Published : 16 Dec 2021 03:05 AM
Last Updated : 16 Dec 2021 03:05 AM

வங்கதேசம் 50 - போரும் காரணமும்

சி.ஆன்றனி விஜிலியஸ்

பாகிஸ்தானின் முதலாவது நேரடி பொதுத் தேர்தல் டிசம்பர் 7, 1970-ல் நடைபெற்றது. தேர்தல் முடிவு அன்றைய கிழக்கு பாகிஸ்தானுக்குச் சாதகமாய் அமைந்தது. மொத்தமுள்ள 313 நாடாளுமன்றத் தொகுதிகளில் 169 கிழக்கு பாகிஸ்தானிலும் 144 மேற்கு பாகிஸ்தானிலும் அமைந்திருந்தன. கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த அவாமி லீக் கட்சியானது, ஷேக் முஜீபர் ரஹ்மான் தலைமையில் (இன்றைய வங்கதேசப் பிரதமரின் தந்தை) 167 தொகுதியிலும், மேற்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி, ஜூல்ஃபிகர் அலி பூட்டோ தலைமையில் 86 தொகுதியிலும் வெற்றிபெற்றிருந்தன. இந்தத் தேர்தல் முடிவை மேற்கு பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளவில்லை. வங்க மொழி பேசுபவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றால் இயற்றப்படவிருக்கும் அரசமைப்பு, கிழக்கு பாகிஸ்தானியருக்குச் சாதகமாக அமையக்கூடும் என்ற அச்சம் அவர்களிடம் இருந்தது.

கடைசி முயற்சியாக டாக்காவில் மார்ச் 24, 1971-ல் அன்றைய பாகிஸ்தானின் ஜனாதிபதி யஹ்யா கான், ஜூல்ஃபிகர் அலி பூட்டோ மற்றும் முஜீபர் ரஹ்மான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இனி, தனிநாடு தீர்வுதான் இறுதியானது என்ற நிலையை முஜீபர் ரஹ்மான் தெளிவுபடுத்தினார். வங்கதேசம் என்ற சுதந்திரத் தனிநாடு என்ற பிரகடனத்தைத் தொடர்ந்து மார்ச் 25, 1971 இரவு அன்று ஜனாதிபதி யஹ்யா கான் டாக்காவிலிருந்து கராச்சிக்குப் புறப்பட்டவுடன் முஜீபர் ரஹ்மானின் வீடு பாகிஸ்தான் ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டது. அவர் கைதுசெய்யப்பட்டு, இரவோடு இரவாக மேற்கு பாகிஸ்தான் கொண்டுசெல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கிழக்கு பாகிஸ்தானில் கலவரங்கள் வெடித்தன. உயிர் பிழைப்பதற்காக இனம், மொழி, கலாச்சாரத்தைத் தாண்டி லட்சக்கணக்கானோர் இந்தியா வந்தவண்ணம் இருந்தனர்.

பிரச்சினை எல்லை மீறிய சூழலில், இந்தியா உலக நாடுகளிடம் தன் கவலையைப் பகிர்ந்துகொண்டது. பனிப்போரில் அன்றைய உலகம் சிக்கிக்கொண்டிருந்ததால் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா போன்ற நாடுகள் முதலில் மெளனம் சாதித்தன. தெற்காசியாவில் சோவியத் ரஷ்யா கால்பதித்துவிடக் கூடாது என்பதில் அமெரிக்கா கவனமாக இருந்தது. இதற்கு மேல் பொறுமை காட்ட இயலாது என்ற நிலையில், பிரதமர் இந்திரா காந்தி ராஜதந்திர நடவடிக்கையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரண் சிங்குடன் சூறாவளிப் பயணத்தைத் தொடங்கினார். ஒரு கோடி அகதிகளை அன்றைய இந்தியா சமாளிக்க இயலாத நிலை. இதற்கு உடனடித் தீர்வு ஏற்பட உலகத் தலைவர்களிடம் நேரடியாக இந்திரா காந்தி கோரிக்கை வைத்தார். இந்தச் சூழ்நிலையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கிழக்கு பாகிஸ்தானை மையப்படுத்திக் கருத்து மோதல் உச்சகட்டத்தை அடைந்தது.

பனிப்போர்க் காலத்தில் அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பை வழிநடத்தும் பொறுப்பை இந்தியா ஏற்றிருந்ததால், தன் வெளியுறவுக் கொள்கையில் சுதந்திரமான போக்கை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தது. ஆனால், இந்தியாவின் எழுச்சி அன்றைய நிலையில் தனக்கு ஒரு சவால் என்று அமெரிக்கா நினைத்ததால், தன்னுடைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹென்றி கிஸிங்கர் வழியாக பாகிஸ்தானுக்கு மறைமுகமாக உதவியது. சீனாவும் மறைமுகமாக பாகிஸ்தானுக்கு உதவியளித்துவந்தது. இந்தியாவுக்கு இவ்வாறு இரண்டு பக்கமும் சவால்கள் எழுந்தன. மேலும், அன்றைய அரபு நாடுகளும் அமெரிக்காவின் ஆலோசனைப்படி பாகிஸ்தானுக்கு ஆதரவு வழங்கத் தயாராக இருந்தன.

