Published : 19 Jan 2022 06:35 AM
Last Updated : 19 Jan 2022 06:35 AM

ஆயுள் காப்பீடு எனும் விதைநெல்லை விழுங்கலாமா?

சே.செல்வராஜ்

ஜனவரி 19… ஆயுள் காப்பீட்டுத் துறை நாட்டுடைமையாக்கப்பட்ட நாள். இந்திய விடுதலைக்குப் பின்னர் நடைபெற்ற பொருளாதார மாற்றங்களில் முக்கியமான ஒன்று அந்த நிகழ்வு. 19.01.1956 அன்று ஆயுள் காப்பீட்டுத் துறை நாட்டுடைமையானபோது அன்றைய நிதியமைச்சர் தேஷ்முக் தெரிவித்த கருத்து இன்றைக்கும் பொருந்தக் கூடியது: “அரசு நிறுவனங்கள் திறமையற்றவை என சிலர் மோசமாகச் சித்தரிக்கிறார்கள்.

ஆனால், தனியார் நிறுவனங்கள் மிகத் திறமையாகச் செயல்படுவதாக உண்மைக்குப் புறம்பாகக் கூறுகிறார்கள். முறையாக நடத்தப்பட்டால், காப்பீட்டு வணிகம் நஷ்டமே ஏற்படாத வணிகமாகும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் 25 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் கலைக்கப்பட்டுள்ளன. மேலும், 25 நிறுவனங்கள் தங்கள் சொத்துகளை இழந்துள்ளன. பாலிசிதாரர்களுக்கு நஷ்டம் ஏற்படும் வகையில் அவர்களின் வணிகம் பிற நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. பாலிசிதாரர்களின் நலன்களைப் பற்றிக் கவலைப்படாமல், அந்த நிறுவனங்களின் மூலதனத் தேவைக்கு, லாப வெறிக்கு அவர்களின் சேமிப்பு பயன்படுத்தப்படும் நிலை அதிகமாக உள்ளது.”

245 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு, அதே ஆண்டு செப்டம்பர் 1 அன்று எல்.ஐ.சி. பிறந்தது. அரசு நிறுவனங்கள் மீது தேஷ்முக் வைத்த நம்பிக்கையை எல்.ஐ.சி. நிறுவனம் எள்ளளவுகூடச் சிதைக்காமல் சிறந்த நிறுவனமாகச் செயல்பட்டுவருகிறது.

மீண்டும் தனியார்

மல்ஹோத்ரா குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகு 1999-ல் மீண்டும் இந்தத் துறையில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்க வேண்டும் என்கிற அக்குழுவின் பரிந்துரையை மட்டும் நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பின் காரணமாக அரசால் நடைமுறைப்படுத்த இயலவில்லை. சமீப காலங்களில் எல்.ஐ.சி. பங்கு விற்பனை குறித்த செய்திகள் அதிகமாக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

எல்.ஐ.சி. பங்கு விற்பனை நடைபெற்றால் சுதந்திர இந்தியாவில் நடந்தேறுகிற மிகப் பெரிய பங்கு விற்பனை என்பதும் அதற்கு ஒரு காரணம். அந்நிய நிறுவனங்களை இந்தப் பங்கு விற்பனையில் பங்கேற்க வைக்கவும் திட்டமிடப்பட்டுவருகிறது. எல்.ஐ.சி.யின் பாலிசிதாரர்கள் பங்கு விற்பனையில் பங்கேற்பதற்கான விளம்பரங்களும் செய்யப்பட்டுவருகின்றன. ஆனால், எதற்காக எல்.ஐ.சி. பங்கு விற்பனை என்ற கேள்விக்கு அரசால் விடை அளிக்க முடியவில்லை. என்ன நியாயம்?

