Last Updated : 17 Dec, 2021 03:06 AM

 

Published : 17 Dec 2021 03:06 AM
Last Updated : 17 Dec 2021 03:06 AM

ஏன் வேண்டாம் ஏ.எஃப்.எஸ்.பி.ஏ.

நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தின் ஓடிங் என்ற இடத்தில் ராணுவத்தினரால் சமீபத்தில் கொல்லப்பட்ட 13 அப்பாவிகளின் மரணம் உலகெங்கும் கண்டனக் குரல்களை எழுப்பியிருப்பதோடு, பிரிட்டிஷ் ஆட்சியின் மிச்சசொச்சமாக இருக்கும் ராணுவப் படைகளுக்கான சிறப்பு ஆயுதப்படை அதிகாரச் சட்டத்தின் (AFSPA) இருப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

1942 ஆகஸ்ட் 8 அன்று தொடங்கிய ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை நசுக்குவதற்காக, அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி உருவாக்கிய ‘சிறப்பு அதிகாரச் சட்டம்’ நாட்டின் விடுதலைக்குப் பின்பு 1958 செப்டம்பரில் ‘ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்ட’மாக உருவெடுத்தது. மாறுபட்ட கருத்துகளுடன், கோரிக்கைகளுடன் அப்போது இந்திய ஒன்றியத்துக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த நாகா, மிசோ கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையாக அன்று ஒன்றுபட்ட அசாம் மாநிலத்தின் சில பகுதிகளில் 1958-ம் ஆண்டே இச்சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து படிப்படியாக அசாம் மாநிலத்திலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்ட அருணாசலப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்கள் மட்டுமின்றி மணிப்பூர், திரிபுரா ஆகிய இதர வடகிழக்கு மாநிலங்களின் பல்வேறு பகுதிகளுக்கும் இந்தச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

இப்பகுதிகளில் செயல்பட்டுவந்த, ஒன்றிய அரசுக்கு எதிரான கருத்துடன், தனிநாடு கோரிக்கைகளை முன்வைத்து, ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக் குழுக்களை ஒடுக்குவது என்பதே இதன் பின்னணி நோக்கமாக இருந்தது. இடைப்பட்ட 63 ஆண்டுகளில் இந்தச் சட்டம் வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமின்றி 1983 முதல் 1997 வரை பஞ்சாபிலும் 1990 முதல் இன்று வரை ஜம்மு-காஷ்மீரிலும் அமலாக்கப்பட்டதும் வரலாறாகும். நாட்டின் எந்தவொரு பகுதியும் ‘கலவரப் பகுதி’யாக மாநில அரசாலோ அல்லது ஒன்றிய அரசாலோ அறிவிக்கப்பட்டவுடன் அப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்படும் படைகளுக்கு இந்தச் சட்டத்தின்படியான அதிகாரம் விரிவுபடுத்தப்படுகிறது. அரசின் இந்த அறிவிப்பில் எந்தவொரு நீதிமன்றமும் தலையிட முடியாது.

மேலும், சர்வதேச மனித உரிமைகளுக்கான சட்டம் உயிரைப் பறிக்கும் வகையில் வலுவான தாக்குதல் நடத்த சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தபோதிலும், இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல், இச்சட்டத்தின் 4(அ) பிரிவு சட்டத்தை அமலாக்கும் சூழ்நிலைகளில், உயிரைப் போக்கும் வகையில் சுடுவதற்கான அதிகாரத்தை ராணுவப் படைகளுக்கும் அதற்கு உதவிகரமாக இருக்கும் மாநிலக் காவல் துறைக்கும் வழங்குகிறது. ஒருவகையில், உயிர் வாழ்வதற்கான உரிமையை மீறுவதாகவே இப்பிரிவு அமைகிறது. ‘ஆயுதங்களையோ’ அல்லது ‘ஆயுதங்களாகப் பயன்படுத்தத்தக்க பொருட்களையோ’ வைத்திருக்கும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட கூட்டத்தின் மீது உயிரைப் பறிக்கும்படியான தாக்குதலை மேற்கொள்ள இந்தச் சட்டம் வகை செய்கிறது. அதே நேரத்தில், ‘கூட்டம்’ மற்றும் ‘ஆயுதம்’ என்பதற்கான விளக்கம் எதுவும் இப்பிரிவில் வழங்கப்படவில்லை.

