Published : 30 Dec 2021 06:32 AM
Last Updated : 30 Dec 2021 06:32 AM

அரசுக் குடியிருப்புகளைப் பாதுகாப்பது எப்படி?

அன்றைய மதராஸ் நகரத்தில் வீட்டு வசதியை மேம்படுத்த 1947-ல், ‘நகர முன்னேற்ற அறக்கட்டளை’ ஆரம்பிக்கப்பட்டது. பிறகு மாநிலம் முழுவதும் வீட்டு வசதியை மேம்படுத்த 1961-ல் அது ‘தமிழக வீட்டு வசதி வாரியம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. ‘தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்’ 1970-ல் நிறுவப்பட்டது. சென்னையில் தொடங்கிய வாரியத்தின் பணிகள், 1984-லிருந்து மாநகரங்கள், நகரங்கள், பேரூராட்சிகள் என நீட்டிக்கப்பட்டன. இப்போது ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ என்ற பெயர் மாற்றத்துடன் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. 

திருவொற்றியூர் அருவாக்குளத்தில் 24 குடியிருப்புகளைக்  கொண்ட ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் திங்களன்று காலை வேளையில் இடிந்து விழுந்துள்ளது.  இரு வாரங்களுக்கு முன் திருநெல்வேலி சாப்டர் பள்ளியில் ஒரு சிறிய சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று இளம் உயிர்களைப் பறிகொடுத்த நமக்கு இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என்பது சிறு ஆறுதல். ஆனால், மக்கள் உடமைகளையும் வாழ்விடத்தையும்  இழந்து நிற்கின்றனர். “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற அண்ணாவின் பொன்மொழியை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வாரியத்தின் குடியிருப்பொன்றில் இன்று ஓலக் குரல் கேட்கிறது. அந்தக் கட்டிடத்தின் வயது 28 ஆண்டுகள் மட்டுமே.    

 கான்கிரீட்டில் என்ன பிரச்சனை?

கான்கிரீட் ஓர் உறுதியான கட்டுமானப் பொருள். அதை ‘செயற்கைக் கருங்கல்’ என்றும் அழைப்பார்கள். கான்கிரீட்டுடன் இரும்புக் கம்பிகளை இணைக்கும்போது அது மேலும் வலுப்பெறுகிறது. அப்படியிருக்க, ஏன் 28 ஆண்டுகளே ஆன கட்டிடம் இடிந்து விழுகிறது? இதில் என்ன பிரச்சினை?  பிரச்சினை கான்கிரீட்டில் இல்லை. அதன் தன்மையைப் பலரும் புரிந்துகொள்ளாததுதான் பிரச்சினை. கான்கிரீட்டை யார் வேண்டுமானாலும் உற்பத்தி செய்யலாம், கையாளலாம் எனும் தவறான வழக்கம்தான் கட்டிடங்களில் பல பிரச்சினைகள் உருவாகக் காரணமாய் அமைந்துவிடுகிறது. 

கான்கிரீட்டின் பொறியியல் பண்பு வியக்க வைப்பது. அதற்கு நீரைக் கடத்தும் தன்மை இருந்தாலும் அதன் பலம் பெரிதாகப் பாதிப்படையாது. ஆனால், கான்கிரீட்டில் கம்பிகளைப் புதைக்கும்போது நாம் பிரச்சினைகளையும் சேர்த்துப் புதைக்கிறோம் என்ற உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும். எல்லா உலோகங்களும் துருப்பிடிக்கும் தன்மை வாய்ந்தவை. அதிலும் இரும்பு எளிதாகவும் வேகமாகவும் துருப்பிடிக்கும். கான்கிரீட் நீரையும் காற்றையும் உள்ளுக்குள் கடத்தினால், அதிலுள்ள கம்பிகள் துருப்பிடிக்க ஆரம்பித்துவிடும். இரும்பு துருப்பிடித்தால் அதன் கொள்ளளவு ஏழு மடங்குவரை பெரிதாகும். அப்போது  கான்கிரீட்டில் வெடிப்புகளும் விரிசல்களும் ஏற்படும். பிறகு நீரையும் காற்றையும் அபரிமிதமாகக் கடத்த ஆரம்பிக்கும். அதுதான் அருவாக்குளத்தில் நடந்திருக்கும்.  இப்படிச் சொல்வது யாருக்கும் அச்சத்தை ஏற்படுத்துவதற்காக அல்ல. கான்கிரீட்டின் தன்மைகளைப் புரிந்துகொண்டு, பொறியியல் நுணுக்கத்துடன்  கையாண்டால், அதை நம் விருப்பத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்த முடியும். 

