Last Updated : 30 Nov, 2021 03:06 AM

Published : 30 Nov 2021 03:06 AM
Last Updated : 30 Nov 2021 03:06 AM

சோளகருக்கு நிலமே கெளரவம்… அந்தக் கெளரவத்தை இழந்துவிட்டோம்!

‘ஜெய் பீம்’ படம் பார்த்த மனங்கள் எல்லாம் கதறி அழுகின்றன. அந்தக் கொடூரங்களும், பழங்குடியினரின் அவல நிலையும் நம் நெஞ்சை விட்டு அகல மறுக்கின்றன. ‘ஜெய் பீம்’ காட்சிகள், அவர்களின் கண்ணீர்ப் பெருங்கடலில், சிறு துளி. அந்தப் பெருங்கடலைப் பொதுமக்கள் அனைவரையும் உணர வைத்திருப்பதுதான் சினிமா எனும் மகத்தான கலையின் மகத்துவம். அந்தப் படத்தால் காட்ட முடியாத பல துயரங்களும் இருக்கின்றன.

பழங்குடியினரை மதுவால் மயங்கச் செய்து, ஒரு ஊரின் மொத்த நிலங்களையும் சொற்ப விலைக்கு எழுதி வாங்கிக்கொண்ட கொடூரக் கதை இது. ஈரோடு மாவட்டம், தாளவாடி ஒன்றியத்துக்கு உட்பட்டது அள்ளபுரம் தொட்டி. சோளகர் குடியிருப்பு. 30 வீடுகள். ஒரு ஏக்கர் நிலம் முதல், இரண்டரை ஏக்கர் வரை 25 பேருக்குப் பட்டா நிலம் இருந்தது.

உலகமயமாக்கலில் பயன்பெற்றவர்கள், நிலத்தில் முதலீடு செய்யத் தொடங்கினார்கள். மலைப் பகுதியில் பட்டா நிலம், வருவாய்ப் புறம்போக்கு, வன நிலம், பழங்குடியினர் நிபந்தனை நிலம் என்று நான்கு வகை நிலங்கள் உள்ளன. இதில், நிபந்தனை பட்டா நிலம் உட்பட அனைத்தும் கபளீகரம் செய்யப்பட்டன.

அள்ளபுரம் தொட்டி பழங்குடிகள் அனைவருக்கும் பட்டா நிலமே இருந்தது. இது கொஞ்சம் அரிதான நிகழ்வு. சமவெளிப் பகுதியில் இருந்துவந்த ஒருவர், அள்ளபுரம் தொட்டிக்கு அருகில் ஒரு சிறிய நிலத்தை வாங்கினார். அந்த நிலத்தைச் சமப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, ஊரில் உள்ள அனைத்து ஆண்களையும் வேலைக்கு அழைத்தார். மாலை நேரங்களில் தானாகவே முன்வந்து மதுவை வாங்கிக் கொடுத்தார்.

சில நாட்களிலேயே, மது வேண்டும் என்பவர்களுக்குக் கடன் மட்டும் கொடுக்கத் தொடங்கினார். குடும்பத் தேவைகளுக்கும் சேர்த்து அவராகவே கேட்டுக் கேட்டுக் கடன் கொடுத்தார். வாங்கிய கடனை, திருப்பிச் செலுத்த முடியாத நிலை வரும் வரை காத்திருந்தார். அந்த நிலையை எட்டியதும், மொத்தக் கடனையும் எல்லோரிடமும் திருப்பிக் கேட்டார்.

மொத்தக் கடனைக் கேள்விப்பட்டபோது அந்த மக்களுக்கு மூச்சு முட்டியது. ‘‘ஒரே ஒரு கையெழுத்துப் போடுங்கள். உங்கள் கடன் போக மீதியுள்ள பணத்தைத் தருகிறேன்’’ என்று அவர் பட்டென்று கூறினார். தங்கள் பூர்விக நிலத்தை எழுதிக் கேட்கிறார் என்று அவர்களுக்கு எளிதில் புரிந்தது. ஒவ்வொரு வீட்டிலும் இழவு விழுந்த துயரம். மனதைத் திடப்படுத்திக்கொண்டு, நிலத்தை விற்கத் தயாரானார்கள். குறைந்தபட்சம், சந்தை விலையைக்கூடத் தரத் தயாராக இல்லை அவர். கடன் தொகை போக, தருவதை வாங்கிக்கொள்ள வேண்டிய நிலை. இந்த நிலத்துக்கு இவ்வளவுதான் விலை என்று, எப்படித் தீர்மானித்தார் என்றே இன்று வரை அவர்களுக்குத் தெரியவில்லை. உதாரணமாக,

1) 2.40 ஏக்கர் – ரூ. 1 லட்சம்.

2) 1.25 ஏக்கர் - ரூ. 1.90 லட்சம்.

3) 80 சென்ட் - ரூ. 90 ஆயிரம்.

4) 2.0 ஏக்கர் - ரூ. 1.80 லட்சம்

5) 2.50 ஏக்கர் - ரூ. 2.20 லட்சம்

6) 80 சென்ட் - ரூ. 80 ஆயிரம்

7) 1.80 ஏக்கர் - ரூ. 1.80 லட்சம்.

8) 1.25 ஏக்கர் - ரூ. 4.40 லட்சம்.

