Last Updated : 31 Dec, 2021 08:13 AM

Published : 31 Dec 2021 08:13 AM
Last Updated : 31 Dec 2021 08:13 AM

இந்தியா 2021 எப்படி இருந்தது?

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கரோனாவைத் தடுப்பதற்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின், வெளிநாட்டுத் தயாரிப்பான கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்தன. இவற்றுக்கிடையில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் டெல்லியில் தீவிரமடைந்துகொண்டிருந்தது. விவசாயிகளின் தொடர் போராடம் மற்றும் உயிர்த் தியாகத்துக்கான வெற்றியாக மூன்று சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டன.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய பிறகே ஆட்சியாளர்களுக்கு கரோனா வைரஸ் முற்றிலும் அழிந்துவிடவில்லை என்பது நினைவுக்கு வந்தது. டெல்டா வேற்றுருவத்தினால் விளைந்த இரண்டாம் அலை முந்தைய அலையைவிட மிகக் கொடூரமான விளைவுகளை ஏற்பத்தியது. சிகிச்சைக்கான மருத்துவ ஆக்ஸிஜன் கிடைக்காமல் பலர் இறந்துபோனார்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும் சுடுகாடுகளில் பிணங்களை அடக்கம் செய்யவும் இரவு பகலாக வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. பிறகு, தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு இலவசமாக விநியோகிக்கும் பொறுப்பை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. தற்போது இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசிகள் நூறு கோடி என்னும் இமாலய எண்ணிக்கையைக் கடந்து செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

கரோனா இரண்டாம் அலைக்கு இடையில் நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்துக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸின் பல முக்கியஸ்தர்களை பாஜக உள்ளிழுத்துக்கொண்டது, பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோரின் தீவிரப் பிரச்சாரக் கூட்டங்கள் என பாஜகவின் பகீரதப் பிரயத்தனங்களுக்குப் பிறகும் எட்டுக் கட்டங்களில் நடத்தப்பட்ட தேர்தலில் திரிணமூல் மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. தொடர்ந்து மூன்றாம் முறையாக முதல்வர் பதவியேற்ற மம்தா பானர்ஜி பாஜகவுக்கு எதிரான மிகப் பெரிய தலைவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சியமைத்தது. பினராயி விஜயன் இரண்டாவது முறையாக முதல்வர் ஆனார். அசாமில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட பாஜக புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சியின் அங்கமானது.

கரோனா, தேர்தல் ஆகியவற்றைத் தாண்டி பெட்ரோல், டீசல் விலையேற்றம் இந்த ஆண்டு பெரிதும் விவாதிக்கப்பட்ட பிரச்சினையாக இருந்தது. பெட்ரோல் விலை பல மாநிலங்களில் லிட்டருக்கு ரூ.100-க்கு மேல் சென்றது நடுத்தர, ஏழை வர்க்கத்தினரைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது.

கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் மத்திய அரசு நிறைவேற்றிய பல சட்டங்களும் நடவடிக்கைகளும் பெரும் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டன. மேலும், பெகாசஸ் என்னும் இஸ்ரேலிய மென்பொருள் மூலம் திறன்பேசிகளில் ஊடுருவி எதிர்க் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரை மத்திய அரசு வேவுபரர்த்தது என்னும் குற்றச்சாட்டு நாடளுமன்றத்தை முடக்கும் அளவுக்கு சர்ச்சையானது. இது குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. நாடு முழுவதும் மதவாத வன்முறையும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களும் அதிகரித்தன. தேசப் பாதுகாப்பின் பெயரில் தனிநபர் உரிமைகள் ஒடுக்கப்பட்ட சம்பவங்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரையும் கொதிப்படையச் செய்தன.

இதற்கிடையே ஒலிம்பிக் போட்டி, பாராலிம்பிக் போட்டி போன்றவற்றில் தனது முந்தைய பதக்க சாதனைகளை இந்தியா முறியடித்தது, ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியரான பாரக் அகர்வால் நியமிக்கப்பட்டது, பிரபஞ்ச அழகியாக ஹர்ணாஸ் சாந்து தேர்ந்தெடுக்கப்பட்டது போன்றவை இந்தியர்களுக்குச் சிறு கொண்டாட்டங்கள். ஆண்டின் இறுதியில் குன்னூர் பகுதியில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முதல் முப்படைத் தளபதியான விபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது.

இத்தனை பரபரப்புகளைத் தாண்டி கரோனா வைரஸின் ஒமைக்ரான் வேற்றுருவத்தினால் பாதிக்கப்படுவாரின் எண்ணிக்கை 750-ஐக் கடந்து டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படத் தொடங்கியிருப்பதுடன் 2021-ம் ஆண்டு நிறைவடைந்திருக்கிறது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x