இந்தியாவின் அன்றைய தலைமை மிகவும் சாதுரியமாக ஆகஸ்ட் 1971-ல் இந்தியாவுக்கும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையே அமைதி, நட்பு, ஒத்துழைப்பு என்ற 20 ஆண்டு கால உடன்படிக்கையைச் செய்துகொண்டது. இந்த உடன்படிக்கை, போருக்கான ஒரு முன்தயாரிப்பாகவே அமைந்தது. டிசம்பர் 3, 1971-ல் பாகிஸ்தான், இந்தியாவின் மேற்குப் பகுதியிலுள்ள ராணுவ நிலையங்கள்மீது தொடர் தாக்குதல் நிகழ்த்தியது. இது இந்தியா-பாகிஸ்தான் இடையே 13 நாள் யுத்தத்துக்கு வழிவகுத்தது. இந்திரா காந்தி, “நாட்டு மக்களுக்காக நாம் அமைதியை விரும்புகிறோம். ஆனால், யுத்தம் நம்மீது திணிக்கப்பட்டிருக்கிறது” என்று விளக்கினார்.

‘‘இந்தியாவுடனான இந்த யுத்தம் பாகிஸ்தானுக்குத் தற்கொலைக்குச் சமம்” என்று சோவியத் ரஷ்யாவும் பாகிஸ்தானுக்குத் தெளிவான எச்சரிக்கையை விடுத்தது..

இந்தியாவுக்கும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒப்பந்தம், சீனாவும் அமெரிக்காவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நேரடியாகப் போரில் இறங்கத் தடையாக இருந்தது. எந்தச் சூழ்நிலையிலும் பாகிஸ்தான் பிளவுபடுவது தடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தொற்றுமை அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அன்று நிலவியது. சீன ராணுவத்தை இந்தியாவின் எல்லையை நோக்கி முன்னேறுமாறு அமெரிக்கா வைத்த கோரிக்கைக்கு சீனாவின் தலைமை ஆதரவு தெரிவிக்க முன்வரவில்லை. அதே நேரத்தில், இந்தியாவின் படைகள் பாகிஸ்தானை நோக்கி முன்னேறுவதைத் தளர்த்தும்படி சோவியத் ரஷ்யா கேட்டுக்கொண்டது.

இதற்கிடையே இந்தியாவின் பல்முனைத் தாக்குதலைச் சமாளிக்க இயலாமல், பாகிஸ்தான் பல கோணங்களில் பின்னடைவைச் சந்தித்தது. டாக்கா நகரம், இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழும் கிழக்கு பாகிஸ்தான் விடுதலை ஆதரவு இயக்கங்களின் கட்டுப்பாட்டின் கீழும் வந்துவிட்டது. அமெரிக்கா தன்னுடைய கடைசி முயற்சியாக, டிசம்பர் 11, 1971 அன்று ‘யுஎஸ்எஸ் என்டெர்பிரைஸ்’ என்ற விமானம்தாங்கிப் போர்க்கப்பலை வங்காள விரிகுடாவில் நிறுத்தியது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு உதவியாக பிரிட்டனும் தன்னுடைய விமானம்தாங்கிப் போர்க்கப்பலை வங்கக் கடலை நோக்கி நகர்த்தியது. அமெரிக்கப் போர்த் தந்திரத்தைக் கட்டுப்படுத்த சோவியத் ரஷ்யா தன்னுடைய நீர்மூழ்கிக் கப்பலை இந்தியப் பெருங்கடலை நோக்கித் திருப்பியது.

இச்சூழலில், டிசம்பர் 16, 1971-ல் 93 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவத்தினரும் அவர்களின் ஆதரவுப் போராளிகளும் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர். இன்றைய அரசியல் மற்றும் சர்வதேச உறவு, வரலாற்று மாணவர்களிடம் இயல்பாக எழும் கேள்வி ஒன்று உண்டு. 93 ஆயிரம் பாகிஸ்தான் போர் வீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்த நிலையில், அன்றைய இந்திய அரசு ஏன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்டெடுக்கவில்லை என்பதுதான் அது. போரில் வெற்றி பெற்றாலும், புதிய நாடான வங்கதேசத்தின் பிரதமராகப் பொறுப்பேற்கவிருந்த தலைவர் முஜீபர் ரஹ்மானை மேற்கு பாகிஸ்தான் பிடியிலிருந்து மீட்கும் பொறுப்பும் அன்றைய இந்திய அரசிடம் இருந்தது என்பதே அதற்கான பதில்.

- சி.ஆன்றனி விஜிலியஸ், மூத்த ஆசிரியர், moderndiplomacy.eu, தொடர்புக்கு: casvvigilious@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x