Published : 01 Apr 2016 08:23 AM
Last Updated : 01 Apr 2016 08:23 AM

ஃபுளோரிடாவிலிருந்து ஹவானாவுக்கு..

பிடல் காஸ்ட்ரோவுக்கு முடிவுரை எழுத முயன்ற சக்தி, இப்போது நட்பு மூலமாக புதிய முன்னுரையை எழுத ஆரம்பிக்கும்விதமாக மாறியிருப்பதை அமெரிக்க அதிபரின் கியூபா பயணம் தெரிவிக்கிறது.

எண்ணங்களின் பிரதிபலிப்புகள் என்று ஒரு கட்டுரையை 2009-ல் பிடல் வெளியிட்டார். “கம்யூனிஸ்ட் கட்சியோ அரசோ எடுக்கும் முடிவுகளில் நான் தலையிடப்போவதில்லை” என்று அதில் குறிப்பிட்டார். அதில் ஒபாமாவுக்குப் பெரும் புகழாரத்தையும் பிடல் காஸ்ட்ரோ சூட்டியிருந்தார். கியூப - அமெரிக்க உறவில் இது ஒரு தொடக்கப்புள்ளி என்றாலும், பிடல் காஸ்ட்ரோவின் இந்த நகர்வை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், பிடல் காஸ்ட்ரோவைக் கொல்ல அமெரிக்க உளவுத் துறையால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இன்றைக்கும் உலகத்தால் மறக்கப்பட்ட கதைகள் அல்ல.

கொலை முயற்சிகள்

1959 புரட்சிக்குப் பின் ஆட்சிக்கு வந்தார் காஸ்ட்ரோ. அப்போது கியூபா உளவுத் துறையின் தலைமைப்பொறுப்பில் இருந்தவர் எஸ்கலன்டே. 1959 முதல் 2000 வரை காஸ்ட்ரோவைக் கொல்ல 634 முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவற்றில் 168 முயற்சிகள் வெற்றி பெற்றிருக்க வாய்ப்புள்ளவை என்றும் அவர் எழுதிய ‘எக்ஸிகியூட்டிவ் ஆக்‌ஷன்’எனும் புத்தகத்தில் கூறுகிறார்.

காஸ்ட்ரோவைக் கொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று, அவர் குடிக்கும் சுருட்டில் வெடி மருந்தை வைத்து அவரது முகத்தைச் சிதறவைப்பது. 1985-ல் காஸ்ட்ரோ சுருட்டுப் பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டார். ஒரு முறை பேனாவில் நச்சுத்தன்மை வாய்ந்த ஹைபோடெர்மிக் ஊசி செருகப்பட்டிருந்தது. ஒரு முறை அவர் கடலில் நீந்தும்போது, அதிகமான கரீபியன் மெல்லுடலிகளைப் பயன்படுத்தி அவரைக் கொல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஒரு முறை கடலுக்கு அடியில் ஒரு பெரிய சங்கு ஓட்டில் வெடிகுண்டைப் பொருத்தி வெடிக்கச் செய்யும் முயற்சி நடந்திருக்கிறது. ஒரு முறை அவருடைய முன்னாள் காதலியான மரிட்டா லோரன்ஸை வைத்து அவரைத் தீர்த்துக்கட்டும் முயற்சி நடந்திருக்கிறது. காஸ்ட்ரோவைக் கொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பான திரைப்படத்தை இயக்கிய பீட்டர் மூர் அதனைப் பற்றிக் கூறுவதைப் பார்ப்போம். “அமெரிக்க உளவுத் துறையால் அந்தப் பெண்ணிடம் விஷ மாத்திரைகள் தரப்பட்டன. அவள் அவற்றைக் குளிர்ந்த ஜாடி ஒன்றில் வைத்துக்கொண்டாள். குளிர்ச்சியின் காரணமாக அந்த மாத்திரைகள் கரைந்துவிடவே, காஸ்ட்ரோவின் வாயில் குளிர்ந்த கிரீமை வைக்க முயற்சித்து அந்த முயற்சியையும் அவள் கைவிட்டாள். அவள் தன்னைக் கொல்ல வந்திருக்கிறாள் என்பதை உணர்ந்த காஸ்ட்ரோ, தன்னைக் கொல்வதற்காக அவளிடம் தன்னுடைய கைத்துப்பாக்கியைத் தருகிறார். அப்போது அவள், ‘என்னால் முடியாது பிடல்’ என்று கூறிவிட்டாள்” என்கிறார் அவர். இவையெல்லாம் தவிர, மாஃபியா கும்பல்கள் மூலம் துப்பாக்கிச்சூடு, வெடிகுண்டு வீச்சு மூலம் அவரைக் கொல்லும் முயற்சிகள் காலமெல்லாம் நடந்திருக்கின்றன.

இந்த முயற்சிகள் காஸ்ட்ரோவின் வாழ்க்கை முறையையே மாற்றின. அதிபர் பதவிப் பொறுப்பேற்ற ஆரம்பக் காலங்களில் அவர் தனியாகத் தெருவில் நடந்துசெல்வதை வழக்கமாகக்கொண்டிருந்தார். ஆனால், நாளடைவில் அப்பழக்கத்தைக் கைவிட்டார். பின்னர், அவரைப் போன்ற மாதிரிகள் பயன்படுத்தப்பட்டனர். பின்னர், அவர் கியூபாவில் 20 வேறுபட்ட முகவரிகளில் தங்க ஆரம்பித்தார்.

