Published : 07 Jan 2022 07:23 AM
Last Updated : 07 Jan 2022 07:23 AM

விவாத களம்: சிறாருக்குத் தடுப்பூசி தேவையா?

தடுப்பூசியே தீர்வு

கரோனா வைரஸ் தொற்றானது சிறாரைக் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக வீடுகளுக்குள் முடக்கிப்போட்டிருக்கும் சூழலில் அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது அத்தியாவசியமானது என்று வலியுறுத்துகிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் உடல்நல நிபுணரும் அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை நிபுணருமான மருத்துவர் கே.தனசேகர்:

“என்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த அழைத்துச்செல்லவிருக்கிறேன். ஒருவருக்கு 15 வயது இன்னொருவருக்கு 17 வயது. வீட்டிலிருந்து தொடங்கி உலகத்துக்கு இந்தச் செய்தியை சொல்ல விரும்புகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்று குழந்தைகளை மனதளவிலும் உடல் அளவிலும் எந்த அளவு பாதித்திருக்கிறது என்பது உடனிருந்து பார்த்தவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் மட்டுமே தெரியும். கல்வி கற்பதில் உள்ள சிக்கல்கள் தொடங்கி தூக்கப் பிரச்சினை, உணவுக் கோளாறுகள், அதீத உடல் பருமன் உள்ளிட்ட பல பிரச்சினைகளை சிறார் எதிர்கொண்டிருக்கின்றனர்.

வீட்டிலேயே இருந்து கல்வி உட்பட அனைத்தையும் இணையவழியில் கற்கத் தொடங்கியிருப்பதால் சமூகத்துடன் பழகுவதற்கான அவர்களின் திறன்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இப்போதைக்கு இதிலிருந்தெல்லாம் வெளியேறுவதற்கான ஒரே வழி தடுப்பூசிதான். தடுப்பூசிகளுக்கு எதிரான கருத்துகள் எப்போதும் இருந்துவந்துள்ளன. போலியோ மருந்து செலுத்திக்கொள்ளத் தவறியதால் போலியோ நோயுடன் வாழ்ந்துவருகிறவர்களை நாம் இன்றைக்கும் பார்க்கிறோம்” என்கிறார்.

பொதுவாகத் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை ஏற்பவர்கள் சிறாருக்கு கரோனா தடுப்பூசி தேவையில்லை என்பதற்குச் சொல்லும் காரணங்களையும் தனசேகர் மறுக்கிறார். “குழந்தைகளுக்கு உடல் அளவில் கோவிட் நோயின் தாக்கமானது அதிகரித்துள்ளது. 2021 டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவிலிருந்து வந்த தரவுகளின்படி குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது அதிகரித்திருப்பதாகக் கூறுகின்றனர்.

கே.தனசேகர்

குறிப்பாக இணைநோய்கள் உள்ள குழந்தைகள் நீண்ட காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியுள்ளது. உலகின் மிகப் பெரிய குழந்தைகள் மருத்துவமனையான டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவமனையில் டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத் தரவுகளின்படி குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது 66% அதிகரித்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் பக்க விளைவுகளையும் வியாபார நோக்கத்தையும் காரணம் காட்டித் தடுப்பூசியை எதிர்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்கிறார்.

மேலும் கரோனா தடுப்பூசி செலுத்துவதால் குழந்தைகளின் நோய்த் தடுப்பாற்றல், எதிர்ப்பு சக்தி ஆகியவற்றைக் குறைக்கிறது என்பதற்கு அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை என்கிறார். “அறிவியல் ஆராய்ச்சியின்படி பெறப்பட்ட உண்மைகளை வெளியே கொண்டுவருவதுதான் மருத்துவர்களின் பணி. நாக்பூர் பகுதியில் 525 சிறார்களுக்குச் சோதனை முறையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு அவர்களுக்கு எந்த பக்கவிளைவும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்ட பிறகே சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. போகப்போகத் தடுப்பூசி செலுத்திய பிறகுதான் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்னும் நிலை வரலாம். அப்போது என்ன செய்வது? ‘Hygiene Hypothesis’ என்று ஒன்று உள்ளது. குழந்தைகள் பல்வேறு வகையிலான தொற்றுகளுக்கு ஆட்பட்டால்தான் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது மருத்துவ அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்ட விஷயம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிலேயே இருப்பதால் குழந்தைகளுக்கு இயல்பாக ஏற்பட வேண்டிய தொற்றுகள் ஏற்படுவதில்லை. குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டாலும் நோயின் தீவிரம் குறைவாகவே இருப்பதாகவும் மரணங்கள் நிகழ்வதில்லை என்னும் நிலை அப்படியே நீடிக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. வைரஸ் நம்மைவிட புத்திசாலி. அது ஒவ்வொரு இடத்திலும் தேவைக்கேற்ப உருமாற்றம் அடைந்தபடியே பரவிக்கொண்டிருக்கும். அப்படிச் செய்வதன் மூலம்தான் அதனால் தாக்குப்பிடிக்க முடியும்.

