Published : 15 Dec 2021 03:06 AM
Last Updated : 15 Dec 2021 03:06 AM

என்.ராமகிருஷ்ணன்: எழுத்தாயுதம் ஏந்திய கம்யூனிஸ்ட்

ஜி.செல்வா

ஒரு மாணவர் போராட்டத்தில் நான் சென்னை மத்திய சிறைச்சாலையில் இருந்தபோது, என்னிடமிருந்து ‘தோழர் எஸ்.ஏ.தங்கராஜன்: கத்தோலிக்கத்திலிருந்து கம்யூனிசம் வரை’ நூலை, ஒரு அரசியல் தலைவரைக் கொலைசெய்த காரணத்துக்காகச் சிறையில் இருந்தவர் வாசிக்க ஆரம்பித்தார். அடுத்த சில தினங்களில் ‘‘என்னப்பா, ஜெயில்ல கக்கூஸ் வாங்கிக்கொடுத்தவர் இவர்தானா! இப்படி ஒரு புத்தகத்த முதலிலேயே படிச்சிருந்தேன்னா என் நிலமை எப்படியோ மாறியிருக்கும்” என்றார். ‘‘ஜெயில்ல கக்கூஸ் வாங்கிக்கொடுத்தவர் புக்க படிங்க’’ எனத் தன் சகாக்களை படிக்கச் சொல்ல ஆரம்பித்தார்.

இப்படிப்பட்ட எழுத்துகளை நூலாக்கம் செய்தவர் என்.ராமகிருஷ்ணன். கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சிறுசிறு நூல்களாக எழுதத் தொடங்கி, கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு, உலகம் முழுவதும் நடைபெற்ற உரிமைப் போராட்டங்களின் வரலாறு எனத் தனது எழுத்துகளின் எல்லையை விரிவுபடுத்திக்கொண்டே இருந்தார். ஆங்கிலம், தமிழ் என 85-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது நூல்கள் மலையாளம், தெலுங்கு, மராத்தி, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அதுவும் தனது 45-வது வயதில்தான் என்.ராமகிருஷ்ணன் எழுத்தாளராக உருவெடுத்தார்.

பள்ளியில் படிக்கும்போதே கோடை விடுமுறையில் நியூ செஞ்சுரி புத்தக நிலையக் கண்காட்சியில் ஊழியராகப் பணியாற்றியுள்ளார். ஊழியர் என்பதைத் தாண்டி உள்ளூர் முதல் உலக இலக்கியங்கள் வரை வாசிப்பதற்குக் கிடைத்த நல்வாய்ப்பாக அதனைப் பயன்படுத்திக்கொண்டார் ராமகிருஷ்ணன். இத்தகைய நூல்களின் வாசிப்பு கம்யூனிஸ்ட் இயக்கப் பத்திரிகை அலுவலகத்தை நோக்கி அவரை நகர்த்தியது.

பள்ளியில் படித்தபோது இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான போராட்டத்திலும் ஈடுபட்டிருக்கிறார். தன்னைவிட 20 வயது மூத்தவரான அண்ணன் சங்கரய்யா கம்யூனிஸ்ட் கட்சியின் துடிப்பு மிக்க தலைவராக மதுரை மண்ணில் செயலாற்றிக்கொண்டிருந்தபோது ‘‘அண்ணன் கட்சி என் கட்சி’’ என கம்யூனிஸ்ட் இயக்கத்தில் அடியெடுத்து வைத்தார் ராமகிருஷ்ணன்.

1952-ல் மதுரையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றாவது அகில இந்திய மாநாட்டுப் பொதுக்கூட்ட மேடையில், இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஹாரி பாலிட்டின் பேச்சு என்.ராமகிருஷ்ணனைக் கட்சி அலுவலகத்தை நோக்கி முழுமையாக நகர வைத்தது.

அன்று மதுரை கட்சி அலுவலகத்தில் நுழைந்த ராமகிருஷ்ணன், தொடர்ந்து சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், ஜனசக்தி பத்திரிகை அலுவலகம் என்று பயணப்பட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைமையகத்தில், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதவியாளராக 15 ஆண்டு காலம் செயலாற்றியுள்ளார். இக்காலகட்டம், அவரது அரசியல் வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் உடையது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளர் பி.சி.ஜோஷி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி வளர்த்தெடுத்த பி.சுந்தரய்யா, ஏ.கே.கோபாலன், பி.ராமமூர்த்தி, ஹர்கிஷண் சிங் சுர்ஜித், கேரளத்தின் முன்னாள் முதல்வர் இ.எம்.எஸ். மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் ஜோதிபாசு, திரிபுராவின் முன்னாள் முதல்வர் தசரத்தேவ், பகத் சிங்கின் சகாக்கள், சிட்டகாங் புரட்சிப் போராளிகள் எனப் பலரின் அணுக்கத் தொண்டராக என்.ராமகிருஷ்ணன் செயலாற்றியுள்ளார்.

