ஆறாம் அழிவு!

ஆறாம் அழிவு!
Updated on
1 min read

மனித இனத்தின் தோற்றத்துக்கு முன்னர் பூமியிலிருந்து மறைந்த உயிரினங்களைவிட, மனித இனத்தின் தோற்றத்துக்குப் பின்னர் அருகிக் கொண்டிருக்கும் உயிரினங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

“டைனோசர்கள் முற்றிலுமாக அழிந்ததைப் போன்ற ஒரு நிகழ்வு மனிதர்களுக்கும் நேரலாம். ஆறாவது முறையாக நிகழவிருக்கும் அழிவின் விளிம்பில் நாம் நிற்கிறோம்” என எச்சரிக்கிறார் அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான டாக்டர் ஸ்டூவர்ட் பிம்.

இவரும் பிரேசிலின் சூழலியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் கிளிண்டன் ஜென்கின்ஸனும் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை, உலகின் முக்கியமான சூழலியல் ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. பூமியில் வசிக்கும் உயிரினங்களுக்கு மனிதர்கள் எந்த அளவு ஆபத்தாக இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த அறிக்கை.

மனித இனம் தோன்றுவதற்கு முன்னர், 10 லட்சம் உயிரினங்களில் 0.1 என்ற விகிதத்தில்தான் உயிரினங்களின் அழிவு நிகழ்ந்திருக்கிறது. ஆனால், தற்போது நம்மால் அழிக்கப்படும் உயிரினங்களின் விகிதம் அதைவிட 1,000 மடங்கு அதிகம் என்கிறார் டாக்டர் ஸ்டூவர்ட்.

சுமத்திரா காண்டாமிருகங்கள், ஆமுர் சிறுத்தை மற்றும் மலைகளில் வாழும் கொரில்லா குரங்குகள் போன்ற உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதற்கு நாம்தான் காரணம் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

உயிரினங்கள் அருகினால் இயற்கையின் சமன் குலைந்து பேரழிவு நிகழும் என்பதை இன்று குழந்தைகள்கூட உணர்ந்திருக்கின்றன. ஆபத்தைத் தவிர்க்க என்ன செய்யலாம்? “நவீன சாதனங்களைப் பயன்படுத்தி, அழிவில் இருக்கும் உயிரினங்கள் பற்றிய தகவலை, உயிரியலாளர்களுக்குப் பொதுமக்கள் அளிக்கலாம். அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களைக் காப்பாற்றி, அவற்றின் இனவிருத்தியை அதிகரித்து அவற்றை இந்த பூமியிலிருந்து மறைந்துவிடாமல் பாதுகாக்கலாம். இதுபோல் முன்பு சில உயிரினங்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. கோல்டன் லயன் டமரின் என்ற குரங்கினம் முற்றிலும் அழிந்துபோய்விட்டதாகக் கருதப்பட்டு, பிற்பாடு பிரேசிலின் சில பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது. சரணாலயங்கள் போன்ற சூழல்களில் வைத்து, அவற்றின் இனப்பெருக்கம் அதிகரிக்கப்பட்டு, அந்தக் குரங்குகள் வாழ்வதற்கான வனப்பகுதிகளும் உருவாக் கப்பட்டன. தற்போது, அந்தக் குரங்குகளுக்கு இடமே போதாத அளவுக்கு அவை பெருகிவிட்டன” என்று சொல்கிறார் டாக்டர் ஸ்டூவர்ட்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in