

நான்கு மாநிலங்களுக்கும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கும் நடைபெறும் தேர்தல்களில் அசாம் மாநிலத்தில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் அப்பால் மாநிலக் கட்சிகளான அசாம் கணபரிஷத், அனைத்திந்திய ஜனநாயக முன்னணி, போடோ மக்கள் முன்னணி ஆகியவை இந்தத் தேர்தலில் முக்கியமானவை.
காங்கிரஸ் முதலமைச்சர் தருண் கோகோய் 15 வருடமாகப் பதவியில் உள்ளார். ஆனாலும் அரசுக்கு எதிரான மக்கள் உணர்வை வைத்து யார் வெற்றிபெறுவார்கள் என்பதைச் சாதாரணமாகக் கணித்துவிட முடியாது.
அசாம் கணபரிஷத் 1985-ல் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றியைப் பெற்றது. அப்போதும் காங்கிரஸ் 35 சட்டமன்றத் தொகுதிகளில் வென்றது என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார் அசாம் கணபரிஷத் மூத்த தலைவர் புரபுல்ல மஹந்தா.
பிஹார் தேர்தல்கள் முடிந்ததுமே அவற்றிலிருந்து காங்கிரஸும் பாஜகவும் தங்களுக்கான பாடங்களைக் கற்றுக்கொண்டதைப் போலத் தோன்றுகின்றன.
தருண் கோகோய் முதலில் ஒரு மகா கூட்டணியை உருவாக்க முயன்றார். ஆனால், அந்த முயற்சி சரிவரவில்லை. அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணித் தலைவர் பத்ருதீன் அஜ்மல், பெரும்பாலும் வங்க தேசத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினை பற்றித்தான் பேசுகிறார். அவரிடம் கைகோத்தால் அது தருண் கோகோய் வசம் உள்ள அசாமி அடையாளத்தை எடுத்துக்கொண்டுபோய்விடும். அசாமி அடையாளத்தை பாஜகவிடம் கொண்டுபோய் அந்த நடவடிக்கை கொடுத்துவிடும் என்ற அச்சம் காங்கிரஸிடம் இருக்கிறது.
தருண் கோகோயின் 15 ஆண்டுகால ஆட்சியைவிட பிரதமர் மோடியின் இரண்டு வருட ஆட்சியின்மீது மக்களின் கவனத்தை இடம்மாற்றுவதுதான் தேர்தல் விஷயமாக இருக்கிறது.
“முதலமைச்சர் வேட்பாளராக மத்திய அமைச்சர் சர்வானந்தா சோனோவாலை பாஜக அறிவித்திருக்கலாம். ஆனால், உண்மையான போட்டி எனக்கும் மோடிக்கும் இடையில்தான். ஏனென்றால், மோடி சொல்லாமல் அவரது அமைச்சர்களோ அல்லது முதலமைச்சர்களோ ஒரு அங்குலம்கூட அசைய மாட்டார்கள்” என்கிறார் முதல்வர் தருண் கோகோய்.
“தேயிலைத் தோட்டத் தொழிலாளர் களுக்கும் பழங்குடிகளுக்கும் சிறப்பான திட்டங்களை மாநில அரசாங்கம் செய்துள்ளது. அவர்களிடம் உள்ள காங்கிரஸின் ஆதரவைச் சார்ந்துதான் நிற்கிறேன்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
பிஹார் தேர்தல் தந்த பின்னடைவுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளது பாஜக. அதனால், தனது முதவர் வேட்பாளரை அறிவித்துள்ளது. முதல்வர் தருண் கோகோய்க்கு எதிராக பிரதமர் மோடியை நிறுத்துவதன் மூலம் பாஜக தருண் கோகோய் கேட்ட போராட்டத்தையே அவருக்குக் கொடுத்துள்ளது.
“நாங்கள் அசாம் முதல்வர் தருண் கோகோயின் 15 ஆண்டுகால ஆட்சியைப் பற்றித்தான் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். அவர் அதற்குத்தான் பதில் சொல்ல வேண்டும்” என்கிறார் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் சோனோவால். பாஜகவினர் கூட்டணிக் கட்சிகளைப் பலப்படுத்தி ஒரு வானவில் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற பாடத்தையும் கற்றுள்ளனர். அவர்கள் போடோ மக்கள் முன்னணியோடு ஒப்பந்தத்தை உருவாக்கினார்கள். ஆனாலும், அசாம் கணபரிஷத் போன்ற பழைய கூட்டணிக் கட்சிகளோடு கூட்டு வைப்பது பாஜகவின் தேர்தல் வியூகத்தைச் சிக்கலாக்கிவிடலாம்.
“குறைந்தது 35 சட்டமன்றத் தொகுதி களில் சிறுபான்மை சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். அவற்றில் எங்களின் கூட்டணிக்கு வாய்ப்புகள் இல்லை. அசாம் கணபரிஷத்தோடு கூட்டணி வைப்பது கோட்பாட்டளவில் அர்த்தமுள்ளதுதான்” என்கிறார் ஒரு மூத்த பாஜக நிர்வாகி. ஆனால், வங்க தேசத்திலிருந்து இடம்பெயர்ந்த இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் தருகிற அழுத்தத்துக்கு ஏற்ப தேசிய ஜனநாயகக் கூட்டணி முயல்கிறது. அசாம் மாநிலத்தின் கூட்டணிக்கு இது நடைமுறையில் இடையூறுகளைக் கொண்டுவரலாம்.
