

முதுமையில் வறுமை கொடியது, தனிமை கொடியது, பல நோய்கள் கொடியவை என்பது தெரிந்ததே. ஆனால், இவை எல்லாவற்றையும்விட மிகவும் கொடியது என்ன தெரியுமா? அதுதான் முதுமையில் இயலாமை. அதாவது, வயதான காலத்தில் தனது தேவைகளுக்காக மற்றவர்களை சார்ந்திருப்பது.
உதாரணம்: குளிப்பதற்கு, உடை உடுத்துவதற்கு, சாப்பிடுவதற்கு, நடப்பதற்கு இப்படித் தன்னுடைய ஒவ்வொரு தேவைக்கும் மற்றவர்களைச் சார்ந்திருப்பதுதான் மிகவும் கொடுமையானது. தனக்குத் தேவைப்படும்போதெல்லாம் உதவ ஒருவர் முன்வர வேண்டும். அவர் மனம் கோணாமல் இருக்க வேண்டும். இதற்கு உற்ற துணை அல்லது உறவினர்களின் உதவி வேண்டும். தனக்கு உதவ ஆட்களை வைத்துக்கொள்வதென்றால், அதற்கேற்ற நிதி வசதி வேண்டும். இத்தனையும் அமைவது என்றால், அது சற்றுச் சிரமம்தான். ஆகவே, இந்த இயலாமையைத் தடுத்து, தன் சொந்தக் காலிலேயே ஒருவர் நிற்க ஏதாவது வழிகள் உண்டா?
பக்கவாதம், உதறுவாதம் என்கிற பார்க்கின்சன்ஸ் நோய், மூட்டுவலி, உடற்பருமன், சத்துணவுக் குறைவு, புற்றுநோய், பார்வைக் குறைவு, காது கேளாமை, ஆஸ்துமா, இதய பலவீனத்தால் மூச்சு விடுவதில் சிரமம், உடல் உறுப்புகளை இழத்தல் போன்ற உடல் நோய்களால் இயலாமை ஏற்படும். மனச்சோர்வு, மறதி நோய் எனும் டிமென்சியா போன்ற மனநோய்களாலும் இயலாமை ஏற்படும்.
எந்த அளவுக்கு உதவி தேவைப்படும்?
இது அவரவருடைய இயலாமையைப் பொறுத்தே இருக்கும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, பழைய நிலைக்குத் திரும்பிய ஒருவருக்கு, நடக்கும்போது மட்டும் ஒருவர் துணை வேண்டும். அதே சமயம், உதறுவாதத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு, அவருடைய எல்லா தேவைகளையும் செய்ய ஒருவர் வேண்டும். இதைவிடச் சிரமம், மறதி நோயால் பாதிக்கப்பட்டவரின் நிலை. அவரைச் சிறு குழந்தையைப் பார்த்துக்கொள்வதுபோல எல்லா நேரங்களிலும் கூடவே இருந்து, அன்புடன் பராமரிக்க ஒருவர் தேவை. மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குப் பேச்சுக்குத் துணையாக ஒருவர் இருந்தாலே போதும்.
உறவினர்களின் நிலை
தொடர்ந்து படுத்துக் கிடக்கும் முதியவர்களைக் கவனித்துக்கொள்ளும் உறவினர்களின் நிலையைச் சற்று பார்ப்போம். முதலில் பெரியவர் விரைவில் குணம் அடைந்தால் போதும் என்று விழுந்து விழுந்து கவனிப்பார்கள். மருத்துவரையும் இயன்முறை சிகிச்சை நிபுணரையும் வீட்டுக்கே வரவழைத்து சிகிச்சை நடைபெறும். பெரியவரின் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால், கவனிப்பு சிறிது சிறிதாகக் குறையும்.