‘தண்டனைக்குரிய குற்றம்’ ஏற்கெனவே நிகழ்ந்துள்ளது என்றோ அல்லது மிக விரைவில் அத்தகைய குற்றம் நிகழ வாய்ப்புள்ளது என்ற சந்தேகத்தின் பேரிலோ எவரொருவரையும் தங்கள் விருப்பப்படி கைதுசெய்வதற்கான அதிகாரத்தை படை வீரர்களுக்கு வழங்கும் இச்சட்டத்தின் 4 (இ) பிரிவு, தனிமனிதர்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்கான உரிமையை முற்றிலும் மீறுவதாக அமைகிறது. மேலும், இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படுவதற்கான கால வரையறை எதையும் இச்சட்டம் வழங்கவில்லை. ‘குறைந்தபட்ச தாமதத்துடன் கைதுசெய்யப்பட்டவர்களைக் காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இச்சட்டத்தின் 5வது பிரிவு பொத்தாம் பொதுவாக அறிவுரை கூறுகிறது.

இச்சட்டத்தினால் தவறான வகையில் பாதிக்கப்பட்ட எவரொருவரும் இழப்பீடு கோருவதற்கான உரிமையை இச்சட்டத்தின் 6-வது பிரிவு முற்றிலுமாக மறுக்கிறது. இச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தும் அதிகாரிகளுக்கு இதன் விளைவாக உருவாகும் சட்டரீதியான பொறுப்பிலிருந்து விலக்கு அளிக்கிறது. அது மட்டுமின்றித் தங்கள் மாநில மக்களின் நலன் கருதி ராணுவப் படைகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எதையும் மாநில அரசுகள் எடுப்பதையும் இந்தப் பிரிவு தடைசெய்வதோடு, மத்திய அரசின் ஒப்புதலோடு மட்டுமே இத்தகைய சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் தெரிவிக்கிறது. இதுவரையில், ராணுவப் படைகளின் மிக மோசமான அத்துமீறல்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைக்கு மிகமிக அரிதாகவே மத்திய அரசின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்பதே நடைமுறை உண்மையாகும்.

இந்தச் சட்டத்தின் பேரில் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களில் ஒரு சோற்றுப் பதம் இது:

“என் காதுகளின் வழியாக வெளியேறும் வரை என் மூக்கில் அவர்கள் தண்ணீரை ஊற்றிக்கொண்டேயிருந்தனர். என் காதுகள் உள்ளுக்குள்ளே சூடாகிக்கொண்டே வருவதை நான் உணர்ந்தேன். பின்பு இரண்டு பேர் என் கால்களைப் பிடித்துக்கொள்ள, இரண்டு பேர் தொடைகளின் மீதும், ஒருவர் என் தலையின் மீதும் ஏறி பூட்ஸ் கால்களால் மிதித்தனர். மின்கம்பிகளின் நுனியை மார்பின்மீது தொட்டு மூன்று முறை எனக்கு மின் அதிர்ச்சி கொடுத்தார்கள். இந்தச் சித்ரவதையின் ஒவ்வொரு முறையும் என் உடல் முழுவதும் சுருங்கிக்கொண்டே வருவதாகவே உணர்ந்தேன்” - மணிப்பூரில் ராணுவப் படையினரால் சித்ரவதை செய்யப்பட்ட 14 வயதுச் சிறுவனின் வாக்குமூலம் இது.

ஓடிங் சம்பவத்தைத் தொடர்ந்து வடகிழக்கு மாநில மக்களிடையே ஏற்பட்டுள்ள கடுமையான வெறுப்பை ஈடுகட்டும் வகையில், இச்சட்டத்தை நீக்க வேண்டுமென்ற குரலை மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து போன்ற மாநில அரசுகள் எழுப்பியுள்ளன. இந்தச் சட்டத்தின் உதவி இல்லாமலே பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும் என்ற முன்னுதாரணத்தை மாணிக் சர்க்கார் தலைமையிலான இடது முன்னணி அரசு நிரூபித்தது. 2015-லேயே இச்சட்டத்தைத் திரிபுராவிலிருந்து முற்றிலுமாக நீக்கிக்கொண்ட வரலாறும் நம் முன்னே உள்ளது. மாநிலக் காவல் துறையின் உதவியுடன், மாநில அரசு நிர்வாகமும் மக்கள் அமைப்புகளும் சேர்ந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் எடுத்த முன்னெடுப்புகளின் விளைவாகவே திரிபுரா மண்ணில் பயங்கரவாதம் முற்றாக ஒழித்துக்கட்டப்பட்டது.

இந்தப் பின்னணியில் காணும்போது, இதுவரை மக்களின் வெறுப்பை மட்டுமே அதிகப்படுத்திக்கொண்டுவந்த இச்சட்டம், அதன் செயல்நோக்கத்திலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டது என்பதை உணர்ந்து, இச்சட்டத்தை உடனடியாக நீக்குவதே மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முதல் நடவடிக்கையாக அமையும்.

- வீ.பா.கணேசன், பத்திரிகையாளர், நூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு: vbganesan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x