‘தீக்கதிர்’ நாளிதழின் உருவாக்கத்திலிருந்து அதன் வளர்ச்சி, விரிவாக்கம், புதுப்புது முயற்சிகள் என ஒவ்வொரு கட்டத்திலும் என்.ராமகிருஷ்ணனின் பங்களிப்பு அதன் கட்டிடத்தில் பொதிந்துள்ள இரும்பு, சிமென்ட் போன்றவற்றுக்கு ஒப்பானது. மார்க்சிஸ்ட் கட்சி உருவானபோது, அரசின் ஒடுக்குமுறை காரணமாக கோவை ஈஸ்வரன், என்.ராமகிருஷ்ணன் இருவரும் கைதுசெய்யப்பட்டு, ஓராண்டு காலம் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறைவாசம் அனுபவித்துள்ளனர். ராமமூர்த்தி காலமானபோதுதான் எழுத்தாளர் தளத்தில் பயணப்படுவது என்று என்.ராமகிருஷ்ணன் முடிவெடுத்தார். சவுத் விஷன் பதிப்பக பாலாஜி கொடுத்த ஊக்கமும் உற்சாகமும் அவரை முழுமையாக எழுத்துப் பணியில் ஈடுபடுத்தின.

கம்யூனிஸ்ட் தலைவர்களின், ஊழியர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தனியொரு மனிதராகக் குறுக்கும் நெடுக்குமாகப் பயணித்து என்.ராமகிருஷ்ணன் ஆவணப்படுத்தினார். பொதுவுடைமை லட்சியப் பயணம், அதிகாரவர்க்கத்தால் அடி, உதை, ரத்தம் சிந்தி, சிறைச்சாலையில் காவல் துறையால் சின்னாபின்னமாக்கப்பட்ட தோழர்களின் தியாக வரலாறு போன்றவற்றை என்.ராமகிருஷ்ணன் எழுதினார்.

நாம் அறியாத அம்பேத்கர், தந்தை பெரியார் போன்றோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களை 25 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் எழுதியவர் என்.ராமகிருஷ்ணன். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பெண்கள், மாணவர்கள், பண்பாட்டு ஊழியர்களின் பங்களிப்பை ஆவணப்படுத்திய முதன்மை எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன்தான். 85-க்கும் மேற்பட்ட நூல்கள் அவர் பெயரில் வெளிவந்திருந்தாலும், அவர் பெயரில்லாமல் உருவாக்கிய நூல்கள், ஆவணங்கள், மொழிபெயர்ப்புகள் ஏராளம். தன்னைச் சிறிதளவும் முன்னிலைப்படுத்திக்கொள்ளாதவர் அவர்.

கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காக அளப்பரிய தியாகங்களைச் செய்தது மதுரையில் உள்ள பொதும்பு கிராமம். 1948-ல் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டபோது, பொதும்பு கிராமத்தில் வீரணன், ராமையா போன்றோர் காவல் துறையால் கடும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் சகோதரிகள் கொல்லப்பட்டனர். இத்தகைய தியாக வரலாற்றைத்தான் என்.ராமகிருஷ்ணன் ‘பொதும்பு வீரணன்: ஒரு கம்யூனிஸ்ட் கிராமத்தின் கதை’ என்று வெளியிட்டார்.இதுவே அவரின் இறுதி நூலாக மாறிவிட்டது. பாசிசம் குறித்த நூலாக்கப் பணியில் இருந்திருக்கிறார். ஏராளமான நூல்களை எழுதுவதற்கான திட்டங்களும் அவற்றுக்கான குறிப்புகளும் அவரது அறையிலும், ஜோல்னாப் பையிலும் மூழ்கிக் கிடக்கின்றன. அதற்கு உயிர் கொடுக்க இப்போது அவர் இல்லை.

கம்யூனிஸ்ட் கட்சியானது தேர்தல் அரசியலில் வெற்றி பெறாதபோதும், ‘ஜெய்பீம்’ படத்தில் கதாபாத்திரமாக்கப்பட்ட கோவிந்தன் போன்ற தோழர்கள் களத்தில் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருப்பதற்கு, பயணிப்பதற்கு ராமகிருஷ்ணன் உருவாக்கிய எழுத்துதான் அடிப்படை.

டிசம்பர் 12 இரவு பத்தரை மணிக்கு மதுரையில் அவரது மகள் இல்லத்தில் உறங்கும்போது என்.ராமகிருஷ்ணனின் உயிர் பிரிந்தது. இந்தச் செய்தியை சென்னையில் உள்ள அவரது அண்ணன் சங்கரய்யாவிடம் அவரது மகன் தயங்கித் தயங்கித் தெரிவிக்கிறார். நூறாண்டு கண்ட கம்யூனிஸ்ட் தலைவருக்குத் தம்பியின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சட்டென மீள்கிறார். கையை உயர்த்தி செவ்வணக்கம் செலுத்துகிறார். ‘‘கட்சிக்குச் செய்ய வேண்டிய பணியைச் செஞ்சுட்டான்’’ என ஒற்றை வார்த்தையில் அஞ்சலிக் குறிப்பை நிறைவு செய்தார்.

- ஜி.செல்வா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர்.

தொடர்புக்கு: selvacpim@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x