நாட்டுடைமையாக்கலுக்குப் பிறகு, அரசுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி. காப்பீட்டுப் பரவலாக்கலை உறுதிசெய்துள்ளது. ரூ.10,000-க்கும் குறைவாக ஊதியம் பெறும் 90% குடும்பங்கள் உள்ள ஒரு நாட்டில், அனைவருக்குமான உலகளாவிய சமூகப் பாதுகாப்பு ஒரு கனவாக உள்ள ஒரு நாட்டில், கிராமப்புற – நகர்ப்புற, ஏழை எளிய நடுத்தர மக்கள் உள்பட 40 கோடி பேருக்கு ஆயுள் காப்பீட்டை எல்.ஐ.சி. உறுதிசெய்துள்ளது. உரிமப் பட்டுவாடாவிலும் எல்.ஐ.சி.யின் பாலிசி தளம் பிரம்மாண்டமானதாக இருந்தாலும், இறப்பு உரிமம் எனும் போது 97% வரை எட்டுவது வியக்க வைக்கும் சாதனையே.

பங்கு விற்பனை நடைபெற்றால் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிசெய்ய முடியும் என்கிற வாதம் முன்வைக்கப்படுகிறது. எல்.ஐ.சி.யின் கணக்குகள் நாடாளுமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டவை. இவை ஒவ்வொரு காலாண்டிலும் பொதுத்தளத்தில் முன்வைக்கப்படுகின்றன. அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊழலற்ற ஒரு நிறுவனமாகவும் உள்ளது. மக்களுக்கும் எல்.ஐ.சி. மீது உள்ள நம்பிக்கையின் காரணமாகவே பாலிசிகளின் அடிப்படையில் 74.58% சந்தைப் பங்கை அது கொண்டுள்ளது. இதைவிட வேறு என்ன வெளிப்படைத் தன்மை வேண்டும்.

பங்கு விற்பனை மூலமாக மக்களின் கைகளுக்கு நிறுவனம் செல்கிறது என்பது கற்பனையான வாதம். இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் வெறும் 5%-க்கும் குறைவானவர்களே பங்குச் சந்தையில் சில்லறை முதலீட்டாளர்கள். இவர்கள் பங்குச் சந்தையில் ஆற்றுகிற பங்கு மிக மிகக் குறைவு. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டால் அதற்குத் தேவையான நிதியையும் பங்குச்சந்தையிலேயே திரட்டிக்கொள்ளலாம் என்பது மற்ற நிறுவனங்களுக்குக்கூடப் பொருந்தலாம். ஆனால், எல்.ஐ.சி.க்கு நிதித் திரட்டலுக்கு எந்தத் தேவையும் இல்லை. மாறாக, அரசின் முதலீட்டுக்கு இன்று வரை உபரியிலிருந்து வழங்கப்பட்ட ஈவுத் தொகை ரூ.28,500 கோடி. எல்.ஐ.சி.யால் உருவாக்கப்படுகிற உபரித் தொகை 95% பாலிசிதாரர்களுக்கும், 5% அரசுக்கும் எனப் பிரித்துக் கொடுக்கப்பட்டுவருகிறது.

ரூ.31 லட்சம் கோடிக்கும் மேல் அரசின் பத்திரங்கள், அரசின் உள்கட்டமைப்பு என எல்.ஐ.சி முதலீடு செய்துள்ளது. எல்.ஐ.சிக்கு ரூ.38 லட்சம் கோடிக்கு சொத்து உள்ளது. ரூ.34 லட்சம் கோடி, வாழ்வு நிதியாக வைத்துள்ளது. முதலீட்டாளர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அரசு உத்தரவாதத்தை நிலநடுக்கம், வெள்ளம், கரோனா பெருந்தொற்று உட்பட எந்தக் காலத்திலும் பயன்படுத்த வேண்டிய தேவையில்லாமல், தன்னுடைய சொந்த நிதியிலேயே உரிமங்களைப் பட்டுவாடா செய்துகொண்டிருக்கும் ஒரு நிறுவனத்துக்குப் பங்குசந்தையில் நிதி திரட்ட வேண்டிய தேவையே இல்லை.

