Published : 21 Nov 2021 03:06 AM
Last Updated : 21 Nov 2021 03:06 AM

மால்கம் ஆதிசேசய்யா: அறிவுத் துறைகளின் பன்னாட்டுத் தூதுவர்

ப.கு.பாபு

நவீன இந்தியாவின் அரசியல் வரலாற்றில் முக்கியமான மையங்களில் ஒன்றாக விளங்கிய சென்னை அடையாறு, இன்று ஆய்வுலகின் மையமாகத் தன் வரலாற்றுப் பயணத்தைத் தொடர்கிறது. தேசிய அளவில் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி மன்றம் (ஐசிஎஸ்எஸ்ஆர்)1969-ல் நிறுவப்பட்டது. அதற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து நிறுவப்பட்டது, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (எம்ஐடிஎஸ்). தற்போது நாட்டிலுள்ள 24 ஐசிஎஸ்எஸ்ஆர் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாகச் செயல்பட்டுவருகிறது. தொடங்கப்பட்ட காலம் முதல் தேசியத் திட்டக் குழுக்கள், பல்வேறு மாநிலங்களின் திட்டக் குழுக்களில் இந்நிறுவனத்தின் பேராசிரியர்கள் பங்களித்துவருகிறார்கள். அத்துடன் மத்திய, மாநில அரசுகளுக்கான பல்வேறு ஆராய்ச்சிகள், ஆய்வு அறிக்கைகளை எம்ஐடிஎஸ் தயாரித்து வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கால்பதிக்கும் புகழ்பெற்ற வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் உரை நிகழ்த்தும், விவாதிக்கும் இடமாக எம்ஐடிஎஸ் இன்றைக்கும் திகழ்கிறது. எம்ஐடிஎஸ் நிறுவனர் மால்கம் ஆதிசேசய்யாவின் நினைவு நாளான இன்று அவரை நினைவுகூர்வதுடன், பொன் விழா தருணத்தில் எம்ஐடிஎஸ்ஸின் சிறப்புகளைக் குறித்த ஒரு தொகுப்பு:

இந்தியாவின் திறன்களை வளர்ப்பதற்கான அயராத முயற்சிகளுக்காகவும், குறிப்பாக வளரும் நாடுகளின் கல்வி, அறிவியல், கலாச்சாரக் கட்டமைப்புகளுக்கு யுனெஸ்கோவின் துணை இயக்குநர் நாயகமாக இருந்து ஆற்றிய சேவைகளுக்காகவும், இன்றளவும் நினைவுகூரப்படுபவர் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (எம்ஐடிஎஸ்) நிறுவனரான மால்கம் ஆதிசேசய்யா. வேலூர் ஊரிஸ் கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய பால் ஆதிசேசய்யா-நேசம்மா ஆகியோருக்கு 1910 ஏப்ரல் 18-ல் பிறந்தார். வேலூர் ஊரிஸ் பள்ளியிலும், சென்னை லயோலா கல்லூரியிலும் பயின்ற ஆதிசேசய்யா, முதுகலைப் பட்டத்தை கேம்பிரிட்ஜ் கிங்ஸ் கல்லூரியில் பெற்றார். கொல்கத்தாவில் உள்ள செயின்ட் பால்ஸ் கல்லூரியில் பொருளாதார விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கிய அவர், முனைவர் பட்டத்தை லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனத்தில் பெற்றுத் திரும்பிய பின், சென்னை கிறித்துவக் கல்லூரியில் சிறிது காலம் பேராசிரியராகப் பணியாற்றினார்.

யுனெஸ்கோவிலிருந்து தாமாக ஓய்வுபெற்று, தன் துணைவியார் எலிசபெத்துடன் சேர்ந்து 1971-ல் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனத்தின் செயல்பாடுகளாலும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பு வகித்த குறுகிய காலத்தில் அவர் செய்த பல்வேறு சாதனைகளாலும், மத்திய—மாநிலக் கல்வி, அறிவியல், பொருளாதார, சமூகக் கொள்கைகளை உருவாக்குவதில் அளித்த பங்களிப்பு ஆகியவற்றாலும் எல்லோராலும் அறியப்பட்டவர். ஆதிசேசய்யாவின் முயற்சியாலும் தொலைநோக்காலும் 1971-ல் தொடங்கப்பட்ட எம்ஐடிஎஸ் இந்திய அரசின் ஐசிஎஸ்எஸ்ஆர் அமைப்பின் கீழ் 1977-ல் தேசிய நிறுவனமாக அடையாளம் காணப்பட்டுச் சீரமைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றி ஆய்வு செய்வதற்கென ஓர் உயராய்வு அமைப்பு வேண்டுமென விழைந்த ஆதிசேசய்யா தன் உழைப்பையும் செல்வத்தையும் இதற்காக முழுமையாகக் கையளித்தார். வறுமை, நிலச் சீர்திருத்தம், சிறார் தொழிலாளர் நிலை, தொழில் துறை, நீர்வளம், பாசன மேலாண்மை, மக்கள்தொகையியல், எழுத்தறிவு, இடஒதுக்கீடு, உள்ளாட்சி, ஊரக ஆய்வுகள், சமூக-பண்பாட்டு வரலாறு, பாலினம், உலக வர்த்தகம் முதலானவை பற்றிய முன்னோடியான, சீரிய ஆய்வுகளை எம்ஐடிஎஸ் நிகழ்த்தியுள்ளது. எம்ஐடிஎஸ், சென்னைப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற முனைவர் பட்ட ஆய்வு மையமாகவும் விளங்குகிறது.

