Published : 12 Mar 2016 09:09 AM
Last Updated : 12 Mar 2016 09:09 AM

நெல்லையின் எழுச்சி தந்த ஞாயிறு

வ.உ.சி., சுப்ரமணிய சிவாவின் கைதால் மார்ச் 13-ல் நெல்லை, தூத்துக்குடியில் மக்கள் எழுச்சி வெடித்தது.

திருநெல்வேலி எழுச்சி (1908 மார்ச் 13) பற்றி பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இரண்டு நாள் விவாதம் நடந்தது. அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வின் நூற்றாண்டு 2008-ல் வந்தது. திருநெல்வேலி மாநகராட்சியின் அப்போதைய மேயர் எ.எல்.சுப்ரமணியன் மாநகராட்சிக் கூட்டத்தில் ‘‘திருநெல்வேலிக் கலகம் என்று குறிப்பிடுவதை மாற்றி திருநெல்வேலி எழுச்சி என்று மாற்றம் செய்ய வேண்டும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றி அதை பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கும் அனுப்பினார்.

நூற்றாண்டு கடந்தும் உணர்வூட்டும் இந்த எழுச்சி எப்படி நிகழ்ந்தது?

ரேகை நேரம் வங்காளத்துக்கு அடுத்தபடியாகத் தென்தமிழகத் தில்தான் அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகம் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் கருதியது. அவற்றின் மையத்தில் வ.உ.சிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும் இருந்தார்கள்.

தூத்துக்குடி கோரல் மில்லில் பணியாற்றிய தொழிலாளர்கள் பிரச்சினையில் அவர்கள் தலை யிட்டதும் திருநெல்வேலி எழுச்சியின் காரணங்களில் ஒன்று. அந்த மில்லின் வேலை நிலைமைகள் மிகவும் மோசம். 10, 12 வயது சிறுவர்களைக்கூட அவர்கள் கசக்கிப் பிழிந்துவந்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையும் கிடையாது. உடல்நிலை காரணமாக இரண்டு நாட்கள் வரவில்லை என்றால், மீண்டும் வேலை கிடையாது. உள்ளங்கை ரேகை தெளிவாகத் தெரியும் நேரத்தில் தொடங்கி அதனைப் பார்க்க முடியாத அளவில் ஒளிமங்கிய நேரம் வரை தொழிலாளர்கள் வேலை பார்க்க வேண்டும். அதற்கு ‘ரேகை பார்த்து வேலை செய்யும் முறை’ என்றார்கள்.

சிறுவர்களும் தப்பவில்லை

சின்னத் தப்புக்கும் பிரம்படிகள் தரப்பட்டன. ஆங்கிலேய அதிகாரிகள் வரும்போது குறுக்கே நடந்து சென்றால், அதற்கும் அடி, உதை. உணவுக்கான இடைவேளை நேரமும் கிடையாது. இந்தச் செய்திகள் எல்லாம் நெல்லையின் நாட்டுப்புறப் பாடல்களுக்குள் இன்றும் பொதிந்து கிடக்கின்றன. இதைப் பொறுக்க முடியாத வ.உ.சி. தொழிலாளர்களுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கினார்.

தொழிலாளர்களிடம் வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும் ஆவேசமாகப் பேசினார்கள். வேலை நிறுத்தம் செய்ய அறைகூவல் விடுத்தார்கள். 1908 பிப்ரவரி 27-ல் வேலைநிறுத்தம் தொடங்கியது. ஆலை நிர்வாகம் போலீஸை அழைத்தது. சிவகாசியிலிருந்தும் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். விடுதலைப் போராட்ட இயக்கத்தின் பகுதியாகவே இந்த வேலை நிறுத்தத்தை வ.உ.சி. பார்த்தார். எப்பாடுபட்டாவது வேலை நிறுத்தத்தைத் தொடர வேண்டும் என்பதில் வ.உ.சி குறியாக இருந்தார். தொழிலாளர்களுக்கு உணவு அளித்து பட்டினியைத் தவிர்த்தார். இது தொழிலாளர்களுக்கு உற்சாகம் தந்தது. அதனால், வேலை நிறுத்தத்தில் பங்கு பெறாமல் இருந்தவர்களும், இதன் பிறகு முழுமையாகப் பங்கு பெற்றனர். ஆங்கிலேயர் சென்ற வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. மில்லில் இருந்த தண்ணீர் பம்புகள் உடைக்கப்பட்டன. பதிலடியாக, மில் தொழிலாளர்களின் வீடுகளில் இருந்த சிறுவர்களைப் பிடித்துச் சென்று கொடுமைப்படுத்தியது பிரிட்டிஷ் அரசின் படை.

