Published : 28 Nov 2021 03:06 AM
Last Updated : 28 Nov 2021 03:06 AM

சுற்றுச்சூழல் மீது உச்சபட்ச வன்முறை ஏவப்படுகிறது! - அமிதவ் கோஷ் நேர்காணல்

இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான அமிதவ் கோஷ், புவிக் கோளுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, முன்பு தொடுக்கப்பட்ட உயிரி-அரசியல் யுத்தங்களுக்கு நிகரானது என்கிறார். இன்று இருக்கும் உலகின் இயற்கை பற்றி நல்லதாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்கிறார். தனது சமீபத்திய ‘தி நட்மெக்ஸ் கர்ஸ்’ (The Nutmeg’s Curse) நூலில், மக்கள் மேல் ஏவப்படும் வன்முறை என்பது சூழல் மேல் ஏவப்படும் வன்முறைதான் என்கிறார். அவரது நேர்காணலிலிருந்து சில பகுதிகள்...

அமிதவ், கிட்டத்தட்ட நாகரிகத்தின் முடிவில் இருப்பதுபோல, பிரம்மாண்டமான பேரிடர்களை நோக்கிப் புவி வேகமாகச் செல்லும் என்பது போன்ற நம்பிக்கையற்ற சித்திரத்தை நீங்கள் தருகிறீர்கள். வளங்கள் சூறையாடப்பட்ட நிலையில், சமத்துவமின்மையும் பெருகியதால் புவிக்கோளில் வாழ்வதென்பது மிகவும் கடினமாகிவிட்டது என்றும் குறிப்பிடுகிறீர்கள்…

ஆமாம். நான் நேர்மறையாக இருக்க வேண்டுமென்றும், பேரிடர்களையும் கொடும் நிகழ்வுகளையும் ஊகித்து உரைப்பவனாக இருக்கக் கூடாது என்றுமே முயற்சி செய்கிறேன். ஆனால், புவியில் நடக்கும் விஷயங்கள் அத்தனை சரியாக இல்லை. இந்தப் புத்தகம்கூட சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது நேர்மறையானதே. பசிபிக் பெருங்கடல் தீவு நாடுகளில் ஒன்றான பலாவுவின் அதிபர், சமீபத்தில் நடந்த கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் (சிஓபி26) பேசியபோது, “இதற்குப் பதிலாக எங்கள் மீது வெடிகுண்டு போடலாம்” என்று பேசியது மிக மிகச் சரியான பேச்சு என்று நினைக்கிறேன். ஏனெனில், புவியில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி போரைப் போன்றது. கடந்த காலத்தில் நடத்தப்பட்ட உயிரி-அரசியல் யுத்தங்களுக்கு நிகராகத் தற்போது நடக்கிறது என்று எனது நூலில் நான் விவாதித்துள்ளேன்.

பண்டா தீவுகளில் விளையும் ஜாதிக்காய்களைப் பறித்துக்கொண்டு செல்வதைப் பற்றிப் பேசிவிட்டு, அதைத் தொடர்ந்து டச்சு காலனியவாதிகள் ஜாலியன்வாலா பாக் பாணியில் நடத்திய படுகொலையைப் பற்றிப் பேசும்போது, வளங்களைக் கொள்ளையடிப்பதற்கும் ஆதிக்க நாடுகள் அதை நுகர்வதற்கும் உள்ள தொடர்ச்சியைச் சுட்டிக்காட்டுகிறீர்கள். இது தொடர்ந்து நடக்கும் நடைமுறையாக உள்ளது...

பண்டா தீவுகளில் நடந்ததற்கு ஆசியா கண்டத்தில் சில முன்னுதாரணங்களே உண்டு. பண்டா தீவுகளில் நடந்த படுகொலைகள் அளவிட முடியாதவை. டச்சுக்காரர்கள் 1621-ல் பண்டா தீவுகளுக்கு வந்தனர். அவர்கள் அங்குள்ள வளங்களின் மீதான கட்டுப்பாட்டை அடைவதற்காகப் பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று, மிச்சமுள்ளவர்களை அடிமையாக்கி அவர்கள் அத்தீவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையையும் அழித்தொழித்துவிட்டனர்.

பண்டா தீவுகளில், முழுக்க முழுக்க வளத்தை முன்வைத்து நடத்தப்பட்ட வன்முறை அது. அதன் மீதான கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு நடத்தப்பட்ட வன்முறை அது. அப்படியான வழிமுறை புவி முழுவதும் பின்பற்றப்படுவதை நாம் பார்த்துவருகிறோம். மக்கள் மீது எங்கெல்லாம் வன்முறை ஏவப்படுகிறதோ, கடைசியில் அது வளத்தைச் சுரண்டுவதான நடைமுறையாகி, அது சூழல் மீது ஏவப்படும் வன்முறையாக மாற்றமடைகிறது. வளங்களைக் கொள்ளையிடும் நடைமுறைகளோ நம்ப முடியாத அளவு வன்முறை மிக்கவையாகவும் மாறியுள்ளன.

