Published : 28 Nov 2021 03:06 AM
Last Updated : 28 Nov 2021 03:06 AM

தனியார் நூலகங்களின் அவல நிலை

நான்காண்டுகளுக்கு முன்பு அப்போதைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அடுக்கடுக்காக 37 அறிவிப்புகளை வெளியிட்டார். ஒவ்வொன்றும் கனவா நனவா என்று வியப்பிலாழ்த்தக் கூடியவை. அவற்றில் ஒன்று ‘அரிய வகை நூல்களைப் பாதுகாத்துவரும் தனியார் அமைப்புகள் நடத்திவரும் நூலகங்களுக்குப் பராமரிப்பு நிதி வழங்கப்படும்’ என்ற அறிவிப்பு. நானும் கடந்த பத்தாண்டுகளாக திருநெல்வேலியில் நூலகம் நடத்திவருகிறேன். இந்த அறிவிப்பு வந்தவுடன் மத்திய நூலகத்தை அணுகி விசாரித்தேன். அவர்களுக்கு அப்போதுதான் திருநெல்வேலியில் தனியார் நூலகங்கள்கூட உண்டு என்பது தெரியவந்தது. நூலகத்தில் என்னென்ன புத்தகங்கள் உள்ளன, அவற்றின் புகைப்படங்கள், இருப்பிடச் சான்று, அடையாளச் சான்று உள்ளிட்டவற்றைக் கொடுத்து, அதுபோக அவர்களிடமிருந்த படிவத்தையும் நிரப்பிக்கொடுத்தேன். இதுவரை ஒரு பதிலும் இல்லை. இந்த வகைப்பாட்டின் கீழ் யாருக்காவது நிதி போய்ச்சேர்ந்ததா என்றும் தெரியவில்லை.

அந்த அறிவிப்பில் ‘அரிய வகை நூல்களைப் பாதுகாத்துவரும்’ என்ற சொற்றொடர் கவனிக்கத்தக்கது. பழங்கால ஓலைச்சுவடிகள், சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிவந்த புத்தகங்கள், அவற்றின் முதற்பதிப்புகள் இது போன்றவற்றையே அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால், இன்று பாதுகாக்கப்பட வேண்டியவை அரிய நூல்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தனியார் நூலகங்களும்தான்.

நூலகத்தை யாரும் தொழிலாக எடுத்து நடத்திவிட முடியாது. ஒருவேளை பிற ஊடகங்கள் நுழைந்திராத எண்பதுகளில் அப்படி இருந்திருக்கலாம். இன்று தன்னார்வத்திலும் சேவையாகவும் மட்டுமே இயங்கக்கூடியவையாக நூலகங்கள் உள்ளன. ஆனால், நூலகம் எந்த விதத்திலும் லாபம் தரக்கூடியதல்ல. பல நூலகங்கள் இட வாடகையைச் செலுத்தக்கூட முடியாத நிலையில் இயங்கிவருகின்றன. இதுபோக, மின்சாரக் கட்டணம், நூலகருக்கான சம்பளம், புதிய புத்தகங்கள் கொள்முதல் என்று பார்த்தால், நூலகங்கள் நட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகப் புலப்படும். அதாவது, சொந்தக் கட்டிடங்களில் நூலகங்கள் இயங்கிவந்தாலே தவிர மற்றபடி அவை தொடர்ந்து இயங்குவது அசாத்தியம் என்பதுதான் நிலை.