உண்மையில் பார்க்கப்போனால், அமெரிக்கா தன் ஜென்ம விரோதியான காஸ்ட்ரோவைக் கொல்லும் முயற்சியைக் கைவிட்டுவிட்டாலும்கூட கியூபா பாதுகாவலர்கள் மிகவும் எச்சரிக்கையாகவே நடந்துகொள்கிறார்கள்.

கைகுலுக்கிய நட்பு

2013 டிசம்பரில் நெல்சன் மண்டேலாவின் இறுதிச்சடங்கின்போது கியூப அதிபர் ரால் காஸ்ட்ரோவும் ஒபாமாவும் கைகுலுக்கிக்கொண்டனர். நெடுநாள் பகையை மறந்து இரு நாடுகளும் நட்பு பேணுமா என்ற வினாவை எழுப்பியது இந்தக் கைகுலுக்கல்.

டிசம்பர் 2014-ல் ஒபாமாவும் ரால் காஸ்ட்ரோவும் 45 நிமிடங்கள் தொலைபேசியில் முதன்முதலாகப் பேசினர். இரு நாடுகளின் நட்புப் பாராட்டலின் தொடக்கமாக அமைந்தது. ஆகஸ்ட் 2015-ல் அமெரிக்க, கியூப தூதரகங்கள் 54 ஆண்டுகளுக்குப் பின்னர் திறக்கப்பட்டன. மார்ச் 2016-ல் 88 ஆண்டுகள் கழித்து, கியூபாவுக்கு வரும் அமெரிக்க அதிபர் என்ற பெருமையைப் பெற்றார் ஒபாமா. அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே அதிபர் ஒபாமாவின் கியூபா பயணம் அமைந்தது. கியூபா மக்களுடனான தனது சந்திப்பை வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று கூறி பெருமைப்பட்டுக்கொண்டார். “கியூபாவில் ஒரு மாற்றம் நிகழப்போகிறது. ரால் காஸ்ட்ரோ அதனைப் புரிந்துகொள்வார் என நினைக்கிறேன்” என்றார் ஒபாமா. கியூபாவுடனான உறவைப் புதுப்பித்துக்கொள்ளும் வகையில் கடந்த ஓராண்டில் பல திட்டங்களை மேற்கொண்டார் ஒபாமா. அவற்றுள் பயணத் தடைகளில் சில மாற்றங்கள், அமெரிக்க வங்கிகளின் வழியான செயல்பாட்டில் தடை நீக்கம், அமெரிக்க வங்கிகளில் கியூபா நாட்டவர் வங்கிக் கணக்குத் தொடங்க அனுமதி, நேரடி கடிதப் போக்குவரத்து, வணிக நோக்கிலான விமானங்கள் செயல்பாடு, அமெரிக்கச் சிறைகளில் உள்ள கியூபா கைதிகள் விடுதலை. அவ்வாறே கியூபாவிலிருந்த அமெரிக்கர் அலன் கிராஸ் விடுதலை, அமெரிக்கா வைத்துள்ள தீவிரவாத ஆதரவாளர்கள் பட்டியலிலிருந்து கியூபா நீக்கம் உள்ளிட்டவை அடங்கும்.

புதிர் கடிதம்

அமெரிக்க அதிபரின் கியூபா பயணமும், அவருக்குக் கிடைத்த வரவேற்பும், உறவை மேற்கொள்ள இரு நாடுகளும் மேற்கொள்ளும் முயற்சிகளும் சாதாரண நிகழ்வா, சாதனையா என்று விவாதிக்கும் இந்தச் சூழலில், பிடல் காஸ்ட்ரோ ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் ‘அமெரிக்க அதிபரின் பேச்சுகள் தேனில் தோய்க்கப்பட்டவை; அமெரிக்க அதிபரிடமிருந்து இவ்வாறான வார்த்தைகளைக் கேட்கும்போதே மாரடைப்பு வந்துவிடும்” என்று கூறியுள்ளார். காஸ்ட்ரோ தன் கடிதத்தில், 1959-ல் கியூபா விடுதலையானது தொடங்கி இன்றைய நிலை வரை விவாதிக்கிறார். ஒபாமா கியூப அரசியலின் கோட்பாடுகளைப் பற்றிய தம் எண்ணங்களைக் கூறுகிறாரே தவிர, அதனைப் பற்றி விரிவாக விவாதிக்கவில்லை என்கிறார். ஒபாமாவின் நல்லெண்ணத்தை பிடல் காஸ்ட்ரோ பாராட்டவே செய்கிறார். ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால், ஒபாமாவின் நடத்தை சரியாக உள்ளது என்கிறார். அதே நேரத்தில், தன்னலம் இல்லாத கியூப நாட்டு மக்கள் தங்கள் நாட்டின் பெருமைகளையும், கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டோடு இயைந்த அதன் வளத்தையும் விட்டுக்கொடுப்பார்கள் என்ற மாயையில் யாரும் இருந்துவிடக் கூடாது என்றும் கூறுகிறார்.

“ஃபுளோரிடாவிலிருந்து ஹவானா 90 மைல்கள்தான். ஆனால், நாம் இந்த தூரத்தைக் கடப்பதற்கு அதிக தூரம் பயணிக்க வேண்டியிருந்தது” என்றார் ஒபாமா. உண்மைதான். ஆனால், அமெரிக்கா - கியூபா உறவுப் பயணத்தில், அமெரிக்கர்கள் எடுத்துவைக்க வேண்டிய அடிகளே அதிகம் என்றே தோன்றுகிறது!

- பா.ஜம்புலிங்கம்,

முனைவர், தமிழ்ப் பல்கலைக்கழகக் கண்காணிப்பாளர்.

தொடர்புக்கு: drbjambulingam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x