மருத்துவரிடம் தொலைபேசியிலேயே ஆலோசனை பெறப்படும். மருந்துகளின் விலை அதிகம் இருப்பதால், பல மருந்துகள் குறைக்கப்படும். தொடர்ந்து பெரியவரைக் கவனித்துவரும் உறவினர்கள் தூக்கமின்மையால் உடல்நலம் பாதிக்கப்படுவார்கள். கணவன், மனைவி உறவும் சில நேரங்களில் பாதிக்கப்படக்கூடும். "பெரியவர் ஏன் இப்படிப் படுத்து அவதிப்படுகிறார். இதற்கு ஒரேயடியாகப் போய்விட்டாலே போதும்!” என்று கூறவும் செய்வார்கள். என்றாவது ஒருநாள் இச்சொல் அவர் காதில் படும்போது, அவர் படும் மன வேதனையைச் சொல்லிமாளாது.
முதுமையில் இயலாமையின்றி வாழக் கீழ்க்கண்ட வழிமுறைகளை ஐம்பது வயதிலிருந்தே தவறாமல் கடைப்பிடித்துவர வேண்டும். வயதான காலத்தில் இயலாமை ஏற்படப் பல காரணங்கள் இருந்தாலும் அவற்றுள் முக்கியமானவை நோய்களே. எடுத்துக்காட்டாக: வயதான காலத்தில் பார்வை குறைவதை முதுமையின் விளைவு என்று எண்ணி, ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் செல்வதில்லை. கண்ணில் ஏற்படும் குளுக்கோமா மற்றும் விழித்திரை பாதிப்பால் ஏற்படும் நோய்களால் பார்வை குறையும் என்பது தெரிவதில்லை. பார்வை குறைந்து முற்றிய நிலையில், அதற்குத் தக்க சிகிச்சை பெற்றும் பயனளிக்காத நிலையில், மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதேபோல்தான் காதுகேளாமையும்!
முதுமையில் ஏற்படும் இயலாமைக்கு நீரிழிவு நோயின் பங்கு மிகவும் உண்டு. வயதான காலத்தில் இந்நோய் எந்த அறிகுறியும் இல்லாமல் இருளில் ஒளிந்திருக்கும் திருடனைப் போல் மறைந்திருக்கும். விழித்திரை பாதிப்பு ஏற்பட்டு பார்வை குறையலாம் அல்லது பாதங்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு, காலில் ஆறாத புண்கள் ஏற்பட்டுக் கால்களை இழக்க நேரிடலாம். ஆகையால், ஆண்டுக்கு ஒரு முறையாவது நீரிழிவு நோய் உள்ளவர்கள் கண் பாதுகாப்புக்கும், பாதப் பாதுகாப்புக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து, மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, நோயைக் கட்டுக்குள் வைத்திருந்தால் இந்நோயால் ஏற்படும் இயலாமை அகன்று நலமாய் வாழலாம்.
உயர் ரத்த அழுத்தம் சிலருக்கு எவ்வித அறிகுறியும் இல்லாமலேயே மறைந்திருக்கும். வேறு ஏதாவது தொல்லைக்கு (எடுத்துக்காட்டாக, மூட்டுவலி) மருத்துவரிடம் செல்லும்போது உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்படும். மருத்துவரின் ஆலோசனைப்படி அதற்குத் தொடர்ந்து தக்க சிகிச்சை எடுத்து வர வேண்டும். உயர் ரத்த அழுத்தம் திடீரென்று அதிகரிக்கும்போது பக்கவாதம் ஏற்பட்டு ஒருவரைப் படுக்கையில் வீழ்த்திவிடும். பக்கவாதம் ஏற்பட்டு சுமார் 3 மணி நேரத்திற்குள்ளேயே தக்க சிகிச்சை எடுத்தால் நல்ல பயன் கிடைக்கும். காலம் தாழ்த்தினால் பக்கவாதத்தால் ஏற்படும் இயலாமையினால் ஆயுள் முழுவதும் காலத்தைக் கழிக்க வேண்டியிருக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும், தொடர்ந்து புகைபிடிப்பவர்களுக்கும் பக்கவாதம் வர வாய்ப்பு அதிகம் உள்ளது.