கான்கிரீட் கட்டிடங்கள்  ஆபத்தானவையா?

28 ஆண்டுகாலம் பாதுகாப்பாகப் பளுவைத் தாங்கிக்கொண்டிருந்த அந்தக் கட்டிடம் தற்போது ஏன் (சுமார் பத்துமணி நேர எச்சரிக்கைக்குப் பிறகு) வீழ்ந்தது? 

ஒரே நாளில் கட்டிடம் பலவீனமாகாது. அதன் பலம் நாளைடைவில் சிறுகச் சிறுகக் குறைந்துகொண்டே வரும். ஒரு கட்டத்தில் பளுவைத் தாங்க முடியாத நிலையில் விழுந்திருக்க வேண்டும். பொறியியல் பண்புகளைப் பயன்படுத்தி முறையாகக் கட்டப்பட்டிருந்தால், அந்தக் கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு ஆபத்தான  நிலையை அடைந்தாலும் விழுவதற்கு முன்பு போதிய இடைவெளி கிடைத்திருக்கும். கட்டிடம் குறுகிய இடைவெளியில் விழுவதற்கு இரண்டு சாத்தியக் கூறுகள் உள்ளன: (1) கட்டுமானத்தின்போது பொறியியல் பண்புகளில் சமரசம் செய்யப்பட்டிருக்க வேண்டும் (2) அவ்வப்போது அந்தக் கட்டிடம்  பராமரிப்பை வேண்டி, கொடுத்துவந்த எச்சரிக்கை மணி உதாசீனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். 

ஒரு கான்கிரீட் கட்டிடம் என்னென்ன நிலைகளில் எச்சரிக்கை மணி கொடுக்கும்? முதல் நிலையில் குளியலறைப் பகுதியிலிருந்து நீர் கசிய ஆரம்பிக்கும். இதை அப்படியே விட்டுவிட்டால் நீர் சொட்ட ஆரம்பித்து தளத்திற்குள் புகுந்து கம்பிகள் துருப்பிடிக்க ஆரம்பிக்கும். மேலும் பக்கவாட்டுச் சுவர்களில் நீர் புகுந்து  மேல்புறமாகப் பரவ ஆரம்பிக்கும். இரண்டாம் நிலையில் சன்-ஷேடுகளின் வழியாகக் கசியும் நீர் கான்கிரீட்டுக்குள் புகுந்து கம்பிகள் துருப்பிடிக்கும். மேற்கூரையின் கான்கிரீட் தளம் வழியாகவும் மழைநீர் கசிய ஆரம்பிக்கும். மூன்றாம் நிலையில், கம்பிகள் துருப்பிடிப்பதால் கான்கிரீட்டில் வெடிப்பும் விரிசலும் ஏற்படும். நான்காம் நிலையில் உத்திரங்கள் தூண்கள் என்று எல்லாப் பகுதிகளிலும் வெடிப்புகள் பரவும்.

இந்த நிலையில் அநேகமாக எல்லாக் கம்பிகளிலும் துரு ஏறியிருக்கும். ஐந்தாம் நிலையில் வெடிப்புகள் ஒன்றோடொன்று இணைந்து கான்கிரீட் துண்டுதுண்டாகக் கீழே விழுந்து கம்பிகள் வெளித் தெரியும். ஐந்தாம் நிலை, இறுதிப் பயணத்தின் ஆரம்பம். அருவாக்குளம் குடியிருப்புப் பகுதியில் எல்லா எச்சரிக்கை மணிகளும் புறக்கணிக்கப்பட்டிருக்க வேண்டும். முறையாகக் கட்டப்பட்ட கட்டிடங்களிலிருந்து எச்சரிக்கை மணி அடிக்கடி ஒலிக்காது. தரமற்ற கட்டிடங்களிலிருந்து மணியோசை அடிக்கடி கேட்கும். பராமரிப்பு- மராமத்துச் செலவு அதிகமாகிக்கொண்டேயிருக்கும்.  