நியமகிரி பிராந்தியத்தில் பாக்ஸைட் கனிமம் எடுக்கும் வழிமுறையானது, உச்சபட்ச வன்முறைகளுள் ஒன்று. கொஞ்சம் அலுமினியம் எடுப்பதற்காக முழு மலையையும், ஒட்டுமொத்தமாக அங்கிருந்த சூழலையும் அழிக்கிறார்கள். அது கொடூரமான விஷயம்.

எழுதப்பட்ட வரலாற்றில் 95% பகுதி ஐந்து நாடுகளைப் பற்றியது என்று இம்மானுவேல் வாலர்ஸ்டீன் கூறியதைக் குறிப்பிடுகிறீர்கள். பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் வரலாறுதான் அது. தற்காலத்தில் அந்த நிலைமை முற்றிலும் மாறியுள்ளதா?

சுவாரசியமான ஒரு விஷயம் இது. வரலாற்றை எழுதுவதில் ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்தியவர்களே இன்னமும் ஆதிக்கம் செலுத்திவருகிறார்கள். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உள்ள வரலாற்றுத் துறைகளுக்குச் சென்று பார்த்தால், உலக வரலாறு என்பது எந்தப் பிரிவிலும் மிகச் சிறிய அங்கமாகவே உள்ளது. அமெரிக்கா அல்லது ஐரோப்பாவின் வரலாற்றை எழுதும் நபர்களால் மட்டுமே இன்னும் இத்துறைகள் ஆதிக்கம் செலுத்தப்பட்டுவருகின்றன. ஆனால், அமெரிக்காவின் வரலாறு அத்தனை துல்லியமாகவும் நெருக்கமாகவும் ஆவணப்படுத்தப்பட்டதால்தான், அதற்கு முழுக்க மாற்றான வரலாறுகளையும் சொல்வது சாத்தியமாகியிருக்கிறது.

நான் தற்போது வாசித்துக் கொண்டிருக்கும் ‘தி டான் ஆஃப் எவ்ரிதிங்க்’ (The Dawn of Everything) நூல் மானுடவியலர் டேவிட் கிரேபராலும் தொல்லியலர் டேவிட் வின்ட்ரோவாலும் எழுதப்பட்டது. அந்தப் புத்தகம் மறுமலர்ச்சி கால வரலாற்றையே முழுமையாக மாற்றி எழுதியுள்ளது. மறுமலர்ச்சிக் காலத்தின் பரிசாகச் சொல்லப்பட்ட சுதந்திரம், சமத்துவம் என எல்லாவற்றையும் மேற்கத்திய கலாச்சாரத்தை விமர்சிக்கும் பூர்வகுடி அமெரிக்கர்களின் நோக்கிலிருந்து கிடைத்ததாகக் கூறுகிறது.

இதுவரையில் எழுதப்பட்ட வரலாறுகள் தொடர்பிலான சம்பிரதாயமான புரிதல்கள் தலைகீழாக மாறும் காலத்தில் நான் வாழ்ந்துகொண்டிருப்பதும் எழுதிக்கொண்டிருப்பதும் வாசித்துக்கொண்டிருப்பதும் அசாத்தியமான விந்தையனுபவத்தைக் கொடுக்கிறது. நாம் முழுமையாக வேறுவிதமான எதார்த்தத்தைப் பார்க்கிறோம். இந்த மாற்றி எழுதப்பட்ட வரலாறுகள், இந்தப் புரட்சிகள் எல்லாம் சாத்தியமானது வெறுமே அறிவு இயக்கங்களால் மட்டும் நடக்கவில்லை. கடைசியில் புவிக்கோளே, தானாக நடத்திய தலையீடு வழியாகவும்தான் இந்த மாற்றம் நடந்துள்ளது.

வளர்ச்சி, அபிவிருத்தி என்பதன் கதையாடலாக வரலாற்றைப் பார்க்கும் வாசிப்புகள் அனைத்தும் முழுமையாகத் தவறானவை. நமக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டதற்கு முற்றிலும் எதிரான முறையில்தான் நம்மைச் சுற்றி இந்த உலகத்தில் நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஆனால், காலனிய அனுபவம் என்பது முழுமையாக மறைந்துவிட்டது என்று சொல்ல முடியாதில்லையா?

கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தின் கீழ் ஆங்கிலேயர்கள் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஓபியத்தை வளர்க்கத் தொடங்கினார்கள். தற்போது பிஹாராகவும், கிழக்கு உத்தர பிரதேசமாகவும் இருக்கும் பூர்வாஞ்சல் பிராந்தியத்தில் அவர்கள் பயிரிட்டார்கள். வரலாற்றுரீதியாகவே இந்தப் பிராந்தியம் இந்தியத் துணைக் கண்டத்திலேயே வளமான பிரதேசமாகும்.

இந்தியாவின் பேரரசுகள் எல்லாம் பூர்வாஞ்சல் பிராந்தியத்திலிருந்தே உருவாயின. இந்தியாவின் அதிக உற்பத்திப் பகுதியும் அதுவாகும். அதனாலேயே, சீனாவுக்கும் தெற்காசியப் பகுதிகளுக்கும் அனுப்புவதற்கான ஓபியத்தைப் பயிரிடுவதற்கு இப்பகுதியைத் தேர்ந்தெடுத்தனர்.

ஓபியத்தை வளர்ப்பதற்காக மிகப் பெரிய கண்காணிப்பு இயந்திரத்தை பிரிட்டிஷார் உருவாக்க வேண்டியிருந்தது. ஒற்றர்கள், தகவலாளிகளின் மூலம் ஓபியம் கடத்தலையும் கருப்புச் சந்தையையும் தவிர்க்க வேண்டியிருந்தது. அதற்காக அவர்கள் அங்கே வன்முறையையும் சமூக அவநம்பிக்கையையும் உருவாக்க வேண்டியிருந்தது. அப்படி உருவாக்கப்பட்ட பிரச்சினைகளின் தாக்கம் இன்னும் அங்கே தொடர்கிறது.

கிளாஸ்கோ பருவநிலை மாநாடுகள் போன்ற நிகழ்ச்சிகளின் வாயிலாக ஏதாவது நடக்குமென்று கருதுகிறீர்களா? இல்லையென்றால், நீண்டகாலமாக நடக்கும் பெரும் கூட்டங்கள் போலத்தானா இதுவும்?

அப்படித்தான் நினைக்கிறேன். அவற்றால் விளைந்த நன்மை மிகவும் சொற்பமானது. பாரிஸ் ஒப்பந்தம் இப்படித்தான் பிரஸ்தாபிக்கப்பட்டது. பாதிப்புக்கு உள்ளாகும் நாடுகளுக்குப் பணக்கார நாடுகள் நூறு பில்லியன் டாலர் உதவி நிதியைத் தருவதாக ஒப்புக்கொண்டன. ஆனால், பத்தில் ஒரு பங்குகூடக் கொடுக்கப்படவில்லை. சமீபத்தில் நடந்த கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டைப் பொறுத்தவரை அது தொடங்கும் முன்பாகவே தோற்றுவிட்டது. சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை உலகின் முக்கியமான நாடுகளான மூன்று நாடுகளின் அதிபர்கள் ஷி ஜின்பிங், விளாடிமிர் புதின், ஜேர் போல்சானரோ ஆகியோர் அதில் பங்கெடுக்கவேயில்லை. உலகச் சுற்றுச்சூழலின் எதிர்காலத்தை இந்த மூன்று நாடுகள்தான் தற்போது நிர்ணயிக்கப்போகின்றன.

உங்களது புனைவுகளும் அபுனைவு நூல்களும் நிறைய பேரை வாசிக்கவும் எழுதவும் செயல்களில் ஈடுபடவும் தூண்டியுள்ளன. உங்களது கல்விப்புல அனுபவம் எவ்வளவு தூரம் உங்கள் எழுத்துக்கு உதவியாக உள்ளது?

எனது கல்விப்புல அனுபவம் மானுடவியல் சார்ந்தது. அது பலவகைகளிலும் உதவியாக உள்ளது. ஆனால், என்னுடைய பத்திரிகையாளர் அனுபவமும் முக்கியமானது. எனது புதிய நூல் வரலாற்றுடன் தொடர்புடையது. வரலாறு தொடர்பான வாசிப்பு எனக்கு முக்கியமானது. ஆனால், கல்விப்புல அனுபவம் இருந்திராவிட்டால் இந்தப் புத்தகத்தை என்னால் எழுதியிருக்கவே முடியாது.

உங்கள் அடுத்த புத்தகம்?

ஓபியம், சீன வர்த்தகம் குறித்த சிறு நூலை முடிப்பதற்கு முயல்கிறேன். இந்தக் காரணிகள் பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் இந்தியாவை எப்படி மாற்றியமைத்தன, அதன் விளைவாக இந்திய நவீனத்துவம் எப்படி மாற்றியமைக்கப்பட்டது என்பதைப் பற்றிய புத்தகம் அது.

‘தி இந்து’, தமிழில்: ஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x