வெற்றி தந்த ஞாயிறு

காவல் துறையை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழுந்தனர். தூத்துக்குடியிலும் நெல்லையிலும் பதற்றம் ஏற்பட்டது. 8 நாட்கள் வேலை நிறுத்தம் தொடர்ந்தது. வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகள் வெற்றிபெற்றன. 100% சம்பள உயர்வு கொடுக்கப்பட்டது. உணவு இடைவேளை வழங்கப்பட்டது. ஞாயிறு விடுமுறை கிடைத்தது. அதன்பிறகே வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

கைதும் எழுச்சியும்

தொழிற்சங்கங்கள் இல்லாத அந்தக் காலத்தில், இந்த வெற்றிகரமான வேலை நிறுத்தம் மக்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது. இது நடந்த ஒரு வாரத்தில்தான், வங்கத்தைச் சேர்ந்த தலைவர் விபின் சந்திரபாலர் விடுதலை நாளைக் கொண்டாட முடிவு எடுத்தனர் வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும். பொதுமக்கள் கூட தடை விதித்தது அரசு. அதை மீறி நெல்லையிலும் தூத்துக்குடியிலும் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தாமிரபரணி ஆற்றுப்படுகையில் தைப்பூச மண்டபத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். அவர்கள் அந்நியப் பொருட்களைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று வ.உ.சி.யும் சுப்பிரமணிய சிவாவும் கேட்டுக்கொண்டனர்.

இருவரும் 1908 மார்ச் 12 -ல் கைது செய்யப்படு கின்றனர். அதையொட்டிதான் மார்ச் 13-ல் திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் பெரும் மக்கள் எழுச்சி வெடித்தது.

முதலில் கோரல் மில் தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தம் செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக ஊரே திரண்டது. தூத்துக்குடி வண்டிப்பேட்டையில் கூடிய மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. நெல்லையில் கடைகள் அடைக்கப்பட்டன. தொழிலாளர்கள், மாணவர்கள் ஊர்வலமாகச் சென்று , திருநெல்வேலி டவுன் கீழ ரத வீதியில் இருந்த முனிசிபல் அலுவலகத் தைத் தாக்கினார்கள். அங்கிருந்த ஆவணங்களுக்குத் தீ வைத்தார்கள். அங்கிருந்த போலீஸ் நிலையத்தைத் தாக்கினார்கள். பெட்ரோல் கிடங்கும் தாக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூடும் அடக்குமுறையும்

வ.உ.சி.யைக் கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட கலெக்டர் விஞ்ச் துரை, காவல் துறை அதிகாரி ஜான்சன் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது சந்தையில் வாங்கிய தேங்காய் கீழே விழுந்ததால் அதை எடுக்கக் குனிந்த ஒரு சிறுவன் சுட்டு வீழ்த்தப்பட்டான். அவன் வெடிகுண்டு வீசுகிறான் என்று காவலர்கள் கருதிவிட்டார்களாம். அதைப் பார்த்த மக்களின் ஆத்திரம் அதிகரித்தது. தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 3 பேர் இறந்தனர்.

‘இந்தியா’ இதழின் சார்பாக நெல்லை வந்த பாரதியார் ‘ “இறந்தவரில் ஒருவரின் பெயர் ஆறுமுகம் பிள்ளை. வண்ணாரப்பேட்டை ஸ்பெஷல் செட்டில்மென்ட் ஆபீஸில் சேவகராக இருந்தவர்” என்று எழுதினார்.

தூண்டிவிட்டார் எனக் குற்றஞ்சாட்டி, திருநெல்வேலி சுதேசி எம்போரியத்தைச் சேர்ந்த சங்கரநாராயண ஐயர், வ.உ.சி.யின் நண்பர் ஏட்டு குருநாத ஐயர் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். மாணவர்களைத் தூண்டிவிட்டார் என்று குற்றஞ்சாட்டி திருநெல்வேலி இந்துக் கல்லூரி ஆசிரியர் கே.ஜி.லோகநாத ஐயர் கைது செய்யப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டார்.

வ.உ.சி.யையும் சிவாவையும் கைது செய்தது தவறு என்று பேசியதற்காக காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா கைதானார். 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். வ.உ.சி. கைது பற்றி கட்டுரை எழுதியதற்காக பாரதியின் நண்பர் ஹரி சர்வோத்தம ராவ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். ‘ராஜ துரோக’ குற்றத்துக்காக, வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனையும் (40 ஆண்டுகள்) சிவாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இவர்களுக்குச் சிறைத் தண்டனை விதித்தது தவறு என்று சென்னை பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக பாரதியின் நண்பர் சுரேந்திரநாத் ஆர்யாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ‘இந்தியா’ பத்திரிகை ஆசிரியர் சீனிவாசனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைத்தது.

ஒளிவீசும் ஞாயிறு

ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நடந்த இத்தகைய எதிர்ப்புகள், தண்டனைகளின் விளைவாகவே நீலகண்ட பிரம்மச்சாரி, வ.வே.சு.ஐயர், வாஞ்சி, சங்கர கிருஷ்ணன், சாவடி. அருணாசலம் பிள்ளை உள்ளிட்ட பலராலும் ரகசிய சங்கம் தொடங்கப்பட்டிருக்கலாம் என்கிறார் பாரதி ஆய்வாளர் தொ.மு.சி.ரகுநாதன்.

நெல்லையின் தொழிலாளர்களுக்கு ஞாயிறு விடுமுறையைப் பெற்றுத் தந்தனர் வ.உ.சிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும். சுதந்திரப் போராட்டத்தின் ஒளி வீசும் ஞாயிறாக அவர்களை மக்கள் உயர்த்திப் பிடித்த நிகழ்வாக திருநெல்வேலி எழுச்சி இன்றும் ஒளிவீசுகிறது.

இரா.நாறும்பூநாதன், கட்டுரையாளர், சிறுகதை எழுத்தாளர். தொடர்புக்கு : narumpu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x