Last Updated : 23 Jun, 2014 08:00 AM

 

Published : 23 Jun 2014 08:00 AM
Last Updated : 23 Jun 2014 08:00 AM

ஆதிதிராவிடர்களின் உப்புத் தொழிலை உயர்த்துமா அம்மா உப்பு?

உப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் தலித் தொழிலாளர்களுக்கு அம்மா உப்பு மகிழ்ச்சியளித்திருக்கிறது; ஆனால் அது நீடிக்குமா?

மத்திய சுகாதார அமைச்சக அறிக்கையின்படி நாட்டின் மக்கள்தொகையில் 9% பேர் அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்தாததால் உடல்நலம் பாதிக்கப்படும் சூழலில் உள்ளனர். இந்நிலையில், இரும்பு மற்றும் அயோடின் சத்து கலந்த உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு, குறைந்த அளவு சோடியம் கொண்ட உப்பு என மூன்று வகையான உப்பு பாக்கெட்டுகளை ‘அம்மா உப்பு' என்ற பெயரில் மலிவு விலையில் வழங்க முதல்வர் உத்தரவிட்டது வரவேற்கத் தக்க முடிவு.

எனினும், தற்போது அரசு அறிவித்துள்ள ‘அம்மா உப்பு' மற்றும் ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டுவரும் அயோடின் கலந்த உப்பைத் தமிழக மக்களுக்குத் தொடர்ந்து கிடைக்கச் செய்ய வேண்டுமெனில், அதை உற்பத்திசெய்யும் அரசின் உப்பு நிறுவனங்களையும் கூட்டுறவு உப்பு உற்பத்தித் திட்டங்களையும் ஆய்வுக் கண்ணோக்கில் தரச்சான்று செய்ய வேண்டியது அவசியம். குறிப்பாக, தலித் மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த உருவாக்கப்பட்ட

‘மரக்காணம் ஆதிதிராவிடர் உப்புத் தொழிலாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கம்' உள்ளிட்ட திட்டங்கள் மேம்பட்ட நிலையில் உள்ளனவா என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

உப்பு உற்பத்தியில் தமிழ்நாடு

நாட்டின் மொத்த உப்பு உற்பத்தியில் 90.3% தனியார் துறைகளும், 1.5% பொதுத் துறையும், 8.2% கூட்டுறவுத் துறைகளும் பங்கு வகிக்கின்றன. இதில் 95% உப்பு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும் நிலையில், மீதியுள்ள 5% உற்பத்தியைத்தான் அரசு வெளிச்சந்தையில் விற்பனை செய்கிறது.

உள்நாட்டு உப்பு உற்பத்தியில் குஜராத்துக்கு அடுத்த இடத்தில் இருப்பது தமிழகமே. வேதாரண்யம், தூத்துக்குடி உப்பளங்களின் உப்பு உற்பத்தியோடு ஒப்பிடும்போது பக்கிங்ஹாம் கால்வாயில் அமைந்துள்ள மரக்காணம் உப்பளங்களுக்குத் தனித்த சில சிறப்பம்சங்கள் உண்டு. மத்திய அரசும் மாநில அரசும் இங்கு தனித்தனியாக உப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. 1820-களில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து மரக்காணத்தில் 2,854 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் துணையோடு மத்திய அரசின் உப்புத் துறை நேரடியாக உப்பு உற்பத்தி செய்துவருகிறது.

அதற்கு அருகிலேயே 1937-ல் தலித் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கென்று ஆங்கிலேய அரசு ஒதுக்கித்தந்த கந்தாடு கிராமத்துக்குச் சொந்தமான நிலத்தில் 190.97 ஏக்கர் பரப்பளவு கொண்ட, ஆதி திராவிடர்களுக்கென்றே இருக்கும் உப்பு உற்பத்திச் சங்கம் உள்ளது. காந்தியின் கனவை நனவாக்க 1951-ல் இந்தத் திட்டம் ‘அரிஜன உப்புத் தொழிலாளர் சங்க'மாக மாற்றப்பட்டு, தற்போது ‘மரக்காணம் ஆதிதிராவிடர் உப்புத் தொழிலாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற் பனைச் சங்கம்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது.