புத்தக வாசிப்பில் உலகளவில் முதல் பத்து நாடுகளுக்குள் இந்தியாவும் ஒன்று. ஆங்கிலப் புத்தகங்களுக்கான மூன்றாவது மிகப் பெரிய சந்தையாகவும் இந்தியா விளங்குகிறது. 2020-ல் ‘த வர்ல்டு கல்ச்சர் ஸ்கோர் இண்டெக்ஸ்’ (The World Culture Score Index) நடத்திய ஆய்வு, இந்திய மக்களே அதிகம் வாசிக்கக்கூடியவர்களாக உள்ளனர் என்கிறது. ‘சொர்க்கம் என்பது ஒரு வகையான நூலகமாகத்தான் இருக்கும் என்றே எப்போதும் நான் கற்பனை செய்துவந்திருக்கிறேன்’ என்றார் ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ். எனக்கு நூலகம் மீது சின்ன வயதிலிருந்தே ஒரு பிரமிப்பு உண்டு. நூலகம் என்பது அடைய வேண்டிய மிகப் பெரிய சொத்து என்பதுபோல ஒரு கற்பிதத்தை வைத்திருந்தேன். இதுதான் நான் நூலகம் தொடங்கியதற்கான காரணம்.

நான் நூலகம் நடத்துவது குறித்து ஆச்சரியத்துடன் பார்க்கும் வாசகர்களிடம் நான் சொல்வதுண்டு. நூலகம் என்பது ஒரு தேர். இதில் நூலகத்தைத் தொடங்கியது தவிர, என் பணி பெரிதாய் ஒன்றுமில்லை. அனைவரும் ஆளுக்கொரு கை பிடித்தால் மட்டுமே அதை இழுத்துச்செல்ல முடியும். இது ஒரு சமூகப் பணி. இதற்கான பொறுப்பு வாசக சமுதாயத்திடம்தான் உள்ளது. இன்றைய சூழலில் அரசாங்கத்துக்கும் அந்தப் பொறுப்பு உள்ளது.

தனியார் நூலகங்கள் அவற்றின் வாசகர்களைச் சார்ந்து இயங்குவதால் அவர்களுக்குப் பிடித்தமான, தேவையான நூல்களைத் தொடர்ந்து சேகரித்து வைக்கின்றன. புத்தகங்கள் ஒழுங்காகப் பல்வேறு வகைகளின் கீழ், எழுத்தாளர் பெயர் வரிசைப்படி அடுக்கப்பட்டிருக்கும். எந்தப் புத்தகமும் இடம் மாறி இருப்பதில்லை. தூசி அடைந்து கிடப்பதில்லை. எந்தப் புத்தகத்தையும் வாசகர் தனக்குப் பின்னால் வாசிக்கத் தேவைப்படுமென்று ஒளித்து வைக்க வேண்டியதில்லை.

நூலகங்களுக்கு நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி பல்வேறு சவால்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஆண்களில் நடுத்தர வயதினர் முதல் பெரியவர்கள் வரை இணையம், சமூக ஊடகம், இணையவழிக் காட்சி ஊடகங்கள் போன்றவை பெரும் மாறுதலை ஏற்படுத்தியிருக்கின்றன. இத்தகு ஊடகங்கள் இவர்களது பெரும்பாலான நேரத்தை எடுத்துக்கொள்வதால், வாசிப்புக்கு இவை இடையூறாக உள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் பொழுதுபோக்கு அம்சமுள்ள வணிக எழுத்தை மட்டும் வாசித்துவந்தவர்கள் என்பதால் மிக எளிதாக இந்த இணைய ஊடகங்களுக்குள் சென்றுவிடுகின்றனர். இதனால் இவர்களது வாசிக்கும் ஆர்வமும் வேகமும் பெருமளவு தடைப்பட்டுள்ளது. அதே வேளையில், நவீன ஊடகங்கள் பெண்களிடம் அந்த அளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும்.

