைய வேளாண்முறையைப் பிரகனப்படுத்தக் கூடாது’ என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியது.

சரி, ரசாயன வேளாண்மை மூலம் இந்தியாவில் மண்வளம் உள்ளிட்டவற்றுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றால் ஆம் என்றுதான் கூற வேண்டும். கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் 4,500 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் அரசின் முந்திரித் தோட்டங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் எண்டோசல்பான் எனும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டுவந்தது. நாட்கள் செல்லச்செல்ல அங்குள்ள சுற்றுச்சூழல் முற்றிலும் பாதிப்புக்கு உள்ளானது. காற்றில் ஊடுருவிய எண்டோசல்பான் அங்குள்ள நீர்நிலைகள், கால்நடைகள், வனவிலங்குகள் இறுதியாக மனிதர்கள் என இயற்கைச் சூழலையும் அனைத்து உயிரினங்களையும் பெரிய அளவில் பாதித்தது. பல கட்டப் போராட்டங்களுக்குப் பின் எண்டோசல்பான் முற்றிலும் தடைசெய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தருவதற்குக் கேரள அரசு முன்வந்தது.

மற்றொரு புறம், இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் மாம்பழம், திராட்சை, மிளகாய், புளி போன்றவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் வேதிப்பொருள்கள் படிந்திருப்பதாகக் கூறி அமெரிக்கா, வியட்நாம், ஐரோப்பிய நாடுகள், சவுதி அரேபியா, ஜப்பான், பூட்டான் போன்ற நாடுகள் இவற்றை அங்கே இறக்குமதிசெய்வதைத் தடைசெய்யும் நிலையும் உண்டானது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, வேதிப்பொருள்களைப் பரிந்துரை செய்த அளவில் மட்டுமே விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, மற்ற உரங்களைக் காட்டிலும் யூரியா உரத்துக்கு அதிக அளவிலான மானியம் தரப்படுகிறது. அதனால் பல விவசாயிகளும் வரைமுறையின்றி யூரியாவைப் பயன்படுத்திவருகின்றனர். மண்ணில் தேவையான அளவு நுண்ணுயிரிகள் இல்லையென்றால், அங்கு இடப்படும் உரங்களால் எவ்விதப் பயனும் இருக்காது என்பதை விவசாயிகளும் அரசும் உணர வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் உரப் பயன்பாட்டை வகுத்துக்கொள்ள வேண்டும்.

அதேநேரம், ரசாயன வேளாண்மையைப் பற்றி முற்றிலும் எதிர்மறையான பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. பல்வேறு வகையிலான ஆராய்ச்சிகளின் விளைவாகவே உர அளவு, பூச்சிக்கொல்லியின் வீரியம் போன்றவை வேளாண் விஞ்ஞானிகளால் பரிந்துரைக்கப்படுகிறது. இயற்கை எரு, மக்கிய தொழு எரு என்று எதனை மண்ணில் இட்டாலும் பயிர்கள் அவற்றை ரசாயன வடிவில்தான் எடுத்துக்கொள்கின்றன.

வளரும் மக்கள்தொகைக்குப் போதுமான அளவிலான உற்பத்தியை இயற்கை வேளாண்மை மூலம் தர முடியாது. நம் நாட்டில் பெரும்பாலானோர் சிறு-குறு விவசாயிகள்தான். அவர்களின் பிரதான வாழ்வே விவசாயத்தை நம்பித்தான் இருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல் பயிர் ரகம், விதை, உரம், களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி என அனைத்திலும் தொழில்நுட்பம் புகுந்த காரணத்தால்தான் வருமானமும் சொல்லிக் கொள்ளும் வகையில் வளர்ந்தது. எனவே, இங்கு இரண்டில் எது சிறந்தது என்று விவாதிப்பதைக் காட்டிலும், விவேகத்துடன் ரசாயனம் கலந்த இயற்கை வேளாண்மையைக் கடைப்பிடிப்பதே சாலச் சிறந்ததாகும். அதுவே காலத்தின் தேவையும் கூட!

- செ.சரத், வேளாண் ஆராய்ச்சியாளர், ‘ஏர்நாடி’ முதலான நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: saraths1995@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x