மாநில அரசின் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் இச்சங்கம், மிகவும் நலிவடைந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதாவது, 190 ஏக்கரில் செய்யப்பட்ட உற்பத்தி, கடந்த காலங்களில் திறந்துவிடப்பட்ட இறால் பண்ணைகளாலும், கருவேலம் முட்புதர்களின் ஆக்கிரமிப்புகளாலும் சீரழிந்து இப்போது 105 ஏக்கராகச் சுருங்கிவிட்டது. 337 தொழிலாளர்கள் வேலை செய்த இடத்தில் 100 பேருக்குக்கூட வேலைகொடுக்க முடியா மலும், தொழிலாளர்களுக்குச் சரியான குறைந்தபட்ச ஊதியம் தர முடியாமலும் இச்சங்கம் செயல்படுகிறது. அதிலும், இங்கு உப்பு பாக்கெட் தயாரிக்கும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் 14 முதல் 17 வயது வரையிலான இளம் பெண்கள். இவர்கள் ஓய்வு நேரத்தில் தங்குவதற்குக் கழிப்பிட வசதியுடன் கூடிய ஓய்விடமோ குடிநீர் வசதியோ எதுவுமில்லை. கண்கள் பூத்துப்போகாமல் இருக்கக் கருப்புக் கண்ணாடி, கையுறை போன்ற உபகரணங்கள் வழங்கப்படாததால் பலரின் கண்களில் பூவிழுந்து பார்வை மங்கிவருகிறது. அதுமட்டுமல்ல, மத்திய அரசின் உப்பளங்களில் வேலை செய்யும் உப்பு வாரும் ஆளிலிருந்து உப்பு மூட்டைத் தூக்கும் கூலித் தொழிலாளி வரையுள்ள 2,100 பேரில் 1,800 பேர் நிலமற்ற தலித் கூலித் தொழிலாளர்கள்தான். இவர்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சரிவரக் கிடைப்பதில்லை.

தலைகீழ் நிலைமை

1967 வரையிலும் யாருடைய குறுக்கீடும் இல்லாமல் லாபத்தை அள்ளிக்குவித்த இச்சங்கத்தின் செயல்பாடுகள், அதன் பின்னர் ஏற்றஇறக்கங்களைச் சந்தித்தன. 1991-ல் கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டு, கவனமும் செலுத்தப்பட்டு சுமார் ரூ.35 லட்சம் நிகர லாபம் எட்டப்பட்டது. கூடவே, ரூ. 3 லட்சம் செலவில் தலித் மக்களுக்குப் பயனளிக்கும் வளர்ச்சித் திட்டங்களும் சமுதாயக் கூடங்களும் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், 2000-ல் நிலைமை தலைகீழானது. ரூ. 11 லட்சம் நஷ்டத்துடன் சரிவின் விளிம்புக்கு இந்தச் சங்கம் தள்ளப்பட்டது. கடந்த காலங்களில் இந்தச் சங்கத்துக்கென்று கூட்டுறவு முதுநிலை ஆய்வாளராகப் பெரும்பாலும் தலித்துகள் பணியமர்த்தப்படுவதில்லை. மத்திய அரசும் இந்தச் சங்கத்தின் தொழிலாளர் நலன் மற்றும் பாதுகாப்புக்காக நடவடிக்கை எடுக்கவில்லை. இடதுசாரித் தொழிற்சங்கங்கள்கூட இந்தப் பிரச்சினைகளுக்கு எவ்விதத் தீர்வையும் காண முன்வரவில்லை.

அம்மா உப்பு பாக்கெட்டாக வருவதற்கு முன் தமிழகத்தில் அயோடின் கலக்காத பாக்கெட் உப்பு தயாரித்த கூட்டுறவுச் சங்கம் இது ஒன்றுதான். ஆதி திராவிடர் என்கிற பெயரை நீக்கி

‘மரக்காணம் உப்புத் தொழிலாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கம்' என்ற பெயரில்தான் இந்த பாக்கெட் உப்பைத் தயாரித்து வழங்கினார்கள். 1995-ல் அயோடின் கலந்த உப்பையே அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று மாநில சுகாதார அமைச்சகம் அறிவித்த பிறகு, தமிழகத்தில் பலரும் அயோடின் கலந்த உப்பைத் தயாரிக்கத் தொடங்கினர். ராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் வாலிநோக்கத்தில் தயாரிக்கப்படும் அயோடின் கலந்த உப்பு பாக்கெட்டும் மரக்காணத்தில் தயாரிக்கப்பட்டதுதான்.

இடைப்பட்ட சில ஆண்டுகளில் மிகவும் தேக்க மடைந்த அயோடின் உப்பு பாக்கெட் உற்பத்தி, தற்போது ‘அம்மா உப்பு' என விற்பனையில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், பல தலித் தொழிலாளர் களும், மிகவும் பின்தங்கிய கூலித் தொழிலாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்குமா என்பதே அவர்களின் ஏக்கமாக உள்ளது.

கூட்டுறவுச் சங்கம் என்றாலே அது கடன்பட்டு, நஷ்டத்தில்தான் இயங்கும் என்ற நிலையைத் தலைகீழாக மாற்றிப் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகச் செயல் பட்டுக்கொண்டிருப்பது தமிழகம்தான். எனவே, ஆதிதிராவிடர்களின் பொருளாதார மேம்பாட்டின் தொழிற்துறை அடையாளமாக விளங்கும் மரக்காணம் உப்புத் தொழிலாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற் பனைச் சங்கத்தை, பிற கூட்டுறவுச் சங்கங்களுக்கு நிகராகத் தரம் உயர்த்தி, தொழிலாளர் நலன்களை உத்தரவாதப்படுத்தி உற்பத்தியைப் பெருக்கினால், ஆதி திராவிடர்களின் வாழ்வாதாரத்தில் கூடுதல் சுவை சேரும்.

- அன்புசெல்வம், யு.ஜி.சி. ஆய்வாளர், சமூக ஆர்வலர், தொடர்புக்கு: anbuselvam6@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x