Published : 22 Nov 2021 03:05 am

Updated : 22 Nov 2021 06:49 am

 

Published : 22 Nov 2021 03:05 AM
Last Updated : 22 Nov 2021 06:49 AM

செவிலியர்களுக்கும் வேண்டும் சமூகநீதி

nurses

லோகநாயகி,

செவிலியம் என்பது வெறும் சேவை அல்ல, அது சேவை சார்ந்த ஒரு தொழில் என இங்கு எத்தனை பேர் சிந்திக்கிறோம்? சேவை… சேவை எனும் புனிதங்களால் பெரும்பான்மையாகப் பெண்கள் பணிபுரியும் செவிலியத் துறை முறையான ஊதியமின்றி, முறையான பணி நியமனமின்றி சமூகநீதியின் பார்வையிலிருந்து இன்னும் எத்தனை ஆண்டு காலம் விலக்கிவைக்கப்படப்போகிறது? படித்தால் உயர்வு பெறலாம் என செவிலியம் படித்த பெண்கள் இன்று சரியான வேலைவாய்ப்பின்றியோ கிடைத்த வேலையில் முறையான ஊதியமின்றியோ கூடுதல் பணி நேரமென அரசு வேலையிலும் துன்புறும் நிலை இருக்கிறது.

மருத்துவத் துறையில் பல்லாண்டு காலமாக அதிகாரத் தரப்பால் நிராகரிக்கப்பட்ட துறையாக செவிலியர் துறை இருக்கிறது. உலகம் முழுவதும், வளர்ந்த நாடுகள் மட்டுமல்லாது வளரும் நாடுகளிலும்கூட செவிலியத் துறை தனி நிர்வாக அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் ‘நர்ஸிங் கவுன்சில்’ எனும் பதிவுசெய்யும் ஒரு கட்டமைப்பு மட்டுமே அரசு சார்பில் செவிலியர்களுக்கெனச் செயல்படுகிறது. மற்றபடி, மருத்துவமனைகளுக்குள் செவிலியர்களெல்லாம் முழுக்க முழுக்க மருத்துவர்களின் நிர்வாகத்துக்குக் கீழ் செயல்படக்கூடிய நிர்ப்பந்தக் கட்டமைப்புதான் இங்கே இருக்கிறது.

பொதுவாக, மருத்துவத் துறையின் அனைத்துப் பணிகளும் கூட்டு முயற்சிதான் எனும் நேர்மையான அங்கீகாரம்கூட இந்தியாவில் விலக்கி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்குக் கொடுக்கப்படும் அங்கீகாரமும் மதிப்பும் செவிலியர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. மேலும், செவிலியத் துறையின் மீது சமூகநீதியின் வெளிச்சம் படவே இல்லை .

செவிலியர்களின் பாடத்திட்டம் தனித்தன்மையுடன் நோயாளியைப் பெரும்பான்மை நேரம் கவனித்துக்கொள்ளும் ஆற்றலும் அனுமதியும் அளிக்கக் கூடியது. பாடத்திட்டத்தை உருவாக்கியவர் மருத்துவர் இல்லை. நோயாளிகள் மீது பேரன்பு கொண்ட ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் எனும் செவிலியப் பெண்தான். அது முழுக்கக் குழு வேலையை மதித்தும், அனைவரையும் சமமாக நடத்தும் தன்மையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் சாதனைகள் பேசப்படும் நம் நாட்டில் எத்தனை செவிலியர்களின் சாதனைகள் பேசப்பட்டிருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவின் முதல் மருத்துவர்களில் ஒருவர் முத்துலெட்சுமி ரெட்டி என்று அறிந்திருப்பவர்கள் முதல் செவிலியர் யாரென்று அறிந்திருப்பார்களா? வரலாறே இல்லாத ஒரு துறையாக ஏன் இத்துறை ஆக்கப்பட்டது என்ற கேள்விகளோடு பயணிக்கிறோம். அதிகாரமற்ற துறை என்பதால், இத்துறை இத்தனை ஆண்டுகளில் இழந்தவை என்னென்ன என்பதையெல்லாம் பார்ப்போம்.

சாதாரணமாக தனியார் கல்லூரியில் பொறியியல் படித்தாலும் அவர் அரசு வேலைக்குச் செல்வதற்குத் தகுதியுடையவர்தான். ஆனால், தனியார் கல்லூரியில் படித்த செவிலியர்க்கு அரசு வேலை 2008 வரை மறுக்கப்பட்டது. நீதிமன்றப் போராட்டத்துக்குப் பிறகுதான் அரசு வேலை என்ற உரிமை கிடைத்தது. அரசு வேலைக்குப் பணி அமர்த்தலில் தேர்வு முறை (MRB) உண்டு.

தேர்வெழுதிப் பணிக்கு எடுக்கப்படும் ஒவ்வொரு செவிலியரும் நிரந்தரப் பணியாளர் எனும் நீதிமன்ற ஆணை இப்போது உள்ளது. ஆனாலும், ஒப்பந்தம் போட்டு 2 ஆண்டுகளுக்குக் கையொப்பம் வாங்கி 6 ஆண்டுகள் வெறும் ரூ.14,000 சம்பளத்துக்குக் கொத்தடிமைகள்போல் வேலை வாங்கியது சென்ற அதிமுக அரசு. இப்போதும் தேசிய ஊரக வளர்ச்சி சார்ந்த செவிலியர்களுக்கு மட்டுமே ரூ.18,000 வழங்க முன்வந்துள்ளனர். 15,000 செவிலியர்களின் நிலை இன்னும் அதே கொத்தடிமை நிலைதான்.

