மால்கம் ஆதிசேசய்யா பேசுகிறார்…

மால்கம் ஆதிசேசய்யா பேசுகிறார்…
Updated on
1 min read

விவசாய உற்பத்தியில் தற்சார்பு?

உணவு தானிய உற்பத்தியில் நாம் தற்சார்பு நிலையை அடைந்திருந்தபோதிலும் நமது நாட்டின் வளர்ந்துவரும் மக்கள்தொகை முழுவதற்கும் போதிய உணவு உற்பத்தி செய்கிறோம் என்ற பொருளில் அது இல்லை. உணவு தானியங்களுக்குச் சந்தையில் உள்ள தேவையை நிறைவேற்றும் அளவுக்கு நமது உற்பத்தி இருக்கிறது என்பதே இதன் பொருள். ஏனென்றால், பெரும்பாலான ஏழை மக்களின் வாங்கும் சக்தி குறைவாக இருப்பதால், இவர்களின் உணவுத் தேவை சந்தைத் தேவையாகக் கணக்கில் வருவதில்லை. பல்வேறு பிராந்தியங்களுக்கு இடையிலும், பிராந்தியங்களுக்குள்ளேயே பல்வேறு பகுதிகளுக்கு இடையிலும் விநியோகத்தில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. நமது மொத்தச் சாகுபடி நிலப்பரப்பில் 70 சதவீதமான மானாவாரி நிலங்கள் கவனிப்பின்றிப் புறக்கணிக்கப்படுகின்றன என்பது ஒருபுறம் இருக்க, மாநிலங்களுக்கு இடையே நபர் சராசரி உற்பத்தியிலும் பெரிதும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.

நியாயமான உரிமை

வேலைசெய்யும் உரிமையை அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்று கோருவதில் நியாயம் இருக்கிறது. நம் நாட்டில் நீண்ட காலமாக இருந்துவரும் வறுமைப் பிரச்சினையைத் தீர்க்க ஏற்றதொரு வழி வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாக்குவதுதான். இவ்வசதி ஏற்பட்டால், யார் வேண்டுமானாலும் இவ்வுரிமை நிறைவேற்றப்படாமை குறித்து, மத்திய - மாநில அரசுகள் மீது வழக்குத் தொடர்ந்து, உடனடியாக அவ்வுரிமையை நிலைநாட்டவோ, அல்லது உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெறவோ முடியும். இதன் காரணமாக, ஒவ்வொரு கிராமத்திலும் ஒன்றியத்திலும் மாவட்டத்திலும் நிலவும் வேலைவாய்ப்பு, வேலையின்மை ஆகிய விவரங்களை அரசாங்கம் தொகுத்து வைத்திருப்பதுடன், வேலைசெய்யும் உரிமைக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்குத் தேவையான வேலைவாய்ப்புத் திட்டங்களுடன் எப்போதும் ஆயத்தமாக இருக்கும். வேலைசெய்யும் உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டுமானால், பட்ஜெட் ஒதுக்கீட்டில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்குத் தேவையான நிதியை முதலில் ஒதுக்கிவிட்டு எஞ்சியவற்றில் மட்டுமே பிற செலவினங்களுக்கு ஒதுக்க வேண்டும்… பாதுகாப்பு எனும்போது எதுவும் கேட்காமல் ஒப்புக்கொள்கின்ற போக்கு வேலைசெய்யும் உரிமைக்குத் தேவையான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கும் இருக்க வேண்டும்.

எம்ஐடிஎஸ் சமீபத்திய வெளியீடான ‘இந்தியப் பொருளாதாரம்: வரலாறு காட்டும் வழிகள்’ (தொகுப்பு: ஆ.அறிவழகன்) நூலிலிருந்து...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in