எஸ்.ஆர்.இராதா: அதிமுகவின் ஆறாவது கையெழுத்து

எஸ்.ஆர்.இராதா: அதிமுகவின் ஆறாவது கையெழுத்து
Updated on
2 min read

திமுகவிலிருந்து அதன் பொருளாளர் எம்ஜிஆர் நீக்கப்பட்டபோது, திமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலரும் அவருடன் இணைந்தனர். 1972, அக்டோபர் 17-ல் அதிமுக தொடங்கப்பட்டபோது எம்ஜிஆர் அதன் முதலாவது உறுப்பினராகத் தன்னைப் பதிவுசெய்துகொண்டார்.

கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம், முனு.ஆதி, குழ.செல்லையா, எஸ்.ஆர்.இராதா ஆகிய ஐவரும் அவரையடுத்து உறுப்பினர்களாகக் கையெழுத்திட்டனர். முதல் அறுவரில் மூவர் தஞ்சையைச் சேர்ந்தவர்கள். சோமசுந்தரம், ‘நமது கழகம்’ கண்டு திரும்பினார். செல்லையா இறுதிக் காலத்தில் தன்னைச் சாதி அமைப்புகளுக்குள் கரைத்துக்கொண்டார். ஆறாவது உறுப்பினராக இணைந்த இராதா அதிமுக விசுவாசியாகவே வாழ்ந்து மறைந்தவர்.

அதிமுக தொடங்கப்பட்டபோது அதன் தொழிற்சங்கப் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் முனு.ஆதியும் எஸ்.ஆர்.இராதாவும். அறுபதுகளின் பொதுவுடைமை இயக்கத்தின் ஆளுகைக்குக் கீழிருந்த கைத்தறி நெசவாளர் சங்கங்களை திமுக நோக்கித் திருப்பியவர் எஸ்.ஆர்.இராதா. திமுக வரலாற்றில் நெசவாளர்களின் கூலி உயர்வு உரிமைகளுக்காக அக்கட்சி முன்னெடுத்த போராட்டங்களும் அவர்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்கக் கைத்தறி ஆடைகளைத் தோள்களில் சுமந்து விற்ற காலமும் முக்கியமானவை.

திமுகவின் அந்தப் பணிகளில் கும்பகோணத்தை மையமாகக் கொண்டு இயங்கிய எஸ்.ஆர்.இராதாவுக்கும் முக்கியமான பங்குண்டு. அதிமுக என்றாலே எம்ஜிஆரின் அன்பர்கள் என்று சுருக்கிப் பொருள் காணும் வழக்கம் ஒன்று இருக்கிறது. பெரியாரிலிருந்து தொடங்கி அண்ணாவின் தலைமையின் கீழ் இயங்கி, அதிமுகவில் இணைந்தவர்களையும் உள்ளடக்கியதே அதிமுக.

பெரியாரையும் எம்.ஆர்.இராதாவையும் பாரதிதாசனையும் கும்பகோணத்துக்கு அழைத்துவந்து பொதுக்கூட்டங்களை நடத்தியவர் எஸ்.ஆர்.இராதா. தனது இல்லத் திருமணங்களில் சடங்குகளைத் தவிர்த்தவர் அவர். பெரியாரைக் குறித்த அவரின் நினைவுகள் முக்கியமானவை. தனக்கு வெறும் அறிமுக அளவிலேயே தெரிந்தவர்களும்கூட கல்வி பெற வேண்டும் என்பதில் பெரியார் காட்டிய தனி அக்கறைக்கு அந்நினைவுகள் சான்றாக அமைந்துள்ளன.

1977 சட்டமன்றத் தேர்தலில் கும்பகோணத்திலிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் எஸ்.ஆர்.இராதா. அப்போது, சுற்றுலா வாரியத்தின் தலைவராகவும் பொறுப்புவகித்தார். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார் என்றாலும் அவரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக்கினார் எம்ஜிஆர். அக்காலத்தில் நெசவாளர்களின் பாதுகாப்புக் கேடயமாகவும் அவர் இருந்தார். பட்டுத் துணிகள் மீதான வரியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்ட வேளையில், அது கைத்தறி நெசவாளர்களைப் பாதிக்கும் என எடுத்துக்கூறி அவ்வரி கைவிடப்படுவதற்குக் காரணமானவர்.

எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் மீன்வளத் துறை, அதையடுத்து சுற்றுலாத் துறை அமைச்சராக பொறுப்புகளை வகித்தார். அவர் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த காலத்தில், தூய்மைப் பணியாளர்களுக்கு நீண்ட காலத் தவணையில் சொந்த வீடுகள் கட்டித்தரும் திட்டத்தை மதுரை, ஈரோடு, கும்பகோணம் நகரங்களில் தொடங்கினார். அவர் அத்துறையின் பொறுப்பிலிருந்து நீங்கியதும் அத்திட்டம் தொடராமல்போனது துரதிர்ஷ்டம். 1989-ல் அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவரும் அவரே.

எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் எஸ்.ஆர்.இராதா பொதுப் பணித் துறை அமைச்சராக சிறிது காலம் பொறுப்பில் இருந்தபோது, பெரியாறு அணைக்கு ஒருமுறை ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அங்கிருந்த இளநிலை பொறியாளர்களிடம் தனிப்பட பேசியபோது அறிந்துகொண்ட செய்திகளைத் தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலில் பதிவும் செய்திருக்கிறார். பெரியாறு அணை தொடர்பில் மூத்த பொறியாளர்களைக் கொண்ட தனி அலுவலகத்தையே கேரள அரசு நடத்திவந்த நிலையில், தமிழ்நாடோ அணையைத் தொடர்ந்து கண்காணிக்க உதவிப் பொறியாளரை மட்டுமே நியமித்திருந்தது.

கண்காணிப்புப் பொறியாளர்களோ மதுரையை விட்டு வருவதற்கு மனமில்லாமல் இருந்தார்கள் என்று நினைவுகூர்ந்துள்ளார் எஸ்.ஆர்.இராதா. அதைச் சரிசெய்வதற்குள் அப்போதைய ஆட்சிக் காலம் முடிந்துவிட்டது என்பது அவரது வருத்தம். இப்படி தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினைகளுக்கான பல விதைகள் எப்போதோ விதைக்கப்பட்டுவிட்டன. அவற்றைக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும் எனில், எஸ்.ஆர்.இராதா போன்றோரின் அரசியல் கட்சி அனுபவங்களும் அமைச்சரவை அனுபவங்களும் நமக்குப் பாடமாக இருக்கும்.

டிசம்பர் 8: எஸ்.ஆர். இராதா முதலாம் ஆண்டு நினைவுநாள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in