கால் நூற்றாண்டாக யுனெஸ்கோவில் பணியாற்றினாலும் ஆதிசேசய்யாவுக்குத் தமிழ் மொழி மீதும் தமிழ்ப் பண்பாடு மீதும் அங்கு பணியாற்றும்போதே மிகுந்த பற்று இருந்தது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. யுனெஸ்கோவில் அலுவல் மொழியாக இருந்தவற்றில் (பிரெஞ்சு, சீனம், ஸ்பானிஷ், ரஷ்யம், அரபு, ஆங்கிலம்) மட்டுமே வெளியாகிக்கொண்டிருந்த ‘கூரியர்’ மாத இதழை 1967-லிருந்து தமிழிலும் கொண்டுவர ஏற்பாடுசெய்தது; மூன்றாம் உலகத் தமிழ் மாநாட்டை பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடத்துவதற்கு உதவியது; அந்த மாநாட்டின் தொடக்க உரையை பிரெஞ்சு, ஆங்கிலத்தோடு தமிழிலும் ஆற்றியது; திருக்குறளை யுனெஸ்கோ மூலம் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ரஷ்யன், ஜெர்மன், அரபு மொழிகளில் வெளியிட்டது; கட்டிடக் கலைக்குப் பெயர்போன தமிழ்நாட்டுக் கோயில்களைப் புனரமைக்கவும் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்கவும் உதவியது; 1970-ல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தொடங்க யுனெஸ்கோ மூலம் உதவியது; தமிழ் அறியாத அயலகத்தார் தமிழ் கற்றுக்கொள்ள வசதியாக ஒலி-ஒளிக் கருவிகளை நன்கொடையாக அளித்தது என்று அவரின் தமிழ்ப் பங்களிப்பு நீண்டுகொண்டே போகும்.

ஒவ்வொரு வருடமும் தம்முடைய நுண்ணறிவுமிக்க ஆய்வுப் பார்வையில் இந்தியாவின் வருடாந்திரப் பொருளாதார, சமூக மதிப்பீட்டை ‘டெல்லி இந்தியா இன்டர்நேஷனல் சென்ட’ரில் நிகழ்த்திவந்தார் ஆதிசேசய்யா. ‘எம்ஐடிஎஸ் புல்லட்டின்’ மாத இதழின் வாயிலாகப் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். இவ்விதழின் தலையங்கங்களில் அந்தந்த மாதம் உலக அளவில், இந்திய அளவில், மாநில அளவில் நடைபெற்றுள்ள வளர்ச்சியையும், புதிய திட்டங்களையும் பற்றிய அவரது மதிப்பீடு ஆய்வு மாணவர்களுக்குப் பெரிதும் பயனளிப்பதாக இருந்தன. இவ்விதழ்கள், நூலகத்தில் உள்ள அரிய நூல்கள் ஆகியவை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் உதவியுடன் தரமான முறையில் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ளன.

தென்னகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் கூட்டம், பல்கலைக்கழகத் துறைத் தலைவர்களின் கூட்டம், ஆசிரியர்கள், ஆய்வு மாணவர்களுக்குத் தனித்தனியாக வருடாந்திரப் பயிற்சி, துறைகளுக்கு இடையேயான பயிற்சி, வெவ்வேறு துறைசார்ந்த அறிஞர்கள், வல்லுநர்களை அழைத்து கருத்தரங்கங்கள் ஆகியவற்றைத் தொடர்ச்சியாக எம்ஐடிஎஸ் சார்பில் நடத்திவந்த ஆதிசேசய்யா, ஊரக அளவிலான ஆய்வுகளையும், வட்டார மொழி சார்ந்த ஆய்வுகளையும் ஊக்குவித்துவந்தார்.

நிறுவனம் பொன்விழா காணும் இத்தருணத்தில், ஆதிசேசய்யாவைப் போற்றும் வகையில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட அவரது சில கட்டுரைகளைத் தொகுத்து, அவருடைய வாழ்க்கைக் குறிப்பு, பங்களிப்பு ஆகியவற்றையும் தெரிவிக்கும் வகையில் ‘இந்தியப் பொருளாதாரம்: வரலாறு காட்டும் வழிகள்’ என்ற நூலை அண்மையில் வெளியிட்டுள்ளோம்.

- ப.கு.பாபு, இயக்குநர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x