இன்னும் ஆறு மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளையும் பாதிக்கக்கூடிய புதிய உருமாற்றம் (Mutation) வந்தால், அப்போது தடுப்பூசி இல்லாமல் என்ன செய்ய முடியும்? எனவே, நோய்க்கு சிகிச்சையைவிட நோய்த் தடுப்பே சிறந்தது என்னும் அடிப்படையில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது அத்தியாவசியாமானது. தடுப்பூசிகள் பகுத்தறிவு அடிப்படையில் தீவிர அறிவியல் ஆராய்ச்சிகளுக்குப் பிறகே நடைமுறைக்கு வருகின்றன என்பதை அனைவரும் புரிந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்” என்கிறார்.

தடுப்பூசி தேவையில்லை

இந்தியாவில் ஜனவரி 3 முதல் 15 முதல் 17 வயதுடைய சிறாருக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. முதல் இரண்டு நாட்களில் நாடு முழுவதும் 15-17 வயதுக்குட்பட்ட 40 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் 18 வயதுக்குக் கீழுள்ளவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கு எதிராகக் குரல் எழுப்பப்பட்டுவருகிறது. தொற்று தடுக்கப்படுவதற்கு உத்தரவாதம் தராத கரோனா தடுப்பூசிகளை எதிர்ப்பவர்கள் மட்டுமல்லாமல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசிகளை விரைவாகச் செலுத்துவதை தீவிரமாக ஆதரித்துவந்த மருத்துவர்களும் தொற்றுநோயியல் நிபுணர்களும்கூட சிறாருக்கு இப்போது தடுப்பூசி செலுத்தத் தேவையில்லை என்று கூறிவருகின்றனர்.

இப்போது அவசரமில்லை

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தலுக்கான தேசியத் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (National Technical Advisory Group on Immunisation in India) சிறாருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு எந்த அவசரமும் ஏற்பட்டுவிடவில்லை என்றும் இந்த விஷயத்தில் நிதானமாகக் கண்காணித்துவிட்டு முடிவெடுக்கலாம் என்றும் கடந்த டிசம்பர் 21 அன்று மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்திருந்தது. இந்தக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரும் நாட்டின் முன்னணி தொற்றுநோயியல் நிபுணர்களில் ஒருவருமான மருத்துவர் ஜெயப்பிரகாஷ் முளியில் இது குறித்துப் பின்வரும் கருத்துக்களைக் கூறியிருக்கிறார்:
“கரோனா பெருந்தொற்றில் முக்கியமான பிரச்சினை மரணமும் தீவிர நோய்ப் பாதிப்பும்தான். கரோனாவால் பாதிக்கப்பட்ட சிறார்களைப் பொறுத்தவரை, இவை இரண்டும் மிகமிகக் குறைவாகவே இருந்துள்ளன.

ஜெயப்பிரகாஷ் முளியில்

உலக அளவில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்குக் கீழுள்ளவர்களில் கிட்டத்தட்ட ஒருவர்கூட இறக்கவில்லை. ஒருசிலர் இறந்திருந்தாலும் அவர்கள் ரத்தப் புற்றுநோய், புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான பிற நோய்களால்தான் இறந்திருக்கிறார்கள். அவர்களின் மரணத்துக்கு கோவிட்-19தான் காரணம் என்று கூற முடியாது. கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகச் செலுத்தப்படும் தடுப்பூசிகள் நோயின் தீவிரத்தை மட்டுப்படுத்துவதிலும் மரணத்தைத் தவிர்ப்பதிலுமே பெரும் பங்கு ஆற்றிவருகின்றன.

தொற்றைத் தடுப்பதில் அவை பெரிதாகப் பங்களிப்பதில்லை. எனவே, புதிதாக ஒரு பிரிவினருக்குத் தடுப்பூசி செலுத்துவதால் எந்த மாற்றமும் விளைந்துவிடப்போவதில்லை. ஒரு பக்கம் கரோனா தொற்றால், சிறாருக்குத் தீவிர பாதிப்புகள் ஏற்படுவதில்லை. இன்னொருபுறம் இயற்கையாகப் பெறப்படும் தொற்று, சிறாருக்கு வாழ்நாள் முழுமைக்குமான நோய்த் தடுப்பாற்றலைக் கொடுக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகையால், சிறாருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும்”.

சிறாருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதற்குப் பின்னால் இருக்கக்கூடிய வணிக நோக்கங்களையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். “இந்தியாவில் கரோனா தொற்றின் மூன்றாம் அலையில் சிறாருக்கு அதிக பாதிப்பு இருக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இந்தியாவில் குழந்தைகளையும் உள்ளடக்கி ஏற்கெனவே 70% பேருக்கு இயற்கையாகவே கரோனா தொற்றி, அகன்றும்விட்டது. எனவே, தனியாகக் குழந்தைகளை மையம் கொண்டு கரோனா அலை தோன்றும் என்பதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை.

சிறாருக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்னும் பிரச்சாரத்துக்கு வேறு நோக்கங்கள் இருப்பதாகத் தெரிகிறது. எடுத்துக்காட்டாக, சிறுவயதில் சின்னம்மை நோய் வந்தால் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. 40 வயதுக்கு மேல் வந்தால் தீவிர பாதிப்புகள் ஏற்படும். ஆனால், திடீரென்று சின்னம்மையின் அடுத்த அலை குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்று அறிவித்துவிட்டால், இந்தியாவில் அதுவரை பெரிதும் செலுத்தப்பட்டிராத சின்னம்மைத் தடுப்பூசியின் விற்பனை உச்சத்தை எட்டிவிடும் அல்லவா?”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x