1971-க்குப் பிறகு இடம்பெயர்ந்த எவருக்கும் குடியுரிமை வழங்கக் கூடாது என்கிறது அசாம் ஒப்பந்தம். அதை மீறுகிற செயல் இது என்கிறார் ஒரு கணபரிஷத் மூத்த தலைவர். இதன் விளைவாக, பாஜகவுக்கு எதிராக 6 தொகுதிகளில் நட்புரீதியாகப் போட்டியிட கணபரிஷத் முடிவுசெய்துள்ளது.
இந்தத் தேர்தல்களில் தீர்மானகரமான பங்கை அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆற்றும். ஐக்கிய ஜனநாயக முன்னணியும் காங்கிரஸும் 2014 மக்களவைத் தேர்தலில் ஒரே எண்ணிக்கை அளவிலான இடங்களைப் பெற்றன. அந்தப் போக்கு எங்களுக்கு உதவும் என்கிறார் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கான பொறுப்பாளராக உள்ள ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா. அசாம் தேர்தல் யுத்தத்தின் முடிவை இப்போதைக்குக் கணிக்க முடியவில்லை.
வண்ணமயமான 30 ஆண்டுகள்
மத்திய அரசோடு அசாம் ஒப்பந்தத்தை 1985-ல் அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம் செய்துகொண்டபிறகு பல வண்ணங்களில் அரசியல் இயக்கங்கள் உருவானதை அசாம் பார்த்துள்ளது. இனரீதியான அடையாளங்கள், பகுதிசார்ந்த அடையாளங்கள் தொடர்பான விவகாரங்களை எடுத்து இவை செயல்படுகின்றன.
படித்தவர்களைத் தேடும் காங்கிரஸ்
முதல் கட்டத் தேர்தலுக்கான 65 வேட்பாளர்களைக் காங்கிரஸ் அறிவித்துள்ளது. படித்தவர்களாகவும் மக்களுக்குச் சேவையாற்றுவதில் அனுபவம் உள்ளவர்களாக வேட்பாளர்களை அறிவித்திருப்பதாக அசாம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜோஷி தெரிவித்துள்ளார். பழங்குடியினர் அசாம் மக்கள்தொகையில் 14.3% உள்ளனர். அவர்களிலிருந்து 9 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தலித்துகளில் 3 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தருண் கோகோய் (79) - காங்கிரஸ் முதல்வர்
3 முறை முதல்வர். ஒருகாலத்தில் மிகவும் நம்பிக்கைக்குரியவராக இருந்த ஹிமந்த பிஸ்வாஸ் சர்மாவால் கட்சிக்குள் சில எதிர்ப்புகள் வந்தன. அவற்றைச் சமாளித்துவிட்டார். சர்மா தற்போது பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பொறுப்பாளராக இருக்கிறார். காங்கிரஸின் பாரம்பரியமான வாக்குகளை நம்பியிருக்கிறார்.
சர்பானந்த சோனோவால் (53) - பாஜக முதல்வர் வேட்பாளர்
அனைத்து அசாம் மாணவர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தார். 2011 வரை அசாம் கணபரிஷத் கட்சியில் இருந்தார். தற்போது பாஜகவின் மாநிலத் தலைவர். 2014 மக்களவைத் தேர்தலில் 7/14-ல் பாஜக வெற்றிபெறுவதற்குக் காரணமாக இருந்தவர்.
பத்ருதீன் அஜ்மல் (66) - அஐஜமு தலைவர்
வாசனைத் திரவியங்கள் வியாபாரத்தில் மன்னர். அவரது குடும்பத்தொழில் இது. 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பாக அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியைத் தொடங்கினார். தேர்தலில் 10 இடங்களை வென்றார். 2011-ல் அது 18 ஆக உயர்ந்தது. முதன்மையான எதிர்க்கட்சியாக மாறினார்.
புரபுல்ல மஹந்தா (64) - கணபரிஷத் தலைவர்
இரண்டு முறை முதல்வராக இருந்தவர். அசாம் கணபரிஷத் கட்சியின் தலைவர். பாஜகவிடமிருந்து 24 இடங்களைப் பெற்றாலும் சில இடங்களில் பாஜகவை எதிர்த்து ‘செல்லச் சண்டை’போடுவதாக அறிவித்துள்ளார். இதன் ஆதரவுதளம் சுருங்கிவருகிறது.
ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா (47) - பாஜக நிர்வாகி
தருண் கோகோய் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தின் மூளை. தருண் கோகோய் தனது வாரிசாக தனது மகன் கவுரவ் கோகோயைத் தேர்வுசெய்து நாடாளுமன்ற உறுப்பினராக்கிவிட்டதால் 9 சட்டமன்ற உறுப்பினர்களோடு பாஜகவில் சேர்ந்தவர். தேர்தல் வேலைகளை ஒருங்கிணைப்பதில் நிபுணர்.
அசாமில் எங்கும் வறுமை தாண்டவமாடுகிறது. வேலைவாய்ப்புகளைத் தேடி பஞ்சம் பிழைக்க மக்கள் மாநிலத்தை விட்டு வெளியேறிப் போய்க்கொண்டே இருக்கின்றனர். விவசாயம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. - போராசிரியர். சஞ்சய் ஹஸாரிகா, ஜாமியா மிலியா பல்கலைக்கழகம். |