

தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட்டுகள் 1991 தேர்தலில் திமுக அணியிலேயே நீடித்தனர். மார்க்சிஸ்ட் கட்சிக்கு 22 சட்டமன்றத் தொகுதிகளும் 3 மக்களவைத் தொகுதிகளும் தரப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 சட்டமன்றத் தொகுதிகளும் 2 மக்களவைத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. அதிமுக அணியில் தா.பாண்டியனின் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றது. வடசென்னை மக்களவைத் தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிட்டார் தா.பாண்டியன்.
அப்போதுதான், உலகையே உலுக்கிய அந்தச் சம்பவம் நடந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ராஜீவ் காந்தி 21 மே 1991 அன்று பெரும்புதூரில் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நாடு தழுவிய அளவில் வீசிய அனுதாப அலை காங்கிரஸ் கட்சியை அதிக இடங்களில் வெற்றிபெறச் செய்தது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்குப் படுதோல்வி. அந்த அணியில் இடம்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தலா ஒரு சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே வெற்றிபெற்றனர்.
ஒரே அணியில் இணைந்திருந்த இடதுசாரிகளை மீண்டும் பிரித்துவைத்தது 1996 தேர்தல் களம்.
புதிதாக உருவான மதிமுக அணியில் இணைந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு 40 சட்டமன்றத் தொகுதிகளும் 6 மக்களவைத் தொகுதிகளும் தரப்பட்டன. திமுக அணியில் நீடித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 11 சட்டமன்றத் தொகுதிகளும் 2 மக்களவைத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. அதிமுக அரசுக்கு எதிரான அதிருப்தி அலையில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. அந்த அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 எம்எல்ஏக்களும் 2 எம்பிக்களும் கிடைத்தனர். மதிமுக அணியில் இடம்பெற்ற மார்க்சிஸ்ட் கட்சிக்கு விளவங்கோட்டில் மட்டும் வெற்றி.
மத்தியில் அமைந்த கவுடா, குஜ்ரால் அரசுகள் வெவ்வேறு அரசியல் காரணங்களால் அடுத்தடுத்து கவிழவே, 1998-ல் மக்களவைக்குத் தேர்தல் வந்தது. திமுக அணியில் 2 தொகுதிகளைப் பெற்றுக்கொண்டது இந்திய கம்யூனிஸ்ட். ஆனால், மார்க்சிஸ்ட் கட்சியோ வடசென்னை, மதுரையில் தனித்துப் போட்டியிட்டது. எஞ்சியவற்றில் திமுக அணியை ஆதரித்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் இடதுசாரிகளுக்கு எதிராக இருந்தன. தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒற்றைத் தொகுதி கிடைத்தது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு இரண்டிலும் தோல்வி.
1998-ல் அமைந்த மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை அதிமுக திரும்பப் பெறவே, வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. 1999-ல் மீண்டும் மக்களவைக்குத் தேர்தல். கடந்த தேர்தலில் எதிரணியான அதிமுக பக்கம் பாஜக இருந்ததால், கூட்டணி தொடர்பாக இடதுசாரிகளுக்குச் சிக்கல் ஏதுமில்லை. ஆனால் 1999 மக்களவைத் தேர்தலில் திமுக அணியில் பாஜக இடம்பெறவே நிலைமை மாறியது.
மதவாத பாஜகவின் ஆட்சியைக் கவிழ்த்த கட்சி என்ற முறையில் அதிமுக அணிக்கு நகர்ந்தனர் இடதுசாரிகள். அங்கே அவர்களுக்குத் தலா 2 தொகுதிகள் தரப்பட்டன. ஆனால், தமிழகத்தில் மட்டுமின்றி, இந்திய அளவில் பாஜக அமைத்த வலுவான கூட்டணியும் கடைசி நேரத்துக் கார்கில் யுத்தமும் வாஜ்பாயை மீண்டும் பிரதமராக்கின. தமிழ்நாட்டில் மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வெற்றிபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏதுமில்லை. என்றாலும், அதிமுகவுடனான இடதுசாரிகளின் கூட்டணி 2001 தேர்தலிலும் தொடர்ந்தது!
- கட்டுரையாளர் ‘கச்சத்தீவு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com (கோஷம் போடுவோம்)