பராமரிப்பின் முக்கியத்துவம் என்ன?

ஒரு நாட்டின் வளர்ச்சியில் உள்கட்டமைப்புக்கும் கட்டிடங்களுக்கும் பெரும் பங்குள்ளது. அவை ஒரு நாட்டின் சொத்து. அவற்றின் பராமரிப்பு பொருளாதார வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எப்படியென்று பார்ப்போம். அருவாக்குளம் குடியிருப்பை இன்று மீண்டும் கட்டினால் என்ன செலவாகும்?  ஒவ்வொரு குடியிருப்பும் சுமார் 500 சதுர அடிப் பரப்பு என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் அந்தக் குடியிருப்பை இன்று கட்ட சுமார் மூன்றரை கோடி ரூபாய் செலவாகும். இதே கட்டிடத்துக்கு  28 ஆண்டுகளுக்கு முன்பு செலவிட்ட தொகை 50-60 லட்ச ரூபாயாகத்தான் இருக்கும். எச்சரிக்கை மணி கேட்டபோதெல்லாம் வேண்டிய பராமரிப்பு வேலைகளைத் தவறாமல் செய்திருந்தால், மொத்த பராமரிப்பு செலவு இன்னொரு 50 லட்சம் ஆகியிருக்கலாம். கட்டிடமும் இன்று பாதுகாப்பாக இருந்திருக்கும். புதிதாக மூன்றரை கோடி ரூபாய் செலவும் ஆகியிருக்காது. மேலும் வீட்டை இழந்து தவிக்கும் மக்களுக்கு எவ்வித நிவாரணமோ மாற்றுக் குடியிருப்போ தரவேண்டிய அவசியமும் இருந்திருக்காது. இவை நேரடியான சேமிப்பு. இது தவிர மறைமுக சேமிப்பும் இருக்கிறது.   

கட்டிடப் புனரமைப்பு

ஒரு கட்டிடத்தின் பழுதுகளை நீக்கிப் புனரமைத்தால் எந்த அளவுக்கு அதன் உறுதித்தன்மை நீடிக்கும் என்பது பற்றி பலருக்கும் சந்தேகங்கள் உள்ளன. பொறியியல் வல்லுனர்களின் ஆலோசனையுடன் அனுபவமிக்க கட்டுனர்களைக் கொண்டு பராமரிப்பு வேலைகளைச் செய்தால் கிட்டத்தட்ட புதிய கட்டிடத்தின் உறுதியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். சிறந்த பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்தினால் புதிய கட்டிடத்தின் உறுதித்தன்மையை மிஞ்சும் அளவுக்குக்கூட மேம்படுத்தமுடியும்.  

கட்டிடப் பராமரிப்பு, கட்டிடப் புனரமைப்பு, கட்டிட மறுசீரமைப்பு மற்றும் பாரம்பரியக் கட்டிடங்களை புனரமைக்கும் முறை பற்றிய வழிகாட்டுதல்களை மத்திய பொதுப்பணித் துறை தந்துள்ளது. புதிய கட்டுமானங்களுக்கு நாம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதற்கு இணையான அளவுக்குக் கட்டிடப் பராமரிப்புக்கும் கொடுக்க வேண்டும். அதற்கான எச்சரிக்கை மணி ஏற்கெனவே திருநெல்வேலியிலும் திருவொற்றியூரிலும் அடிக்கப்பட்டுவிட்டது. மேலும், காலம் கடத்தாமல் நாம் செயல்பட்டால் நிச்சயமாக ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.

- சி. கோதண்டராமன், புதுவைப் பொறியியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மற்றும் கட்டிடவியல் துறைப் பேராசிரியர். தொடர்புக்கு: skramane@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x