இந்த விலையைப் பார்க்கும்போதே தெரியும் அவை சீராக இல்லை என்பது. நிலத்தின் அளவு, வாங்கிய கடன், ஒருவரது கையறு நிலை என எல்லாவற்றையும் உத்தேசித்து ஒரு விலையை அவராகவே கொடுத்தார். இரண்டு குடும்பங்கள் மட்டும் கடைசிவரை நிலத்தை விற்கவில்லை. 1.25 ஏக்கர் நிலத்துக்கு, ரூ 4.40 லட்சம் என்றபோது ஒருவர் விற்றுவிட்டார். மற்றொருவர் இன்று வரை விற்காமல் சாகுபடி செய்துவருகிறார்.

கையில் கிடைத்த பணத்தில், கொஞ்சம் குடும்பச் செலவு, குழந்தைகளுக்குத் துணிமணிகள், துக்க நிகழ்வுகள் போன்றவற்றுக்குச் செலவுசெய்தது போக, மீதிப் பணத்தைப் பலரும் குடித்தே அழித்தார்கள். இவ்வாறு எழுதி வாங்கப்பட்ட நிலம், சுமார் 40 ஏக்கர். தாங்கள் விற்ற நிலம் முழுவதையும் அவர்களே செம்மையாகப் பண்படுத்தி, ஒரு பெரிய பண்ணையாக மாற்றிக்கொடுத்தனர். இப்போது அது பொன் விளையும் பூமி. நிலத்தை இழந்த பழங்குடிகள் அங்கு விவசாயக் கூலிகள்.

‘‘உங்கள் எல்லோருக்கும் நிலம் இருந்ததாமே... அதுவும் சொந்தப் பட்டா நிலம். ஏன் விற்றுவிட்டீர்கள்?’’ என்று கேட்டேன். ‘‘வனவிலங்குத் தொல்லை சார்’’ என்றார் ஒரு பெரியவர். ‘‘காலங்காலமாக இதனையெல்லாம் சமாளித்துதானே சாகுபடி செய்துவந்தீர்கள்?’’ என்று திரும்பக் கேட்டேன். ‘‘உண்மையைச் சொல்லுய்யா. எதுக்குப் பொய்? எதுக்கு வெக்கம்? குடிச்சு அழிச்சுப்போட்டோம்னு சொல்லு” என்று திட்டினார் ஒரு பெண்.

உணவுத் தேவைக்கு விவசாயம். இதர தேவைகளுக்குச் சிறு வனப் பொருட்கள் என நிலையான வாழ்வை மேற்கொண்டுவந்த அம்மக்கள், இப்போது சொந்த நிலத்தில் கூலி அடிமைகள். பல பழங்குடிக் கிராமங்களில் பட்டப் படிப்பு வரைகூடப் படித்துள்ளனர். ஆனால், அள்ளபுரம் தொட்டியில் ஒருவர்கூட கல்லூரியில் காலடி எடுத்து வைக்கவில்லை. இரண்டு பெண்கள் பன்னிரண்டாம் வகுப்பு.

இரண்டு ஆண்கள் பத்தாம் வகுப்பு. ‘‘பூர்விக நிலத்தைப் பறிகொடுத்துவிட்டு, அதே நிலத்தில் கூலிக்கு வேலை செய்கிறீர்களே... இந்த வாழ்க்கை எப்படி இருக்கிறது?’’ என்றேன். ‘‘ரொம்பப் பெரிய தப்பு பண்ணிட்டோம்னு தெரியுது” என்றார்கள். ‘‘சாராயக் கடைக்குப் போயி அந்தக் கருமாந்திரத்தைக் குடிக்கும் முன் இந்தப் புத்தி இருந்திருக்க வேண்டும்’’ என்று பெண்கள் சரமாரியாகத் திட்டத் தொடங்கினார்கள். ஆண்கள், முகம் கவிழ்ந்து உட்கார்ந்திருந்தனர். தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்துக் கண்களைத் துடைத்துக்கொண்டே இருந்தனர். சிலரின் முதுகு குலுங்கியது.

‘‘சோளகனுக்கு நிலமே கெளரவம். அந்தக் கெளரவத்தை இழந்துட்டோம்…. எங்களுக்குப் பேச யோக்கியதை இல்லை சார்’’ என்று கூறிக்கொண்டே ஒருவர் வாய்விட்டுக் கதறினார். அவரது அழுகை அடங்குவதற்கு மிக நீண்ட நேரமானது. அவர்களின் தற்போதைய அற்ப திருப்தி, தங்கள் நிலத்தைப் பறித்துக்கொண்டவர் உயிருடன் இல்லை. அபகரித்த நிலத்தில், கட்டிக்கொண்ட பங்களாவிலேயே ஒரு நாள் இரவு தூக்கிட்டுத் தற்கொலைசெய்துகொண்டார். தங்களை ஏமாற்றி, நிலத்தைப் பறித்துக்கொண்ட அந்தக் குடும்பத்திடமும் அந்த நிலங்கள் இப்போது இல்லை. அதேநேரம் அந்த நிலங்களின் முந்தைய உரிமைதாரர்களான சோளகர்களுக்கு அந்த நிலங்கள் சட்டபூர்வமாக திரும்பக் கிடைப்பதற்கு எந்த சாத்தியமும் இல்லை.

- நா.மணி, பொருளாதாரத் துறைத் தலைவர். ஈரோடு கலை அறிவியல் கல்லூரி.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x