

அவர் திரும்பிவிட்டார், அவருடைய ஆதரவாளர் கள் எப்போதும் கூறிவந்ததைப்போல! வெள்ளைக் குதிரை மீது அமர்ந்து ஒரு சேனைக்குத் தலைமைதாங்கியபடி அல்ல, ஆன்லைன் வாயிலாக! லாஸ் ஏஞ்சலீஸில் வாழ்பவர்கள் விரும்பினால் 950 ரூபாய் கொடுத்தால் சிரிப்பே இல்லாத முகத்துடன் கூடிய அவருடைய புகைப்படம் அச்சிட்ட பனியனை வாங்கலாம்.
‘மிகவும் தீரம்மிக்க, உறுதியான, மக்களை ஈர்க்கவல்ல 20-வது நூற்றாண்டுத் தலைவர்' என்று அழைக்கப்பட்ட சந்த் ஜர்னைல்சிங் பிந்தரன்வாலே இப்போது மீண்டும் மக்களின் நினைவுகளில் நிழலாடுகிறார். லாஸ் ஏஞ்சலீஸில் 950 ரூபாய்க்கு விற்கப்படும் அதே பனியன் லூதியானாவில் 200 ரூபாய்க்குக் கிடைக்கிறது.
ஆண்மையைப் பெருக்குவது எப்படி, பெண்களை மெச்சும்படியாக உடலமைப்பைப் பெறுவது எப்படி என்ற விளம்பரங்களுடன் வினோதமான கலாச்சாரக் கலவையாகக் காட்சி தருகிறது சீக்கியர்களின் புதுப்போக்கு.
கடந்த 30 ஆண்டுகளில் பஞ்சாப் மாநிலம் வெகுவாக மாறிவிட்டது. அதன் இளைய சமுதாயத்துக்குச் சவால்கள் ஏராளம். மாநிலம் வளமானதாக இருந்தாலும் வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவு. நிலம் இல்லாதவர்கள் வசதியாக வாழ, வழிகள் குறைவு. மாநிலத்தின் தொழில்வளர்ச்சி தேய்ந்துவிட்டது. மக்கள் குறிப்பாக இளைஞர்கள் போதை மருந்துகளுக்கு அடிமையாகிவருகிறார்கள்.
எனவே, பிந்தரன்வாலேவைச் சக்திமிக்க தலைவராகப் பார்க்கத் துடிக்கிறார்கள். பிரிட்டன், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் வசிக்கும் சீக்கிய இளைஞர்கள் தாய்நாட்டை நினைத்து ஏங்குகின்றனர். அந்த நாடுகளில் நிறவெறி காரணமாக சீக்கியர்கள் தாக்கப்படுகின்றனர், ஒதுக்கப்படுகின்றனர். எனவே, பிந்தரன்வாலேவைத் தங்களது வடிகாலாகக் கருதி ஆதரிக்கின்றனர்.
அரசை எதிர்க்கும் ஒரு வீரனைத் தங்களுடைய தலைவனாக ஏற்க பஞ்சாப் இளைஞர்கள் துடிக்கின்றனர். அவருடைய சித்தாந்தம் குறித்து அவர்களுக்குக் கவலையில்லை. இதுதான் மேலைநாடுகளில் பிந்தரன்வாலேவுக்கு ஆதரவு பெருகுவதுபோலத் தெரிவதற்குக் காரணம்.
© தி இந்து (ஆங்கிலம்),
சுருக்கமாகத் தமிழில்: சாரி