சமீப ஆண்டுகளில் நூலகத்துக்கு வந்துகொண்டிருந்த தீவிர இலக்கிய வாசிப்பாளர்கள் சிலரின் வருகை மெதுமெதுவாகக் குறைந்து, முற்றிலும் நின்றுபோயிற்று. காரணம் விசாரித்தபோது, அவர்களிடம் கிண்டில் ஏடு இருப்பதாகவும், அதில் படிப்பது பல விதங்களில் வசதிப்படுவதாகவும் குறிப்பிட்டார்கள். கடந்த பத்தாண்டுகளில் குடும்ப நாவல்களை எழுதக்கூடிய நூற்றுக்கணக்கான புதிய பெண் எழுத்தாளர்கள் உருவாகிவந்திருக்கிறார்கள். ஆயினும், இவர்களில் பலர் இணையத்திலும் தொடர்ந்து எழுதுபவர்களாக இருக்கிறார்கள். புதிதாய் எழுதும் பெண் எழுத்தாளர்கள் நவீன காலச் சூழலுக்கு ஏற்றபடி உரையாடல்களையும் காட்சிகளையும் அமைத்துக்கொள்வதால், குடும்ப நாவல்களுக்கு இப்போதும் புதிய வாசகியர் உருவானபடி இருக்கிறார்கள். ஆனால், ஆண்களிடம் இப்படியான தொடர்ச்சியைப் பார்க்க முடியவில்லை.

செயலிகளில் ஜனரஞ்சக எழுத்து வாசிக்கக் கிடைப்பதால் கைபேசியிலேயே நாவல் வாசிக்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. தற்போது ‘பிஞ்ஜ்’, ‘பிரதிலிபி’ போன்ற செயலிகளில், தளங்களில் பல முன்னணி எழுத்தாளர்களின் புதிய படைப்புகள்கூட வாசிக்கக் கிடைக்கின்றன. இதுபோக, சில தளங்கள் புத்தகங்களை ஒலிப்பதிவிலும் வழங்குகின்றன. பின்னணி இசை மெலிதாய்க் கசிய, வசனங்களுக்கேற்ப ஏற்ற இறக்கத்துடன் ஒன்றுக்கு மேற்பட்ட பின்னணிக் குரல்களுடன் ஒரு நாவலை, வேறு வேலை எதையாவது பார்த்துக்கொண்டுகூடக் கேட்டு முடித்துவிடலாம். கிண்டில் அன்லிமிடெட் என்ற பெயரில் மின் நூலக வசதியையும் அமேசான் வழங்குகிறது. இவ்வாறாகப் பயன்பாட்டு அறிவியல் நமது சிரமங்களைக் குறைப்பதற்காக என்னென்னவோ பொருள்களையும் சேவைகளையும் உருவாக்கியபடி உள்ளது.

இவையெல்லாம் அச்சு ஊடகத்துக்கு இன்று உள்ள சவால்கள். இதற்கு நேர்மாறாக இன்னொரு பக்கம் புத்தகங்களின் விலை இரண்டு மூன்று மடங்குகள் உயர்ந்திருப்பதும் கவலைக்குரிய விஷயம். இத்தகைய பாதிப்புகள் இருந்தாலும் அச்சு வடிவிலான புத்தகங்களுக்குத் தேவை இருந்துகொண்டேதான் இருக்கும் என்று நாம் உறுதியாக நம்பலாம். இந்த நவீன வடிவிலான வாசிப்பு வசதிகளை வரவேற்கத்தக்க ஒன்றாகவே நாம் பார்க்க வேண்டும்.

கரோனா தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து இன்றுவரை, நூலகங்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இன்னும்கூட வீட்டை விட்டு வெளியில் வராத பெரியவர்கள் இருக்கிறார்கள். நூலகத்துக்கு மக்கள் வருகைதருவது மிகவும் குறைந்துவிட்டது. இந்தச் சூழலில் தனியார் நூலகங்களின் எதிர்காலம் பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. அரசாங்கம் ஏதாவதொரு விதத்தில் உதவித்தொகை வழங்கி, தனியார் நூலகங்கள் தொடர்ந்து இயங்க வழிவகை செய்யாவிட்டால் இந்தக் கலாச்சாரமே அழிந்துவிடும் அபாயம் உள்ளது.

- பாலா கருப்பசாமி, எழுத்தாளர், ‘சக்தி லெண்டிங் லைப்ரரி’ உரிமையாளர். தொடர்புக்கு: balain501@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x