உதறுவாதத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அதற்குத் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும். இல்லையேல், சரியாகப் பேசவும் நடக்கவும் முடியாத நிலை ஏற்படலாம். ஆரம்ப நிலையில் இந்நோயின் தொல்லைகள் முதுமையின் விளைவு போலவே இருக்கும். சந்தேகம் இருப்பின் துறை சார்ந்த சிறப்பு மருத்துவரை நாடி, தக்க சிகிச்சை எடுத்துக்கொண்டு இந்நோயினால் ஏற்படக்கூடிய இயலாமைக்கு குட்பை கூறலாமே!
மூட்டுவலி, முக்கியமாக முழங்கால் மற்றும் இடுப்பு வலிக்கு உடனே தக்க சிகிச்சை எடுத்துக்கொண்டால், வலியின்றி வாழலாம். உரிய சிகிச்சை பெறாமல் காலம் தாழ்த்திவிட்டால், மூட்டுவலி அதிகமாகி நடை குறைந்து படுக்கையில் கிடக்க வேண்டிய நிலை உண்டாகும். இதனால் நோயாளிக்கு மட்டுமல்ல, அவர்களைக் கவனித்துக்கொள்ளும் உறவினர்களுக்கும் சிரமங்கள் ஏற்படலாம்.
ஆண்டுக்கு ஒரு முறையாவது மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டு, நோய் இருப்பின் அதற்கு உரிய தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் பல நோய்களின் விளைவாக ஏற்படும் இயலாமை இன்றி சொந்தக்காலில் நிற்கலாம். முதுமைப் பருவத்தில் வரும் பல நோய்களை விரட்டி இயலாமை இன்றி வாழ உடற்பயிற்சி மிகவும் உதவும். நாள்தோறும் மூன்றிலிருந்து ஐந்து கி.மீ. தூரம் நடப்பது நல்லது; அல்லது முப்பதிலிருந்து நாற்பத்தைந்து நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மனச்சோர்வு, மறதி நோய் போன்றவற்றால் ஏற்படும் இயலாமையைத் தினமும் செய்யும் தியானம் மற்றும் பிராணாயாமம் மூலம் தவிர்க்க முடியும்.
நிதி வசதியின்மை இயலாமைக்கு ஒரு முக்கியக் காரணமாகிறது. வறுமையினால் தன் அன்றாடத் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள, இளைஞர்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. முதுமையில் தனித்து நிற்கப் பணம் மிகவும் அவசியம். இதற்கு நடுத்தர வயதிலிருந்தே முதுமைக் காலத்துக்காக ஒரு கட்டாயச் சேமிப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். வறுமையால் ஏற்படும் இயலாமையை இதன் மூலம் ஓரளவுக்குத் தடுக்க முடியும்.
வயதாகிவிட்டது, இனி தொல்லைகள் வருவது இயல்புதான் என்று எண்ண வேண்டாம். பல தொல்லைகளைத் தவிர்த்து இயலாமை இன்றி நலமாய் வாழ முடியும். இதற்குரிய முயற்சிகளை நடுத்தர வயதிலிருந்தே தொடங்க வேண்டும். கால முறைப்படி மருத்துவப் பரிசோதனை, தினமும் செய்யும் உடற்பயிற்சி, தடுப்பூசி போட்டுக்கொள்வது, தினமும் செய்யும் தியானம், பிராணாயாமம், இத்தோடு தேவையான நிதிவசதியை வைத்துக்கொண்டால், முதுமையில் ஏற்படும் இயலாமையைக் கண்டிப்பாக விரட்ட முடியும். பிறர் உதவியின்றி சொந்தக்காலில் நிற்க முடியும்!
- வி.எஸ்.நடராஜன், முதியோர் நல மருத்துவர், பத்மஸ்ரீ விருது பெற்றவர். தொடர்புக்கு: dr_v_s_natarajan@yahoo.com