சென்ற ஆட்சியில் தனித்தனியாகப் பணிநியமனத்துக்கு லட்சங்கள் கொடுக்க நிர்ப்பந்தப்படுத்தப்பட்டனர். அந்த ஒலிப்பதிவுகள் பொதுத்தளங்களில் வெளியானதும் யாவரும் அறிந்தவையே. ஆக, பணிக்குத் தேர்வு வைக்கின்றனர். பணியில் சேர லட்சங்கள் கொடுக்க வேண்டும். அரசுப் பணிதான், ஆனால் சட்ட விரோதமான இடமாற்றம் போட்டு அதிலிருந்து பணம் சம்பாதித்துக்கொள்வார்கள்.

மலேசியா, துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் செவிலியர்களுக்குப் பணி நேரம் ஒரு நாளுக்கு 7 - 8 மணி நேரம். 3 வேலைநேரங்களாக (ஷிஃப்ட்) பிரிக்கப்படுகிறது. இரவுப் பணி ஒரு வாரத்தில் 3 நாட்களும் அதற்கு விடுமுறையாக 4 நாட்களும் கொடுக்கப்படுகின்றன. இந்த விடுமுறையில் வேலை செய்வோர்க்குக் கூடுதல் சம்பளம் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் 7 - 8 மணி நேரம் என்பது விடுவிக்க ஆட்கள் வரும் வரை மேலும் நீள்கிறது. அது சில நேரங்களில் 36 மணி நேரமாகக்கூட இருப்பதாகச் செவிலியர்கள் வருந்துகின்றனர். இந்தக் கூடுதல் வேலைநேரத்துக்கு இங்கு விடுப்போ சம்பளமோ கிடைப்பதில்லை. கொடுக்கப்பட வேண்டும் எனும் சட்டம் சம்பிரதாயமாக இருக்கிறது; பயன் தருவதில்லை. 7 நாட்கள் இரவுப் பணி செய்தால் ஒரு நாள் விடுமுறை கொடுக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் ‘இண்டிவிஜுவல் நர்ஸிங் கிளினிக்’குகள் எனும் கட்டமைப்பு செவிலியர்களால் உருவாக்கப்பட்டுத் தனியார் தொழிலாக, செவிலியர்கள் தாங்களே செவிலிய சேவை செய்ய அனுமதி இருக்கிறது. நீண்ட நாள் படுக்கை, தாய்-சேய் நலன், மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டவர்கள் போன்றோர்க்கு அரசு அனுமதியுடன் செவிலிய சேவை செய்யலாம். இது போன்ற கட்டமைப்பு இங்கு இல்லாததால் போலி செவிலியச் சேவைதான் கிடைக்கும். உண்மையான செவிலியர் பலர் குடும்பச் சூழலால் பணியற்றவர்களாக முடங்கும் நிலை இருக்கிறது.

மகப்பேறு விடுப்பு ஊதியம்கூடக் கிடைக்காமல் உழைத்து ஓய்ந்தவர்களுக்கு இந்த ஆட்சியிலாவது நல்லது ஏதாவது நடக்க வேண்டும் என்று எல்லாச் செவிலியர்களும் எதிர்பார்க்கின்றனர். போலி செவிலியக் கல்லூரிகள் நடத்தும் தனியார் மருத்துவ முதலாளிகள், போலிச் செவிலியர்கள் இவற்றை வளர்த்தது மருத்துவர்கள் சிலர்தானே என்றும் அவர்களிடமே போய் எப்படி எங்களுக்கான நீதியைக் கேட்பது என்றும் செவிலியர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

கரோனோ காலத்தில் வேலைசெய்வது கடமை எனினும் முறையான ஊதியமும் ஆதரவும் இல்லாமல் இந்தியச் செவிலியத் துறை செய்தது தியாகம் என்றால், அது மிகையல்ல. செவிலியம் என்பது சேவைத் துறை மட்டுமல்ல. கடந்த தலைமுறைப் பெண்களைச் சொந்தக் காலில் நிற்கச் செய்த சுயமரியாதைத் தொழிலும் ஆகும். செவிலியத் துறையின் கண்ணியம் காக்கப்பட, அதன் அறிவியல் நுட்பங்கள், ஆராய்ச்சிகள் வலுப்பெற இந்தியாவில் செவிலியர்கள் சேவை இன்னும் சிறப்படைய, நோயாளிகள் காக்கப்பட இத்துறையைத் தனித் துறையாக்க அரசு ஆவன செய்ய வேண்டும்.

செவிலியர்களுக்கான துறை இருந்திருக்குமேயானால் அவர்கள் போராட்டக் களம் தேடி வர வேண்டியது இருந்திருக்காது. துறைரீதியாக, அவர்கள் நலன் மேம்பட்டிருக்கவும் பாதுகாக்கப்படவும் செய்திருக்கலாம். உயிர் காக்கும் தேவதைகளின் தேவைக்கு அரசு செவிசாய்க்கும் என நம்புகிறேன்.

- லோகநாயகி, செவிலியர். தொடர்புக்கு: lonaraji@gmail.com
செவிலியர்கள்சமூகநீதிNursesசெவிலியம்மருத்துவத் துறை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x