நம்பிக்கையே மூலதனம்

உலக அளவில் காப்பீட்டுச் சந்தையில் முதல் 10 பெரிய சந்தைகளுள் ஒன்றாக இந்தியாவும் உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 74% வரை உயர்த்தப்பட்டதன் மூலம், இந்திய உள்நாட்டுச் சேமிப்பைப் பெரிய அளவில் கைப்பற்றவும், லாபத்தை அதிகரிக்கவும் ஏதுவாக நிர்வாகம் அந்நிய நிறுவனங்களின் கைகளுக்குப் போவதற்கு அனுமதித்துள்ளனர். ஒவ்வொரு பாலிசிதாரரும் காப்பீடு செய்கிறபோது அந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கையிலேயே செய்கின்றனர். ஆனால், ஆஸ்திரேலியாவின் ஏ.எம்.பி, அமெரிக்காவின் ஏ.ஐ.ஜி போன்ற அந்நியக் காப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறின. அவர்கள் மீது மக்கள் எப்படி நம்பிக்கை வைக்க முடியும்?

தற்போதுகூட எச்.டி.எப்.சி. லைஃப் நிறுவனம் எக்ஸைட் லைஃப் நிறுவனத்தையும், ஐ.சி.ஐ.சி.ஐ. லம்பார்ட் நிறுவனம் பாரதி ஆக்சா பொதுக் காப்பீட்டு நிறுவனத்தையும் கைப்பற்றியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதுபோன்ற விழுங்கல் விளையாட்டுகள், போட்டி என்ற பிரமையை உடைத்துள்ளன. ‘குழு ஏகபோகம்’ (Oligopoly) நோக்கிக் காப்பீட்டுத் துறையைத் தள்ளுவதாக உள்ளது. மாறிய உலகில் மாறாத வாக்குறுதிகளுடன் திறமையாக, பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக எல்.ஐ.சி செயல்படுகிறது.

அரசுக்கு என்ன நோக்கம்?

சிறு அளவிலான பங்குகளை விற்பதால் எந்த மாற்றமும் நிகழாது என அரசு கூறுகிறது. ஆனால், பங்கு விற்பனை என்பது தனியார்மயம் நோக்கிய முதற்படி என்பதில் ஜயமில்லை. வங்கி, பொதுக் காப்பீட்டுத் துறை குறித்த அண்மைய தனியார்மய அறிவிப்புகள் இதை உறுதி செய்கின்றன. அரசுக்கு நிதித் தேவை நிறைய இருக்கிறது. அதற்குத் தீர்வாக ரூ 1,75,000 கோடிக்குப் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதென்று கடந்த நிதிநிலை அறிக்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் எல்.ஐ.சியின் 10% பங்குகளை விற்பதன் மூலம் ரூ.1,00,000 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. வேறு வழி இல்லாமல் இல்லை. ஆனால், அதற்கான அரசியல் உறுதி அரசிடம் இல்லை.

பொதுத் துறை நிறுவனங்கள் விதைநெல்லைப் போன்றவை. விதைநெல் விளைச்சலைப் பெருக்கவே பயன்பட வேண்டும். அதை விற்றால் அப்போதைய பசி தீருமே தவிர, நிரந்தரப் பசிக்குத் தீர்வாகாது. விதைநெல்லான எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனையை அரசு விலக்கிக்கொண்டு, அதன் விளைச்சல் முழுவதும் இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளாதாரத்துக்கும் தொடர்ந்து பயன்பட வழிவகுக்க வேண்டும்.

- சே.செல்வராஜ், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், தஞ்சைக் கோட்டம். தொடர்புக்கு: selvaraj_sethu@yahoo.com

ஜனவரி 19: ஆயுள் காப்பீட்டுத் துறை நாட்டுடைமையான நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x